வாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்புண், மருத்துவம் பற்றி பார்க்கலாம். நவீன உலகில் பல்வேறு வகை உணவு பழக்கம், பணி அவசரம் காரணமாக முறையாக சாப்பிடாமல் இருப்பது, உடலுக்கு தேவையான நீர் அருந்தாதது போன்ற காரணங்களால் பலர் அல்சர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வயிற்று புண்ணின் வெளிப்பாடே நாளடைவில் வாய் புண்ணாக தோன்றி உணவு உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளுகிறது.
மேலும் உணவு பொருட்களில் அதிக ரசாயன கலப்பு காரணமாகவும் புண்கள் உருவாகிறது. மணத்தக்காளி, அத்திக்காய், அகத்தி கீரை ஆகிய இயற்கை உணவுபொருட்களை கொண்டு வயிற்று புண், கன்னக்குழி புண், நாக்கு புண்களை ஆற்றுவது குறித்து பார்ப்போம். வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரை ரசம் செய்யலாம். தேவையான பொருட்கள்: நெய், கடுகு, சீரகம், வரமிளகாய், வெங்காயம், மணத்தக்காளி கீரை, அரிசி கழுவிய நீர்.வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் மணத்தக்காளி கீரை மற்றும் அரிசி கழுவிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மணத்தக்காளி கீரை வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதனை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது செரிமானத்தை தூண்டி உடலை சுறுசுறுப்புடன் இயக்குவதோடு, உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. மணத்தக்காளி கீரைக்கு நுண்கிருமிகளை வேரறுக்கக் கூடிய தன்மையும், நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையும் உள்ளது. இதன் காய்களை வற்றலாக செய்து சாப்பிடுவது மூலமாகவும் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. தானாக குப்பைகளுடன் வளர்ந்து பயன்தரும் இந்த கீரையை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு நன்மை தருகிறது. வாய்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய் பச்சடி தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பிஞ்சு அத்திக்காய், மிளகாய் வற்றல், சீரகம், தேங்காய் துருவல், உப்பு. அத்திக்காயை உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். அதேநேரம் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்திக்காய் வெந்தவுடன், அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்த்து கிளறினால் அத்திக்காய் பச்சடி தயார். இந்த உணவை தொடர்ந்து எடுத்து வருவதால் வாய் புண், கன்னக்குழி புண்கள் சரியாகும். இதேபோல் அத்திக்காய் இலைகளை தேநீராக்கி வாய் கொப்பளிக்கின்ற நிலையில் வாயில் உள்ள கிருமிகளை வெளியேற்றி, பற்களை பலப்படுத்துகிறது.
மலச்சிக்கலை சரிசெய்கிறது. புற்று வராத வண்ணம் தடுக்கிறது. குடல் புண்களை நீக்குகிறது. அத்திக்காயை சிறிதாக நறுக்கி உப்பிட்டு காயவைத்து வற்றலாக்கி, வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.அகத்தி கீரையை பயன்படுத்தி வாய்ப்புண்ணிற்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, நல்லெண்ணெய். ஒரு பங்கு அரைத்த அகத்திக்கீரையுடன் 2 மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த இந்த எண்ணெய்யை வடிகட்டி வாய்புண்ணுக்கு மேல்புச்சாக பூசலாம் அல்லது 1/4 ஸ்பூன் எண்ணெயை தினமும் சாப்பிட்டு வருவதால் குடல் புண், வாய்புண் சரியாகும்.
Average Rating