சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 36 Second

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தனது அழகான முகம் ஆசிட் வீச்சால் சிதைக்கப்படும் என்று லட்சுமி துளியும் எதிர்பார்க்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது அழகிய தோற்றத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் மும்பையைச் சேர்ந்த லட்சுமி அகர்வால்.

அவரது ஆரம்பகால வாழ்க்கை மிகவும் வேதனைக்குரியது. 1990 ஆம் ஆண்டு, தில்லியில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் லட்சுமி பிறந்தார். அவரது தந்தை முன்னா சமையல் துறையில் வேலைப் பார்த்து வந்தார். தாய் இல்லாவிட்டாலும், தனது தம்பி ராகுலுக்கு அவரே ஒரு தாயாக இருந்து வளர்த்தார். எங்கு ஏழ்மை இருக்கிறதோ, அங்குதான் இறைவன் தன் தாராளத்தைக் காட்டுவான்.

கந்தல் ஆடை அணிந்தபோதும் அனைவரும் வியக்கும்படி அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினாள் லட்சுமி. எந்தவொரு பெண்ணிற்கும் இந்தச் சமூகம், அவளின் தகுதிக்கான பெருமையையும், மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும், கெளரவத்தையும் கொடுப்பதற்குப் பதிலாக ஆபத்தையும், சவுக்கடியையும் மட்டுமே பரிசாகக் கொடுப்பது பெண்களின் சாபக்கேடு. லட்சுமியின் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது.

15 வயதை எட்டியதும் அவளின் அழகில் முப்பத்திரண்டு வயதுடைய குட்டு என்கிற நஹிம் கான் மயங்கி போனான். அவளை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கினான். தனது தோழியின் காதலனின் சகோதரனான குட்டுவை லட்சுமிக்குப் பிடிக்கவில்லை. எனவே அவள் காதலிக்க மறுத்தாள். ஆனால், நேரிலும், தொலைபேசியிலும் லட்சுமியைத் தொடர்பு கொண்டு தன்னைக் காதலிக்கவும், திருமணம் செய்து கொள்ளச்சொல்லியும், விடாமல் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான். எதற்கும் அசைந்து கொடுக்காத லட்சுமியை பழிவாங்க நினைத்த குட்டு, அவளை வெறியோடு தேடினான்.

அவள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பது தெரிந்ததும், ராக்கி என்ற மற்றொரு பெண்ணுடன் சென்ற குட்டு, லட்சுமியை ஆவேசமாக கீழே தள்ளி விட்டான். பின்பு தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவளது அழகான முகம் மற்றும் கழுத்தில் ஈவு இரக்கமின்றி ஊற்றினான்.

வலியால் துடித்த அந்த பதினைந்து வயது பெண் பயத்தினால் தன் கண்களை மூடிக்கொள்ளவே அப்பகுதி மட்டும் தப்பியது. பாதி முகமும் உடலும் ஆசிட்டிற்கு இரையானது. அங்குள்ளவர்கள் யாரும் அவளைக் காப்பாற்ற முன்வரவில்லை. அந்த பதினைந்து வயது பெண் கதறிய கதறலும், பட்ட வேதனையும் அங்குள்ள மனிதாபிமானமிக்கவர்களாக மார்தட்டிக் கொள்ளும் எந்த மனிதர்களின் காதுகளிலும் விழவேயில்லை. அரசியல்வாதிகளில் ஒருவர்தான் லட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தார். உடனே சேர்க்க முடியாமல் போனதால் அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

தொடர் சிகிச்சையின் மூலம் மெல்ல மெல்ல உடல்நலம் தேறினார். கண்ணாடி மட்டும் அவருக்கு காட்டப்படவேயில்லை. ஓரளவுக்கு உடல் தேறியபின், வீட்டிற்கு வந்த லட்சுமி செய்த முதல் வேலை கண்ணாடியைப் பார்த்ததுதான். சிறு பெண் பருவத்திற்கே உரிய பலவித கனவுகளுடன் வாழ்ந்து வந்தவர் தன் உடலும், முகமும் அவலட்சணமாய் மாறியதை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதே சமயம் தவறான முடிவும் எடுக்க மனமில்லை. தன் தந்தைக்காகவும், தம்பிக்காகவும் வாழ ஆரம்பித்தார்.

சமூகத்தின் கேலிப் பேச்சுக்களும், கிண்டல்களும் அவரை மன உளைச்சலுக்கு தள்ளியது. வீட்டுக்குள்ளேயே முடங்கி போனார். வெளியே சென்றாலும், பர்தாவால் தன் உடலை மறைத்துக் கொள்வார். ஆண்கள் மேலும் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ‘நான் மட்டும் அல்ல. என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும். இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ என முடிவெடுத்தார்.

