கலை நகராகிய கண்ணகி நகர்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 52 Second

கண்ணகி நகர் என்றதுமே “அங்கே தனியாகப் போக வேண்டாம், இரவில் போகவே கூடாது. அது பாதுகாப்பான இடமில்லை” போன்ற முத்திரைகளைக் குத்தி, ஒதுக்கி வைத்துவிட்டோம். ஆனால் அதன் அடையாளம் அதுவல்ல. மக்களின் இந்த தவறான புரிதலையும், கண்ணோட்டத்தையும் உடைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, St+art (ஸ்ட்ரீட் ஆர்ட்) என்ற தனியார் அறக்கட்டளையும், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனமும், ஸ்ட்ரீட் ஆர்ட் சென்னை 2020 என்ற கலைவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

கலை மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்பும் சில கலைஞர்களின் கூட்டு முயற்சியே இந்த ஸ்ட்ரீட் ஆர்ட். கலை குறிப்பிட்ட சமூக-பொருளாதார மக்களால் மட்டுமே ரசிக்க முடியும், புரிந்துகொள்ள முடியும் என்ற போக்கை முறிக்கும் விதமாகவும், கலை அனைவருக்குமே பொதுவானது, அனைவரும் ரசிக்கக்கூடியது என்ற உண்மையை உணர்த்துவதும் இவர்கள் திட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களாலும், 2004ல் சென்னை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களாலும் உருவானதுதான் கண்ணகி நகர். இங்கு சுமார் 80,000 மக்கள் வசித்து வருகின்றனர். வாழும் நிலத்தைவிட்டு வெகுதொலைவு வந்தும், தைரியத்துடன் தங்கள் வாழ்க்கையை முன்னோக்கி செல்லும் தைரியசாலிகள்.

ஆனால், இங்கு வசிக்கும் பலருக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்தும், கடைசி நேரத்தில் முகவரியைப் பார்த்து நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் நடப்பதாகக் கூறுகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், St+art என்ற தொண்டு நிறுவனம் கண்ணகி நகரை தங்கள் அடுத்த இலக்காக தேர்வு செய்திருக்கின்றனர். St+art ஏற்கனவே மும்பை, கோவை, பெங்களூர், கோவா என இந்தியாவில் பல முக்கிய நகரங்களின் குடிசை பகுதிகளில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல கலைநிகழ்ச்சிகள் செய்து, வெற்றி பெற்றுள்ளனர். குற்றங்களின் நகராக சித்தரிக்கப்பட்டுள்ள கண்ணகி நகரை கலைநகராக மாற்ற இந்த அமைப்பு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். மக்களுடன் இணைந்து பல பட்டறைகள், குழந்தைகளுக்கு ஆலோசனைகள் என அவர்களுடனே பல நாட்கள் தங்கியிருந்து மக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளனர்.

அதன்படி, நம் மக்களையும் அவர்கள் வாழ்வியலையும் சொல்லும் அழகிய ஓவியங்களை பிரமாண்டமாக வரைந்து முடித்து, சென்னையின் அடையாளமாகவே கண்ணகி நகரை மாற்றியுள்ளனர். இவர்கள் ஓவியம் வரைவது பேப்பரிலோ, பேனரிலோ இல்லை. நான்கு அடுக்கு மாடி கட்டிடங்களின் பிரமாண்டத்தில், மக்கள் வியந்து பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மக்கள் வாழும் இடத்திலேயே அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே கலையைக் கொண்டு சேர்த்துள்ளனர். கண்ணகி நகர் மக்களுடன் சேர்ந்து ஆலோசித்து, இந்நிறுவனம் 15 கட்டிடங்களைத் தேர்வு செய்திருக்கிறது. இந்த ஒவ்வொரு கட்டிடமும் அவர்கள் கதையையும், அடையாளத்தையும் கூறும். கலை, ஓவியம் இதெல்லாம் மியூசியத்திலும், கலைக்கூடங்களிலும்தான் இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, கலை நம் வாழ்க்கையில், வீடுகளில், தெருக்களில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கலை மக்களை ஒன்று சேர்க்கும், ஒழுக்கம் தரும் என்ற முயற்சியிலும்தான் இதை செய்வதாக, St+art அமைப்புடன் இரண்டு ஆண்டுகளாக பயணித்திருக்கும் அக்மல் தெரிவிக்கிறார்.

கண்ணகி நகரில் இருண்ட பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் இரவில் வேகமாக நடந்து கடக்கும் பல இடங்களை ஒட்டியபடி இந்த பிரமாண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வையும், முக்கியமாகக் குழந்தைகளுக்கு நிம்மதியான மனநிலையும் ஏற்படுத்தித் தரும். கண்ணகி நகருக்குள் நுழையும் முன்பே பெரிய கட்டிடத்தில், இரண்டு குழந்தைகளின் சிரித்த முகத்துடனான ஓவியம்தான் நம்மை வரவேற்கிறது. அந்த ஓவியத்தைப் பார்த்ததுமே தாமாக முகத்தில் புன்னகை வந்துவிடும். இந்த சுவர் ஓவியத்தை ஏ-கில் என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு கலைஞரையும் முதலில் வரவேற்பது இந்த குழந்தைகள்தானாம். பெரியவர்கள் கொஞ்சம் கூச்சத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்த்தாலும், முதலில் குழந்தைகள் வந்து நண்பர்களாகிவிட, பெரியவர்களும் தங்கள் தயக்கத்தை உடைத்து வெளியே வருகின்றனர்.

