2019 சாதனை பெண்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 13 Second

இந்தியாவின் இளவரசி

டெல்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதியின் மகளாகப் பிறந்த பிரியங்கா காந்தி, சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார். உளவியல் பட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும், பௌத்த மதத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர். தொழிலதிபரான ராபர்ட் வதேராவை காதலித்து 1997ல் திருமணம் செய்து கொண்ட, இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 16ம் வயதில் தேர்தல் பிரசாரப் பரப்புரை பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா, அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் அரசியலோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

தாய்மைக்கு கிடைத்த வெற்றி

உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சாதனையை, 12 பதக்கங்களை வென்று முறியடித்தார் அலிசன் ஃபெலிக்ஸ். இச்சாதனையை இவர் முறியடித்திருந்தாலும், இந்த இடத்துக்கு ஃபெலிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனது மகள் கேம்ரினை பெற்றெடுத்த 10வது மாதத்திலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அலிசன், ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.

உலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், உலகின் முன்னணி வீராங்கனையான வீனஸ் ஆட்டத்திற்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடிய காஃப் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். விம்பிள்டன்னில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸை முதன்முதலில் எதிர்கொண்ட காஃப் எந்தவித பயமின்றி ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தங்க மங்கை

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு, ஒலிம்பிக்கில்
தங்கம் வாங்குவதே லட்சியம்.

மிஸ் இந்தியா

ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றார். வெற்றியாளர் சுமன் ராவ், கோதுமை நிறம், 5‘8‘‘ உயரம், சிரித்த முகம் என ஒரே நாளில் இந்திய இளைஞர்களின் ஹாட் சாய்ஸ் இந்தக் கண்ணம்மாதான். பிறப்பு ராஜஸ்தான், வளர்ப்பு மும்பை. மகாத்மா கல்வி அமைப்பில் பள்ளிப்படிப்பு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுன்ட் – டெல்லியில் கல்லூரி படிப்பு, பி.காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடித்திருக்கும் சுமன் படிப்பிலும் கொஞ்சம் கெட்டி.

அந்த 38 நிமிடங்கள்

சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேல்

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் என்ற பெண்மனி சிறப்பாக பாடியுள்ளார். அதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் வைரலானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது தொழில்முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ள அவருக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன்.

நடிகையர் திலகத்திற்காக தேசிய விருது

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கீர்த்தி சுரேஷுக்கு விருதை வழங்கி, அவரின் நடிப்பை பாராட்டினார்.

மிஸ் யூனிவர்ஸ் மகுடம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி

தென் ஆப்ரிக்க அழகியான, ஸோசிபினி டன்சி, 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். பெண்களிடையே இயற்கை அழகை
ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், பாலியல் குறித்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் ஸோசிபினி. அவரிடம் போட்டியின் நீதிபதிகள், “பெண்களுக்கு முக்கியமாக கற்றுக்கொடுக்க வேண்டிய பண்பு எது?” என்று கேட்டதற்கு, அவர்களுக்குத் தலைமை பண்பை கற்றுத்தர வேண்டும் என்று, இவர் கூறிய பதில்தான், இவருக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றுத் தந்தது.

ஆங்கில கால்வாய்

சாரா தாமஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தாண்டு ஆங்கில கால்வாயை இடைவேளை இல்லாமல் நான்கு முறை கடந்து சாதனை படைத்துள்ளார். வலுவான அலைகள் காரணமாக 209 கி.மீ தூரத்தை, 54 மணி நேரத்தில் வெறும் நீராகாரம் கொண்டு முடித்துள்ளார் 37 வயது நிரம்பிய சாரா. இதுவரை நான்கு பேர் இந்த கால்வாயை மூன்று முறை கடந்துள்ளனர். அந்த சாதனையை முறியடித்து இருக்கும் சாரா மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒரு வருடம் கழித்து இதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீறிப் பாய்ந்த தோட்டா

தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய… ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ் பெயர் இணையத்தில் வைரலானது. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தைபே நகரில் நடைபெற்ற ஆசிய சீனியர் போட்டிகளில் தன் முதல் சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்றார். 2018-ம் ஆண்டு, தன் 19-வது வயதில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக
வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டிற்காக, அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் படகில் பயணித்து சென்ற கிரேட்டா, தனது பயண அனுபவத்தையும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களையும் குற்றம் சாட்டி பேசினார்.

வரலாறு படைத்த திங் எக்ஸ்பிரஸ்

செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 19 நாட்களில் அடுத்தடுத்து 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ஹிமா தாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post பிரசவம் ஆகும் நேரம் இது! (மருத்துவம்)