தேசியபட்டியல் அடிபிடிகள் !! (கட்டுரை)
பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும் பௌத்தம் போதிக்கிறது.
பற்று, பேராசை ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பௌத்தம், “தீங்கு விளைவிக்கும் பற்றுகள், காட்டு மிருகங்களைப் போன்றவை; ஏனெனில், அவை தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது” என்கிறது.
உலகப் பற்றுகளைத் துறத்தல் பற்றிப் போதித்த கௌதம புத்தரின் வழிநிற்பதாக உரைக்கும் பௌத்த துறவிகள் முதல், பௌத்தத்தின் காவலர்களாகத் தம்மை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் என அனைவரும், தேசியபட்டியல் ஆசனத்துக்காக அடிபிடிப்பட்டுக் கொண்டிருக்கும் அசிங்கமான சூழலைக் காணும் துரதிர்ஷ்டம் மிக்க வாக்காளர்களாக இருக்கின்றோம்.
இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், இதற்கெல்லாம் மூலகாரணமான தேசியபட்டியல் முறை பற்றிய விளக்கத்தோடு ஆரம்பிப்பதே, பொருத்தமாக இருக்கும். பிரித்தானிய ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்ற முறையை எடுத்துக்கொண்டால், அது இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றமாகும்.
கீழவை ‘சாதரணர் அவை’ என்றும், மேலவை ‘பிரபுகள் அவை’ என்றும் பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படுகிறது. கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுதோடு, பிரபுகள் அவையில் முடியால் பிரபுகளாக நியமனம் பெற்றவர்கள், தம் ஆயுள் முழுவதும் அங்கம் பெறுகிறார்கள்.
கடந்த சில தசாப்தங்களில் பிரபுகள் அவைக்கான நியமன முறையில், பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது பிரபுகள் அவைக்கான நியமனங்களுக்கான பரிந்துரைகள், பிரபுகள் அவை நியமனங்கள் ஆணைக்குழு என்ற சுயாதீன அமைப்பால், மிகுந்த சிரத்தையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகளோ பொதுமக்களோ, நபர்களின் பெயர்களை இந்த ஆணைக்குழுவுக்கு முன்மொழியலாம். ஆணைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, பொருத்தமானவர்கள் எனக்கருதும் நபர்களின் பட்டியலை ஆணைக்குழு சிபார்சு செய்யும். பிரதமரின் ஒப்புதலின் பின்னர், குறித்த நபர்கள், முடியால் பிரபுகள் சபைக்கு நியமிக்கப்படுவார்கள்.
பிரபுகள் அவை, சமகாலத்தில் தத்தம் துறையில் பெரும் வல்லுநர்கள், சமூகத்தில் நற்பெயரும் கௌரவமும் கொண்டவர்களைக் கொண்டமைந்துள்ளதுடன், முழுமையான அரசியல் நோக்கத்துடன் இயங்கும் கீழவையின் சட்டவாக்க நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்களவு தடைகளையும் சமன்பாடுகளையும் எற்படுத்தும் அவையாகச் செயற்படுகின்றது.
சுதந்திர அரசமைப்பாகச் சுட்டப்படும் சோல்பரி யாப்பின் கீழமைந்த இலங்கையின் முதலாவது நாடாளுமன்றமானது வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றத்தை ஒத்து, இரண்டு அவைகளைக் கொண்டமைந்திருந்தது. இங்கு மேலவை, ‘செனட் அவை’ எனச் அழைக்கப்பட்டதுடன், நியமன உறுப்பினர்களைக் கொண்டமைந்தன.
நியமன உறுப்பினர்கள் தேவையா இல்லையா என்பது ஒரு தனித்த நீண்ட விவாதம். ஆனால், புலமையாளர்களையும் சுயாதீனமானவர்களையும், துறைசார் வல்லுநர்களையும் தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் பெற முடியாத மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளையும் சட்டவாக்கச் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்வதற்கு ‘நியமன முறை’ ஒரு நல்ல வாய்ப்பாகும்.
