தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் !! (கட்டுரை)
அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த கருத்துகள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி, தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அதில் ஒரு பகுதி, பருமட்டாகக் கீழ்கண்டவாறு இருந்தது, “…அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற எண்ணம், ஈழத்தமிழ் மக்களிடம் இருப்பது குறைவு; புலம்பெயர் நாடுகளில் பலரும், ‘அம்பாறையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்களா’ என்று, என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஏன், கொழும்பில் கூட, தமிழ் நீதிபதி ஒருவரின் மனைவி, என்னிடம் அப்படியான கேள்வியை எழுப்பியிருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில், அம்பாறை போன்ற மாவட்டங்களின் பிரச்சினைகள், மிகவும் கவனத்தோடு நோக்கப்பட வேண்டியவை. ஏனெனில், வடக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் காட்டிலும், அம்பாறையின் பிரச்சினைகள் வித்தியாசமானவை…”
ஈழத் தமிழர் அரசியல் என்பது, யாழ்ப்பாணத்துக்குள் மய்யப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலையே தொடர்ச்சியாகப் பேணி வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், அம்பாறை போன்ற பேரினவாத ஆக்கிரமிப்பால் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சூறையாடப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்கள், பெரிதாகக் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
தமிழ்த் தேசிய அரசியல், யாழ்ப்பாணத்தின் சிந்தனைகளில் இருந்துதான், தீர்மானங்களை எடுக்கின்றது. அது, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்ட மக்களின் கருத்துகளை, தேவைகளை பெரியளவில் உள்வாங்குவதில்லை. கட்சி அரசியலின் சார்பில், அவற்றுக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், அதற்கும் அப்பாலாகப் பேணப்பட வேண்டிய அந்த நிலப்பகுதியினதும் மக்களினதும் விடயங்கள் பேசுபொருளாவதில்லை.
அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதுதான், தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கு. அதில், மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை இல்லை. ஆனால், அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டங்களோடு, ஒவ்வொரு நிலப்பரப்பும் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட இயல்பை உள்வாங்கி, அதற்கு ஏற்பவும் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய அவசியம், தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு உண்டு.
யாழ். மாவட்டத்தில் சுமார் 99 சதவீதமான மக்கள் தமிழர்கள். ஆனால், அம்பாறை போன்ற மூவின மக்களும் வாழும் மாவட்டத்தில், தொகை அடிப்படையில் சிறுபான்மையாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் என்பது, நீண்ட காலத்திட்டங்களை மாத்திரமல்லாமல், நாளாந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இருப்பைப் பாதுகாப்பதற்கான விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக தருணங்களில், அம்பாறையில் இருந்து நாடாளுமன்றத்துக்கான ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைப்பதே, பெரும் போராட்டமாக மாறிவிட்டது. அப்படியான நிலையில், நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதையே பெரும் சாதனையாகத் தமிழ்த் தேசிய கட்சிகள் இன்று கருதத் தொடங்கிவிட்டன.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலத்துக்கும் இன்றுள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆயுதப் போராட்டம் சில குறிக்கோள்களுக்காக, சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யும். அது உலகம் பூராவும் நிகழ்வதுதான்.
ஆனால், ஆயுதப் போராட்டத்துக்கு அப்பாலான இயங்கு நிலை என்பது, பிரதான அரசியல் இலக்கோடு, மக்களின் நாளாந்த வாழ்க்கை குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. தமிழீழத்துக்கான வரைபடத்தின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள அம்பாறை தொடர்பில், ஈழத் தமிழர்களிடம் காணப்படுகின்ற சந்தேகங்கள் குறித்து, சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைக்கும் கருத்துகள், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, எவ்வாறு ஓரிடத்துக்குள் தரித்து நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது. ஒரு சிலர் எழுப்பிய சந்தேகத்தை வைத்துக் கொண்டு, அம்பாறை தொடர்பிலான தமிழ் மக்களின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது தவறு என்கிற விமர்சனங்கள் எழலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு, கிழக்கு தாயகத்தைத் தேசமாக, ஒரு கட்டத்தில் தனிநாடாகக் கோரிய தரப்பொன்றுக்குள், இவ்வாறான கேள்விகள் எழுவதே, மிகப்பெரிய பின்னடைவான நிலைதான்.
