தளம் 3: ஈழத் தமிழ் அரசியல் நேற்று – இன்று – நாளை !! (கட்டுரை)

Read Time:36 Minute, 5 Second

ஈழத் தமிழர் அரசியல் பல்வேறு அரசியல் இயக்கங்களைத் தன்னகத்தே கொண்டது. வெளியிலிருந்து வரும் பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடுகள், வல்லரசுகளின் மேலாதிக்கம் முதல் தன்னுள்ளே இயங்கும் ஒடுக்குமுறைகள், சாதியம், பெண்ணடிமைத் தனம் என்பவற்றுடன் ஏனைய தேசிய இனங்களுடனான உறவும் முரணும் எனப் பலதரப்பட்ட, சிக்கலான அரசியல் இயக்கங்களை ஈழத் தமிழ் அரசியல் உள்ளடக்குகிறது. இந்த அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய உரையாடலாக இன்றைய தளம் அமையும் என நிகழ்ச்சியின் மட்டுறுத்துநர் மு. மயூரன் வழங்கிய அறிமுகத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், சட்டத்தரணியும் யாழ், பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான கே.குருபரன் ஆகியோரிடையே தேசம்-தேசியம், சுயநிர்ணயம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்தது.

“தமிழ்த் தேசியம்’ என்ற சொல், இன்று அரசியல் அரங்கில் எல்லா இடங்களிலும் மீண்டும் மீண்டும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பயன்படுத்தும் கட்சிகளிடமோ, அரசியல் தரப்புகளிடமோ தமிழ்த் தேசியம் பற்றிய புரிதல் போதுமானளவு இல்லை என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். தமிழ்த்தேசியம் பற்றிய தத்துவார்த்த உரையாடல், வெறுமனே கல்வியாளர் மத்தியில் மட்டும் தேக்கம் கண்டுவிடக் கூடாது” என்று கூறிய அஷோக்பரன், “தமிழ்த் தேசியம் என்றால் என்ன” என்ற கேள்வியை, குருபரனிடம் கேட்டு, உரையாடலைத் தொடக்கிவைத்தார்.

“தமிழ்த் தேசம் என்றால் என்ன என்று பார்க்க முன்னர், தேசம் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும். தேசம் என்பதற்கு ஒத்த ஆங்கிலச் சொல் ‘Nation’ என்பதாகும். தமிழர்களைச் சிறுபான்மைகள் என்று சொல்வதற்கும் ‘தேசம்’ என்று அழைப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன என்று பார்ப்பதன் மூலம், ‘தேசம்’ என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ளலாம். ‘தேசம்’ என்பது அடிப்படையில், ஓர் அரசியல் கோரிக்கை. தேசமாகத் தம்மைக் கருதுவோர், குறிப்பிட்ட ஒரு கூட்டு மனநிலைக்கு வந்து சேரக்கூடிய புள்ளியிலிருந்து எழும் கோரிக்கை ஆகும். அந்த அரசியல் கோரிக்கை, சுயநிர்ணய உரிமைக்கானது; அதன் அடிப்படையானது சுயாட்சிக்கானது. இதைக்கோருகிற ஓர் அரசியல் அலகே, தேசம் எனப்படுகிறது. இதை எப்படி, ‘சிறுபான்மை உரிமைகள்’ என்பதுடன் ஒப்பிடலாமெனில், சிறுபான்மை உரிமைகள் என்பவை மொழி சார்ந்த, மதம் சார்ந்த, கலாசாரம் சார்ந்த உரிமைகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, தமிழர்களுடைய போராட்டம் என்பது, மொழி அந்தஸ்தில் சமவுரிமை என்பதாக மாத்திரம் இருக்குமாக இருந்தால், அது சிறுபான்மை உரிமைக்கோரிக்கையாக இருக்கும். அவ்வாறான சிறுபான்மையினரின் கோரிக்கை, சுயாட்சியைக் கோராது; மாறாக, உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான கோரிக்கையாக இருக்கும். இலங்கையில், தமிழர்களுடைய கோரிக்கை, தொடக்கத்தில் மொழியுரிமை கோரும் சிறுபான்மைகளின் கோரிக்கையாகத் தொடங்கி, அரசியல் வரலாற்றினூடே பரிணாமமடைந்து, சமஷ்டியையும் சுயாட்சியையும் தனி நாட்டையும் கோரும்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

