அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!! (கட்டுரை)
நம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலான அனைத்து வாக்காளர்களினதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. ஆயினும் இன்று வரை அந்த எதிர்பார்ப்பானது சாண் ஏற முழம் சறுக்கும் நிலையிலேயே இருக்கின்றது. இத்தன்மையில் ஒருவித சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பெரும்பான்மை மக்கள் முன்வர காரணமாக அமைந்தது.
அவ் எதிர்பார்ப்பிற்கு சாதகமான பதிலை அளிக்கும் வகையிலேயே மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் அமைந்த அவரது பதவியேற்பும் அதையடுத்து காலாகாலமாக இந்த நாட்டு மக்களின் காசை கரியாக்குவதோடு ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு பண ஊற்றாக அமைந்திருந்த நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களினதும் வகைதொகையற்ற விதத்தில் அரச தலைவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக நாட்டின் அரச இலட்சினையை காட்சிப்படுத்தல் போதுமானது என்ற அறிவிப்பும் ஜனாதிபதியிடமிருந்து வந்தது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச இலட்சினையை காட்சிப்படுத்தும் இச்செயல் தொடருமாயின் அரச தலைவர்கள் மாறும் போதெல்லாம் அவர்களின் நிழற்படத்தைக் காட்சிப்படுத்தும் கலாசாரம் முடிவிற்கு வந்து அரச நிறுவனம் என்பது அரச தலைவனின் நிறுவனமாக இன்றி மக்கள் பணிக்காக மக்களின் பணத்தைக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனமே என்ற மனப்பாங்கு ஏற்படும்.
சிங்கப்பூருடன் ஒப்புநோக்குகையில் இலங்கையின் அரசியல் என்பது மக்களின் உயிர்மூச்சுக்கு அடுத்தபடியான முக்கிய விடயமாக இருந்து வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. சிங்கப்பூரை பொறுத்தவரையில் மக்களின் வாக்குகளை வேண்டி நிற்போர் தாம் பதவியேற்ற பின் நாட்டின் நலனுக்காக செயற்படுத்தவிருக்கும் செயற்திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு அரசியல் பேச்சு முடிந்து விடுகின்றது. மக்கள் வாக்கை பெற்று அதிகாரத்திற்கு வருபவர்களும் அமைச்சர் பதவி பெறுபவர்களும் தாம் கொடுத்த வாக்கை இயன்றளவு சிறப்பாக நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்து செயற்பட வேண்டும் என்ற அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு பல தசாப்தங்களாக செயலில் இருந்து வருகின்றது.
சட்டம் என்பது சகலருக்கும் சமமாகவும் இலஞ்ச, ஊழலுக்கான தண்டனை மிகமிக கடுமையானதுமாக இருந்து வருவதோடு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர் ஆகியோர் உலகிலேயே அதிஉயர்ந்த ஊதியத்தை பெறுகின்றவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆகையால் நமது நாட்டுடன் ஒப்பிடும்போது சந்தைகளிலும் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் அரச நிறுவனங்களிலும் தினமும் முக்கிய பேசுபொருளாக இருந்துவரும் அரசியல் விவகாரங்களை அலசி ஆராய்வதென்பது அந்நாட்டில் அரிதான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் திட்டமிட்டு, ஆரோக்கியமானதோர் அரசியல் கலாசாரம் அந்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.
அத்தகைய சாதகமான அரசியல் கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் வகையிலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக பல தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் பிரசார நடவடிக்கைகளின் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த எதிர்த்தரப்பு போட்டியாளரை வார்த்தைகளால் மிக இழிவாக தாக்குவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மாறாக தாம் பதவியேற்பின் எத்தகைய கொள்கைகள், செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எடுத்துக் கூறுவதே அவரது பிரசாரப் பணிகளின் அடிநாதமாக இருந்து வந்தது. அத்தகையதோர் செயற்திட்டத்தினை அவரது சகாக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வெளிப்படுத்தும் வகையிலேயே கடந்த வாரம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிரடி உத்தரவு அமைந்திருக்கின்றது.
