சமையல் போட்டியில் வரலாற்று சாதனை!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 58 Second

உலக சமையற்கலை ஒலிம்பிக் போட்டி (Culinary Olympics)… இப்படி ஒன்று இருக்கிறதா என்பது இங்குள்ள சமையற்கலை வல்லுநர்களுக்கே தெரியாத விஷயம். இவ்வாறு இருக்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான சமையற்கலை ஒலிம்பிக் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த யஷ்வந்த் குமார். ஏன் வரலாற்றுச் சாதனை? தனது வயதை விட இரண்டு, மூன்று மடங்கு பெரியவர்களிடம் போட்டியிட்டு வென்றுள்ளார் 16 வயதே நிரம்பிய யஷ்வந்த்.

இவரது தந்தை உமாசங்கர் தனபால். இந்தியாவின் முன்னோடி காய்கனி சிற்பக் கலைஞர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘உலக சமையற்கலை ஒலிம்பிக் போட்டி’யில் காய்கனி சிற்பத்துக்காக வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். சமையற்கலைப் போட்டியின் நூற்றாண்டு வரலாற்றில் இந்தியா பெற்ற முதல் அங்கீகாரம் இது. கலைகளின் தாயகம் என்று போற்றப்படும் இந்தியாவில் இன்றளவும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது ஒரு குறையே. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை லக்ஸம்பர்க் நாட்டில் காய்கனி சிற்பங்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியில் சமையற்கலை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

ஹிட்லர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா சார்பில் எவரும் பங்கேற்றதில்லை. முதன்முதலில் பங்கேற்றதோடு, நாட்டுக்கு பதக்கத்தையும் வென்று வந்தவர் உமாசங்கர். 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தனது 13 வயது மகன் யஷ்வந்தையும் கலந்து கொள்ளச் செய்து, நான்காம் இடம் பிடிக்க வைத்தார். அதன் தொடர்ச்சிதான் 2020 ஆம் ஆண்டில் நான்கு பதக்கங்கள் வென்றதற்கான உத்வேகம்.
“விளையாட்டுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் எப்படியோ அதேபோல் சமையற் கலைக்கான ஒலிம்பிக் இது. உலகம் முழுவதிலுமிருந்து பெரிய பெரிய சமையற் கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். 120 ஆண்டுகள் பழமையான இப்போட்டியின் 25வது எடிசனில் கலந்து கொண்டு நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறுகிறார் யஷ்வந்த் குமார்.

“எப்படி Culinary Olympics பற்றிய அறிமுகம் இங்கு இல்லையோ அதேபோல், NIOS (National Institute of Open Schooling) பற்றிய விழிப்புணர்வும் இங்கு குறைவாக இருக்கிறது” என்கிறார் யஷ்வந்தின் தந்தை உமாசங்கர். பள்ளிக்குச் செல்வதால், போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைக்காததால், NIOS படிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர் யஷ்வந்தின் பெற்றோர். NIOS கல்விமுறை பற்றி விரிவான ஓர் அறிமுகத்தைக் கொடுத்தார் உமாசங்கர். “10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கான தேர்வுகள் வீட்டிலிருந்தே படித்து எழுதலாம். இது நேரடி இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இதற்கான சேர்க்கை இரு வகைகளாக வைத்துள்ளனர். ஒன்று ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், மற்றொன்று சுய சான்றிதழ்.

அதாவது எனக்கு, எழுதப் படிக்கத் தெரியும் என்பதைத் தெரிவு படுத்திச் சேர்ந்து கொள்வது. இது 12ம் வகுப்புக்குச் செல்லாது. இதில் நிறையப் பாடங்கள் உள்ளது. அதில் தங்களுக்கு எந்த பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதை மொழிப்பாடம் ஒன்றோ, இரண்டோ சேர்த்துத் தேர்வு செய்து கொள்ளலாம். Academic Courses, Vocational Courses என இரண்டு பிரிவுகள் உள்ளன. Academic என்பது பாடங்களும், Vocational என்பது தொழிற்முறை சார்ந்த படிப்புகள். வருடத்திற்கு இரு முறை இதற்கான தேர்வும், சேர்க்கையும் நடைபெறுகிறது. குறிப்பாக இதில் நேரம் விரயமாவது இல்லை. எங்கள் அனுபவத்தில் இந்த சிலபஸ் எந்த விதத்திலும் மற்ற சிலபஸ்களுக்கு சலித்தது கிடையாது. எங்க பையனுக்கு பிடித்த பாடம் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அதுவும் மொழிப் பாடத்தோடு நான்கு பாடத்திற்கு.

பிடிக்காத ஒரு பாடத்தினை திணித்தோம். திணித்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு சப்போர்ட் பண்ண, சிறந்த கணித ஆசிரியரை வீட்டில் சொல்லிக் கொடுக்க வைத்தோம். பிசினஸ் ஸ்டடீஸ், ஹோம் சைன்ஸ் நான் சொல்லிக் கொடுத்தேன். பெயிண்டிங், ஆங்கிலம் என் மனைவி சொல்லிக் கொடுத்தாங்க. வீட்டிலிருந்தே படித்ததில் 401/500 மார்க் எடுத்திருந்தான். இது போன்ற பாடங்கள் இருக்கிறதா என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. எழுதுபவர்கள் எல்லோருமே பாஸ் பண்ணிடுவாங்களா என்பதும் இருக்கிறது. பெற்றோர்களின் பங்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஒன்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது அதில் சிறந்தவர்கள் மூலம் சொல்லிக் கொடுக்க வைக்கனும்” என்று கூறும் உமாசங்கர், இது பற்றிய விழிப்புணர்வு ஏன் மக்களிடையே சென்றடையவில்லை என்பது பற்றிக் கூறினார்.