சுதந்திரகாலம் முதல் ஒரே கட்சி ஆண்டுவரும் சிங்கப்பூரில் கூட, 1990இல் நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களை உள்வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கலை, இலக்கியம், கலாசாரம், அறிவியல், வணிகம், தொழில், சமூக சேவை, தொழிற்சங்கம் ஆகியவற்றில் இருந்தான சுயாதீனமான குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கான வழிவகை என, இது குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒருபுறத்தில் தொழில்சார் வல்லுநர்களின் குரலானது, மக்கள் குரலாக இருக்காது என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், புலமையாளர்கள் நாடாளுமன்றத்தில் இயங்கும் போது, அது சட்டவாக்கத்தின் தரத்தை அதிகரிக்கும் என்ற வாதம் மறுபுறத்தில் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையின் தேசியபட்டியல் என்பதும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத, அதேவேளை நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய புலமையாளர்களையும் தேர்தல் அரசியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல முடியாத மிகச் சிறுபான்மையான மக்களின் பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பத்தக்கதோர் அருமையான வழிமுறையாகும். ஆனால், தேசியபட்டியல் அவ்வாறுதான் பயன்படுத்தப்படுகிறதா என்று பார்த்தால், துரதிர்ஷ்டவசமாக இல்லை என்பதே அதற்குப் பதிலாக இருக்கிறது.
225 உறுப்பினர்களைக் கொண்டமைந்த இலங்கை நாடாளுமன்றத்தில், 196 பேர் மக்களால் தேர்தல் மாவட்ட ரீதியாக, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்பட, மிகுதி 29 பேர், அகில இலங்கை ரீதியாகக் கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்கு வீதாசாரத்துக்கு ஏற்ப, அவற்றுக்கு ஒதுக்கப்படும் தேசியபட்டியல் மூலம் நியமனம் பெறுகிறார்கள்.
தேசியபட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தில், எத்தனை கட்சிக்கு எத்தனை தேசியபட்டியல் ஆசனம் என்பதை, அந்தக் கட்சிகள் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்குவீதம் தீர்மானிக்கும். அதேவேளை, தமது கட்சி பெற்றுக்கொண்டுள்ள தேசியபட்டியல் ஆசனங்களுக்கு, யாரை நியமிப்பது என்பதை கட்சிகளே தீர்மானிக்கின்றன. மிகக்குறிப்பாக, இந்த விடயத்தில் கட்சியின் செயலாளருக்கு (அல்லது செயலாளருக்குரிய அதிகாரங்களைக் கொண்ட தலைவருக்கு) அதிக பலமுண்டு.
உண்மையில், அதிக தேசியபட்டியல் ஆசனங்களைக் கொண்ட கட்சிகளுக்கு, தேசியபட்டியல் நியமனம் என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. இந்தத் தேர்தலில், 145 ஆசனங்களை வென்று 17 தேசியபட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட பொதுஜன பெரமுன, தேர்தல் முடிவுகள் வௌிவந்த மறுநாளே, தமது தேசியபட்டியல் நியமனங்களைக் கையளித்துவிட்டது. கிட்டத்தட்ட, தேர்தலில் போட்டியிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் அனைவரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர்களுக்குத் தாம் அறிவித்த தேசியபட்டியலிலிருந்து 29 பேர்களில் 17 பேரைத் தெரிவது மட்டுமே பணி.
ஆனால், பல கட்சிகளின் கூட்டணியாகப் போட்டியிடுபவர்களுக்கு, அதுவும் அவர்கள் தாம் எதிர்பார்த்தளவிலான வெற்றியையும் அதன் விளைவாகத் தேசியபட்டியல் ஆசனங்களையும் பெறாத போது, அது பற்றிய முடிவுகள் இன்னமும் சிக்கலாகிவிடுகின்றன. குறிப்பாக, இந்தக் கூட்டணிகள் ‘ப்றொக்ஸி’ கட்சிச் சின்னத்தில் போட்டி போடும் போது, அந்தக் கட்சியின் செயலாளர், தனக்கு ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை எதிர்பார்ப்பார். கூட்டணிக் கட்சிகளும் தமக்கான தேசியபட்டியல் ஆசனங்களை எதிர்பார்க்கும். இந்த ஆட்டத்தில், எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. ஆகவே, மனக்கசப்புகளும் முரண்பாடுகளும் பிரிவுகளும், இந்த இடத்தில் ஆரம்பித்துவிடுகின்றன. இதுதான், சஜித்தின் மக்கள் சக்திக்கு நடந்துகொண்டிருக்கிறது.
