‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ ! (கட்டுரை)
அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும்; துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
சமத்துவக் கட்சியின் தலைவரும் சுயேச்சைக்குழு 5இல், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், ‘கேடயம்’ சின்னத்தில், முதன்மை வேட்பாளராகக் போட்டியிடுகின்றவருமான சந்திரகுமார், தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு:
கே: தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தனித்துக் களமிறங்கும் உங்களுக்கான வெற்றிவாய்ப்பு எப்படியுள்ளது?
எங்களுக்கான ஆதரவுத்தளம் மிகப் பலமாகவே இருக்கிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட, மூன்று மடங்கு வாக்குகளை நாங்கள் பெறுவோம். மக்கள் வழங்கும் அந்த நம்பிக்கைக்கு, நேர்மையாக நாம் உழைப்போம். இன்று எல்லோருக்கும் மாற்றம் ஒன்று தேவையாக உள்ளது. இதைப் புரிந்துகொண்டு நாம் செயற்படுகிறோம். அரசியலிலும் மக்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாக நாங்கள் மாற்றத்தை உண்டாக்குவோம்.
கே: தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது பிற தமிழ்த் தேசியவாதக் கட்சிகளோ செய்ய முடியாதவற்றை, நீங்கள் எப்படி செய்யப்போகிறீர்கள்?
இந்தச் சக்திகளின் தவறான அரசியலால், இன்று தமிழ்ச் சமூகம் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது; பல வழிகளிலும் சிதைக்கப்பட்டுள்ளது. வடமாகாணம் இப்போது, பொருளாதாரத்திலும் கல்வியிலும் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டும், எமது சமூகத்தின் உயிர் நாடிகளாகும். வேலைவாய்ப்பு இல்லாததால், இளைய தலைமுறையின் எதிர்கால வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. உணர்ச்சிகரமான எதிர்ப்பரசியல், எப்போதும் நேரடியாக மக்களையே பலவீனப்படுத்துகிறது. இதனால், பலமற்றவர்களாக எமது மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதைவிட, போர் உண்டாக்கிய பாதிப்பிலிருந்து எமது மக்கள் இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும். இது ஒரு பெரும் பொறுப்பாகும். இதற்காகப் புதிய திட்டங்கள் தேவை. புதிய உறவுகள் அவசியம். இதற்காக நாம் முயன்று வருகிறோம்.
எமது மக்களைப் பலமானவர்களாக மாற்ற வேண்டும்; நாங்கள் செயற்பாட்டு அரசியலையே முன்னெடுப்பவர்கள் என்பதால், எதிலும் எம்மால் வெற்றியடைய முடியும். அரசியல் என்பது அவ்வப்போது அறிக்கைகளை விடுவதோ பிரகடனங்களைச் செய்வதோ அல்ல. எதையும் செயற்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதுவே மக்களுக்கான அரசியலாகும். அப்படிச் செய்யும்போதே, மக்களுடைய விடுதலையும் முன்னேற்றமும் சாத்தியமாகும். விடுதலை இயக்கங்கள், இதையே தமது வழிமுறையாகக் கொண்டன. நாம் செயற்பாட்டு அரசியலில் இயங்குவதால் எம்மால் பலவற்றையும் சாதிக்க முடியும்.
கே: தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் தவறான அரசியல் என்று நீங்கள் சொல்வதென்ன?
இவை எல்லாம், தமிழ்த் தேசியம் என்று உரக்கக் கத்துகின்றனவே தவிர, அதைப் பலப்படுத்தவோ செழுமைப்படுத்தவோ முயலவில்லை. தமிழ் மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பலவீனமான மக்களுடைய தேசியமும் பலவீனப்பட்டதாகவே இருக்கும்.
தேசியம் என்பது அது சார்ந்த மக்களைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். இன்று எமது மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து செல்வதற்கே பெரும்பாலானவர்கள் இன்று சிந்திக்கிறார்கள். தாயகத்தில் இருப்பதற்குப் பதிலாக, புலம்பெயர்ந்து சென்றவர்கள் தாயகத்தை நோக்கி வருவதற்குப் பதிலாக, இருப்பவர்களும் வெளியேறவே முயல்கிறார்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினர். ஏனென்றால், தங்களுடைய வாழ்க்கையை இந்த மண்ணில் வாழமுடியாது என்று இளைய தலைமுறையினர் எண்ணுகிறார்கள். இது எங்களுடைய இனத்தின் விகிதாசாரத்தையே பாதிக்கின்ற விடயமாகும். மண்ணில் மக்கள் இல்லாத வெற்றிடத்தில் எப்படித் தேசியத்தைக் கட்டிக்காப்பாற்ற முடியும்? இது, எமது இனத்தை ஒடுக்கும் ஆட்சியாளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகும்.