தாங்கள் தம்மை ஆள்வதற்கான ஓர் ஏற்பாட்டின் அடிப்படையிலேயே, தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனும் நிலைக்கு வரும்போது, தமிழர்கள், தம்மை ஒரு தேசமாகக் கருதுகிறார்கள். சுயாட்சியைக் கோருவதென்பது, தனிநாட்டுக்கோரிக்கை மட்டுமே என்றாகாது. சுயாட்சியினுடைய பல வழிமுறைகளுள் ஒன்று, ஒரு நிறுவன ஏற்பாடு மட்டுமே தனிநாடாகும். எனவே, தமிழருடைய சுயாட்சிக் கோரிக்கையை, தனிநாட்டுக்கோரிக்கையாகவே எப்போதும் காண்பது தவறு என, நான் நினைக்கிறேன். சுயாட்சிக்கான மற்றைய வடிவங்கள், என்ன என்பதைப் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதே, தமிழர்களுடைய தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.

இலங்கையின் பேச்சுவார்த்தை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு, இது தெளிவாகத் தெரியும். தனி நாடு மட்டுமே தீர்வு என்ற நிலைப்பாடு, திம்பு முதல் ஒஸ்லோ வரையான பேச்சுவார்த்தைகளில் ஒரு நாளும் எடுக்கப்படவில்லை. சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்படும் நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வுகளைப் பற்றியதாகவே பேச்சுவார்த்தைகள் அமைந்தன.

உள்ளகச் சுயநிர்ணயமா, வெளியகச் சுயநிர்ணயமா என்பதை, சுயநிர்ணயத்தைக் கோருகின்ற மக்கள் குழுமமே தீர்மானிக்க வேண்டும். எனவே, சுயநிர்ணயக் கோரிக்கையோடு, ‘தேசம்’ என்பது ஒன்றித்திருக்கிறது. சுயநிர்ணயத்தைப் பேசுவோர், ‘தேசம்’ என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு சுயநிர்ணயமும் விளங்கவில்லை; தேசமும் விளங்கவில்லை என்பதே எனது கருத்தாகும்” எனத் தனது கருத்தை முன்வைத்தார் குருபரன்.

குருபரனுடைய இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, அஷோக்பரன், “பிரிவினை தவிர்ந்த எல்லாமே, உள்ளக சுயநிர்ணயத்துக்குள் அடங்குவது தானே; சந்திரசோம-எதிர்-சேனாதிராஜா வழக்கில், இலங்கையின் உயர்நீதிமன்றம், இரு விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தது. ஒன்று, தமிழர்கள் ஒரு தேசம் என்பது. இரண்டு, அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருப்பது, இலங்கையின் அரசமைப்புக்கு முரணானதல்ல என்பது. இந்த இரு விடயமும், உயர்நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா” எனக் கேட்டார்.

குருபரன்: அந்தத் தீர்ப்பில், உயர்நீதிமன்றம் தமிழர்களைத் தேசமாக அங்கிகரித்துள்ளதா எனக் கேட்டால், நான் இல்லை என்றே சொல்லுவேன்.

அஷோக்பரன்: அந்தத் தீர்ப்பில், பல குழப்பங்கள் உண்டெனினும், இலங்கையின் அரசமைப்புக்குள் தமிழர்களின் தேசக் கோரிக்கையும் உள்ளக சுயநிர்ணய உரிமையும் அங்கிகரிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு மைல்கல்லாகக்கூட நீங்கள் கருத மாட்டீர்களா?

