ஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 34 Second

ஒவ்வொரு காயிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கும். அவரைக்காயை ‘ஒட்டுமொத்த உடலுக்குமான உன்னத மருந்து’ என்றே சொல்லலாம். ஆனாலும், அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களைவிட, அரிதாக, விரத நாட்களில் சமைத்து சாப்பிடுகிறவர்களே அதிகம்.நினைவாற்றலைப் பெருக்குவதில் தொடங்கி, முதுமை நோய்களை விரட்டுவது வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என எல்லோருக்குமான ஏற்றம் மிகுந்த காய் இது.

அவரைக்காயின் அற்புதங்களையும் மருத்துவ குணங்களையும் விளக்கமாகப் பேசுவதுடன், அவரைக்காயை வைத்து செய்யக்கூடிய 3 சுவையான உணவுகளையும் செய்து காட்டுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்க்காமல் எந்த மண்ணிலும் எந்த தட்பவெப்ப நிலையிலும் எளிதில் வளரக் கூடியது அவரைக்காய். அனைத்து வயதினருக்கும் அவசியமான அத்தனை சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அரிய காய்கறிகளில் அவரைக்கு முதலிடம். அவரைப் பிஞ்சு சுவையிலும் மருத்துவ குணங்களிலும் சிறந்தது. புரதச் சத்தையும், நார்ச்சத்தையும் அதிகம் கொண்டது. ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற யாரும் அவரையை அலட்சியப்படுத்தக் கூடாது.

இதய ஆரோக்கியம் மேம்பட…

ரத்தத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதிலும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. அவரைக்காய் இந்த இரண்டுக்கும் உத்தரவாதம் தருகிறது. எல்.டி.எல். (low densitylipo protein) எனப்படுகிற கெட்ட கொழுப்பைக் குறைக்கிற நார்ச்சத்து அவரைக்காயில் அதிகமுண்டு.

எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க…

கால் கப் அவரைக்காயில் 10 கிராம் அளவு புரதம் உள்ளது. இது ஒட்டுமொத்த பருமனைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவுகிறது. என்ன செய்தும் எடையைக் குறைக்க முடியாதவர்கள், அவரைக்காய் வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். வேக வைத்த அவரைக்காயை பிரெட், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவது பயன் தரும்.

சத்துக் குறைபாட்டை சரி செய்ய…

வைட்டமின் பி1, இரும்புச் சத்து, தயாமின், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எல்லா சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் பி 1 சத்து நரம்பு மண்டல இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் அவசியமானது. இரும்பும், தாமிரமும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும். தவிர, தாமிரச் சத்தானது எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும். பாஸ்பரஸும் மக்னீசியமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

ரத்தசோகையை விரட்ட…

ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் ரத்த சோகையிலிருந்து தப்பிக்கவும் போதுமான அளவு இரும்புச்சத்து அவசியம். ரத்த சோகைக்குக் காரணமான ஹீமோகுளோபின் குறைபாட்டை குணப்படுத்தக்கூடியது அவரைக்காய். நுரையீரல் மூலமாக உடலின் மற்ற செல்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்ல ஹீமோகுளோபின் மிக அவசியம்.

பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான கால்சியம் சத்தையும் அபரிமிதமாகக் கொண்டது அவரை. நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதால் மலச்சிக்கல் வராமலும், ஏற்கனவே பல நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் அவரைக்காய் மருந்தாகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியத் தேவையான வைட்டமின் சி சத்து நிரம்பியது அவரைக்காய். புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. அவரைக்காயின் பொட்டாசியத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ், உடலின் தண்ணீர் அளவையும் அமில அளவையும் சரியான விகிதத்தில் வைத்திருக்க உதவுகிறது. எலெக்ட்ரோலைட் எனப்படுவது வியர்வையின் மூலம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். அந்த இழப்பு அவ்வப்போது ஈடுகட்டப்பட வேண்டும்.

