ஆஹா…அத்திப்பழம்!! (மருத்துவம்)
அத்திப்பழத்தை முன்பு கிராமப்புறங்களில் மட்டும்தான் சாப்பிட்டு வந்தார்கள். மருத்துவரீதியாக நிறைய பலன்கள் இருப்பதை அறிந்த பிறகு, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மருந்தாக மாறிவிட்டது அத்தி. அப்படி என்ன அத்திப்பழத்துக்கு மகிமைஇருக்கிறது? விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஸ்வரன்.‘‘அத்திப்பழத்தில் நியாசின், தயாமின், ரிபோஃப்ளைவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் உள்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்களும் அதிகம் காணப்படுகிறது.
இத்தனை சத்துக்கள் கிடைப்பதால் சீரான ரத்த ஓட்டத்துக்கு அத்திப்பழம் வழி செய்கிறது, அத்திப்பழத்தில் கால்சியம் சத்தோடு சேர்த்து பாஸ்பரஸ் சத்தும் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடைகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் உப்பு கரைகிறது. மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், ரத்தக்கசிவு, மூலம் போன்ற பிரச்னைகளையும் அத்தி தீர்க்கிறது. உடலில் ரத்தம் உற்பத்தியாகிறது, ரத்த சோகை நீங்குகிறது.
மைக்ரோ வைட்டமின் சத்துகள், பி.காம்ப்ளக்ஸ் சத்துக்கள் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர பிரச்னைகள் தீரும். தினசரி அத்தி சாப்பிடும் பழக்கமிருந்தால் பெருங்குடல் புற்று நோயைத் தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அத்திப்பழத்தில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் உடல் எடை கூடாமல் சீராக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தக்கசிவு குறையும். தலைமுடி உதிரும் பிரச்னைகள் இருப்பவர்கள் தினமும் அத்திப்பழம் எடுத்து வர முடி உதிர்வது நின்று முடியின் வேர்கள் பலமடையும்’’ என்று அத்திப்பழத்தின் பெருமைகளைப் பட்டியல் இடும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், அத்திப்பழம் சாப்பிடுவதற்கும் முறை உண்டு என்கிறார்.
‘‘அத்திப்பழத்தை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு தோலோடு சாப்பிடும்போதுதான் முழு பயன் நமக்கு கிடைக்கும். காய்ந்த அத்திப்பழத்தில் இனிப்பு அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சாப்பிடுவதற்கு 2 மணிநேரம் முன்போ அல்லது 2 மணி நேரத்துக்குப் பிறகோ அத்திப்பழம் சாப்பிடுவது சிறந்தது.காய்ந்த நான்கு அத்திப்பழத்தை இரவில் மண் குவளையில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லது. இதனால் நாள் பட்ட மலச்சிக்கல் தீரும். அத்திக்காய் துவர்ப்பு சுவை உடையது என்பதால் அதை சமைத்தும் சாப்பிடலாம். அத்திப்பழத்தின் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் புழு இல்லாத அத்திப்பழமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சாப்பிட வேண்டும். அத்திப்பழம் ஜூஸ் ஆகவும், ஜாமாகவும் கடைகளில் கிடைக்கிறது.அதையும் பயன்படுத்தலாம். முக்கியமாக, குழந்தைகளுக்கு அத்திப்பழத்தில் கருப்பட்டி கலந்து, கொதிக்க வைத்த பாலில் சேர்த்து அரைத்து கொடுப்பது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு நல்லது. இதில் வெள்ளை சர்க்கரை மற்றும் உப்பு கலந்து பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்’’ என்கிறார்.
Average Rating