இது தலைவரின் பெயரையும் படத்தையும் காட்டி வாக்காளர்களை வசியப்படுத்திவந்த நம்நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு விடைகொடுக்க வேண்டும் என்ற அவசியத்தையே உணர்த்தி நிற்கின்றது. பாராளுமன்ற தேர்தல் என்பது அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு எத்தகைய மக்கள் பணியினை செய்யப் போகின்றார்கள் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி அதற்கான மக்கள் அங்கீகாரத்தை பெறும் ஒரு செயற்பாடே ஆகும். அதனாலேயே இப்பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளின் போது வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை உபயோகப்படுத்தக்கூடாது என்ற தெளிவான உத்தரவினை ஜனாதிபதி விடுத்திருக்கின்றார்.
அத்தோடு பொதுமக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு துறை அதிகாரிகளையோ அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளையோ வேட்பாளர்கள் தமது பிரசாரப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாகாது என்ற அறிவுரையும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்நாட்டு தேர்தல் செயற்பாடுகளுடன் பாதுகாப்பு துறை, அரச சேவை, அரச கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் ஆகியவற்றின் உயர் உத்தியோகத்தர்களும் சாதாரண ஊழியர்களும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட அமைச்சர்களுடனோ அரச தலைமையுடனோ தமக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது என்பதனை வெளியுலகிற்கு காட்டுவதன் மூலம் தத்தமது பதவி உயர்வுகளையும் இதர இலாபங்களையும் ஈட்டிக்கொள்ளும் ஒரு கலாசாரம் இந்நாட்டில் இருந்து வருகின்றது.
இது நாட்டின் உயர்வுக்காகவும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் உண்மையாக உழைத்துவரும் சாதாரண ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஓரங்கட்டி குறிப்பிட்ட நிறுவனங்களின் செயற்பாட்டின் தரத்தையும் வளர்ச்சியையும் மக்களுக்காக வழங்க வேண்டிய சேவையினையும் மழுங்கடிப்பதாகவே காலாகாலமாக அமைந்து வந்திருக்கின்றது.
இதனை தடுத்து நிறுத்தி அவற்றின் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் நாட்டின் நலனிற்காக மாத்திரமே செயற்பட வேண்டும் என்ற உணர்வை சமூக மயப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கடுமையான அறிவுறுத்தல் வெளியிடப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதியின் இவ் உத்தரவானது உரிய முறையில் செயற்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் விடப்பட்டிருக்கின்றது. எவ்வாறாவது மக்கள் விருப்பு வாக்கை பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் தேர்தல் சட்டதிட்டங்களை பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதை தவிர்க்கும் நோக்கிலேயே அப்பொறுப்பு தேர்தல் ஆணையாளரிடம் விடப்பட்டிருக்கின்றது. அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகளை தமது பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் விளைவாகவே ஜனாதிபதியினால் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட உயர் பதவிகள், தொழில்வாய்ப்புகள் ஆகியனவற்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர் என்ற விடயமும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் விளைவாகவே இவ்வதிரடி அறிவித்தல் வெளிவந்திருப்பதோடு மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் வாக்காளர்கள் ஈடுபடுவதை தவிர்த்து நியாயமான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே இத்தகைய நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும் மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் செல்வதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக வர விரும்புவோர் அதற்கான ஆரம்ப தகுதியாக நேர்மை என்ற விடயத்தை கடைப்பிடித்தல் வேண்டும். ஏனெனில் தமது தனிப்பட்ட வெற்றிக்காக நேர்மையற்ற விதத்தில் செயற்படும் ஒரு வேட்பாளர், தமது வெற்றியின் பின்னர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையானவராக நடந்துகொள்வதே ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அம்சமாக அமைகின்றது. நேர்மை என்ற விடயத்தை நம் நாட்டு அரசியலில் ஆழமாக வேரூன்றச் செய்வதன் மூலம் மாத்திரமே ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும். எனவே மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் இடமாக மாற்றம் பெற்றிருக்கும் பாராளுமன்றத்தை மக்களின் நம்பிக்கைக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான உண்மையான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் இடமாக மாற்றுவதற்கான வாய்ப்பாக இப்பொதுத் தேர்தலை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் இந்நகர்வுகள் எடுத்துக்கூறுகின்றன.
ரவி ரத்னவேல்
Average Rating