நான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 45 Second

‘வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம்தான். அப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோருக்கு நான் முதலாவது பிறந்த பெண் குழந்தை. எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் வரப்போகும் வாரிசைக் காண ஆவலாய் காத்திருக்க நான் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையானேன். விளைவு பிறக்கும்போதே எனது இரண்டு கால்கள் சரியாக இல்லை. எடையும் குறைவாய் இருக்க, என்னுடைய இடுப்பு எலும்புகளில் வளர்ச்சி இல்லாமல் போனது. அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனை பலவற்றை அணுகியும் பலனில்லை. பிறப்பிலே இந்தக் குறைபாடு இருந்ததால் சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். எனது பெற்றோர்களும் படிக்காதவர்கள். எனக்கு ஏற்பட்ட உடல் ரீதியான பிரச்சனை குறித்த மருத்துவர்களின் விளக்கத்தை அவர்களால் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

சுருக்கமாக என்னால் நேராக எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. கால்கள் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குடும்பத்தினருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், வீட்டுக்குள் இருக்கும்போது எனது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி உடலை நகர்த்தி நடக்கத் தொடங்கினேன். வெளியில் செல்லும்போது வீல்சேரை பயன்படுத்த தொடங்கினேன். 2014ல் இருந்தே வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாடி வருகிறேன். இதுவரை கோவை, ஈரோடு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், சண்டிகரில் நிகழ்ந்த தேசியப் போட்டிகளில் விளையாடி நான்கு தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். 5வது தேசியப் போட்டியில் பெஸ்ட் பிளேயர் விருதும் எனக்குக் கிடைத்தது. எதிரணியின் பந்தை தடுத்து ஆடும் ‘தடுப்பாட்டம்’ எனக்கு சிறப்பாக வரும். இதற்காக எனக்கு இளம் சாதனையாளர் (young achiever) விருதும் கிடைத்தது.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான பயிற்சியினைப் பெற தாய்லாந்து வரை சென்று பயிற்சி எடுத்தேன். என்னுடையது அப்பா, அம்மா, தம்பிகள் இருவர் என அளவான குடும்பம். அப்பா கேன்களில் டீ எடுத்துச்சென்று வியாபாரம் செய்பவர். எனது தம்பிகள் இருவரும்தான் என்னை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டுபோய் பள்ளியில் விட்டுமீண்டும் அழைத்து வருவார்கள். 8ம் வகுப்புவரை என் ஊரான இலஞ்சி கிராமத்தில் படித்தேன். படிப்பை மேலும் தொடர்வதற்காக தென்காசியில் உள்ள ஆயக்குடி அமர்சேவா சங்கத்தில் இணைந்து +2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன். அமர்சேவா சங்கத்தில் இருந்து படித்தபோது என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தது.

அங்கு முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாகவே மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் வழங்கப்படுவதோடு விளையாட்டுப் பயிற்சிகள், தட்டச்சு, கம்ப்யூட்டர், கிராஃப்ட் வேலைகள், தையல் பயிற்சி என பலவிதமான வேலைவாய்ப்பு பயிற்சிகள், தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. +1 படிக்கும்போது வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாட்டு குறித்து தெரியவர, ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். +2 முடித்ததுமே அருகில் இருந்த கல்லூரியில் இணைந்து பி.காம் படித்தேன். பெரும்பாலான கல்லூரி வகுப்புகள் முதல் அல்லது இரண்டாம் தளத்தில் இருக்கும். என்னால் அங்கிருக்கும் படிகளைக் கடந்து ஏறி இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பு தடைப்பட அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணைந்து அஞ்சல் வழிக் கல்வியில் படிப்பைத் தொடர்ந்தேன்.
மாவட்ட அளவில் நடந்த பேஸ்கெட்பால் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், எனக்கு சில நண்பர்கள் வட்டமும் அமைந்தது.

அவர்கள் மூலமாக வார இறுதி நாட்களில் சென்னையில் உள்ள ஜெ.ஜெ. ஸ்டேடியம் வந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். அப்போது ஒவ்வொரு வார இறுதியிலும் தென்காசியில் இருந்து தனியாக ரயிலேறி சென்னைக்கு வர வேண்டிய நிலை இருந்தது. என் பெற்றோர்களுக்கும் என் பாதுகாப்பு குறித்த கேள்வி இருந்துகொண்டே இருக்க.. அப்போது சென்னையில் என்னோடு பயிற்சி எடுக்கும் நண்பர்கள் மூலமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இரவு நேர இலவச பெண்கள் தங்கும் விடுதியில் (night stay home) தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் அங்கு தங்கி பயிற்சி மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். பிறகு என் பொருளாதாரத் தேவைக்காக ஒரு வேலையும் தேடிக் கொண்டேன். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்றில் எனக்கு கஸ்டமர்கேர் வேலைக்கான வாய்ப்புக் கிடைத்தது. இப்போது இரவு நேரக் காப்பகத்தில் இருந்த நிலையில் வேலைக்கும் சென்று வருகிறேன்.

எனக்கு வயது 23. தினமும் அதிகாலையில் எழுந்து கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்துவிட்டு, அப்படியே தியாகராய நகரில் உள்ள என் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்கிறேன். என் வேலை நேரம் காலை 11 முதல் இரவு 9:30 மணி வரை. கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அரசுத் தேர்வுகளை எழுத என்னை தயார்படுத்தி வருகிறேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தும், எனக்குத் தேவைப்படும் மோட்டிவேஷனல் வீல் சேர், ஸ்போர்ட்ஸ் வீல்சேர் மற்றும் சைடு சப்போர்ட் வீல் உள்ள டூ வீலர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை’’ என்றவர், 2020 ஒலிம்பிக் விளையாட்டில் தேர்வாகி பயிற்சி எடுப்பதற்காக தாய்லாந்து செல்ல இருந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு கலந்துகொள்ள முடியாமல் போனது என்று வருத்தம் தெரிவிக்கிறார். எல்லா பூட்டுகளுமே சாவிகளோடுதான் தயாரிக்கப்படுகின்றன. அது போல எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடே வருகின்றன. நம்பிக்கைதானே வாழ்க்கை… கனகலெட்சுமி இன்னும் நிறைய நிறைய சாதிப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சினிமா ஆசை வந்ததால வீட்டில கல்யாணம் பன்னிவச்சுடாங்க!! (வீடியோ)