மறுபுறத்தில், தமிழ்க் கட்சிகளின் நிலைவேறு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பதாகையை ஏந்தி நிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஒரு தேசியபட்டியல் நியமனம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கும் முடிவை, தமிழரசுக் கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததன் பின்னர், அது அரச வர்த்தமானியிலும் பிரசுரமானதன் பின்னரும், அந்த முடிவு பற்றித் தமிழரசுக் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளிடையேயும் முரண்பாடுகள் வௌிப்பட்டு நிற்கின்றன. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில், தம்மை ஆலோசிக்காது, தமிழரசுக் கட்சி தனித்துச் செயற்பட்டுவிட்டது என்ற அதிருப்தியை, வௌிப்படையாக வௌியிட்டிருக்கிறது. அம்பாறைக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது, விவேகமான முடிவு என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனையின்றி அந்த முடிவு எடுக்கப்பட்டமையானது, தமிழ்த் தேசிய ‘கூட்டமைப்பை’ பலவீனப்படுத்துவதாகவே அமையும்.
ஒருவேளை, தமிழரசுக் கட்சி, தனித்து இயங்குவதைத்தான் விரும்புமாக இருந்தால், அதை வௌிப்படையாகச் செய்வதே நலமாகும். இல்லையென்றால், பெயருக்கு ‘கூட்டமைப்பாக’ மக்களை ஏமாற்றும் பணியைத்தான் தமிழரசுக் கட்சி செய்வதாகவே கருதவேண்டியிருக்கும். இவ்வாறு, இருமுகங்களைப் பராமரிப்பது தமிழரசுக் கட்சிக்குப் புதியதொன்றல்ல; தெற்கில் ‘சமஷ்டிக் கட்சி’யாகத் தனது பெயரை ஆங்கிலத்தில் அடையாளப்படுத்திய அதேவேளை, வடக்கு-கிழக்கில் ‘தமிழரசு’ என்று தனது பெயரைத் தமிழில் முன்னிறுத்திய வரலாறு அதனுடையது. இதைச் ‘சாணக்கியம்’ என்றும் சிலாகிக்கலாம். அது, அவரவர் பார்வையைப் பொறுத்தது.
மறுபுறத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பதாகையைத் தாங்கி நிற்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் நிலை, இன்னொரு வகையில் கவலைக்கிடமாக இருக்கிறது. ‘kiss of death’ என்று ஒரு சொல்லடையுண்டு. தமிழ்க் காங்கிரஸ் வென்ற தேசியபட்டியல் ஆசனமானது, காங்கிரஸுக்கு ‘kiss of death’ ஆக மாறிவிடும் போல இருக்கிறது.
தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்றவர் வென்று, நாடாளுமன்றம் சென்றிருந்தால், அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 வருட அரசியல் பயணத்தின் சாதனையாக மட்டும் இருந்திருக்கும். தேசியபட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்ததானது, அது யாருக்கு என்ற பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. யதார்த்த அரசியலில், நீண்ட காலத்துக்குப் பின்னர் காங்கிஸும் முதன்முதலாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பதவிச் சண்டையைச் சந்தித்து நிற்கின்றன. இதை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவனமாகக் கையாளாவிட்டால், வரலாறு எப்படி அமையும் என்று, வரலாறு தெரிந்த அவருக்கு நாம் சொல்லத் தேவையில்லை.
தமிழ்க் கட்சிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் புலமையாளர்களும் துறைசார் வல்லுநர்களும் அவசியம். அவர்கள், நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்துக்கு அவசியம். தேசியபட்டியலை நீங்கள் அதற்கேற்ப பயன்படுத்தவதே உசிதம்.
இம்முறை ஜே.வி.பி, அவர்களுடைய பல தலைவர்கள் தோற்ற நிலையிலும் தேசியபட்டியல் நியமனத்தை, அதற்குரிய வகையில் கையாண்டு, கலாநிதி ஹரிணி அமரசூரிய என்ற புலமையாளரை நியமித்திருக்கிறது; இது பாராட்டுக்குரியது. ஏனைய கட்சிகளுக்கு ஆதர்ஷமாக அமையவேண்டியது.
Average Rating