தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் !! (கட்டுரை)
தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார்.
“கொல்லைப்புற வழியாக, ஆட்சிக்கு வர மாட்டோம்” என்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முடிவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம், அ.தி.மு.க அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு ‘போனஸ்’ ஆகி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை, வேறு வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாகவே, அ.தி.மு.க அரசாங்கம் இன்று வரை நீடித்து வருகிறது; இனியும், 2021 மே வரை நீடிக்கப் போகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு, வேறுவிதமான ஆதரவும் இந்த ‘நிலை’யான ஆட்சியைக் கொடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. பழனிசாமியை எதிர்த்துக் களம் கண்ட ஓ.பன்னீர் செல்வம், தலைமையை ஏற்று துணை முதலமைச்சரானதும், தனது பிரிவு அ.தி.மு.கவினரை ஐக்கியமாக்கி, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஆனதும் ஒரு துணை.
இது தவிர, தினகரனை நம்பிச் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகரின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் அங்கிகரித்ததும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு, சபாநாயகரும் நீதிமன்றங்களும் முடிவு செய்யாமல், ஏறக்குறைய மூன்று வருடத்துக்கு மேல் நிலுவையில் இருப்பதும் மிகச் சரியான துணையாக, இந்த ஆட்சியை நீடித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
இது போன்றதொரு சூழலில்தான், ‘சசிகலா வெளியே வருகிறார்’ என்ற செய்தி, தற்போது வௌியாகி உள்ளது. ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா சிறைக்கும் சென்றதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும் ஒரே காலகட்டத்தில் நடந்தேறிய சம்பவங்கள் ஆகும்.
ஆகவே, அவர் வெளியே வந்தால், இவர் கட்சியை விட்டு வெளியே போவாரா என்பதுதான், சசிகலா வருகையைக் காரணம் காட்டி வெளிவரும், சர்ச்சைச் செய்திகள் ஆகும்.
அதுவும், கொரோனா வைரஸ் காலத்தில், எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தை, அத்தனை எதிர்க்கட்சிகளும் குறை கூறுகின்ற நேரத்தில், “எல்லா மட்டத்திலும் ஊழல்” என்று, குரல்கள் ஓங்கி ஒலிக்கின்ற காலகட்டத்தில், குறிப்பாக, இட ஒதுக்கீடு குறித்து மிகப்பெரிய பிரச்சினை தமிழ்நாட்டில் புகைந்து கொண்டிருக்கின்ற சமயத்தில், ‘சசிகலா வருகிறார்’ என்ற செய்தி பரப்பப்படுகிறது. இதனால், உடனடிப் பலன் என்ன?
கர்நாடகாவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் தண்டனைக் காலம், ஏறக்குறைய முடியும் காலத்தை நெருங்கி விட்டது. 2021 ஜனவரியில் எப்படியும் அவர் வெளியே வந்தாக வேண்டும். அவர், அபராதத் தொகையாகச் செலுத்த வேண்டிய 100 மில்லியன் ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி விட்டால், அவர் விடுதலையில், தடைகள் வேறு ஏதும் குறுக்கே நிற்கப் போவதில்லை.
ஆனால், 2021 ஜனவரிக்கு முன்னரே அவர், விடுதலையாவார் என்று பரப்பப்படும் செய்தியில், சட்ட ரீதியாக ஆதாரங்கள் எதுவும் இல்லை; அரசியல் ரீதியாகவும் வாய்ப்புகள் இல்லை.
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு, தண்டனைக் குறைப்புச் செய்வதற்கு, கர்நாடக சிறை விதிகளில் வாய்ப்புகள் இல்லை. அது தவிர, ‘சிறை நன்னடத்தை’ அடிப்படையில் தண்டனைக் குறைப்புச் செய்வதற்கு, ‘சசிகலா ஜெயிலுக்குள் இருந்து வெளியில் ஷொப்பிங் போனார்’ என்பது தொடர்பாக, டி.ஐ.ஜி. ரூபா நடத்திய விசாரணை அறிக்கை, நிலுவையில் உள்ளது.
அதைவிட, நான்கு வருட சிறைத் தண்டனையில், மூன்றரை வருடங்களுக்கு மேல் அனுபவித்து விட்ட சசிகலா, எஞ்சியிருக்கின்ற ஆறோ, ஏழு மாதங்களுக்காகத் தனது அரசியல் எதிர்காலத்தை, பா.ஜ.கவின் கையில் அடகு வைக்க வேண்டியதில்லை.
ஏனென்றால், கர்நாடகாவில் பா.ஜ.கவின் ஆட்சியே இடம்பெறுகின்றது. ஆகவே, மத்திய அரசு கண்ணசைத்தால், கர்நாடக மாநில அரசாங்கம், சசிகலாவுக்கு தண்டனைக் குறைப்பு அளித்து விடும் என்பது, நம்பும்படியாக இல்லை.
காரணம், அரசியல் ரீதியாக பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க விரும்பிய ஜெயலலிதாவை, 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் தடுத்தது, சசிகலாதான் என்ற சந்தேகம், பா.ஜ.க தலைமையிடத்தில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. இதைத் தாண்டி, சசிகலாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு, பா.ஜ.க தலைமை இன்னும் வரவில்லை. ஆகவே, ‘முன் கூட்டியே சசிகலாவுக்கு விடுதலை’ என்று வருகின்ற செய்தி, ஒரு பரபரப்புக்காகப் பரப்பப்படுவது மட்டுமே!
இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் அ.தி.மு.கவுக்குப் பாதகமாக, அந்தக் கட்சியை மத்தியில் இருந்து ஆதரிக்கும் பா.ஜ.கவுக்கு களங்கமாக இருக்கும் சூழலைத் திசை திருப்புவதற்கு வேண்டுமானால், இந்தச் செய்தி பயன்படலாம்; வேறு எதற்கும் உதவாது.
ஒன்றுபட்ட அ.தி.மு.கவை உருவாக்க வேண்டும் என்ற ஆசை, பா.ஜ.கவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், சசிகலா- எடப்பாடி, பழனிசாமி- ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த ஒரு தலைமை உருவாகி, அது தமிழகத்தில் வலுப்பெறட்டும் என்றும் யோசிக்கவில்லை.
திராவிடக் கட்சிகள் இரண்டில், தி.மு.க தற்போது வலுவாக இருக்கிறது. ஆட்சி என்ற ஒரே ஆயுதத்தைத் தற்காப்பாக வைத்துக் கொண்டு, அ.தி.மு.க நீடிக்கிறது. ஆகவே, அ.தி.மு.க தலைமை, நாலாபுறமும் சிதறிப் போவதே, தேசிய கட்சி போன்ற பா.ஜ.க, தமிழ்நாட்டில் காலூன்ற ஒரு வாய்ப்பாக அமையும்.
‘பெரும்பான்மை சமூக நலன்’ பற்றி, மனம் விட்டுப் பேசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் வேலுமணி ஆகியோரின் மனநிலைப்படி, அ.தி.மு.க வாக்காளர்கள், பா.ஜ.கவின் இந்துத்துவா கொள்கையுடன் ஒத்துப் போகக் கூடியவர்கள் என்று, டெல்லி பா.ஜ.க கருதுகிறது.
அந்த வியூகத்தின் அடிப்படையில், அ.தி.மு.க ஆட்சி முடிந்த பிறகு, அந்தக் கட்சி எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; இதுவரை அந்த ஆட்சியை அனுமதித்ததற்கு நன்றிக் கடனாக, அக்கட்சியின் ஒரு பகுதி வாக்காளர்கள் பா.ஜ.கவுக்கு வந்தாலே போதும்; மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே, அகில இந்திய பா.ஜ.கவின் வியூகமாகத் தென்படுகிறது.
இந்தச் சூழ்நிலைகளால், ‘சசிகலா வருகை’ என்ற செய்தியால், அரசியல் களத்தில் முக்கியமாக உள்ள பிரச்சினைகளை, திசை திருப்புவதற்கு உதவுமே தவிர, வேறொன்றுக்கும் பயனில்லை.
‘சசிகலா வருகை’ என்ற செய்தி, பிசுபிசுத்த நிலையில், இப்போது ‘கந்தஷஷ்டி கவசம்’ பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ‘கறுப்பர் கூட்டம்’ என்று ஒன்று, கந்தஷஷ்டி கவசத்தில் வரும் சொல்லின் அர்த்தத்தை அசிங்கமாக விமர்சிக்க, பா.ஜ.க இப்பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது.
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டவர், கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, பா.ஜ.க போராட்டம் நடத்தியது. முருகக் கடவுளை முன் வைத்துப் போராட்டத்தைத் தொடங்கி, தி.மு.கவுக்கு எதிராகவும் பிரசாரத்தைத் பா.ஜ.கவின் சமூக வலைத் தளங்கள் திருப்பியுள்ளன.
அ.தி.மு.கவின் வாக்கு வங்கியைக் ‘கவர’ வேண்டும். தி.மு.கவின் வாக்கு வங்கியைக் ‘கரைக்க’ வேண்டும் என்பதுதான், பா.ஜ.கவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வியூகமாகக் காட்சியளிக்கிறது.
ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும், மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கும் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டைப் போராட்டம் இன்றிப் பெற்றுக் கொடுக்கும் பலம், மாநில பா.ஜ.கவுக்கு இருந்தாலும், அது பற்றியெல்லாம் கண்டு கொள்ளவில்லை.
இதனால்தான், “இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை” என்று, மத்திய அரசு சொன்னதைக் கண்டித்து, பா.ம.கயின் தலைவர் டொக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இட ஒதுக்கீடுப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து விடக்கூடாது என்பதில், பா.ஜ.க அரசாங்கம், கண்ணும் கருத்துமாகவே இருக்கிறது. சமூக நீதிக்கு தமிழ்நாடு மிகவும் உணர்வுபூர்வமான மாநிலம். தமிழ்நாட்டில் கிளம்பிய போராட்டம், அரசமைப்பின் முதலாவது திருத்தத்துக்கே வித்திட்டது என்பது வரலாறு. அந்த வரலாறு, மீண்டும் திரும்பிவிடக் கூடாது என்பதில், கவனமாகக் காய் நகர்த்துகிறது பா.ஜ.க அரசாங்கம்.
குறிப்பாக, ‘மருத்துவக் கல்வி இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று சோனியா காந்தி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், கோயம்புத்தூரில் பெரியார் சிலைக்குக் காவி பூசப்பட்டதற்காக, டெல்லியிலிருந்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய காரணங்களால், தமிழ்நாட்டில் உருவாகும் உணர்வுபூர்வமான ‘சமூக நீதி’க் களம், பா.ஜ.கவுக்குத் தலைவலி என்பதை, அக்கட்சித் தலைமை உணர்ந்திருக்கிறது. ஆகவே, ‘சசிகலா முன்கூட்டியே விடுதலை’, ‘கந்தஷஷ்டி’ பிரச்சினைகள் எல்லாம், தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மருத்துவக் கல்வி இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கும் பிரச்சினை, தற்காலிகமாக அகில இந்தியப் பிரச்சினையாகி விடாமல், பா.ஜ.க மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டுள்ளது.
Average Rating