‘இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்’ !! ( கட்டுரை)

Read Time:12 Minute, 27 Second

இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் தங்கியுள்ள இலங்கையர்களைத் திரும்ப அழைத்துவந்து, அவரவர் இடங்களில் குடியமர்த்த எண்ணியுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி – நீங்கள் இலங்கையைவிட்டு வெளியேற முன்பு, திருகோணமலை மாவட்டத்துக்கு எவ்வாறான சேவைகளை ஆற்றியுள்ளீர்கள்?

நான் கொழும்புப் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, 1977 இனக் கலவரம் ஏற்பட்டது. இந்த இனக்கலவரத்தில், அக்குரஸ்ஸ, அவிசாவளை, தெஹியோவிட்ட, நிக்கவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், உடைமை அனைத்தையும் இழந்து அகதிகளாய் முகாம்களில் தங்கியிருந்தனர். நான் அவர்களைத் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்லம்பத்தை, பன்குளம், பறையன்குளம், புளியடிச்சோலை முதலிய இடங்களில் குடியமர்த்தும் பணிகளுக்குத் தலைமைதாங்கிச் செயற்பட்டேன். இந்த முயற்சியின் மூலம், அண்ணளவாக 800 குடும்பங்கள், திருகோணமலை மாவட்டத்தில் குடியமரவும் மறுவாழ்வு பெறவும் ஆவணஞ்செய்துள்ளேன்.

கேள்வி – நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமூகத்துக்கு எவ்வகையான உதவிகளைச் செய்துள்ளீர்கள்?

தமிழகத்தில் வாழ்ந்த காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாங்களில் தங்கியிருந்த இலங்கைத் தமிழ் ஏதிலியருக்கு, ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக நிவாரணம், மறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கும் பணியில் முழு நேரமாக ஈடுபட்டேன்.

180 இலங்கை அகதி மாணவர்கள், மருத்துவக் கல்வியையும் 480 மாணவர்கள் பொறியியல் படிப்பையும், 2,000 மாணவர்கள் – பட்டப்படிப்பையும் பெற உதவினேன். பணவசதியற்ற மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான பண உதவியையும் பெற்றுக் கொடுத்தேன்.

கனடாவில் வசித்த காலத்தில், கனடாவுக்கு வந்த இலங்கைத் தமிழரது பிள்ளைகள், தமிழர் என்ற அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள் வழியாகத் தமிழ் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

கனடாவில் தமிழ் கற்பிப்பதற்குப் பாடநூல் இன்மை பெரும் சிக்கலாக இருந்தது. இதை நீக்கும் பொருட்டு, டொரன்டோ மாவட்டக் கல்விச் சபை, டொரன்டோ மாவட்டக் கத்தோலிக்க கல்விச் சபை, கனடா தமிழ்க் கல்லூரி முதலிய அமைப்புகளுக்கு, கனேடிய கல்வி முறைக்கு அமைய சம்பளம் எதுவும் வாங்காமல், பாடநூல்களையும் பயிற்சி நூல்களையும் எழுதிக் கொடுத்தேன்.

கனடாவில் உள்ள தமிழ்க் கற்றை நிறுவனங்களில், ஆசிரியர், அதிபர், அறிவுரையாளர், விரிவுரையாளர், துறைத்தலைவர் முதலிய பதவிகளில் பணிபுரிந்து, தமிழ்க் கல்வியை ஊக்குவித்தேன். தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி பல்கலைக்கழகத்தோடு இணைந்து, தமிழ் பீ.ஏ. எம்.ஏ பட்டப்படிப்புகளைக் கனடாவுக்குக் கொண்டுவந்தேன். இதன் மூலம், கனடாவில் தமிழ் மொழிப் பட்டதாரிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்குவதில் முதன்மையாகப் பங்கு வகித்தேன்.

கனடா அரசின் குடியமர்வு மற்றும் இசைவாக்கத் திட்டத்தின் இணைபாளராகப் பணிபுரிந்து, இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல பாகங்களில் இருந்தும் கனடாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான புதிய குடிவரவாளருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட புதுவாழ்வு கிடைக்கத் துணைபுரிந்தேன்.

நான் கனடாவில் இருந்த காலத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில், நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளுக்குச் சில கோடி ரூபாய்களை வழங்கியுள்ளேன். எடுத்துக் காட்டாக, 2011ஆம் ஆண்டில், திருகோணமலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிவாரணத்துக்காக ஐம்பது இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளேன்.

இறுதிப் போரின் முடிவில், வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை, 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம் செய்தபோது, கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடியேற்றத்துக்கு மட்டும் அறுபது இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளேன். இதேபோல, முல்லைத்தீவு, வவுனியா முதலிய மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் உதவி உள்ளேன்.

போராலும் சுனாமியாலும், பெற்றோர் மற்றும் உற்றாரை இழந்து இன்னலுக்குள்ளான சிறார்களுக்கு, இல்லங்களை அமைக்கவும் அவற்றைப் பராமரிக்கவும், உயர்கல்வியைத் தொடரவும் தேவையான நிதி உதவியை வழங்கியுள்ளேன்.

