அஸ்தமித்துப்போன ஆர்வம் !! (கட்டுரை)
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.
இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. அமிர்தலிங்கம் பதவியேற்றார்.
ஐக்கிய தேசிய கட்சி, தெற்கில் சிங்கள மக்களது அமோக வாக்குகளைப் பெற்றது போல, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை வாரி வழங்கினார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதியிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டம் திருகோணமலைத் தேர்தல் தொகுதியிலும் 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும், எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் போட்டியிட உள்ளனர்.
அன்று, ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மக்கள் வழங்கிய வாக்குகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளுக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினது நீண்ட கால இருண்ட ஆட்சியிலிருந்து, தாங்கள் மீள்வதற்காகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மக்கள் வாக்கு அளித்தார்கள். அதாவது, இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கானதாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் ஆட்சிமாற்றத்துக்கானவை அல்ல. மாறாக, தங்களது சுயநிர்ணய உரிமைகோரலுக்கான ஒட்டுமொத்த மக்களது ஆணை ஆகும்.
அதாவது, 1948ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு கால அடக்குமுறைகளாலும் வன்முறைகளாலும் பாதிப்புக்கு உள்ளான தமிழ் இனம், பிறரது தலையீடுகள் அற்ற நிம்மதியான வாழ்வையே வேண்டி நின்றது. அவ்வாறான பாரிய எதிர்பார்ப்புகளோடுதான் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், அதற்கு மாறாக 1977ஆம் ஆண்டில் மீண்டும் ஓர் இனக்கலவரம் நிகழ்த்தப்பட்டது. அது கூட, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, 20 நாள்களில் (ஓகஸ்ட் 12 – 20 வரை) ஆரம்பிக்கப்பட்டு நடந்தேறியது.
இதில் சிக்கி 300க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களது பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன.
இத்தகைய அழிவுகளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தடுக்க முடியவில்லை. அவ்வாறு கூறுவதைக் காட்டிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களது வார்த்தைகளை, அரசாங்கம் செவி மடுக்கவில்லை; கண்டு கொள்ளவில்லை.
1989 பொதுத்தேர்தல், இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நடைபெற்ற தேர்தல் ஆகும். அடுத்து, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற போது வடக்கு, கிழக்கின் பெரும்பகுதி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபடியால், அந்தப் பிரதேசங்களில் தேர்தல் இடம்பெறவில்லை.
இக்காலப் பகுதியிலேயே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யாழ்ப்பாணம், தீவுப்பகுதிகளில் பெற்றுக் கொண்ட 10,744 வாக்குகளோடு ஒன்பது (09) ஆசனங்களையும் கைப்பற்றிக் கொண்டது.
1977ஆம் ஆண்டு அதிகப்படியான ஆசனங்களோடு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தது போல, 1994ஆம் ஆண்டு, ‘சமாதான தேவதை’யாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன மக்கள் முன்னணி என்ற கட்சியில் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றார்.
1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்பார்ப்புகளோடு வாக்களித்தார்களோ அது போன்றே, 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வாக்களிக்காது விட்டாலும் சந்திரிகா அம்மையாரில் பெரு நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவரை ‘சமாதான தேவதை’யாகவே தமிழ் மக்கள் நோக்கினர்.
ஆனாலும், வழமை போன்றே அவராலும் சமாதானத்தையும் சகவாழ்வையும் தர முடியாது, குண்டு வீச்சுகளையும் பொருளாதாரத் தடைகளையுமே தமிழர்களுக்கு தர முடிந்தது. இது போன்றே, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், 2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இக்காலப்பகுதியில், தென்னிலங்கையில் நிலவிய அரசியல் குழப்ப நிலையால், 2004ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வந்தது. போர் தற்காலிகமாக ஒய்ந்திருந்த அந்தச் சூழல், ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் வாக்களிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கப்பெற்றது.
ஆயுதப் போராட்டத்துக்கு சமமான வலுவான ஜனநாயகப் போருக்கான அத்திவாரமாக, நான்கு தமிழ்க் கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன. அதுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என உதயமாகியது.