குருபரன்: இல்லை, நான் அந்தத் தீர்பை, அப்படி வாசிக்க முடியாதென்றே சொல்கிறேன். அத்துடன், இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டு, ஒற்றையாட்சி என்கிற அடிப்படையில், தமிழர்களுக்கு தேசமும் சுயநிர்ணய உரிமையும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது எனச் சொன்னால், அது நகைப்புக்கிடமானது என்றே நினைக்கிறேன்.

அஷோக்பரன்: ஸ்கொட்லாந்து அனுபவத்தில், அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு என்பது, ஒற்றையாட்சி எனும் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. அப்படியிருக்க, ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வு என்பது சாத்தியமில்லை என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்?

குருபரன்: கலாநிதி அசங்க வெலிகல, இது குறித்துத் தனிக் கட்டுரை ஒன்றையே எழுதியுள்ளார். அதில் அவர், ஐக்கிய இராச்சியம் என்கிற ஒற்றையாட்சி அமைப்புக்குள் நான்கு தேசங்கள் உள்ளன என்பதை வைத்துக்கொண்டு, பல தேசங்கள் ஒற்றையாட்சிக்குள் இருக்கலாமா என்கிற கேள்விக்கு அவர், ‘இல்லை, பிரித்தானிய அரசியல் கலாசாரத்தில் தனித்துவமான கூறு ஒன்று உள்ளது. அங்கே ஒற்றையாட்சி எனும் கருத்தியல் ‘ஒன்றியம்’ என்பதுடன் சேர்ந்து வாழும்’ என்கிறார். அங்குள்ள நான்கு தேசங்களும் ஒன்றியம் என்ற அடிப்படையில் இருக்கும்போது, அங்கே தேசம் எனும் வரையறை வருகிறது. ஆனால் அப்படியிருந்தும் ஐக்கிய இராச்சியம், இதில் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. அண்மைய ‘பிரெக்சிட்’ சிக்கல்கள், இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஸ்கொட்லாந்து தன்னுடைய சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும் என்பதை, அங்குள்ள இரண்டு பிரதான கட்சிகளும் சவாலுக்கு உட்படுத்தவே இல்லை. இங்கே இந்த நிலைமை இருக்கிறதா? அதுதான் வித்தியாசம். ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சித்தாந்தமும் இலங்கையின் அரசியல் சித்தாந்தமும் இந்த இடத்தில் முற்றிலும் வேறானவை.

அஷோக்பரன்: தேசம்-அரசு எனும் எண்ணக்கருக்கள் தொடர்பாக, இலங்கையில் உள்ள குழப்பம் காரணமாக, தேச அரசு என்பதும் ஒற்றையாட்சியும் ஒன்றாகப் பார்க்கப்படுவதால், ஒரு நாடு ஒரு தேசமாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து விதைக்கப்பட்டிருப்பதால் தான், இலங்கையினுடைய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அடிப்படைச் சவாலாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

குருபரன்: ஒரு நாட்டுக்குள் பல தேசங்கள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஒற்றையாட்சி கூட தீர்வைக் கொண்டிருக்க முடியும் என்பதற்கு ஐக்கிய இராச்சியம் ஓர் எடுத்துக்காட்டு. இங்கே ஓர் ஒற்றைத்தேசியக் கருத்தியல் தான் இருக்கிறது. சிங்கள பௌத்த மேலாண்மைகொண்ட, ஒற்றைத்தேசியக் கருத்தியலுடன் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணலாம் எனும் போது, நாம் மீண்டும் மீண்டும் அந்த ஒற்றையாட்சியை மேம்படுத்துவதாகத்தான் அமையும். இதனால் தான், 2015இல் ‘இறைமை பகிரப்படமாட்டாது; ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு’ என்று பேசப்பட்டபோது, அதனை நாம் விமர்சித்தோம். ஒற்றையாட்சியின் அடிப்படைகளுக்கு எந்தத் தீர்வுபற்றி யோசித்தாலும், குறிப்பாக அந்தத் தீர்வு திடமற்ற நிலையில் தெளிவற்றதாக இருக்குமாக இருந்தால், அது பொருள்கோடலை நோக்கி இட்டுச்செல்லும். அப்படி வரும்போது அது ஒற்றையாட்சிக்குச் சார்பாகவே போகும் என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அரசு தொடர்பான வரைவிலக்கணத்தையும் தெளிவற்றதாக வைத்துக்கொண்டு தீர்வுக்கான வழிமுறைகளையும் தெளிவற்றதாகவும் திறந்தநிலையிலும் வைத்துக்கொண்டிருந்தால் அது நடுவண் அரசுக்கே சாதகமாக முடியும். இதுவே, மாகாணசபை தொடர்பான எம்முடைய அனுபவமும் ஆகும்.

