கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… தொழில்முனைவோர் தனலட்சுமி!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 19 Second

வாழ்க்கையில் ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்றவர்களின் கனவுகள் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்துவிடுகின்றன. வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் லட்சியங்களும் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஆனால் கனவு காண்பவர்கள் எல்லோரும் வெற்றிபெறுவதுமில்லை என்பதும் நிஜம். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கனவு ஒருநாள் நனவாகும் என்று முழுமையாக நம்பினார்கள். கனவுகள் நனவாக பல வருடங்கள் பிடித்திருக்கலாம்.

அவர்கள் தங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதற்கான திறமைகளும் தகுதிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்பினார்கள். அதற்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களது முழு சிந்தனையும் அவர்களின் லட்சியத்தின் மேல் மட்டுமே இருந்தது.

‘‘எல்லோருக்கும் கனவு என்பது கண்டிப்பாக இருக்கும். அந்தக் கனவை சாதிக்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்திற்கு கொண்டு சென்றால் அது நாம் நினைக்கின்றபடி நனவாகிறது’’என்கிறார் ‘மிவிக் வெஞ்சர்ஸ்’ கிஃப்டிங் நிறுவனத்தின் நிறுவனர் தனலட்சுமி. தன் கனவுகளை எப்படி நிஜமாக்கினார் என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் எனது பயணத்தை செங்கல் பட்டில் ஆரம்பித்தேன். ஏனென்றால் அதுதான் நான் பிறந்த ஊர். எனது படிப்பு, திருமணம் அனைத்தும் இயல்பான வாழ்க்கை நடைமுறையில் போய்க்கொண்டிருந்தது. ஆனால் என் ஆழ்மனக் கனவில் சாதிக்க வேண்டும் என்ற தேடல் இருந்துகொண்டேயிருந்தது. ஏனெனில், சாதித்தவர்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு விசயம், வாழ்க்கை என்பது போராட்டம். அதைத் தவிர்த்து வாழக் கூடாது, அந்த இயற்கையோடு இணைந்து போராட வேண்டும்.

அதற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்த விசயம்தான் கார்ப்பரேட் கிஃப்டிங் என்ற தொழிலின் சென்னை பொறுப்பாளர். இந்த தொழிலில்2009ல் நான் களமிறங்கியபோது கேள்விக்குறியாகப் பார்த்தேன். ஆனால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தது. ஏனெனில், மார்க்கெட்டிங் தெரியாது, இங்கிலீஷ் சரளமாக பேசத் தெரியாது, சென்னையில் பல இடங்களுக்கு சென்றுவரத் தெரியாது.

ஆனாலும், என் கணவரின் விருப்பப்படி ஆரம்பித்த தொழிலை ஒரு நிறுவனமாக்க முடியும், என் குழந்தை மற்றும் குடும்பத்தை பராமரிக்க நேரம் ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்படி உருவான நிறுவனத்தில் முதலில் நான் மட்டுமே தொழிலாளியாகவும் முதலாளியாகவும் இருந்தேன். இப்போது ஊழியர்களுடன் அனைத்து மாநிலத்திற்கும் எங்களது சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

எங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைத் தாங்கியே மிவிக் என்ற எங்கள் நிறுவனத்தின் பெயர் உள்ளது. இந்த தொழிலின் வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் நிறுவனத்தினர் என்பதால் பெயரை வித்தியாசமாக தேர்வு செய்து வைத்தோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கிஃப்ட் பொருட்களை தயாரித்துக் கொடுக்கிறோம். எனது கணவருக்கு இத்தொழிலில் 18 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் அவரின் வழிகாட்டுதலில் தொழில் பற்றிய அறிவை அவரிடம் கல்வியாக கற்றேன். அவரின் நடை, உடை, பேச்சு, மார்க்கெட்டிங் என எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

என் கணவரை குடும்ப உறுப்பினராக பார்ப்பதைவிட ஒரு பிசினஸைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பார்த்தேன்.ஏனெனில், ஒரு நிறுவனத்தில் முற்றிலும் மாறுபட்ட பரிசுப் பொருள் மூலம் அந் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் புராடக்டை பிரபலப்படுத்த வேண்டும். இதில் தற்போது எங்களது சொந்த பிராண்டில் டி-ஷர்ட் மற்றும் பேக்குகள் சப்ளை செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் சப் மரைன் பிராண்டில் பென்னும், ஆர்டிஸ் என்ற பிராண்டில் புளூடூத், ஸ்பீக்கரும், ஈகோ லவ் என்ற பெயரில் ஈகோ ஃப்ரண்ட்லி பேக்கும், ஆர்பிட் என்ற பிராண்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் என விநியோக உரிமையை எடுத்துள்ளேன்.

