சமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது! (மகளிர் பக்கம்)
‘வாங்க அப்பா… என்ன சாப்பிடுறீங்க, மசாலா போண்டாவா இல்லை கீரை வடை வேணுமா? உளுந்த போண்டா சூடா இருக்கு…’’ என்று புன்முறுவல் மாறாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் கலைவாணி. சிலர் அங்கேயே சாப்பிட்டும் செல்கிறார்கள். சென்னை, அயனாவரத்தில் குடியிருப்புகளின் மத்தியில் தன் கணவர் சரவணனுடன் தள்ளுவண்டியில் போண்டா, வடையினை விற்று வரும் இந்த தம்பதியினர் தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி விளக்குகின்றனர்.
‘‘என்னோட சொந்த ஊர் திருக்கோவிலூர் அருகே உள்ள இடையூர் என்ற கிராமம். உடன் பிறந்தவங்க நான்கு பேர்’’ என்று பேசத் துவங்கினார் சரவணன். எங்க குடும்பதொழில் விவசாயம் தான். மழை பொய்த்ததால், விவசாயமும் படுத்துவிட்டது. அது மட்டும் இல்லை. இருந்த சொத்தை எல்லாம் அப்பா வித்துட்டார். பூர்வீக வீடு மட்டும் தான் இருக்கு. இந்த குடும்ப சூழல் காரணத்தால் என்னால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் என்னுடைய அண்ணன் கடலூரில் பேருந்தில் கண்டக்டரா இருந்தார். அதனால என்னை அங்கு ஒரு வளையல் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
அப்ப எனக்கு 13 வயசு தான். தினமும் ரூ.15 மற்றும் தங்கும் இடம் மற்றும் மூன்று வேளை சாப்பாடு கொடுத்தாங்க. ஆனால் அவங்க அண்ணன் தம்பி தகராறில் அந்த வளையல் கடையை மூடிட்டாங்க. அதன் பிறகு 18 வயசில் ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு முதல்ல டீ கிளாஸ் தான் கழுவினேன். அதன் பிறகு அங்கு மாஸ்டர் போண்டா மற்றும் வடை எல்லாம் போடுவார். எனக்கு சமையல் மேல் ஆர்வம் இருந்ததால், நான் அங்கு மாஸ்டர் சமைக்கும் போது, அவர் எப்படி செய்றார்ன்னு பார்த்துக் கொண்டே இருப்பேன்.
ஒரு கட்டத்தில் நான் அங்கேயே போண்டா, வடை எல்லாம் போட ஆரம்பிச்சேன். மேலும் மதிய வேளையில் பிரிஞ்சி, புளிசாதம், எலுமிச்சை சாதம்ன்னு செய்வாங்க. அதையும் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்தில் நான் அந்த கடையின் மாஸ்டராக பணி உயர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. அந்த சம்பளம் எனக்கு குடும்பத்தை நகர்த்த போதவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துட்டேன்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி கலைவாணி.
‘‘இவர் எனக்கு சொந்தம். என் அண்ணன் இவரின் அக்காவைத் தான் திருமணம் செய்திருக்கிறார். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கிட்டோம். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை, அயனாவரம் பகுதியில். என்னுடன் பிறந்தவங்க எட்டு பேர். நான் தான் கடைக்குட்டி. எனக்கு எல்லாமே அம்மாதான். நானும் ஐந்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். தமிழை எழுத்துக் கூட்டித்தான் படிப்பேன். மத்தவங்க போல் சரளமா படிக்க வராது. கணக்குக் கூட இங்க கடைப்போட்ட போது கத்துக் கொண்டது தான்.
எங்களுக்கு திருமணமான கொஞ்ச நாட்களில் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. டைப்பாய்டு மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரால் அங்கு வேலைக்கு போகமுடியவில்லை. அவர் சென்னைக்கே வந்துட்டார். பார்த்து இருந்த வேலையும் இப்போ இல்லை. குடும்பம் நடத்த வருமானம் வேண்டும். என்ன செய்வதுன்னு யோசனையா இருந்தது. அந்த சமயத்தில்தான் நமக்கு கைதேர்ந்த வேலை இருக்கிறது அதையே பயன்படுத்திக் கொண்டால் என்ன? என்று நான் அவருக்கு யோசனை கொடுத்தேன்’’ என்றவர் பத்து வருடங்களுக்கு முன் டிஃபன் கடை ஒன்று துவங்கியுள்ளார்.
‘‘கையில் பணம் கிடையாது. அதனால் கடன் வாங்கி தான் டிஃபன் கடையை துவங்கினோம். தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திடுவோம். அப்படித்தான் அந்த கடனை அடைச்சோம். முதல்ல தள்ளுவண்டியில் தான் இந்த கடையை துவங்கினோம். இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடைன்னு போட்டு வந்தோம். கடை நல்ல பிக்கப் ஆச்சு. அதனால் நாங்க தள்ளுவண்டியில் வைத்திருந்த இடத்தில் சின்னதா அந்த இட உரிமையாளர் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் எங்களால் அந்த கடையையும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. முதல் காரணம் எங்க கடையில் வேலைப் பார்த்து வந்தவர்கள் வேறு கடைக்கு வேலைக்கு போயிட்டாங்க. அடுத்து இடத்தின் உரிமையாளர் வாடகைத் தொகையை அதிகரித்து விட்டார்.
