ஆரோக்கியப் பெட்டகம்: மாங்காய்!! (மருத்துவம்)
சுவைத்தால்தான் என்றில்லை… நினைத்தாலே நாவில் நீர் ஊறச் செய்வது மாங்காயும் மாம்பழமும் மட்டுமே! வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கிற மாங்காயை விட, சீசனில் மட்டுமே கிடைக்கிற மாம்பழங்கள் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். மாங்காய் சாம்பார், மாங்காய் பச்சடி, மாங்காய் ஊறுகாய் என மாங்காய் சேர்த்த சமையலில் சுவையும் மணமும் தூக்கலாகவே இருக்கும்.அது மட்டுமல்ல, மாங்காயில் பலருக்கும் தெரியாத ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. மாங்காயின் சிறப்புகளை விளக்கி, அதை வைத்து மூன்று சுவையான ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.
‘‘மாம்பழம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இந்தியாதான். ‘பழங்களின் அரசன்’ என்று கூறப்பட்டாலும் மாம்பழத்தைப்போல மாங்காய்க்கும் இந்தியாவில் சம முக்கியத்துவம் கிடைத்துள்ளது. முன்பெல்லாம் பருவ காலங்களில் மட்டுமே ‘மாங்காய்’ கிடைக்கும். இப்போது கிளிமூக்கு மாங்காய் வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பே மாமரங்கள் இருந்ததாக பல குறிப்புகள் உள்ளன. நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலும் இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை பூஜை செய்ய மாம்பூவை உபயோகப்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன. வீட்டின் முன் பண்டிகைகளின்போது மாவிலையைக் கட்டும் பழக்கம் இன்றும் உள்ளது. ஹோமங்கள், பூஜைகளின் போதும் கலசத்தின் மீது மாங்கொத்து வைக்கப்படுகிறது. மாமரத்தை ‘கல்ப விருட்சம்’ என்று கூறுவார்கள். வீட்டின் முன்பு கட்டுவது மங்களகரம் என்றாலும் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளித்தள்ளும். அதனால் நமக்கு நன்மையே தரும் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம். பலவிதமான மருத்துவ குணங்கள் உடையது. பூ, பிஞ்சு, காய், பழம் என்று எல்லாமே நமக்கு பலன் தரும்.
காளிதாசனின் கவிதைகளிலும் மாம்பூவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. காஞ்சியில் புத்த ஸ்தூபியில் கூட மாம்பழம்/மாங்காய் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. மற்ற பல உலக நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவில்தான் மாம்பழத்துக்கும் மாங்காய்க்கும் ஒரு தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. நகைகளில் கூட மாங்காய் மாலை இன்று வரை பலருக்கும் பிடிக்கும் வண்ணம் விதவிதமான டிசைன்களில் செய்யப்படுகிறது. புடவை, பெட்ஷீட், ஜன்னல் திரை என்று எதிலும் நாம் மாங்காயை விட்டு வைக்கவில்லை.மாங்காயைப் போன்ற ருசியான காய் வேறு எதுவும் இல்லை. பலவிதமான ஊறுகாய், சட்னி மட்டுமன்றி பல சமையல் குறிப்புகளிலும் மாங்காயை நாம் உபயோகப்படுத்துகிறோம்.
சத்துகள் என்னும்போது மாங்காயில் தாது உப்புகள் மிகச்சிறந்த அளவில் உள்ளன. கரோட்டின் எனப்படும் வைட்டமின் – ஏ, தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின் எனப்படும் மூன்று பி-வைட்டமின்கள் உள்ளன. இதில் ஓரளவு கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்தும் கொஞ்சமாக இரும்புச்சத்தும் உள்ளன. 100 கிராம் மாங்காயில் 44 கலோரி சக்தி நமக்கு கிடைக்கும்.
பல உணவுகளில் வைட்டமின் – ஏ இருப்பதாகக் கூறப்பட்டாலும் 100 கிராம் அளவு நம்மால் சாப்பிட இயலாமல் இருக்கும்.