இவ்வுரையாடலைத் தொடர்ந்து, சட்டத்தரணியும் முனைவர் பட்ட ஆய்வாளரும் விரிவுரையாளருமான நவரத்தினம் சிவகுமார் நோர்வேயிலிருந்து இவ்வுரையாடலில் கலந்துகொண்டார்.

“ஈழம் என்பது இலங்கை எனக் கொண்டால், ஈழத் தமிழ் அரசியல் என்று வரும்போது இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் மலையகத்திலும் அவற்றுக்கு வெளியே தென்னிலங்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் தேசிய இனம் வாழ்கிறது. இவ்வாறு பல்வேறுபட்ட மக்கள் கூட்டங்களின் அரசியலை இத்தலைப்பு உள்ளடக்கி நிற்கின்ற நிலையில், கிழக்கிலங்கையைச் சேர்ந்த கல்வியாளர் என்ற வகையில், கிழக்கிலிருந்து பார்க்கும்போது, ஈழத் தமிழ் அரசியல் எப்படி இருக்கிறது” என்று மு. மயூரன் கேட்ட கேள்வியை ஒட்டி சிவகுமார் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். “தமிழ்த் தேசியம் என்பத‌ற்குள், யார் உள்ளடக்கப்படுகிறார்கள் என்று பார்க்கும் போது, இதற்கு நாம் நடைமுறை ரீதியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையில் சிங்களவர், தமிழர் என மொழியை அடிப்படையாகக் கொண்ட இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனமாக உள்ளனர். இவர்கள் தவிர, மலையக மக்கள் தனியாக உள்ளனர். மலையகத் தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் கணிசமான அளவில் வாழ்கிறார்கள்.

கிழக்குமாகாணம் தனித்துவமான தன்மை கொண்டது. அது இன, மத, கலாசார ரீதியில் பன்மைத்துவம் கொண்டதாக உள்ளது. பல வாய்ப்பேச்சு அரசியல் பேசுபவர்களுக்கு, அம்பாறை என்றோர் இடம், கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது என்பதோ, அங்கே தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதோ தெரியாது. அது தெரியாமல் தான் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். பலருக்கும் இந்த விழிப்புணர்வு இல்லை.

இந்த உரையாடலுக்கு வருவதற்கு முன்னர், இங்கு பேசப்படும் விடயம் தொடர்பாகப் பலரையும் தொலைபேசி வழியாக நேர்காணல்செய்தேன். அப்போது பல கருத்துகளை, கிழக்கு வாழ் மக்கள் பகிர்ந்துகொண்டார்கள். ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கொள்கைகளைக்கொண்டு தான், இப்போதும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது கொள்கைகளை வகுக்கிறார்கள். இது கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது. கிழக்கு பறிபோகின்றது என்றொரு விடயம் பேசப்படுகிறது. பறிபோகிறதென்றால், எவ்வாறு பறிபோகிறது, அரசியல் தலைமைகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற கேள்வி வருகிறது என்று கேட்டார்கள். 1963இல் 45 சதவீத தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்தனர். தற்போது இது 38.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்குப் பிரதானமான காரணங்களாக போர், இடப்பெயர்வு குடும்பக்கட்டுப்பாடு ஆகியன சொல்லப்படுகின்றன. இதில் முக்கியமான காரணமாக சிங்கள மக்களின் குடியேற்றத்திட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றால் தமது இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பதான உணர்வு அவர்களிடையே காணப்படுகிறது. வடமாகாணத்தைப்போன்று மாற்றுக்கட்சிகளிலிருந்து அமைச்சுப்பதவிகளைப் பெறுவதற்குச் சென்ற தமிழ்ப் பிரதிநிதிகள் கிழக்கில் மிகவும் குறைவு. அப்படிப் பதவிகளை எடுத்தவர்களிடமிருந்து சலுகைகளும் அபிவிருத்தியும் பெறும் வாய்ப்பு இம்மக்களுக்கு இல்லை. இவர்கள் இதற்கு சகோதர இன அரசியல்வாதிகளிடமே தங்கி இருக்கவேண்டியதான சூழல் காணப்படுகிறது எனும் ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டது.