2006-ம் ஆண்டு அபர்ணா பட் என்கிற வழக்கறிஞர் உதவியுடன், ரூபா என்கிற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில், ‘ஆசிட் விற்பனையை கடும் கட்டுப்பாடுகளுடன் அரசு முறைப்படுத்த வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் சித்ரவதை வாழ்நாளுக்கானது. இதனை கடும் குற்றமாகக் கருதி தண்டனையை அதிகப்படுத்தும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார், போராடினார் லட்சுமி.

இதற்கிடையில் தையல் கலை, அழகுக் கலை, கம்ப்யூட்டர் பயிற்சி என அனைத்தும் கற்றுக் கொண்டார். ஆனால் யாருமே அவருக்கு வேலை தர முயலவில்லை. அப்போதுதான், ஒரு லட்சியத்துடன் தனக்கான அடையாளத்தை தேடத் தொடங்கினார். ‘யாரோ செய்த தவறுக்காக நான் ஏன் என் முகத்தை மறைத்துக்கொண்டு வாழ வேண்டும்? போராட்டத்தை வலிமையாக்கும் ஒரே அடையாளம் எனது முகம்’ என முடிவெடுத்தார். ஆனால் சோதனைகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது. அவரின் தந்தை மாரடைப்பால் காலமானார். தந்தையின் மறைவு அவரை மனதளவில் பாதித்தது. அப்போது பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான அலோக் தீட்ஷிதின் அறிமுகம் லட்சுமிக்கு கிடைத்தது.

‘Stop Acid Attacks’ என்ற இணையவழிப் போராட்டத்தைத் தொடங்கியிருந்த அலோக், லட்சுமியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தார். லட்சுமி மற்றும் அவரது அமைப்பினரின் கடும் உழைப்பால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆசிட் வீச்சும் குற்றமாக அறிவிக்கப்பட்டது. ‘ஆசிட் வீசுவோரை எதிர்த்து பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது தற்காப்பாகக் கருதப்படும். குற்றவாளி
களுக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே லட்சுமி தொடுத்திருந்த பொதுநல வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட்டை விற்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எந்தக் காரணம் கொண்டும் ஆசிட் விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆசிட் வீச்சுக் குற்றத்தில் ஈடுபட்டவரை, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவில் கைது செய்ய வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகள் பல இடங்களில் இன்னமும் முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே இதற்காக அலோக்குடன் சேர்ந்து லட்சுமி இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

லட்சுமியின் போராட்ட குணத்தால் கவரப்பட்ட அலோக், அவர் மேல் காதல் வயப்பட்டார். தன் விருப்பத்தை தெரிவிக்க அலோக்கைத் தவிர வேறு யாரும் தனக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக வர முடியாது என்பதை உணர்ந்தார் லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை
உள்ளது. தம்பதிகளான இருவரும் இணைந்து Stop Acid Attacks அமைப்பின் மூலம் பல்வேறு நல்ல செயல்களைச் செய்து வருகின்றனர்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, கவுன்சலிங் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற பல காரியங்களை செய்து வருகிறார் லட்சுமி. லட்சுமியின் சமூக அக்கறையை அங்கீகரிக்கும் விதமாக 2014-ம் ஆண்டு என்.டி.டி.வி, International ‘Unsung Hero of the Year’ விருதை வழங்கி கௌரவித்தது. சர்வதேச அங்கீகாரமாக International Women of Courage Award-ம் லட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே பயப்படும் போது, இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தினார்.

இது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தற்போது தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வரும் லட்சுமி, சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை பேட்டி எடுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். ‘சான்வ்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கியவர், அதன் மூலம் பலருக்கு உதவி வருகிறார்.

இவரின் வாழ்க்கையை பாலிவுட்டில் தீபிகா படுகோன் நடிக்க படமாக வெளியாக உள்ளது. தற்போது கடந்த மாதம் சென்னைக்கு ஒரு ஃபேஷன் ேஷாவில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தார் லட்சுமி.

சிவப்பு நிற மணப்பெண் உடையில் அழகாக தன்னை அலங்கரித்து மேடையில் வலம் வந்தார். 19 வருடங்களாக பலவித போராட்டங்கள், சவால்களை சந்தித்து இப்போது தனக்கான ஒரு பாதையை அமைத்து வாழ்ந்து வரும் லட்சுமி இப்போதெல்லாம் கண்ணாடி பார்க்க தயங்குவதில்லை.தன்னம்பிக்கையும், வாழ்வின் அர்த்தம் புரிந்ததால், அவர் முன்பை விட மேலும் அழகாக ஜொலிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்! (மகளிர் பக்கம்)
Next post யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது !! (கட்டுரை)