எல்லாவற்றையும் விட என்னை நம்பி ஒரு பொறுப்பு கொடுத்து இருப்பதால், அதில் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். அதன் வெற்றி தான் நிறுவனம் தொடங்கிய சில நாட்களிலேயே முதல் ஆர்டர் பெரியதொரு கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து கிடைத்தது’’ என்றவர் அதன் பின் பல
வெற்றிப் பாதைகளை கடந்துள்ளார்.

‘‘படிப்படியாக அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். அது என்னுடைய தொழில் வளரவும் மிகவும் உதவியாக அமைந்தது. இந்தச் சமயத்தில் ஃப்ரான்சைஸிங் வாய்ப்பு அளித்த அதே நிறுவனத்தினர், என்னை இதனை தனியாக ஒரு நிறுவனமாக அமைக்க சொல்லி உற்சாகம் அளித்தனர். கடந்த 2013-ம் ஆண்டு ‘மிவிக் வெஞ்சர்ஸ் கார்ப்பரேட் கிஃப்டிங்’ என்ற பெயரில் நிறுவனத்தைத் தனித்தன்மையாக
துவங்கினேன்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாதிக்க இயலாது. அது மிகவும் கடினமும் கூட. எனக்கு என்று சுயமாக ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பதற்காக எனது கணவர் இத்தொழிலில் என்னை களமிறக்கினார். தொழிலில் முதன்முறையாக களமிறங்கும்போது ஆங்கில அறிவு, தொழில் குறித்த அனுபவம் எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும், தொழிலில் காட்டிய ஆர்வம், ஈடுபாடு, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு ஆகியவற்றால் இத்தொழிலில் சாதிக்க முடிந்தது. எனது கணவர் வழங்கிய ஒத்துழைப்பால் அதிகளவில் விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது’’ என்றவர் தன் நிறுவனத்தின் செயல்பாட்டினை பற்றிக் குறிப்பிட்டார்.

‘‘ஒரு தொழிலை நடத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், நமக்கு ஆர்டர் வழங்கும் நிறுவனங்களின் தேவைகள் மற்றும் அதன் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மனதில் உள்வாங்கிக்கொண்டு அவர்களுக்குரியதை செய்து தர முன்வர வேண்டும். அப்போதுதான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். நிறுவனங்களும் தொடர்ந்து நமக்கு ஆதரவு வழங்குவார்கள்.

ஒரு பெரிய நிறுவனத்தின் ஆர்டர் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகளவிலான ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தது. முதலில் ஆர்டர் கிடைத்தவுடன் அவர்கள் சொல்லும் பொருட்களில் ஒரு சாம்பிளை காண்பிப்பேன். அவர்களுக்கு அது திருப்தியாக இருந்தால்தான் முழுமையான ஆர்டர்களை கொடுப்பேன்.

காரணம் சில சமயம் சாம்பிளை பார்த்துவிட்டு, அதை வேறு மாதிரி வேண்டும் என்று சொல்வார்கள். அல்லது வேறு பொருளை மாற்றுவார்கள். கார்ப்பரேட் கிஃப்டிங் என்பது ஒரு பிராண்டினை அவர்களின் தயாரிப்பு வாயிலாக விளம்பரம் செய்வது. சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது அதில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுகளை வழங்குவதை கார்ப்பரேட் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன.

முதலில் ஒரு நிறுவனம் ஆர்டர் தொடர்பாக விசாரிக்கும்போது அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு கிஃப்ட்களை அளிப்பதில் அதிக கவனம், நேரம் ஒதுக்கீடு செய்துகொள்வேன். எனக்கு ரோல் மாடல் என்றால் என்னுடைய அம்மா, அப்பா தான். அப்பா மெய்யியல் தொடர்பாக அதிகளவிலான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதுதான் எனக்கு தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு ஊக்கமளிக்கிறது, வழிகாட்டியாகவும் இருக்கிறது. என் குடும்பத்தினரின் உறுதுணைதான் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வழங்கிய ஆர்டரை அரை நாளில் செய்துகொடுக்க உதவியாக இருந்தது. தொழிலை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தவும், சாதிக்கவும் உதவியாக உள்ளது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பது தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என்பதற்கு எனது கணவர் சாட்சி என்றால் அது மிகையல்ல. தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியை பார்க்காமல் பயிற்சி அளித்து ஏராளமான பெண் தொழில் நிறுவனர்களை உருவாக்க வேண்டும் என்ற கனவுகளோடும் மிவிக் வெஞ்சர்ஸ் காத்துக்கொண்டிருக்கிறது’’ என வெற்றிப்புன்னகையுடன் முடித்தார் தனலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வடிவேலு, கவுண்டமணி அசத்தும் காமெடி!! (வீடியோ)