கூட்டமைப்பு தனது முதலாவது கன்னித் தேர்தலிலேயே (2004) வரவாற்றில் தமிழ்க் கட்சி பெற்றுக் கொண்ட அதிகப்படியான (22) ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
தமிழ் மக்கள், தாங்கள் ஆயுதப் போராட்டத்தில் வலுவான நிலையில் இருந்தாலும் ஜனநாயகப் பண்பு சார்ந்த வழிகளில் உள்ள நம்பிக்கையை, மீண்டும் உள்நாட்டுக்கும் உலகுக்கும் மிகத் தீர்க்கமாக வெளிப்படுத்தி இருந்தனர்.
அடுத்து, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. இது கடந்த காலத் தேர்தல்களைப் போலன்றி, வேறுபட்டதாகக் காணப்பட்டது. 1982ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் புலிகளது சொல்லை, செயலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புலிகளே இல்லாத சூழ்நிலையில், ஒரு தேர்தலைத் தமிழினம் எதிர் கொண்டது. அதுகூட, அதற்கு முன்னரான ஆண்டில் (2009) மாபெரும் அழிவுகளை எதிர் கொண்ட தமிழ் மக்கள், வலிகள் காயங்கள் சற்றும் ஆறாத நிலையில், ஆற்றுப்படுத்த யாரும் அற்ற நிலையில், பொதுத் தேர்தலை எதிர் கொண்டனர்.
இவ்வாறான நிலையிலும், தமிழ் இனம் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஒற்றுமையாக வாக்களித்து, கூட்டமைப்புக்கு 14 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தது. கூட்டமைப்பினர் தமது மக்களது போருக்குப் பின்னரான அவலங்களை, நாடாளுமன்றத்தில் பல முறைகள் தெரியப்படுத்தியும் அரசாங்கத்தின் தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் பல(ய)ன் ஏதுமில்லை.
இது போன்றே, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் 16 ஆசனங்களைப் பெற்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிணக்குத் தீர்வுக்கு ஏதுவாக, புதிய அரசமைப்பின் உருவாக்கத்துக்கு பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டும், அனைத்தும் மீண்டும் விட்ட இடத்திலேயே வந்து நிற்கின்றன.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், எதிர்வரும் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் வருகின்றது. வழமைக்கு மாறாக, இம்முறை கூட்டமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
கூட்டமைப்பு மூலமாக அரசியலுக்குள் வந்தவர்கள், வெற்றி பெற்றவர்கள் எனப் பலர் கூட்டமைப்புக்கு எதிரான கூட்டில் நிற்கின்றனர். இதைவிட அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாத பலர்,கட்சிகளுக்கு ஊடாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் போட்டியில் உள்ளனர்.
இவர்கள், தமிழ் மக்களது வாக்குகளைச் சிதைக்கவென களம் இறக்கப்பட்டு உள்ளனர். இதுகூட, தமிழ் மக்கள் தேர்தலில் ஆர்வம் கொள்ளாமைக்கான காரணம் எனலாம்.
வாக்கு வலுவான ஆயுதம் எனச் சொல்லப்படுகின்றது; தேர்தல்கள் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது; வாக்களிப்பது எமது உரிமை எனவும் கூறப்படுகின்றது.
ஆனால், இதுவரை காலமும் நடந்த தேர்தல்கள், தமிழ் மக்களது (இழந்த) உரிமையை மீட்டுத் தரவில்லை; தமிழ் மக்களது தலைவிதியைக் கூடப் பிறரே தீர்மானிக்கும் நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் வாழும் மூவின மக்களில், தேர்தல்களில் தமிழ் மக்களது வாக்களிப்பு சதவீதமே குறைவாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இது தேர்தல்களில் ஒரு தேசிய இனம் நம்பிக்கையற்று இருப்பதையே சுட்டி நிற்கின்றது.
1977 தேர்தல் முடிவுகள் மூலம் புதிய அரசமைப்பு உருவானது. அதற்கு ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட இலகுவான 2/3 பெரும்பான்மை வழிகோலியது. அப்படிப்பட்ட யாப்பு, தமிழினத்தின் அடிமை விலங்கை இன்னமும் இறுக்கியது. அது இன்று வரை தொடர்கின்றது.
இந்நிலையில், எந்த அடிப்படையில், யாரை நம்பி, யாருக்கு வாக்களித்து, என்னத்தைக் கண்டது என, தமிழ் மக்கள், குறிப்பாக ஒரு பாமரன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
Average Rating