“என் பையனுக்கு ஒன்பதாம் வகுப்பு வரை செலவு செய்த தொகைக்கும், பத்தாம் வகுப்பிற்குச் செலவு செய்ததையும் தெரிந்து கொண்டால் பதில் கிடைத்து விடும். ஒன்பதாம் வகுப்பு வரை வருடத்திற்கு லட்சக்கணக்கில் ஆனது. NIOS-ல் பத்தாம் வகுப்பிற்காக மொத்தமாகவே 1800+300தான் ஆனது. தற்போது 12ம் வகுப்பிற்கான அட்மிஷனும் ரூ.2000 கொடுத்து முடிச்சிட்டோம். இது போக தேர்வுக்கான தொகை அவ்வளவுதான். புத்தகங்களும் அவர்களே கொடுத்திடுவாங்க.
வியாபாரமாக்கப்பட்டிருக்கும் கல்வியில் இது குறித்த செய்திகள் வெளியே வராமல் உள்ளது. இப்படி ஒரு முறை இருக்கிறது என்று தெரிந்தால் MBBS, எஞ்சினியரிங் பக்கம் போகும் கூட்டம் குறைந்து விடும். எங்கள் பெரிய பையன் மாதிரி சின்ன பையனுக்கும் சமையற் கலையில் திறமை இருக்கு ஆனால், ஆர்வமில்லை.

அதனால் அவனைத் தொந்தரவு செய்யாமல், அவனுக்கு ஆர்வம் இருக்கும் மல்ட்டி மீடியா துறையில் விட்டுட்டோம். குழந்தைகளுடைய ஆர்வத்தைத் தட்டிக்
கொடுக்கக் கூடிய பெற்றோர்கள் வந்துவிட்டால் இங்கிருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை மூட நேரிடும்” என்கிறார் உமாசங்கர். “ரெகுலராக பள்ளிக்குச் சென்று வரும் போது இதில் கவனம் செலுத்த முடியவில்லை. குறைந்தது ஆறு மணி நேரம் பயிற்சி தேவை. பள்ளிகளில் டீச்சிங்கும் அவ்வளவு சூப்பரா சொல்லி தரமாட்டாங்க. பெற்றோர் நல்ல இன்வால்மெண்டா சொல்லி தராங்க. எந்த சந்தேகம்னாலும் கேட்க முடிகிறது. பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்பதற்கே பயமாக இருக்கிறது” என்று தனது NIOS படிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்தார் யஷ்வந்த்.

‘‘இந்தியாவில் மூன்று விஷயங்களைத் தாண்டி வெளியில் போவதில்லை” எனக் கூறும் உமாசங்கர், அதனால் எந்த மாதிரியான சூழலை இங்கு உருவாக்கி இருக்கிறோம் என்பதை விளக்கினார். “ஒன்று அரசியல் பற்றிப் பேசினால் பேசுவாங்க. தேவையில்லையென்றாலும் பேசுவாங்க, தேவையில்லாததும் பேசுவாங்க. அடுத்து சினிமா. அதிலும் அடித்தட்டு உழைப்பாளர்கள் பற்றிப் பேசுவது கிடையாது. ஸ்டார்ஸ் மட்டும்தான் பேசும் பொருள். மூன்றாவது விளையாட்டு. அதிலும் எல்லா விளையாட்டும் ஒன்றாக இருப்பதில்லை. கிரிக்கெட் மட்டுமே தலையில் தூக்கி வச்சுக்கிறாங்க. இதனால் சமையற்கலை மட்டுமில்லை, இது போல இன்னும் ஏகப்பட்ட கலைகள் அங்கீகரிக்கப்படாமல் ஏதோ ஒரு மூலையில் செத்துக் கொண்டிருக்கிறது. 2012லிருந்து 2020 வரை மூன்று Culinary Olympics-க்கு எங்கள் சுய செலவில்தான் சென்று வந்தோம்.

அரசிடம் கேட்டுப் பார்த்தோம். எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எங்கள் துறை சார்ந்தவர்களிலுமே இந்த போட்டியை நேரில் பார்த்தவர்களை இந்தியாவில் விரல் விட்டு எண்ணி விடலாம். பங்கேற்றது நானும் என் பையன் யஷ்வந்த் மட்டுமே. யஷ்வந்தின் திறமை என்னவென்று அப்பாவை விட ஒரு கோச்சா எனக்கு நல்லா தெரியும். அந்த திறமையை இப்போது வெளி கொண்டுவரவில்லை என்றால் வரலாற்றுப் பிழையாக போய்விடும் என்று கணித்த என் கணிப்பு கொஞ்சமும் தவறவில்லை. சமையற்கலை ஒலிம்பிக் வரலாற்றில் இதன் பின் யாரும் இதை மாற்றி எழுதுவாங்களான்னு தெரியாது. எனவே பெற்றோர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்கள் பிள்ளைக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதை ஊக்குவியுங்கள் அல்லது அதில் சிறந்து விளங்குபவர்கள் கொண்டு பயிற்சி கொடுத்து வாழ்வில் சிறக்க வையுங்கள்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது? (கட்டுரை)
Next post நான் கமல் கேம்ப், ரகுவரன் ரஜினி கேம்ப் என்று விமர்சிக்கப்பட்டோம்!! (வீடியோ)