எங்களால் அந்த தொகையை ஈடுகட்ட முடியவில்லை. டிஃபன் கடையை மூடிட்டோம். கடன் ஒரு பக்கம், வீட்டை காப்பாற்ற வேண்டிய சூழல் மறுபக்கம். எங்களுக்கு தெரிந்தது உணவு தொழில் தான். அதனால் மறுபடியும் சிறிய அளவில் போண்டா, வடை போடலாம்ன்னு முடிவு செய்தோம்’’ என்றவர் கடந்த ஏழு வருடமாக இந்த கடையை நடத்து வருகிறார்.
‘‘முதல்ல பக்கத்து தெருவில் தான் கடையை ஆரம்பிச்சோம். அங்கு ஒரு காலி இடம் இருந்தது. அதில் தான் கடையை போட்டு இருந்தோம். அங்கு நல்ல வருமானமும் வந்தது. ஆனால் அங்கும் எங்களால் நிரந்தரமாக கடையை போட முடியவில்லை. அந்த காலி இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட்டாங்க. அதனால எங்களால் அங்கு கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. என்ன செய்வதுன்னு யோசித்த போது, எங்க வீட்டு முன்பே இடம் இருந்தது. வாடகை வீடுதான் என்றாலும், எங்க வீட்டு உரிமையாளர் இதற்கு சம்மதமும் தெரிவித்தார்.
அங்கேயே எங்க தள்ளுவண்டியில் கடை போட ஆரம்பிச்சோம். ஓரளவு நல்ல வருமானம் வருகிறது. ரூ.500 க்கு தான் பொருள் வாங்குவோம். அதே அளவுக்கு லாபமும் பார்க்க முடிகிறது. காலை என் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிடுவேன். இதற்கிடையில் என் பசங்க இரண்டு பேரும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு போயிடுவாங்க. அதன் பிறகு எங்களுடைய வேலையை பார்த்துக் கொள்வோம். காலை பத்து மணிக்கு பருப்புகளை எல்லாம் ஊறவச்சிடுவோம்.
அதன் பிறகு அதை தனித்தனியா அரைச்சும் வச்சிடுவோம். பிறகு மாலை ஐந்து மணி முதல் எட்டரை மணி வரைக்கும் கடை இருக்கும். என் கணவர் உள்ளே போண்டா சுடச்சுடப் போட்டு தருவார். நான் தள்ளுவண்டியில் இருந்து கொண்டு அதை வாடிக்கையாளர்களுக்கு பொட்டலமா கட்டித் தருவேன். ஆரம்பத்தில் அவரும் என்னுடைய கடையில் இருப்பார். சின்ன விபத்து காரணமா அவர் காலில் அடிபட்டு விட்டது. அதனால் அவரால் தொடர்ந்து கடையில் நிற்க முடியவில்லை’’ என்றவர் கேட்டரிங் தொழிலும் செய்து வருகிறார்.
‘‘என் கணவருக்கு இன்றும் பல மாஸ்டர்களுடன் (உணவு சார்ந்த) தொடர்பில் இருந்து வந்தார். அதனால் அவங்க கேட்டரிங் செல்லும் போது இவரையும் அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது. இவர் கேட்டரிங் வேலையோடு அது போன்ற உணவுகள் எவ்வாறு சமைக்கணும்ன்னு கற்றுக் கொண்டார். இப்போது இவரும் இன்னொரு மாஸ்டரும் இணைந்து கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், வளைகாப்புன்னு கேட்டரிங் செய்ய துவங்கிட்டார். சீசன் போது, ஆர்டர் எடுத்து செய்ய துவங்கினார்.
இப்ப கடன் எல்லாம் ஓரளவுக்கு அடைச்சிட்டோம். எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டில்குடியிருப்பதுன்னு, நிலம் ஒன்றை வாங்கினோம். அதற்காக நகைகள் எல்லாவற்றையும் அடமானம் வச்சிருக்கேன். நிலம் எனக்கு சொந்தமாகிவிட்டது. இப்போது நகை கடன் மட்டும் தான் இருக்கிறது. அதையும் கூடிய விரைவில் முடிச்சிடுவோம். பிறகு என் பசங்க படிப்பு. சின்ன பொண்ணு எட்டாம் வகுப்பு படிக்கிறா. பெரியவ கல்லூரியில் படிக்கிறா. அவ படிச்சு கொஞ்சம் தலை எடுக்க ஆரம்பிச்சா போதும்.
ஆரம்பத்தில் நான் சாலையில் நின்று பொட்டலம் மடிக்கும் போது கொஞ்சம் சங்கடமாதான் இருக்கும். மேலும் நான் திருமணத்திற்கு முன்பு வரை வீட்டு வேலைகள் தான் செய்து வந்தேன். திருமணத்திற்கு பிறகு அந்த வேலைக்கு செல்வதை விட்டுவிட்டேன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக நாங்க கடையை துவங்கினோம். நான் பெரிய அளவில் படிக்கவில்லை தான். ஆனால் எதையும் நான் தைரியமாக எதிர்கொள்வேன். மேலும் எங்களின் கடை இருப்பது குடியிருப்பு பகுதி.
இங்கு இருப்பவர்கள் எல்லாருக்கும் என்னையும் என் கணவரையும் தெரியும். அது தான் என்னை தைரியமாக தொழில் செய்ய தூண்டியது’’ என்றார் போண்டாவை பேப்பரில் மடித்துக் கொண்டே’’ கலைவாணி.
Average Rating