மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? (கட்டுரை)
“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை முன்வைத்து “ நேருவின்” அமைச்சரவைக்குள் ஒரு மாற்றுத் தலைவர் போல் அவர் இருந்தார். ஆனால், காலப்போக்கில் நேருவின் கரமே வலுப்பெற்று, காங்கிரஸ் கட்சியின் “நம்பிக்கை நட்சத்திரமானார்” நேரு. அவரது மறைவு வரை, நேருவுக்கு மாற்றாக இந்திய அரசியலில் ஒரு “முக்கியமான மாற்றுத் தலைவர்” உருவாகவில்லை!
இந்திரா காந்தி, காங்கிரஸ் தலைவராக வந்த பிறகு, அக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும், அவர் எமெர்ஜென்ஸியை அறிவிக்கும் வரை ஒரு மாற்றுத் தலைவர் கிடைக்காமல் இந்திய அரசியல் “ஸ்திரமற்ற” நிலையில் தவித்தது. ஜெயபிரகாஷ் நாராயண், அதல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் இருந்தாலும்- யார் இந்திரா காந்திக்கு மாற்று என்பது முடிவாகவில்லை. அதன் காரணமாகவே பல்வேறுதலைவர்கள் கொண்ட குழுவாக எமெர்ஜென்சிக்குப் பிறகு “ஜனதாக் கட்சி” உருவாகி- இந்திரா காந்தியை தேர்தலில் வீழ்த்தியது.
தலைவர்களின் திறமை- அல்லது ஒற்றை தலைமை அவரை வீழ்த்தியது என்று கூறிவிட முடியாது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருந்த நாட்டம்-நெருக்கடி நிலைமை அத்துமீறல்கள் போன்றவை நாட்டுக்கு “கூட்டுத் தலைமையை” இந்திரா காந்திக்கு எதிரான “ஒற்றைத்தலைமைக்கு” கொடுத்தது. 1977இல் ஜனதா கட்சி வெற்றி பெற்று- மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. “கூட்டுத் தலைமை”க்குள் ஏற்பட்ட பனிப்போரும்- குழப்பங்களும்- இப்படியொரு தலைமை இனி நாட்டுக்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. மீண்டும் “ஒற்றைத் தலைமை” பக்கம்- அதாவது இந்திரா காந்தி பக்கமே இந்திய அரசியல் திரும்பியது.
பிறகு, அதல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மட்டுமே இந்திரா காந்திக்கு போட்டியான ஒற்றைத் தலைமையாக இருக்கும் என்று நினைத்தாலும்- அக்கட்சி தோன்றியதே 1980 என்பதால், அதற்கு எவ்வளவு வருடங்கள் பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அது, 1996 வரை தொடர்ந்தது என்பதுதான் உண்மை. இடைப்பட்ட காலத்தில், இந்திராவின் மறைவு- அவருக்குப் பதில் வந்த ராஜீவ் காந்தியும் மறைவு என்ற நிலை ஏற்பட்டு இந்திய அரசியல் “வலுவான ஒற்றை தலைமையும் இல்லாமல்” “பொறுப்புள்ள கூட்டுத் தலைமையும்” இல்லாமல் தவித்தது. 1989இல் ராஜீவுக்கு மாற்றாக உருவாகிய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் கூட காங்கிரஸுக்கு எதிராக ஒற்றைத் தலைமையைக் கொடுக்க முடியவில்லை. வி.பி.சிங், ஜோதிபாசு, அதல்பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்ட மூவர் சேர்ந்துதான் அப்படியொரு தலைமையைக் கொடுக்க முடிந்து- 1989இல் வி.பி.சிங் தலைமையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. “ஜனதா கட்சி” காலத்தில் அறிவாளிகள் கூடி இழுத்த தேர் வடம், பாதியில் அறுந்து போனது. இந்த தேரோ “ஜனதா” “ஜனதா தளம்” “மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” ஆகியவற்று இடையிலான “கொள்கை முரண்பாட்டில்” நிலைக்குத்தி நின்று விட்டது. வி.பி.சிங் அரசும் வந்த வேகத்தில் கவிழ்ந்து போனது.
மீதிக்காலமான 1990 முதல் 1998 வரையிலான காலம், சற்று வித்தியாசமானது. மீண்டும் “கூட்டு தலைமை” அதிலும் குறிப்பாக, மாநிலக் கட்சித் தலைவர்களின் “கூட்டு தலைமை” தேசிய அளவில் காங்கிரஸுக்கு ஒரு மாற்று தலைமையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியே “வலுவான ஒற்றைத் தலைமையை” இழந்து நின்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலில் “ஒற்றைத் தலைமை” காங்கிரஸிடமும் இல்லை. எதிர்கட்சிகளிடமும் இல்லை. தேசிய அளவில் கூட்டுத் தலைமையும் இல்லை. முதன் முதலாக மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய “கூட்டுத் தலைமை” மட்டுமே கைகொடுக்கும் என்ற நிலை தேசிய அரசியலுக்கு வந்தது.
வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் போன்ற பிரதமர்கள் பதவியேற்று-அதே வேகத்தில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. “மாநிலக் கட்சிகளின் கூட்டுத் தலைமையை” வாஜ்பாய் மட்டும் சமாளித்து நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. “மாநிலக் கட்சித் தலைவர்களின்” கூட்டுத் தலைமை தேசிய அரசியலுக்கு லாயக்கில்லை என்பதை இந்த காலகட்டத்தில் இருந்த கூட்டணி அரசுகள் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கும் பாடமெடுத்தன. இந்த நிகழ்வுகள்- படிப்படியாக முன்னேறி இந்திய அரசியலில் “உருப்படியாக” இரு கட்சி தலைமை உருவாகும் சூழலை கெடுத்து விட்டது.
