ஃபார்முலா பைக் பியூட்டி!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 12 Second

பெண் என்றால் மென்மையானவள், ஆண்களுக்கு இணையாக, கடினமான விளையாட்டுக்களில், வேலைகளில் அவளால் ஈடுபட முடியாது என்ற கூற்றுகள் எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இதை நிரூபிக்கும் வகையில், நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்துள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் இளவட்டக்கல்லைத் தூக்குவதைப்போன்று, உரலைத் தூக்கி, ஒருவருக்கு ஒருவர் இணையானவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை பறை சாற்றியுள்ளனர். அந்த வரிசையில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெனிபர் மனம், உடல் வலிமை தேவைப்படுகின்ற ஃபார்முலா பைக் ரேசில், ஓசையின்றி தடம் பதித்து வருகிறார். 2018-ம் ஆண்டின் தேசிய சாம்பியனான இவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்…

‘‘என்னுடைய அண்ணன் அலெக் சாண்டரும் ஒரு பைக் ரேசர்தான். அவரைப் பார்த்துத்தான் மோட்டார் ஸ்போர்ட்சில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு வந்தது. குட்ஷெப்பாடு பள்ளியில் பத்தாவது படிக்கும்போதே, பைக் ரேசில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் கியர் பைக்கைச் சரியாக ஓட்டத் தெரியாது. ரவி என்பவர்தான் ‘‘மனவுறுதி இருந்தால் சேலஞ்சான இவ்விளையாட்டில் உன்னால் சாதிக்க முடியும்!’’ என உற்சாகப்படுத்தி பயிற்சி தந்தார். தற்போது அவருடைய Sparks Racing என்ற அணி சார்பில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். என்னுடைய பயிற்சியாளரும் இவர்தான்’’ என்றவர் பதினான்கு வயதில் இருந்தே பைக் ரேசில் கலந்து கொண்டு வருகிறார்.

‘‘ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பைக் ரேசில் பங்கேற்பதற்கு முன்னர் டென்னிஸ், பள்ளிக்கூடம், வீடு என இருந்ததால் கஷ்டம் எதுவும் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், மோட்டார் ஸ்போர்ட்சில் கலந்துகொள்ளத் தொடங்கிய பிறகு, என்னைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகுவது கஷ்டமாக இருந்தது. அதிக இரைச்சலுடன் சீறிப்பாயும் பைக்குகள், அவை நிறுத்தப்பட்ட கேரேஜ், இருங்காட்டு கோட்டை சூழல் என எல்லாமே புதியதாக இருந்தது. ஒரு கட்டத்தில் சின்னப் பெண்ணான என்னைச் சேர்த்துக் கொள்வார்களா? என்ற நினைப்பும் இருந்தது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் பொதுவாக ஆணாதிக்கம் நிறைந்ததாக இருந்தாலும் இவ்விளையாட்டில் பங்கேற்க வரும் என்னைப் போன்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நிறைய வீடுகளில் ‘‘பெண்ணாச்சே! அடிபட்டுடுமே!’’ என்பதற்காக இதில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள். என் வீட்டில் அப்படி இல்லை. அம்மாவும் அப்பாவும் பயிற்சி மற்றும் போட்டிக்காக நான் எங்கு சென்றாலும் தடை சொல்லாமல், ஊக்குவித்து வருகின்றனர். மேலும், என்னுடைய கல்லூரி நிர்வாகத்தினரும், ஃபிஸிக்கல் டைரக்டர் அமுதா அவர்களும் மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். Federation of Motorsports Clubs in India என்ற அமைப்பு பைக் ரேசில் பங்கேற்க முன்வரும் பெண்களை ஊக்குவிக்கிறார்கள். தேசிய அளவிலான போட்டிகளை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்’’ என்றவர் உயிரை பணயம் வைத்து நடைபெறும் இந்த பைக் ரேஸ் போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

