கஜனிடம் சில கேள்விகள் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 26 Second

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளர் நாயகமுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன்.

இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும் காங்கிரஸையும் நோக்கி, இந்தப் பத்தியாளரால் ஏற்கெனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி, கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, திங்கட்கிழமை (20) யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட “…எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு…” என்கிற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) நேரடி அரசியல் விவாத நிகழ்வொன்று நடைபெறவிருந்தது. ஆனாலும், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து ஒதுங்கிக் கொண்டமையால், நிகழ்வு இரத்தாகியது.
அது தொடர்பிலான சர்ச்சையில், முழங்காவிலில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரை நோக்கி, எம்.ஏ. சுமந்திரன் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் முகமாகக் கருத்து வெளியிடும் போதே, ‘எங்கோ இருக்கும் முழங்காவில்’ என்று கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

1. கஜேந்திரகுமார் அவர்களே! தாங்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறீர்கள். யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. தாங்கள், எங்கோ இருப்பதாகக் குறிப்பிடும் முழங்காவில், கிளிநொச்சி மாவட்டத்துக்குள் நிர்வாக ரீதியாகவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் தேர்தல்கள் முறைமைகளுக்குள்ளும் உள்ளடங்குகின்றது. இப்படியிருக்க, தாங்கள் போட்டியிடும் தேர்தல் மாவட்டம் குறித்து, எந்தவிதத் தெளிவும் இல்லாமல், முழங்காவிலை எப்படி, எங்கோ இருப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள்?

இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரும், யாழ்ப்பாண நகரப் பகுதிகளைத் தாண்டிய அரசியலைச் செய்வதில்லை என்கிற விமர்சனத்தைத் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியினரை நோக்கி, முன்வைத்து வந்திருந்தார்கள். அந்த விமர்சனம், தங்கள் கட்சி, யாழ். நிர்வாக மாவட்ட எல்லைக்கு அப்பால், கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளை மாத்திரம் கணக்கிட்டுச் சொல்லப்பட்டதில்லை. மாறாக, ஒரு கட்சியாக, அந்தக் கட்டமைப்பு, யாழ். நகரப் பகுதிகளைத் தாண்டிச் சென்றடைந்து இருக்கவில்லை; அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது சார்ந்தும் எழுந்தது.

2. ‘இரு தேசங்கள்; ஒரு நாடு’ என்கிற கொள்கையின் அடிப்படையில், ‘முன்னணி’ என்கிற இயக்கம் செயற்படுவதாகத் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் தாங்கள், தமிழர் தேசத்துக்குள் இருக்கும் முழங்காவில் பிரதேசத்தை எப்படி, “எங்கோ இருக்கும் முழங்காவில்” என்று விளிக்க முடியும்? முழங்காவில், என்ன மாற்றுத் தேசத்துக்குள் இருக்கும் பகுதியா? அந்தத் தோரணை, யாழ்ப்பாணத்தைத் தாண்டியிருக்கும் பகுதிகள் எல்லாமும், ‘தீண்டத்தகாத’ பகுதிகளாகக் காணும் போக்கிலானதா?

3. “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பிறகு, காலம் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கிற தலைவன் கஜேந்திரகுமார்” என்று, தங்களது கட்சிக்காரர்களே மேடைகளில் தங்களுக்குப் புகழாரம் சூட்டும் போது, கேட்டு மகிழ்கிறீர்கள். அதுபோல, புலிகளுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய கொள்கையில் தடம்புரளாத தரப்பாக, உங்களை முன்னிறுத்துகிறீர்கள். அப்படியிருக்க, மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக்கும் துயிலும் இல்லம் இருக்கும் முழங்காவில், எப்படி எங்கோ இருக்கும் ஒன்றாகத் தங்களால் கருதப்பட முடியும்? முழங்காவில் சார்ந்த கேள்விகளை, இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், அதை ஒரு கட்சியாகப் பதிவு செய்வது சார்ந்து, பல சந்தர்ப்பங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. அதற்கு கஜேந்திரகுமாராகிய தாங்களும் தங்களது சகபாடிகளும், பதிவு தொடர்பில் சாதகமாகப் பதிலளித்து வந்திருக்கிறீர்கள். மக்களின் கேள்விகளுக்கு அப்பால், முன்னணியை ஒரு கட்சியாகப் பதிவு செய்யும் நிலைப்பாட்டோடு இயங்கிய இளைஞர்களிடமும், பதிவு செய்வது தொடர்பில் சாதகமாகவே பதிலளித்திருக்கிறீர்கள். அதை, பொது வெளியிலும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்க, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்யப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை, இந்தத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
அது தொடர்பில் சில கேள்விகள்,

4. ஆரம்பம் முதலே, காங்கிரஸ் என்கிற கட்சியை மீட்டெடுப்பதற்காக, முன்னணி என்கிற அடையாளத்தைப் பாவித்திருக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டை, எப்படி நிராகரிக்கக் கூடியதாக இருக்கும்?

5. ‘முன்னணி’ என்பது, ஓர் அரசியல் இயக்கம்; அதைக் கட்சியாகச் சுருக்க வேண்டிய தேவையில்லை. “தேர்தலில் போட்டியிடும் தேவைக்காகவே, காங்கிரஸைக் கையாள்கிறோம்” என்று கூறும் தாங்கள், அதை முன்னணி ஆரம்பிக்கப்பட்ட 2010களிலேயே வெளிப்படுத்தி இருக்கலாம் இல்லையா? ஏன் இதைச் செய்யவில்லை? இதைச் செய்யாமல், முன்னணி சுயமுள்ள ஒரு கட்சியாக இருக்கும் என்று நம்பிக் கொண்டு, இணைந்து கொண்ட இளைஞர்களுக்கு, ஏன் பொய்யான வாக்குறுதி அளித்தீர்? அந்த வாக்குறுதியை நம்பி, சமூக ஊடகங்களில் எவ்வளவு விவாதங்களில், அவர்கள் கலந்து கொண்டு, வீராப்புப் பேச்சுகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். இன்றைக்கு அவர்களின் நிலை என்ன?

