அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காராமணி!! (மருத்துவம்)
கொத்தாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, காய்கறிக் கடை அலமாரிகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் காராமணியை அனேகமாக பலரும் அலட்சியமாகக் கடந்து போயிருப்பார்கள். பலருக்கு அது என்ன காய் என்றே தெரிந்திருக்காது. வேறு சிலருக்கோ அதை எப்படிச் சமைப்பது எனத் தெரியாமல் தவிர்த்திருப்பார்கள். ஒருமுறை காராமணியை சமைத்துச் சாப்பிட்டால், அதன் அருமை உணர்ந்து அடுத்த முறை அவசியம் அதைக் கையில் எடுக்கத் தவற மாட்டார்கள். காராமணியில் அத்தனை நற்குணங்கள் உண்டென்பது அதிகம் பேர் அறியாத தகவல்!
‘‘பசுமையான இந்தக் காயில் அதிகளவில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் காக்கும் மாயம் செய்பவை. நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை ஒருசேர கொண்ட அற்புதமான காய் காராமணி. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காராமணி அவசியமான ஒன்று. முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்…’’ – காராமணியின் ஆரோக்கிய மற்றும் அழகு குணங்களை ஹைலைட் செய்தபடி ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.
“கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டுமே இதில் அதிகம். கரையக்கூடிய நார்ச்சத்தானது கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி, அடிக்கடி எதையாவது உண்ணத் தூண்டாமல் காக்கும். அதன் விளைவாக எடை கட்டுப்பாட்டில் இருக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். கரையாத நார்ச்சத்து என்பவை மலமிளக்கியாக செயல்படுபவை. மலச்சிக்கல் பிரச்னையை சரிப்படுத்துபவை.
கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு. கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிற ஃபோலேட் நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காப்பாற்றும். காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம் சத்தும் இதில் நிறையவே உண்டு. எலும்புகளின் ஆரோக்கியம் காக்க கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் இதில் உண்டு…’’ – காராமணியின் சிறப்புகளுடன், மேலும் சில நற்பண்புகளையும் பற்றித் தொடர்கிறார் புவனேஸ்வரி.
இதிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமலும் காக்கிறது. வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப் படுத்தும் தன்மை இதில் இருக்கிறது. சீரான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது. சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
உலர வைத்த காராமணியை எடைக் குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதில் எடையையும் குறைத்து, புரதக் குறைபாடு பிரச்னை வராமலும் காத்துக் கொள்ளலாம்.காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயச் செயலிழப்பு நோய்கள் வராமல் காக்கிறது.
வேறு எந்தக் காயிலும் இல்லாத ஒரு மகத்தான தன்மை காராமணிக்கு உண்டு. இதில் உள்ள லிக்னின் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உண்டு. இவை இரண்டும் சரும செல்கள் பழுதடைவதைத் தடுத்து, வயோதிகத் தோற்றம், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் இளமையாக இருக்க உதவுகின்றன.
தொடர்ந்து கூந்தல் உதிர்வுப் பிரச்னையால் அவதிப்படுவோர், காராமணியை பச்சையாகவோ, உலர வைத்ததையோ அடிக்கடி சாப்பிடலாம். கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ள காரணத்தால் காராமணி சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதைப் பார்க்கலாம்.
எப்படி சமைக்கலாம்?
காராமணி பச்சையாக பீன்ஸ் போன்ற தோற்றத்தில் கிடைக்கும். அதை அப்படியே பொரியலாகவோ, கூட்டாகவோ, குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். பிஞ்சு காராமணி லேசான இனிப்புச் சுவை கொண்டிருக்கும். அப்படியே பச்சையாக சாலட்டிலும் சேர்த்து சாப்பிடலாம்.காய்ந்த காராமணியும் சத்து நிறைந்தது. அதை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து சுண்டலாகவோ, கிரேவியாகவோ, வேறு காய்கறிகள் கொண்டு செய்கிற சமையலில் கூட்டுப் பொருளாகவோ சேர்க்கலாம்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் – 47 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் – 8.35 கிராம்
புரதம் – 2.8 கிராம்
மொத்தக் கொழுப்பு- 0.40 கிராம்
ஃபோலேட் – 62 மைக்ரோகிராம்
வைட்டமின் ஏ – 865 IU
வைட்டமின் சி – 18.8 மி.கி.
கால்சியம் – 50 மி.கி.
இரும்பு – 0.47 மி.கி.
மெக்னீசியம் – 44 மி.கி.
பாஸ்பரஸ் – 59 மி.கி.
காராமணிக்காய் -காராமணி பருப்பு உசிலி
என்னென்ன தேவை?
காராமணிக்காய் – 50 கிராம், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – சிறிது, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச்சாறு – 1/2 மூடியில் எடுத்தது, மல்லித்தழை – அலங்கரிக்க, காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயம் – சிறிது.
தாளிக்க…
கடுகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நீரில் மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை 1/2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பிறகு உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். இதை ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை தாளித்து வெந்த காராமணிக்காய், பருப்பு வேக வைத்து எடுத்ததை போட்டு கிளறவும். இறக்கும் போது எலுமிச்சைச்சாறு விட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.
காராமணி காரக் கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
கொழுக்கட்டை மாவு – 1 கப், உப்பு, எண்ணெய் – சிறிது, பொடியாக அரிந்த காராமணிக்காய் – 1/2 கப், தேங்காய் துருவல் – 1/4 கப், பொட்டுக்கடலைமாவு – 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது.
எப்படிச் செய்வது?
கொதிக்கும் நீரில் உப்பு, எண்ெணய் சேர்த்து கொழுக்கட்டை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கினால் கொழுக்கட்டை மாவு ரெடி. காராமணிக்காயை வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
பூரணத்திற்கு: கடாயில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து, மிளகாய் விழுது, வெந்த அரிந்த காராமணிக்காய், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவு தூவி கிளறி இறக்கவும். விருப்பமான கொழுக்கட்டை அச்சில் மேல் மாவு வைத்து உள்ளே பூரணம் வைத்து அடைத்து கொழுக்கட்டை தயார் செய்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். சத்தான, சுவையான காராமணிக்காய் கொழுக்கட்டை தயார்.
காராமணிப் பொரியல்
என்னென்ன தேவை?
காராமணி – கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
காராமணியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும். பச்சை வாடை போனதும் காராமணியும் உப்பும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து வேக விடவும். இதற்கிடையில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும். காராமணி வெந்ததும் பொடித்ததைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தணலில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துப் பரிமாறவும்.
Average Rating