குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!! (மருத்துவம்)

Read Time:17 Minute, 13 Second

குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா. ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் ஒன்றரை கோடி குழந்தைகளும், அவர்களில் 5-ல் 1 குழந்தை இந்தியாவிலும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற மருத்துவரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் நிறைய போராட வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைப்பிரசவங்களைத் தவிர்க்க முடியாதா என்று பச்சிளம் குழந்தைகள் மருத்துவரான தீபா ஹரிஹரனிடம் பேசினோம்…

குறைப்பிரசவம் என்பதற்கான மருத்துவ வரையறை என்ன?

‘‘கடைசியாக மாதவிடாய் ஆன தேதியிலிருந்து 40 வாரங்கள் முடிந்த பின்னர், ஒரு தேதியை பிரசவ தேதியாக கணக்கிட்டு சொல்வோம். அதிலிருந்து 3 வாரங்களுக்கு முன்னதாக பிறக்குமானால் அது குறைப்பிரசவக் குழந்தை. முழுவதுமாக 40 வாரங்கள் முடிந்து பிறக்கும் குழந்தையை சாதாரண பிரசவம் என்றும், அப்படியில்லாமல் மூன்று வாரங்களுக்கு முன்னதாக, 37 வாரங்களில் பிறக்கும் குழந்தையை குறைபிரசவமாக சொல்வோம்.

34 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண சிகிச்சை தேவைப்படும். 30 வாரங்களுக்கு முன்னதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தீவிரமான சிகிச்சைகளை பல வாரங்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாக குழந்தை பிறக்கிறதோ அந்த அளவிற்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். 24 வாரத்திற்கு மேல் பிறக்கும் குழந்தையை சிகிச்சைக்குப்பிறகு ஓரளவு பிழைக்க வைக்க முடியும். ஆனால், 20 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தை கருக்கலைப்புக்கு இணையானது.’’குறைப்பிரசவத்திற்கான காரணங்கள்…

‘‘கருவுறுவதற்கு முன்பே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மிகச் சிறிய வயதிலேயே அதாவது 19 வயதுக்கு முன்பே அல்லது மிகத் தாமதமாக 35 வயதுக்குப்பின் கருவுறும் பெண்களுக்கும் இது சாத்தியம்.

அதற்கு அடுத்ததாக, கர்ப்பகாலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோய் முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பகால சர்க்கரை நோய் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்துவிட்டால், குழந்தையின் எடை அதிகமாகி, முன்கூட்டியே குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், இந்தப் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் முன்கூட்டியே திறந்துவிடும்.

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்த நோயும் ஒரு காரணமாகிறது. தாயின் ரத்த அழுத்தம் அதிகமானால் குழந்தையை முன்கூட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. பிரசவ நாளுக்கு 1 வாரத்திலிருந்து 2 வாரத்திற்கு முன்பு மன அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு 20 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பணியிடங்களில் சவாலான வேலைகளை பெண்கள் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் வாக்குவாதம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி சூழல் என பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். வீட்டிலும் பல பிரச்னைகள். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அடுத்து உடற்பயிற்சியற்ற வாழ்க்கை, ஆரோக்கியமில்லாத உணவுமுறை, தேவையற்ற பயணங்கள், சுற்றுச்சூழல், தூக்கமின்மை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் இவையெல்லாமும் கூட குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன.’’

இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

‘‘குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான சிகிச்சைகள் கொடுக்க வேண்டியிருப்பதால் பொருளாதார சுமை இருக்கும். இரண்டாவதாக குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு வரக்கூடிய சுகாதாரப் பிரச்னைகள். நிறைய பெண்களுக்கு குறைப்பிரசவம் என்றால் என்ன என்பது கூடத் தெரியாது. குழந்தை பிறந்த 1 மணி நேரத்தை Golden Hour என்று சொல்வோம். இது அந்தக் குழந்தையுடைய வாழ்க்கையின் முக்கிய கட்டம் என்று சொல்லலாம். இதை அறியாத தாய்மார்கள் சிகிச்சை கொடுப்பதற்கு கால தாமதம் செய்துவிடுவார்கள். சரியான சிகிச்சை விரைந்து எடுக்காவிட்டால் வளரும்போது முழு அறிவுத்திறன், முழு ஆற்றல் இல்லாமல் இருப்பார்கள்.

ஐ.க்யூ குறைந்து காணப்படும். முதல் ஒரு நிமிடமே முக்கியமானது. மற்ற நோய்களைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், குறைப்பிரசவத்தினால் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிய போதிய விழிப்புணர்வு நகரப் பெண்மணிகளுக்குக்கூட இல்லை என்று சொல்லலாம்.’’
குறைப்பிரசவ குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்…

‘‘குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ந்திருக்காது என்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். முதலில் மூச்சுப்பிரச்னையை சரிசெய்வது அவசியம். குழந்தையின் நுரையீரலை திறந்துவிடுவதற்காக மெஷின் மூலம் ஆக்சிஜன் செலுத்துவது, நேரடியாக நுரையீரலில் ஊசி செலுத்தும் சிகிச்சைகளை செய்ய வேண்டும். குழந்தைகளின் சருமம் மிகமிக மெல்லியதாக இருக்கும்.

உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு தோல்தான் பாதுகாப்பு அரண் எனும்போது, தோலின் மூலம் எளிதாக உடலினுள் கிருமிகள் சென்றுவிடும். அதற்காக இந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக பிளாஸ்டிக் கவர் சுற்றி, இன்குபேட்டரில் வைத்திருப்போம். மேலும் இவர்களின் உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் கதகதப்பிற்காகவும் இன்குபேட்டரில் வைக்க வேண்டும்.