6. ‘முன்னணி’யைக் கட்சியாகச் சுருக்குவதால் பலனில்லை. தேர்தலுக்கான கட்சியாகப் பதிவு பெறும் போது, அதற்கான கட்டுப்பாடுகள் அதிகம் என்று கூறும் தாங்கள், முன்னணி என்கிற கட்டமைப்பின் சட்டப்பாதுகாப்பு எது சார்ந்தது? அதிக சட்டத்தரணிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற முன்னணி, அதற்குப் பதிலளிக்க வேண்டும் இல்லையா?

7. கடந்த காலங்களில், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உள்ளிட்ட காலங்களில், முன்னணியின் மேடைகளில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் படங்களைத் தவிர்த்துவிட்டு, குமார் பொன்னம்பலம், தந்தை செல்வா ஆகியோரின் படங்களை முன்னிறுத்தியது ஏன்? காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தாங்கள், அதன் ஸ்தாபகத் தலைவரை அன்றைக்குத் தவிர்த்தது ஏன்? அத்தோடு, அவரின் கொள்கை நிலைப்பாட்டோடு முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய தந்தை செல்வாவின் படம், எப்படி காங்கிரஸ் மேடைகளை அலங்கரித்தது? அந்தத் தருணங்களில், முன்னணியின் இளைஞர்கள், ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, வெளிப்படையாகக் கூறியதைத் தாங்கள் கேட்டிருக்கவில்லையா?

8. அன்றைக்கு, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் நிலைப்பாடுகளை நிராகரித்து, “முன்னணி என்பது, சுயஅடையாளத்துக்கான கட்சி” என்று முழங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை, இந்தத் தேர்தலில், தமிழர் தேசத்தின் அபிவிருத்தியின் நாயகனாக, முன்னாள் அமைச்சர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் இருந்தார் என்று பேச வைத்ததைத் தங்களதும் தங்கள் குடும்பத்தினதும் காங்கிரஸினதும் தனிப்பட்ட வெற்றியாகக் கொள்கிறீர்களா? ஏனெனில், கடந்த காலங்களில், ஜீ.ஜீ. பொன்னம்பலம் குறித்துத் தேர்தல் மேடைகளில் பேசுவதைத் தாங்கள் தவிர்த்து வந்த போதிலும், இந்தத் தேர்தலில் தாங்கள் தங்களின் பேரனார் குறித்துப் பேசிக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, நாவாந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றின், ஜீ.ஜீ.பொன்னம்பலம், குமார் பொன்னம்பலம் ஆகியோரின் வாரிசாகத் தங்களை முன்னிறுத்திப் பேசியதைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கு, முன்னணிக்கான இடம் இல்லாமற்போய், காங்கிரஸே முன்னிறுத்தப்பட்டது. இறுதியாக, நேர்மை, வெளிப்படை அரசியல் பேசும் தங்களிடம், கடந்த காலத்தில் சி.வி. விக்னேஸ்வரனோடு இருந்த இணக்கமும் முரண்பாடுகளும் பற்றியதான கேள்வி.

9. தமிழ் மக்கள் பேரவை, 2016இல் தயாரித்த தீர்வுத் திட்ட யோசனைகளில் ‘தமிழரின் தேசக் கோரிக்கை’ என்கிற விடயத்தை, சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார். அதை, 2019இல் மின்னஞ்சல் ஆவணங்களின் மூலம், முன்னணி வெளிப்படுத்தியிருந்தது. பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்த முன்னணி, விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர், அதனை வெளிப்படுத்தியதன் நோக்கம் என்ன? நேர்மையும் வெளிப்படையுமே தாரக மந்திரம் என்று முழங்கும் முன்னணியினர், 2017இல், தேசக் கோரிக்கையை நிராகரித்த விக்னேஸ்வரனை, “தமிழ்த் தேசியத்துக்கு தலைமை ஏற்க வா” என்று எப்படிக் கோரியது? அப்போது, நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் எங்கே போனது?

அரசியல் என்பது வளைவுகளும் சுழிவுகளும் சம்பந்தப்பட்டதுதான். எதற்குமே அசைந்து கொடுக்காத நெடுமரமாக நிற்க முடியாது. அது, சிறிய காற்றுக்கு நிமிர்ந்து நின்றாலும் பெரும் ஊழிகளில் சிக்கினால் பிடுங்கி வீசப்பட்டுவிடும். ஊழிகளுக்குள்ளும் நிலைத்து நிற்பதற்கு வளைதலும் இசைதலும் உதவும். இது அரசியலுக்கும் தேவையான ஒன்று. இதைச் செய்பவர்களை நோக்கி, கேள்விகளை எழுப்பி வந்திருக்கிற கஜேந்திரகுமாராகிய தாங்கள், மேற்கண்ட கேள்விகளில், தங்களின் செயற்பாடுகளை எப்படிக் காண்கிறீர்கள். அவற்றுக்குத் தாங்கள் அளிக்கும் பதில்கள், வளைவுகளும் சுழிவுகளும் விட்டுக்கொடுப்புகளும் நழுவல் போக்கும் இல்லாமல், இருக்க முடியுமா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திடீரென வைரலாகும் Vijayakumar பேத்தி? (வீடியோ)
Next post சிட்டி லைக்ஸ் !! (மகளிர் பக்கம்)