ஆனால், மாங்காயை நாம் சுலபமாக 100 கிராம் சாப்பிட இயலும். அதில் கிட்டத்தட்ட 99 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின்-‘ஏ’ நமக்கு கிடைக்கும். பலவித உணவுகளோடு ‘சாலட்’டில் சேர்த்து சாப்பிடும்போது நமக்குத் தேவையான அளவு சுலபமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் மிகவும் பிடித்தமானது. முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மசக்கையின் போது மாங்காயை உண்ண வேண்டுமென ஆசைப்படுவார்கள். மாங்காயை அப்படியே மெலிதாக அரிந்து உப்பு, காரம் தூவி உண்ணும்போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசித்துச் சாப்பிடும்படி உள்ளது.
வடஇந்தியாவின் ‘ஆம் பன்னா’ எனப்படும் மாங்காய் ஜூஸ் மிகப்பிரசித்தம். வெயில் நாட்களில் எல்லா இடங்களிலும் தாகத்தைத் தணிக்கும் வண்ணம் இது கிடைக்கும்.‘மாவடு’வை தயிர் சாதத்துடன் ஒரு தடவை சுவைத்தவர்கள் அதன் ருசியில் மயங்கி அடிக்கடி கேட்க வைக்கும் அளவு மிகப்பிரபலமானது. ஆந்திராவில் ஆவக்காய், மாங்காய் ஊறுகாய்கள் அதிகம் விரும்பப்படும். வடஇந்தியர்கள் லேசான இனிப்பு கலந்த ‘அந்தா’ என்றொரு ஊறுகாயை செய்வார்கள்.
மாங்காயை துருவி சாதமும் செய்யலாம். அடையிலும் போடலாம். இது இல்லாத சுண்டல் ருசியில் குறைவாகவே இருக்கும். நமது வாழ்வில் இன்றியமையாத ஓர் இடத்தைப் பெற்றுள்ளது ‘மாங்காய்’ என்றால் மிகையாகாது.மாங்காய் சீசனில் கிடைக்கும்போது ஊறுகாய் தவிர நாம் ‘மாங்காய் சாதம் மிக்ஸ்’ செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். காலை நேர அவசரத்தில் சுலபமாக மாங்காய் சாதம்/சேவை செய்து டிபன் பாக்ஸில் கட்டித் தரலாம்.
இதற்கு கிளிமூக்கு மாங்காயைத் துருவிக்கொள்ளவும். எண்ணெய் அதிகமாக வைத்து கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த சிவப்பு மிளகாய் தாளித்து, தேவைக்கேற்ப பச்சை மிளகாய் விழுது, மாங்காய் துருவல் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கலாம். மஞ்சள் தூளையும் அப்போதே சேர்த்து விடலாம். சில நிமிடங்கள் வதக்கி ஆற விட்டு தேவையான பொடி உப்பையும் சிறிது வறுத்த வெந்தயத்தின் தூளையும் கலந்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேண்டுமென்றபோது உடனே உபயோகப்படும். ஆறிய பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். இல்லாவிடில் ஊறுகாய் போல நீர் விட்டு வந்துவிடும். இதை நாம் சுண்டலுக்கு கூட உபயோகப்படுத்தலாம்.
மாங்காய் துவையல்
என்னென்ன தேவை?
கிளிமூக்கு மாங்காய் – 1, புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – சிறிது, கொத்தமல்லி – அரை கட்டு, பச்சை மிளகாய் – 3, கடுகு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாங்காயை தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கவும். ஊற வைத்த புளி, தகுந்த உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் விடாமல் அரைக்கவும்) நறுக்கிய மாங்காயுடன் கலந்துவிடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
மாங்காய் அடை
என்னென்ன தேவை?
இட்லி அரிசி – 2 ஆழாக்கு, இஞ்சி – அரை அங்குலத் துண்டு, பச்சை மிளகாய் – 4, உப்பு – தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் – சிறிது, உருளைக்கிழங்கு – 1, கிளிமூக்கு மாங்காய் -1, கடுகு – தாளிப்பதற்கு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
இட்லி அரிசியைக் கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து முதலில் அரைத்த பின் இட்லி அரிசியை கரகரப்பாக அரைக்கவும். கடைசி யில் துருவிய தேங்காய், உருளைக்கிழங்கு துருவல், மாங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். அரைத்த உடனே அடை சுடலாம். சிறிது கனமான அடைகளாக சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். மிக ருசியாக இருக்கும்.
Average Rating