இவை தவிர, பார்வைத் திறனுக்கும் சரும ஆரோக்கியம், எலும்புகளின் பலத்துக்கும் தேவையான வைட்டமின் ஏ, சி ஆகியவையும் இதில் உள்ளன. அவரைக்காயில் உள்ள L-dopa என்கிற ஒருவித அமினோ அமிலமானது, மன அழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படுகிற மனநிலை மாற்றங்களையும் சரிப்படுத்தக்கூடியது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படுகிற நோய் வராமல் காக்கும் தன்மையும் அவரைக்காயில் உள்ளது.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

இளம் பச்சை நிறத்தில் உறுதியாகவும் பிஞ்சாகவும் இருக்க வேண்டும். லேசாக தொய்வடைந்தோ, பழுப்பு நிறப் புள்ளிகள் இருந்தாலோ வாங்க வேண்டாம். தொட்டுப் பார்த்தால் உள்ளே வெறும் காற்றடைத்த மாதிரியான காய்களையும் தவிர்க்கவும். பிஞ்சு அவரைக்காய் என்றால் தோலுடன் அப்படியே சமைத்து சாப்பிடலாம். முற்றிய காய்கள் என்றால் தோலை நீக்க வேண்டியது அவசியம்.

துளையிட்ட பைகளுக்குள் போட்டு, 5 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். காயவைத்த அவரை விதைகளும் சத்துகள் நிரம்பியவையே. அவற்றை முதல் நாளே ஊற வைத்து, வேக வைத்து சமைக்க வேண்டும்.

எப்படி சமைப்பது?

வேக வைத்த அவரைக்காயை துருவிய கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்துப் பச்சடியாக சாப்பிடலாம். அவரைக்காயை பீன்ஸ், கொத்தவரங்காய் உள்ளிட்ட அதே குடும்பத்துக் காய்கறிகளுடன் சேர்த்தும் சமைக்கலாம். அவரைக்காயை சிவப்பரிசியுடன் சேர்த்து புலாவ் மாதிரி சமைக்கலாம். இளசான பிஞ்சு அவரைக்காயில் நார்ச்சத்து மிக அதிகமானது என்பதால் கூடியவரையில் அதையே சமையலுக்குப் பயன்படுத்தவும்.

ரொம்பவும் பிஞ்சு அவரைக்காய் என்றால் பச்சையாகவே சாப்பிடலாம். ஆவியில் வேக வைப்பதன் மூலம் வைட்டமின் சி அழியாமல் காக்கலாம். அவரைக்காயை வேக வைத்து மசித்து க்ரீம் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து டிப்’ ஆகவும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில் சேர்த்து சமைத்த அவரைக்காயை காலை நேர சிற்றுண்டியாகவே சாப்பிடலாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

புரதம் 12.9 கிராம்
நீர்ச்சத்து 122 கிராம்
நார்ச்சத்து 9.2 கிராம்
ஆற்றல் 88 கிலோ கலோரிகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் 20.4 மி.கி.
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் 259 மி.கி.
கார்போஹைட்ரேட் 33.4 கிராம்
வைட்டமின் ஏ 1.7 மைக்ரோகிராம்
பீட்டாகரோட்டின் 15.3 மைக்ரோகிராம்
வைட்டமின் சி 0.5 மி.கி.
வைட்டமின் பி6 0.1 மி.கி.
ரிபோஃப்ளோவின் 0.2 மி.கி.
கால்சியம் 61.2 மி.கி.
இரும்பு 2.5 மி.கி.
மக்னீசியம் 73.1 மி.கி.
பாஸ்பரஸ் 212 மி.கி.
பொட்டாசியம் 456 மி.கி.

அவரைக்காய் மேமோஸ்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய அவரைக்காய் – 100 கிராம், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 50 கிராம், பொடியாக நறுக்கிய கேரட் – 25 கிராம், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், மைதா – 100 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

மைதாவில் உப்பு, எண்ணெய், போதுமான தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து, நறுக்கிய வெங்காயம், அவரைக்காய், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து சின்னதாகத் திரட்டி, நடுவில் காய்கறிக் கலவையை வைத்து கொழுக்கட்டை செய்வது போல மூடி 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும். சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

அவரை புலாவ்

என்னென்ன தேவை?

அவரைக்காய் – 100 கிராம், அரிசி – 100 கிராம், தேங்காய்ப்பால் – 200 மி.லி., வெங்காயம் (விழுதாக அரைத்தது) – 1, பச்சை மிளகாய்- 4, உப்பு – தேவைக்கேற்ப, சோம்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பச்சை மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய
அவரைக்காய் சேர்த்து வதக்கவும். அரிசியும் தேங்காய்ப் பாலும் சேர்த்து உப்பு கலந்து பிரஷர் குக் செய்து பரிமாறவும்.

அவரை வடை

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 100 கிராம், அவரைக்காய் – 100 கிராம், வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது, சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி, மாவுடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post பதக்கம் மட்டுமே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்காது!!! (மகளிர் பக்கம்)