இவை தவிர, காணி, நிலம் தொடர்பான பிரச்சினை, மிக நீண்ட காலமாகக் காணப்படுகிறது. தமது எல்லையைப் பாதுகாப்பதற்கான மாற்று அரசியல் சக்தி தேவை எனும் உணர்வு, இப்போது ஏற்பட்டுள்ளது. இது பல்லினச் சமூகத்தில் ஆரோக்கியமான ஒன்றல்ல. 1970களில் உருவான கொள்கைகளை இன்னும் வைத்துக்கொண்டிருந்தால், அது கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் சமகால அரசியல் பிரச்சினைகளை உள்வாங்காத அரசியலாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவே, இப்போது கிழக்கு மாகாணத்தில் புதிதாகப் பல மாற்று அணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மக்களின் தனித்துவமான பிரச்சினைகளையும் சவால்களையும் உள்வாங்கிக்கொண்ட அரசியல் கொள்கைகள் மூலம் மட்டுமே, தமிழ்த் தேசிய அரசியல் வடக்கு, கிழக்கு இணைந்த அரசியல்பற்றிப் பேச முடியும்” என்று சிவகுமார் தனது கருத்துகளை கூறினார்.

ஈழத்தமிழ் அரசியல் என்பது, யாரையெல்லம் உள்ளடக்கியது, எவரையெல்லாம் வெளித்தள்ளியது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இலங்கையினுடைய முதலாவது தமிழ் கட்சியாக இருந்தது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், அதன் பின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்தது இலங்கை தமிழரசுக்கட்சி.

தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்ததே மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்த குடியுரிமைச் சட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது என்பதற்காகத்தான். 1972இல் உருவான தமிழ் ஐக்கிய கூட்டணியில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இணைந்திருந்தது.

வெறும் சட்டமாக இருந்த “சிங்களம் மட்டும்” சட்டம், அரசமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதும், பௌத்தத்துக்கு முன்னுரிமை என அரசமைப்பு ரீதியாகவே உறுதியப்படுத்தியமையும், பல்கலைக்கழக நுழைவில் தரப்படுத்தலும் என சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அவர்களது தோழர்களும் அமைத்த ஆட்சி, இலங்கையின் சிறுபான்மைகளுக்கு எதிரான மோசமான ஆட்சியாக அமைந்த நிலையில், 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான், இதொகாவின் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தக் கூட்டணியில் இருந்து விலகுகிறார்.

தமது பாதை வேறு; தமது அரசியல் வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தத் தனிநாட்டுக் கோரிக்கைக்குள், தேசியவாதத்துக்குள் இருந்து தமது அரசியல் கோரிக்கைகளை வெல்ல முடியாது என்பதில், அவர் திண்ணமாக இருந்தார்.

குடியுரிமைப் பிரச்சினை, அவர்களுடைய முக்கியமான பிரச்சினையாக இருந்த நிலையில், அதனை அவர்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் அந்த முடிவு சரியானது எனவும் நிரூபணமாகியிருக்கிறது.

முஸ்லிம் தேசியமும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துடன் தனிவழியில் சென்றது. அவர்கள், நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுத்தார்கள். எனவே, மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும், தாமாகவே தெரிவு செய்து ஈழத்தமிழ் அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகிக்கொண்டார்கள்.