கேள்வி – 2018ஆம் ஆண்டில் நிரந்தரமாக இலங்கைக்குத் திரும்பி வந்தபின்னர், திருகோணமலை மாவட்டத்துக்கு ஆற்றிய பணிகள் என்ன?

சம்பந்தன் ஐயாவின் வழிகாட்டல், நெறிப்படுத்தல், ஆதரவுடன், 2019ஆம் ஆண்டில் மட்டும் 2,217 மில்லியன் ரூபாய் செலவில், அபிவிருத்திப் பணிகளை ஆற்றியுள்ளேன். அந்தவகையில், இந்தியாவில் இருந்து திருகோணமலைக்குத் திரும்பி வந்தோருக்கு, 600 வீடுகளை உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கு 300 வீடுகளையும் அமைக்கவும், 131 வீடுகளைத் திருத்தவும் 25 குளங்கள், அணைக்கட்டுகளை அமைக்க அல்லது திருத்தவும், 120 வீதிகளை அமைக்கவும், 57 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்க அல்லது திருத்தவும்; 63 கோவில்களின் திருத்த வேலைகளுக்கு உதவவும், 04 நீர் வழங்கல் இணைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும், ஒரு மருத்துவமனையைத் திருத்தவும், மருத்துவக் கருவிகளைக் கொள்வனவு செய்யவும், கடற்றொழிலாளருக்கான ஆறு கட்டடங்களை அமைக்கவும்; பெண்களுக்கான நான்கு கைத்தொழில் முயற்சிகளை உருவாக்கவும்; இளையோருக்குத் தொழில் பயிற்சி அளிக்கவும், அவர்களுக்குச் சுயதொழில் முயற்சிகளை உருவாக்கவும், சமூகச் சேவைக் கட்டடங்களை அமைக்கவும் ஆவனஞ்செய்துளேன்.

அண்ணளவாக, திருகோணமலையைச் சேர்ந்த 150 இளையோருக்கு, பல்வேறு அரச துறைகளில் வேலைபெற உதவியுள்ளேன். தந்தையை இழந்த 35 பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியைத் தொடர, மாதந்தோறும் உதவி வருகின்றேன். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் தரும் தொழில் முயற்சிகளை உருவாக்கி கொடுத்துள்ளேன்.

2010ஆம் ஆண்டில் தென்னமரவடி கிராம மக்கள் மீள்குடியமர வந்தபொழுது, அவ்வூர் முழுமையாகக் பற்றைக் காடாகி இருந்தது. ஜெ.சி.பி லோடர் முதலிய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, பற்றைகளை அழித்து ஊராக்குவதற்கான செலவை நானே வழங்கினேன்.

அதன் பின்பு அங்கு குடியேறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில், தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளேன். அங்குள்ள கணவனை இழந்த பெண்கள் அனைவருக்கும், வாழ்வாதாரத்துக்காக பசுக்களைக் கொள்வனவு செய்ய பணம் வழங்கினேன். தென்னமரவடிக் கிராம மக்களுடைய வருமானத்தைப் பெருக்கும் நோக்குடன், இருபது ஏக்கர் பரப்பளவில், ஒன்றிணைந்த கால்நடைப் பண்ணை ஒன்றை 30 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். பாடசாலைக் கட்டடங்களைத் திருத்துதல், சுற்றுமதில் கட்டுதல் ஆகிய பணிகளுக்கும் ஆவனஞ்செய்துள்ளேன்.

கேள்வி – எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கு என்னென்ன வேலைகளைச் செய்ய எண்ணியுள்ளீர்கள்?

திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில், கமத்தொழிற்றுறைகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகஞ்செய்து, வருவாயைப் பெருக்கி, இத்துறைகளில் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தவும், இளையோரின் வினைத்திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பு பெறுவதை எளிமைப்படுத்தவும் எண்ணியுள்ளேன். மேலும், திருகோணமலையைச் சேர்ந்தோர் இருபது ஆயிரம் பேர் வரையில் இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் தங்கி உள்ளனர். இவர்களைத் திரும்ப அழைத்துவந்து, அவரவர் இடங்களில் குடியமர்த்தவும் எண்ணியுள்ளேன்.

கேள்வி – நீங்கள் எப்பொழுது தொடக்கம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றீர்கள்?

1975ஆம் ஆண்டு முதல், தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறேன். 1976 முதல் 1984 வரை, தமிழரசுக் கட்சியின் திரியாய் கிளைத் தலைவராகப் பணிபுரிந்தேன். 1994 தொடக்கம் 2017 இறுதி வரை, தமிழரசுக் கட்சியின் கனடாக் கிளைச் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். 2018ஆம் ஆண்டு முதல், தமிழரசுக் கட்சியின் திரியாய் கிளைத் தலைவர், கட்டுகுளப்பற்றுக் கோட்டக் கிளைத் தலைவர் மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணிபுரிந்து வருகின்றேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரிதாசுக்கும் பாண்டேவிற்கும் என்ன தொடர்பு!! (வீடியோ)
Next post புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)