நலம் தரும் சோயா!! (மருத்துவம்)
புரதம், வைட்டமின், கார்போஹைட்ரேட் என எல்லா சத்துக்களையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் சோயாவை பெண்களின் தோழி என்றே சொல்லலாம். அப்படிச் சொல்வதுதான் பொருத்தமாகவும் இருக்கும். ‘ஏன்… ஆண்களுக்கெல்லாம் இந்த சத்துக்கள் தேவையில்லையா?’ என்று கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் சண்டைக்கு வராதீர்கள். சோயா ஆண்களுக்கும் நல்லது செய்யும்தான். ஆனால், அதையும் தாண்டி புனிதமானது என்பது போல பெண்களுக்கு சோயா இன்னும் ஸ்பெஷல்.
எப்படி என்கிறீர்களா ?
மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்த உதவுகிறது சோயா. இதற்கு காரணம், சோயாவில் உள்ள ஐசோ பிளேவான்ஸ்(Isoflavones) என்ற வேதிப்பொருள். இந்த ஐசோ பிளேவான்ஸ் பெண்களின் ஹார்மோனான ‘ஈஸ்ட்ரோஜன்’ போலவே செயல்பட்டு பெண்களின் எலும்பைப் பாதுகாக்கிறது. இந்த ஐசோபிளேவான்ஸ் மகிமைகளின் பட்டியல் ஆஞ்சநேயர் வால் போல அத்தனை பெரிது.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு ஏற்படுதல், ஹார்மோன்களின் சம நிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் சோயாவில் உள்ள ஐசோ பிளேவான்ஸ் அருமருந்து எனலாம். இன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி (PCOS) பிரச்னைக்கும் தீர்வாக ஐசோபிளேவான்ஸ் மிகப்பெரிய காரணியாக செயல்புரிகிறது என்று பரிந்துரைத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘பெண்களிடம் மலட்டுத்தன்மையை உண்டாக்குவதில் முக்கிய காரணியாக இருப்பதும் இந்த பாலிசிஸ்டிக் குறைபாடுதான். இத்துடன் நீரிழிவு, இதயநோய் போன்ற மற்ற ஆபத்தான நோய்களையும் பெண்களிடம் உருவாக்கும் அபாயம் கொண்டது பாலிசிஸ்டிக் குறைபாடு. இத்தனை சிக்கல் நிறைந்த பாலிசிஸ்டிக் பிரச்னையைத் தடுப்பதற்கு சோயா உணவு கள் பெரிதும் உதவுகிறது. சோயாவைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, உடலின் வளர்சிதைமாற்றமும் சீரடைகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருவுறும் வயதை அடையும் பெண்களுக்கு வரும் முக்கிய பிரச்னையான PCOS ஹார்மோன் கோளாறானது, ஆன்ட்ரோஜன் என்று சொல்லப்படும் ஆண் ஹார்மோன்கள், பெண்களிடத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுரப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக நிலையற்ற மாதவிடாய் சுழற்சி, சிலநேரங்களில் மாதவிடாய் வராமலே போவது, மலட்டுத்தன்மை, உடல்பருமன், பருக்கள், முகங்களிலும் உடலிலும் அதிகமாக முடி வளர்தல் மற்றும் தலையில் முடி உதிர்தல் போன்ற சங்கடங்கள் பெண்களுக்கு வருகின்றன.
சோயாவில் உள்ள ஐசோபிளேவான்ஸ் ஆன்ட்ரோஜன் சுரப்பை சமநிலைப்படுத்துவதால் நாள்தோறும் 50 கிராம் அளவு சோயா உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் விடுபடலாம். அதேபோல, டைப் 2 நீரிழிவுக்குக் காரணமான ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவையும் ஐசோபிளேவான்ஸ் குறைப்பதோடு, இன்சுலினுக்கு எதிராக செயல்புரியும் பிற உயிரியல் பொருட்களையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பான Low density lipoprotein மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் சோயா உணவுகள் குறைக்கின்றன. இதுமட்டுமல்ல மார்பு மற்றும் கருப்பைப் புற்றுநோய்களுக்கும் மருந்தாகிறது சோயா. சோயாபீன்ஸ், சோயாபால்ஸ், சோயாபால் இப்படி ஏதோ ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாமே?
Average Rating