எவரும் அவர்களை விலக்கி வைக்கவில்லை. சிவகுமார் குறிப்பிட்டதைப்போல, சந்திரசேகரன் போன்றோர் மீண்டும் இந்த நீரோட்டத்தில் எப்படி இணைய முடியும் என்ற சிந்தனைகளை விதைத்திருந்தாலும், அடிப்படையில் அது வேறுபட்ட நீரோட்டமாகவே இயங்குகிறது. தமிழ்த் தேசிய அரசியல், அவர்களை ஒடுக்கி வைத்தது என்பது வரலாற்றோடு இயைந்த ஒரு விடயமல்ல என்ற கருத்தை முன்வைத்து, அஷோக்பரன் தமது அபிப்பிராயங்களைத் தொடர்ந்தார்.

ஈழத் தமிழர் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் பற்றிய கேள்விக்கு, இந்தச் சிக்கலை “தேச அரசு” எனும் எண்ணக்கருவில் இருந்து பார்க்க வேண்டும். ஓர் அரசு; ஒரே தேசம் எனும் எண்ணக்கரு, அங்கே வருகிறது. அதனால் தான், ஒரே நாடு; ஒரே தேசம் எனும் முழக்கமும் எழுகிறது.

நாம் ஒரு சிவில் தேசியத்தை, வார்த்தைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதற்குள் ஒரு பெரும்பான்மையின மேலாதிக்க அரசியலைச் செய்துகொண்டிருக்கிறோம். இதுதான், இந்த இனப்பிரச்சினைக்கான முக்கியமான காரணம். தொடக்கத்தில், மேற்கில் கல்விகற்ற தமிழ்த் தலைமைகளும் சிவில் தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் தான் இருந்தார்கள்.

ஆனால், கே.எம். டீ சில்வா சொல்வதைப்போன்று, “சிங்கள சமூகம் என்பது சிறுபான்மை மனப்பான்மை கொண்ட பெரும்பான்மை”ஆக உள்ளது. இந்த அடிப்படையில், சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சியானது, அநகாரிக தர்மபால முதலே, அதற்கான சமூக ரீதியான அடித்தளத்தை கொண்டிருந்தது.

அந்த அடித்தளத்திலிருந்தே பண்டாரநாயக்கவின் பஞ்சமா பலவேகய (ஐம்பெரும் சக்திகள்) போன்றவை எல்லாம் எழுகின்றன. தமிழ்ச் தேசியமானது, சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத தேசியத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் தற்காப்புத் தேசியமாகவே உருவானது. இந்தச் சமூக-வரலாற்று சூழலில், இன்றைக்கு இலங்கையில் ஓர் அரசுக்குள் ஒரு தேசம்தான் இருக்கலாம்; அதுவும் ஒற்றையாட்சித் தேசம் தான் இருக்கலாம் எனும் அடிப்படைப்புரிதல் உருவாகிவிட்டது.

அதனால் தான், மிகச் சாதாரணமான அதிகாரப் பரவலாக்கலாக அமைந்த 13ஆம் திருத்தச் சட்டத்தைக்கூட நாட்டைப் பிரிக்கும் விடயமாகப் பெரும்பான்மை தேசிய அரசியல் பார்த்தது.

இங்கே, நம் அடிப்படைகளில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அது சமூகத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். மேலிருந்து கீழாக அதனைச்செய்வது சாத்தியமற்றது. எப்படித்தான் சட்டரீதியாக மாற்றங்களைக் கொண்டுவர முயன்றாலும், அதற்கு முரணாகக் கீழிருந்து எழுச்சி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த எழுச்சிக்கேற்பவே, சட்டங்களில் பொருள்கோடலும் மாறிக்கொண்டிருக்கும்.