கருவின் கடைசி 2 வாரங்களில்தான் செரிமான உறுப்புகளே வளர ஆரம்பிக்கும் என்பதால், குறைமாதக் குழந்தைகளுக்கு பால் அருந்துவதற்கான ஆற்றல், செரிமான ஆற்றல் இருக்காது. மூச்சை தம்பிடித்து இழுக்க முடியாத காரணத்தால் இந்தக் குழந்தைகள் தாயிடம் பால் அருந்தவும் முடியாது. இதன் காரணமாக அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஊசி மூலமாகத்தான் சில வாரங்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். 28 – 30 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மெதுவாக 2,3 வாரங்களுக்குப் பின்னர்தான் பால் குடிக்கவே ஆரம்பிப்பார்கள்.’’

நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு எந்த அளவில் இருக்கும்?

‘‘முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்திருப்பார்கள். காரணம் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தாய் உட்பட யாரையுமே மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது பிறந்த குழந்தைகளுக்கான தனி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைத்து அங்கு எப்போதும் தாய் கூடவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தாயின் குரல், தாயின் அரவணைப்பு போன்றவை அந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்போது விரைவான முன்னேற்றம் ஏற்படுவதையும் கண்கூடாக உணர முடியும். ஆரம்பத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தாயிடமிருந்து தாய்ப்பாலை பிழிந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து, போகப்போக அந்தக் குழந்தை தானாக அருந்தும் திறனைப் பெற்றவுடன் நேரிடையாக தாய்ப்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.’’ வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

‘‘தற்போதுள்ள தொழில்நுட்பம், ஆய்வுகள் போன்றவற்றால் ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுத்துவிடுவதால், நீண்டநாள் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் குழந்தை அந்தந்த பருவத்தில் குப்புறப்படுப்பது, தவழ்வது, உட்கார்வது, நடப்பது போன்ற செயல்களை செய்கிறதா போன்ற விஷயங்களை தாயானவள் நுட்பமாக கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிஸியோதெரபி சிகிச்சைகள் மூலம் கொண்டு வந்துவிடலாம். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் எடுத்துக் கொள்ளலாம்.

அவர்களுக்குக்கூட ஸ்பீச் தெரபி மூலம் சரி செய்துவிடலாம். இவர்களின் கேட்கும் திறன், பார்வைத்திறன் போன்றவற்றை வருடத்திற்கு ஒருமுறை அவ்வப்போது சோதனை செய்து பார்த்துவிட வேண்டும். இதுவும் கூட 30 வாரங்களிலேயே பிறந்த குறைப்பிரசவக் குழந்தைகளுக்குத்தான் வரும் என்பதால் மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையை தாய் கூர்ந்து கண்காணித்து, தவறாமல் சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் இவர்களும் மற்ற குழந்தைகளைப்போலவே வெகு இயல்பான அறிவுத்திறன் கொண்டவர்களாக வளர்ந்துவிடுவார்கள்.’’

குறைப்பிரசவ குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்புகள் தேவையா?
‘‘கண்டிப்பாக தேவைதான். தற்போது பிரசவ நேரத்தில் பச்சிளம் குழந்தை மருத்துவரையும் உடன் வைத்துக் கொள்வது மற்றும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உடனடியாக அளிக்கக்கூடிய சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இருப்பது போன்றவற்றின் அவசியத்தைப் பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு வசதி இல்லாத மருத்துவமனைகளில் பிறக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளை வசதியுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றும்போது, நகரும் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு யூனிட்(Mobile Newborn Intensive care Unit) மூலம் கொண்டு செல்வோம். இது மிக முக்கியமானது. இந்த நகரும் NICU-ல் பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து நுணுக்கமான உபகரணங்களும்(Tiny Instruments) தயாராக இருக்க வேண்டும்.’’

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய விஷயங்களைச் சொல்லுங்கள்…

‘‘மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றபிறகும் குறைப்பிரசவக் குழந்தைகளை நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மிக மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தாயின் அரவணைப்பு 24 மணி நேரமும் இந்தக் குழந்தைகளுக்குத் தேவைப்படும். இதை மருத்துவர்கள் ‘கங்காரு தாய் பராமரிப்பு’ என்று சொல்வார்கள்.

அப்போதுதான் தாயின் கருவறையில் இருப்பதைப்போன்ற உணர்வு அந்தக் குழந்தைக்கு வரும். முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். எவ்வளவு நாள் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்களோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 6 மாதங்களுக்குபிறகு கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சி, திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். இவர்களுடைய மன வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.’’

குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

‘‘கருவுறுவதற்கு முன்பே எடையை சரி வர பராமரிப்பது, அம்மை தடுப்பூசி, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்த் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, நெகடிவ் ரத்த வகை உள்ளவர்கள் அதற்கான ஊசி போட்டுக் கொள்வது மற்றும் கர்ப்பகால நீரிழிவு வாய்ப்பு இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளே பெரும்பாலும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன என்பதால் கருவுற்ற பெண்கள் சரியான உணவு, யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. முடிந்தவரை காற்று மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். குறைப்பிரசவம் திடீரென்று வருவதில்லை.

இது ஒரு வாழ்வியல் நோய் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதை அமைதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபக்‌ஷக்களின் நாள்கள் !! (கட்டுரை)
Next post பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!! (மருத்துவம்)