அப்படி ஒரு தருணத்தில், தான் புகைப்படம் எடுத்த இரண்டு சகோதரிகள்தான், இந்த கண்ணகி நகரின் அடையாளமாய் இருக்க வேண்டும் என்று நினைத்த ஏ-கில் கலைஞர், அதை முதல் கட்டிடத்தில் பிரமாண்டமாக வரைந்து, இங்கே வரும் மக்கள் முதலில் பார்க்கவேண்டிய ஓவியமாய் அவர்களை வரவேற்கும் விதத்தில் அழகாய் உருவாக்கியுள்ளார். இனி கண்ணகி நகர் என்றதுமே அக்குழந்தைகளின் சிரித்த முகம்தான் நினைவிற்கு வரும். அடுத்து ‘அரவாணி-ப்ராஜக்ட்’ என்ற கருவை மையமாக வைத்து திருநங்கைகளின் கதையை ஒரு கட்டிடம் கூறுகிறது. பொது இடம் திருநங்கைகளுக்கும் உரியது. அவர்கள் உரிமையைத் தடுக்கமுடியாது என்றும், அவர்களும் நமக்குள் ஒருவர் என்ற சிந்தனையை போதிக்கும் விதத்திலும் இது தயாராகி உள்ளது. அக்கட்டிடத்தில் வாழும் ஒருவர், “எங்கள் குழந்தைகள் இது போன்ற நல்ல கருத்துகள், சிந்தனைகள் சூழ வளரப்போகிறார்கள் என்பதில் சந்தோஷம். திருநங்கைகளின் கதையைச் சொல்ல எங்கள் கட்டிடத்தை தேர்ந்தெடுத்ததில் எங்களுக்குப் பெருமைதான்” என்கிறார்.

இதே போல 15 கட்டிடங்களில் கலை மூலம் கதையை கூறி, மக்களை கலையுடன் இணைக்கும் முயற்சியில் இந்த அமைப்புகள் இறங்கியுள்ளன. “அதிகாலை தூங்கி எழுந்து, வீட்டிலிருந்து வெளியே வந்ததும், எங்கள் கட்டிடம் முன் முப்பது நாற்பது பேர் கேமராவுடன் நின்றிருப்பார்கள்” என்று சிரித்தபடி சொல்கிறார் கண்ணகி நகரில் வசிக்கும் பெண் ஒருவர். “இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது, நம் இடத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும், இந்த அழகை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்கிறார். இப்படி சில நாட்களிலேயே மக்களின் மனநிலை மாறியுள்ளது. தங்கள் இடத்தை பாதுகாப்பாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. கண்ணகி நகர் மக்கள் வீட்டுக்குள் அடங்கி இருப்பவர்கள் அல்ல. குழந்தைகள் இன்னும் வெளியில் ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறார்கள். பக்கத்து வீட்டாரையும் தன் குடும்பமாக நினைக்கும் வழக்கம் இன்றும் அங்கே இருக்கிறது.

படிப்பு, வேலை எனத் தினமும் கடமைகளை முடித்து, மாலை முதல் இரவு வரை அனைவரும் வெளியிலேயே பெரும்பாலும் இருக்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஒன்றாக சேர்ந்து மொத்தம் 70க்கும் அதிகமான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இதை மையமாக வைத்து, ஸ்ட்ரீட் ஆர்ட் கலைவிழாவின் ஒரு பகுதியாக அஞ்சல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் கண்ணகி நகர் மக்களின் 30 விளையாட்டுடன், அவர்கள் வாழ்வியலையும் கதையையும் அந்த அஞ்சல் அட்டைகள் சொல்கின்றன. சில குடியிருப்பாளர்கள், அந்த அஞ்சல் அட்டைகளில் தங்கள் கைப்பட பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் வாசகங்களையும் எழுதியுள்ளனர். இந்த அஞ்சல் அட்டைகள் விரைவில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்படும்.

அஞ்சல் அட்டையைப் பெற விரும்புவோர், சமூக வலைத்தளங்களில் இவர்களை தொடர்பு கொண்டு அழைக்கலாம். ஸ்ட்ரீட் ஆர்ட், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெற்றது. கலைஞர்கள் பொது இடங்களிலும், ரயில்களிலும், மக்களைப் பற்றியோ அல்லது மக்களுக்குக் கூற விரும்பும் செய்திகள் சார்ந்த விழிப்புணர்விற்காகவும் சுவரோவியங்களைப் பயன்படுத்தினர். இப்போது இக்கலை அழகியலுக்காக அரசாங்கமே பரிந்துரைக்கிறது. இருண்ட நகரமாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ள கண்ணகி நகர், இனி கலைஞர்களின் கூடமாக, கலை நகராக மாறியிருக்கிறது. இதை அங்கு வாழும் மக்கள் உட்பட, சென்னை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இடமாக மாற்றவேண்டும். இதுவரை கண்ணகி நகர் பக்கமே போகாதவர்கள், கண்டிப்பாக அங்கு சென்று நம் சென்னையின் புது அடையாளத்தை பார்த்து ரசியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கியப் பெட்டகம்: மாங்காய்!! (மருத்துவம்)