இங்கேயுள்ள அரசியல் கலாசாரமும் சட்டக் கலாசாரமும், இந்தக் கணம்வரை பன்மைத் தேசிய கருத்துகளுக்கு இடம்கொடுப்பதாக இல்லை என பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து, அஷோக்பரனுக்கும் குருபரனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் இரண்டாம் பகுதி, நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அவ்வுரையாடலில் குருபரன் தெரிவித்த கருத்துக்கள் இவை:

“தேசக் கட்டுமானத்தில் வரலாற்றைப் பயன்படுத்துவது தொடர்பாக எனக்கு மாற்றுக்கருத்துள்ளது. நாம், எமது தேசம் என்கிற கோரிக்கையை வைப்பதற்கு, எமக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது எனும் வாதத்தை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன்.

“தேசம் என்பது அரசியல் கோரிக்கை. அது, வரலாற்றுக் கோரிக்கை அல்ல. இக்கோரிக்கை, எமது அண்மைக்கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளின் அடிப்படையில் உருவானது.

“நாம் எத்தனையாம் நூற்றாண்டில் இங்கே வந்தோம் என்று இங்கே இருந்துகொண்டு அரசியல்வாதிகள் செய்யும் ஆய்வுகள் பயனற்றவை.

“எமது அரசியல் கோரிக்கைக்கும் நாம் எவ்வளவு காலம் இலங்கையில் இருக்கிறோம் என்பதற்கும் இடையில் ஒரு சம்பந்தமும் இல்லை. அடுத்த விடயம், நிலத்தொடர்ச்சி தொடர்பானது. சுயநிர்ணயக் கோரிக்கைக்கு, நிலத்தொடர்ச்சி, நில எல்லைகள் முக்கியமாக இருக்கிறது. ஆனால், அந்த எல்லைகள் எமக்கு மட்டுமே உரிமையானவையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வடக்கு, கிழக்குத் தாயகம் என்று சொல்லும்போதும் அதை நான் தமிழர்களுக்கு மட்டுமேயான தாயகமாகச் சொல்லவில்லை.

“அங்கே முஸ்லிம்களுக்கும் இடமுள்ளது; சிங்களவர்களுக்கும் இடமுள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அங்கே தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொள்வதா அல்லது சிறுபான்மைகளாக கருதிக்கொள்வதா என. முஸ்லிம்கள் சிங்களவர்களோடு தம்மைச் சிறுபான்மையினராகவும் தமிழ்த் தரப்போடும் பேசும் போது தம்மை தேசமாகவும் காட்டிக்கொள்வதில் எனக்கு முரண்பாடு உண்டு.

“ஆனாலும், அதனை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கினுள் தமக்கு ஒரு சுயாட்சி அலகு வேண்டுமா அல்லது உரிமைகள் மதிக்கப்படுகின்ற “சிறுபான்மை” அந்தஸ்து வேண்டுமா என்பதைத் தாமே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில், முஸ்லிம்களுடன் பேசித் தீர்வுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதேபோலத்தான் சிங்களவர்களும்.

“வடக்குக் கிழக்கில் உள்ள சிங்களவர்களுக்கும் நிச்சயமாக உரிமை உள்ளது. அரசியல் நோக்கத்துடன் வடக்குக் கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களது உரிமை தொடர்பாகக்கூட நாம் கரிசனையாக இருக்கவேண்டும். அவர்களைக் கடலில் தூக்கிப் போட்டுவிடுவது எனும் அடிப்படையில், தமிழரது தேசியக்கோரிக்கை இருக்கக்கூடாது.

“ஒரு காலத்தில், இயக்கங்கள் தோற்றம்பெற்ற காலத்தில், தமிழ்த் தேசம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஆரோக்கியமான உரையாடல்கள் இருந்தன. சமதர்மக் கோட்பாட்டின் அடிப்படையிலான பொருளாதார அமைப்பு தொடர்பான உரையாடல் இருந்தது. சாதிப்பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் இருந்தன. இப்போது பார்த்தால், தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக்கோஷமாக மாறியிருக்கிறது.