சரியான புரிதல் என்கிற விடயம், ஏன் மேலெழ வேண்டியிருக்கின்றது என்றால், எண்ணிக்கை அடிப்படையில் இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழ் மக்களிடையேயும், பிரதேச அடிப்படையில் பெரும்பான்மை- சிறுபான்மை என்கிற நிலைப்பாடுகள் கோலொச்சுகின்றன. அது, அதிக நேரங்களில் எண்ணிக்கை அடிப்படையில், சிறுபான்மையாகவுள்ள மக்களின் கோரிக்கைகளைக் கண்டு கொள்வதில்லை. அவ்வாறான நிலையின் தொடர்ச்சி, தமிழ்த் தேசிய அரசியலுக்கு அப்பாலான சிந்தனை உள்ளவர்களுக்கான இலகுவான பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
‘கருணா அம்மான்’ என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டால், தன்னால் வெற்றிபெற முடியாது என்கிற நிலையைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். அதுதான், அம்பாறையை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார். ‘எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்’ என்கிற அவரது தேர்தல் கால பிரசார வாசகத்தினூடு, அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களிடம் அவர், ஒருவித ‘ஹீரோயிசத்தை’க் காட்ட நினைக்கிறார். இவ்வாறான நிலையொன்று உருவாகும் கட்டத்தை ஏற்படுத்தியமைக்கான பொறுப்பை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், பல ஆயிரம் ஏக்கர் காணிகளை, தமிழ் மக்கள் அம்பாறையில் தொடர்ச்சியாக இழந்திருக்கிறார்கள். தங்களைத் தக்க வைப்பதற்கான கோரிக்கைகளில் ஒன்றான தனித் தமிழ் (கல்முனை) பிரதேச செயலக கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் கடந்து போயிருக்கின்றது.
அம்பாறையில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராகத் தமிழ் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், ஒரு நிர்வாகக் கட்டமைப்பின் அவசியம், அவர்களை மீளக் கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அதனை, கூட்டமைப்பு கடந்த நல்லாட்சிக் காலத்தில், மிகுந்த கவனம் செலுத்திச் செய்திருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி ஆட்சியமைத்த கூட்டமைப்பு, கல்முனை விடயத்தை வென்றெடுக்க முடியாத கையாலாகத் தனத்தை வெளிப்படுத்தியது. இது, கல்முனை பிரதேச செயலக விடயத்தில், கூட்டமைப்பு பெரியளவில் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்ற அடிப்படையிலும் நோக்கப்பட வேண்டியது.
கடந்த 11 ஆண்டுகளில், இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். இம்முறையும் அதில் பெரிய மாற்றங்கள் எழுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், பெறுகின்ற ஆணைகளுக்கு அர்ப்பணிப்பாகச் செயற்படுவது சார்ந்த கடப்பாட்டை, இப்போதிலிருந்தாவது அவர்கள் ஆரம்பிக்க வேண்டும்.
ஏனெனில், தேர்தலில் வெற்றிகொள்வதற்கான என்னவிதமான வாக்குறுதிகளையாவது வழங்கிவிடலாம். அதில், எது கூட்டமைப்பால் சாத்தியப்படும், சாத்தியப்படாது என்பதெல்லாம், மக்களுக்கு அத்துப்படி. அவ்வாறான நிலையில், தேர்தல் கால கோசங்களுக்கு அப்பால் நின்று, மக்களின் குரல்களை, மிகவும் கவனத்தோடு காது கொடுக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்கு உண்டு. அது, தமிழ்த் தேசிய அரசியலில், தங்களை நிலைநிறுத்த எத்தனிக்கும் எந்தத் தரப்புக்கும் உண்டு.
மாறாக, யாழ். மய்யவாத ஒற்றைப் புள்ளியில் மாத்திரமே நிற்போம் என்பது, தமிழ் மக்களைப் பிரதேசவாரியாகப் பிளவுபட வைக்கும். தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில், பெரிய பொறுமையோடு இந்த அரசியலை நோக்கி வருகிறார்கள். அந்தப் பொறுமை என்பது, இயலாமை என்ற ரீதியில், எந்தவொரு தரப்பாலும் கருதப்படக் கூடாது.
இந்தத் தேர்தல் களத்தில், அரசியல் தீர்வு குறித்து மாத்திரமல்ல, சீரழிந்து போயிருக்கின்ற தமிழர்களின் பொருளாதாரம், கல்வி பற்றியெல்லாம் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். ஒவ்வொரு பிரதேசத்தினதும் சிறப்புத் தேவைகள் பற்றி கவனமெடுக்குமாறு, கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தக் கேள்விகள், கோரிக்கைகள் சார்ந்து, தெளிவான திட்டமிடல்களோடு களத்துக்கு வருமாறு, கூட்டமைப்பையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியையும் நோக்கிக் கோரப்பட்டிருக்கின்றது. அதற்கு, சரியான வழியில் பதிலளிப்பதும், செயற்படுவதும்தான் எதிர்பார்க்கப்படும் ஒற்றை அறம். அந்த அறத்திலிருந்து இனியாவது தமிழ் அரசியல் தலைமைகள் தடம்மாறாமல் இருக்க வேண்டும்.
Average Rating