முதலில், எங்கள் மண்ணில் மக்கள் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். எங்கள் மண்ணில், எங்கள் மக்கள் பலமாக வாழும்போதே, எமது தேசியமும் அடையாளமும் வலுவானதாக இருக்கும். இதற்குரியவாறு நாம் செயற்பட வேண்டும். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடிய செயற்பாட்டு அரசியல் வேண்டும். முன்பு அபிவிருத்தி அரசியலோடு எங்களை அடையாளப்படுத்திக் குறுக்கிவிட முயன்ற இந்தக் கட்சிகள் எல்லாம், இப்பொழுது தாமும் அபிவிருத்தியைச் செய்யப்போவதாகச் சொல்கின்றன. இது, இந்தக் கட்சிகளின் தோல்வியாகும். அதாவது, எமது அரசியல் வழிமுறைக்கே இப்போது வந்திருக்கின்றன. இது ஏன்? மக்களுடைய நிலையை மறுதலிக்க முடியாது என்பதனால்தானே? ஆனாலும் இவர்கள் ஒருபோதுமே தமது அரசியல் இலக்கை எட்டுவதற்கு எந்த வழியிலும் செயற்படப்போவதில்லை. அதாவது செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை. அதில் ஈடுபாடும் இந்தத் தலைவர்களுக்குக் கிடையாது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்றால், அது பொய்யான தேசிய கதையாடலாகவே இருக்கும்.
கே: நீங்கள் தமிழ்த் தேசியத்தை எந்த வகையில் நோக்குகிறீர்கள்?
தமிழ்ச் சமூகத்துக்குள் இருக்கும் சாதி, பால், வர்க்க, பிரதேச முரண்பாடுகளும் சமனின்மைகளும் களையப்பட்டு, ஜனநாயகச் செழுமையோடு தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். தனியே சிங்கள ஆதிக்கத்தை எதிர்ப்பதுடன் அதனுடைய பணிகள் நிறைவடைந்து விடாது. அது தமிழ்ச் சமூகத்துக்குள் இருக்கும் அசமத்துவங்களுக்கு எதிராகவும் உறுதியுடன் போராட வேண்டும். அந்தக் குறைகளை நீக்கியெழ வேண்டும்.
கே: உணர்ச்சிகர அரசியலை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடுபவர்களின் அரசியல் விளைவுகளுக்கும் உங்களுடைய கொள்கையால் ஏற்படும் மாறுதல்களுக்கும் வேறுபாடு உண்டா?
நிச்சயமாக உண்டு. அவர்கள் மாற்றங்களை உருவாக்காமல், மக்களைப் பலவீனப்படுத்தும் எதிர்விளைவுகளை- இனத்துக்குப் பாதிப்பை உருவாக்குகின்றனர். நாம் அறிவுபூர்வமாகச் செயற்பட விளைகிறோம். அதனால் மாற்றங்களின் மூலமாக, முன்னேற்றத்தை உண்டாக்கும் நேர்விளைவுகளை உருவாக்குகிறோம். மக்களை வலுப்படுத்தி, வளப்படுத்தி இனத்தைப் பாதுகாக்கிறோம். இனத்தின் அடையாளங்களை வலுவாக்குகிறோம். இதனால்தான் படித்தவர்களும் சிந்திக்கக் கூடியவர்களும், எங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.
கே: புதிய கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் உருவாக்கம் தமிழ்த் தேசிய கொள்கையின் வெற்றிக்கு வழிவகுக்குமா?
எல்லாக் கட்சிகளாலும் எல்லாக் குழுக்களாலும் அல்ல. தனித்துவமாக இயங்கும் கட்சிகளும் சுயேச்சைகளுமே மாற்றங்களை உருவாக்கக் கூடியவை. அப்படியானவையே தமிழ்த் தேசிய பாதுகாப்புக்கு வலுவூட்டக் கூடியனவாக இருக்கும். இந்த வகையில்தான் எமது சமத்துவக் கட்சி மக்களிடையே செல்வாக்கைப் பெற்றது.
கே: தமிழ் மக்களுடைய தற்போதைய மனநிலை எப்படியுள்ளது?
மக்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள். தொடர்ந்தும் தாம் ஏமாற முடியாது என்று நினைக்கிறார்கள். தங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகவே, புதிய தெரிவுகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
கே: யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் தமிழ் மக்கள் உள்ளனர் என்று சொல்லப்படுகிறதே?
இப்படியான குழப்பம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் தமிழ்ச் சமூகத்துக்கு வந்தது. இப்போதும் வந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? கூட்டமைப்பின் அரசியல் தவறுகள்தானே, மக்களை இப்படியான நிலைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளன. ஆகவே, தவறு செய்த கூட்டமைப்பை முதலில் நிராகரித்து விடலாம். அடுத்தது, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நின்றுகொண்டு கூட்டமைப்பு மாதிரியே கதைத்துக் கொண்டிருப்போர். அவர்கள் என்ன செய்வார்கள், அதையெல்லாம் எப்படிச் செய்யப்போகிறார்கள்? என்று தெளிவாகச் சொல்லவில்லை. அப்படியென்றால், அவர்களையும் நாம் நிராகரித்து விடலாம்.
இதற்குப் பிறகு யாரைத் தெரிவு செய்யலாம்? மக்களுடைய அரசியல் பிரச்சினை தொடக்கம் வாழ்க்கைத் தேவைகள் வரையுள்ள அத்தனைக்கும் தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய சக்திகள் எவை என்று பார்த்து, அவற்றைத் தெரிவுசெய்ய வேண்டியதுதானே. குறிப்பாக எமது மக்களின் தேவைகள், நலன்களைப் பற்றிச் சிந்திக்கின்ற, அதற்காகச் செயற்படுகின்ற கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள், இவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
Average Rating