விளைவு, இன்றைக்கு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் செல்வாக்கு இழந்து நிற்கிறார்கள். பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேசத்தில் முலயாம் சிங் யாதவ் ஆகியோருக்கு இருந்த “தேசிய கவர்ச்சி” இப்போது இல்லை. நிதிஷ்குமாரோ, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி ஆகியோரோ டெல்லிப் பக்கம் வர தயாரில்லை. சரத்பவாருக்கு மஹாராஷ்டிர அரசியலே தற்போது பிரதானமாகி விட்டது. காங்கிரஸுக்கோ அல்லது பா.ஜ.க.விற்கோ ஒரு மாற்று “கூட்டுத் தலைமையை” உருவாக்குவதில் முன்னணியில் எப்போதும் நிற்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது ஜோசிபாசும் இல்லை. ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆகவே, மாநிலக் கட்சிகளிடம் “கூட்டுத் தலைமை”யும் இப்போது இல்லை. அவர்களை தாண்டி ஒரு தேசிய அளவில் “கூட்டுத் தலைமையும்” பிறக்கவில்லை. பிரதமர் மோடிக்கு மாற்றை அளிக்க வேண்டிய காங்கிரஸிலோ இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் “காந்தி” குடும்பத்தின் தலைவர்களுக்கே மக்களின் செல்வாக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இரு மோசமான நாாளுமன்ற தோல்விகள் அதை நிரூபித்து விட்டன. நேருவிடமோ இந்திரா காந்தியிடமோ- ஏன் ராஜீவ் காந்தியிடமோகூட இருந்த “கொள்கைத் தெளிவு” சோனியா காந்தியிடமும் குறைவு. ராகுல் காந்தியிடமும் இல்லவே இல்லை. அதனால், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு மாற்று தலைமை கொடுக்கும் சக்தியை இழந்தது மட்டுமின்றி- அது போன்றதொரு தலைவரே கட்சியில் இல்லாமல் “மூச்சு” திணறிக் கொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் இப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு மாற்றாக தலைவர் “ஒருவராகவும் இல்லை.” “கூட்டாகவும் இல்லை”- தேசியக் கட்சியான காங்கிரஸிடமும் இல்லை. மாநிலக் கட்சிகளிடமும் இல்லை என்பதுதான் தற்போது இந்திய அரசியலில் பிறந்துள்ள புதிய சகாப்தம்!
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ். டி. சட்டம், இந்துத்துவா கொள்கை, கொரோனா நோய் தடுப்பு, இந்திய- சீன எல்லைப் பிரச்சினை எதிலுமே காங்கிரஸ் கட்சி “கரடியாக” கத்தினாலும் அதை மக்கள் அவ்வளவாக காது கொடுத்து கேட்பதில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம்- சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இந்தியா மீதோ- நாட்டுப் பற்று மீதோ- இந்து மதத்தின் மீதோ நல்லெண்ணத்தில் கருத்துச் சொல்வதில்லை என்ற அபிப்பிராயத்தை அடிமட்ட மக்களிடம்- குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் கொண்டு போய் சேர்த்து விட்டது பாரதீய ஜனதா கட்சி. அந்த பெருமை பிரதமர் நரேந்திரமோடியை மட்டும் சேரும். அவர் மட்டுமே அதற்கு “அறிவுசார் உரிமை” படைத்தவர்! அவர் வழங்கும் மக்களுக்கு உணர்வூட்டும் பேச்சுக்களை காங்கிரஸில் உள்ள சோனியா காந்தியாலும் எதிர்கொள்ள இயலவில்லை. ராகுல் காந்தியால் நெருங்கியே வர முடியவில்லை.
காங்கிரஸில் ப.சிதம்பரம், கபில் சிபல், கமல்நாத், அசோக் கெலட், திக்விஜய சிங் உள்ளிட்ட பல “தலைவர்கள்” “அறிவாளிகள்” உள்ளார்கள். ஆனால் அவர்களாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆகவே “காந்தி குடும்பத்துக்கு” அப்பாற்பட்ட ஒருவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைமைக்கு கண்டுபிடிக்க வேண்டிய மிகப்பெரும் கடமை வந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு வலுவான “ஒற்றைத் தலைமையை” கொடுக்கும் முயற்சியில் இது முதல் படியாக இருக்கலாம். அதுவே, வெற்றிப் படியாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. வெற்றிப்படியாக்க மேலும் பல நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.
நாட்டுப்பற்று, பாதுகாப்பு, அண்டை நாடுகள், இந்து மதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சோனியாவும், ராகுல் காந்தியும் கருத்து கூறுவதை தவிர்த்து- மற்ற காங்கிரஸ் தலைவர்களை முன்னிறுத்த வேண்டும். அப்போது மட்டுமே “காங்கிரஸ்தான் பிரதமர் மோடிக்கு மாற்று” என்ற எண்ணம் மக்கள் மனதில் மீண்டும் மேலோங்கும். அது மற்ற மாநிலக் கட்சிகளையும் காங்கிரஸ் பக்கம் வரவழைக்கும். ஆனால், தொடர்ந்து சோனியாவும் ராகுல் காந்தியும் தொடர்ந்து “பாதுகாப்புப் பிரச்சினைகளில்” கருத்துத் தெரிவிப்பது- பிரதமர் மோடியை வலுப்படுத்தும். தேசிய அளவில் காங்கிரஸால் “ஒற்றைத் தலைமையையும்” “மாநிலக் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டு தலைமையையும்” கொடுக்க முடியாமல் போகும். இந்திய அரசியலில் “ஒற்றை தலைமை”- அது பிரதமர் நரேந்திரமோடியின் தலைமை என்ற நிலையே தொடரும்!
Average Rating