‘‘ஹாக்கி, கால்பந்தாட்டம், தடகளம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. அதைப்போன்று இந்த விளையாட்டில் பங்கேற்கிறவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும். சவால்கள் நிறைந்த இவ்விளையாட்டில் பங்கேற்கின்றவர்களுக்கு உடல், மனம் வலிமையானதாக இருப்பது மிகவும் முக்கியம். இதற்காக, தினமும் ரன்னிங், சைக்கிளிங் போன்ற கார்டியோ உடற்பயிற்சிகளைக் காலை 6 மணி முதல் 7 மணி வரை செய்வேன். அதன்பின்னர் ஒருமணி நேர ஓய்விற்குப்பிறகு பென்ச்பிரஸ், புல்-அப்ஸ்,மெடிசன் பால் ஆகிய எக்ஸசைஸ்களை ஒன்றரை மணி நேரம் செய்வேன். உடலைவிட மனம் எந்தச் சூழலிலும் சோர்வு அடையாமல் ஆற்றல் வாய்ந்ததாக இருப்பது ரொம்ப முக்கியம்.

இதற்கு தன்னைத்தானே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே போட்டிக்கு முந்தைய நாளில் இருந்தே ‘‘உன்னால் முடியும்; நீ சாதிக்கப்பிறந்தவள்!’’ போன்ற உற்சாகம் தரும் வார்த்தைகளை மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்’’ என்றவர் வெற்றிக்கு மன வலிமை மிகவும் அவசியம் என்றார். ‘‘மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் ரேஸ் பைக் பராமரிப்பிற்கும், போட்டிகளில் பங்கேற்பதற்கும் நிறைய செலவாகும். எங்கள் அணிக்கு, யமஹா பைக் நிறுவனம் மற்றும் மோட்டுல் ஆயில் நிறுவனத்தார் ஸ்பான்சர் செய்கின்றனர். அதனால் ஓரளவுக்குச் சமாளிக்க முடிகிறது. பயிற்சி செய்வதற்கும், போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவினைப் பெற்றோர் பார்த்துக்கொள்கின்றனர். 2019-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 பேர் கலந்து கொண்டோம்.

பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது நியூட்ரலில் இருந்தது. இதனால் மற்ற வீராங்கனைகள் வெகு தூரம் சென்று விட்டனர். அந்தச் சமயத்தில் சிறிதும் டென்ஷன் ஆகாமல் கடைசி இடத்தில் இருந்து, இரண்டாமிடம் வந்ததை என்றைக்கும் மறக்க முடியாது. ரேஸ் நெருங்க நெருங்க, Track-யில் நீண்ட நேரம் பிராக்டிஸ் செய்வேன். நான் எதில் வீக்காக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பயிற்சி செய்வேன். உதாரணத்துக்கு மூச்சு விடுவது சிரமமாக இருந்தால் அதில் கூடுதலாக கவனம் செலுத்துவேன்.

2018 மற்றும் 2019-ல் ஏஷியா கப் ஆஃப் ரோடு ரேசில் கலந்துகொண்டேன். இதில் ஆண், பெண் இருவரும் பங்கேற்கலாம். 3 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி முறையே தைவான், தாய்லாந்து மற்றும் டெல்லியில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் நான் மூன்றாம் இடத்தைப் பெற்றேன். மோட்டார் ஸ்போர்ட்சில் கலந்துகொள்ள நிறைய பெண்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் அந்த விளையாட்டினை விரும்புவதில்லை. பெண்களுக்கு இது போன்ற விளையாட்டு அவசியமா? அப்படி பைக் ரேஸ் ஓட்டி தான் சம்பாதிக்கணுமா என்று நினைக்கின்றனர். பிற்போக்கான இந்த எண்ணத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு ஆதரவு அளித்தால் சர்வதேச அளவிற்கு நமது நாட்டில் நிறைய வீராங்கனைகள் உருவாவார்கள்’’ என்கிறார் ஜெனிபர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன இறுக்கம் குறைக்கும் கலை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கியப் பெட்டகம் : காளான்!! (மருத்துவம்)