“தமிழ்த் தேசக் கட்டுமானம் என்பது, பழைமையை எமக்குச் சார்பாக மீளக்கட்டமைப்பதாக இல்லாமல், சமூக, நீதி, ஆட்சியியல் தத்துவத்தின்படி இருக்க வேண்டும். இதனை, பெரியாரிடமிருந்தும் திராவிடக் கட்சிகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்.

“இதைச்சொல்வது பலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். எம்முடைய தேசக் கட்டுமானம் என்பது, அநகாரிக தர்மபாலவை பார்த்து வளர்த்துக்கொள்ளப்பட வேண்டியதல்ல. எம்மிடம் இருந்த நிழல் அரசில்கூட முற்போக்கான அம்சங்கள் இருந்தன.

“திருவள்ளுவர்தான் எமது சமூக நீதியினுடைய காவலர் என்றால், அவர் சொன்னவை உள்ளன; அவைதான் எமக்கு ஆதாரம். எமக்கென்று ஒரு சமூக நீதிப் பாரம்பரியம், வரலாறு உள்ளது. அதை நாம் தேடிப்போக வேண்டும்.

“அதைக்கொண்டே எமது ஆட்சியை, தேசத்தை அமைக்க வேண்டும். சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு போன்ற ஒன்றைத்தான் நாமும் அமைக்கப்போகிறோம் என்றால், அந்த தமிழ்த் தேசியவாத மேலாதிக்க அரசியலை எதிர்க்கும் முதலாவது ஆளாக நான் இருப்பேன்.

“நான், பெரியாரால் அவர் முன்வைத்த சமூக நீதி வேலைத்திட்டத்தால், திராவிடக் கட்சிகள் தொடங்கிய இடத்தாலும் அவர்களது சமூகநீ தி சாதனைகளாலும் ஈர்க்கப்படுகிறேன். இந்தியச் சூழலில் தமிழ்த்தேசியம் தொடர்பான உரையாடல்கள் என்று வரும்போது, சீமானை மட்டும் வைத்து தமிழ்த் தேசிய உரையாடல்களைப் பார்க்கக்கூடாது.

“சீமானுக்கு முந்தைய தமிழ்த் தேசிய உரையாடல்களில், திராவிடத் தேசியவாதத்தினுள்ளே தமிழ்த்தேசியவாதத்தின் இருப்பு என்பது அந்த வரலாற்றுச் சூழ்நிலைகளுக்குள் வளர்ந்துள்ளது. இங்கே, ஈழத் தமிழ்த் தேசியம் இங்குள்ள வரலாற்றுச் சூழ்நிலைகளின்படி வளர்ந்துள்ளது. இவையிரண்டுக்கும் ஒன்றுடன் ஒன்றுக்கான ஒத்துழைப்பு இல்லாமலில்லை. நாம் அங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

“ஆனால், ஈழத்தமிழ்த் தேசியத்தையும் தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியலையும் ஒன்றாகப் பார்ப்பதோ, அவையிரண்டும், ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என்றோ கருதுவது ஈழத்தமிழ் தேசிய அரசியலைக்கூட விளங்கிக்கொள்ளாத தன்மையைத்தான் காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

“தமிழ்நாடு, திராவிடமா தமிழ்த்தேசியமா எனும் விவாதத்துக்குள் போகட்டும். எனக்கு, அதில் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், அது அவர்களுடைய விவாதம். அதனை அவர்கள் செய்துகொள்ளட்டும். ஆனால், அதுவும் இதுவும் ஒன்று என்று நினைத்தால் அது மிகவும் தவறானது. நாம் உலகம் பூராகவும் உள்ள தேசிய இனங்களின் போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். அது ஸ்கொட்லாந்தாக இருக்கலாம், குர்தியர்களின் போராட்டமாக இருக்கலாம், அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்கின்றோம். ஆனால், எமது சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையும் தேசியம் தொடர்பான சிந்தனையும் எமது அனுபவங்களில் காலூன்றி நிற்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலை காக்கும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)
Next post காயமே இது பொய்யடா!! (மருத்துவம்)