தாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 8 Second

தமிழகத்தில் எளிமையான அரசியல்வாதி என்றவுடன் நம் நினைவிற்கு வரும் பெயர்களில் முதன்மையானவர் கக்கன் அவர்கள். நேர்மை, வாய்மை, எளிமை, தூய்மை போன்ற பண்புகளோடு எல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தவர். காமராஜர் முதல்வர் பணியில் அமரும்போது, தனது ஏழு அமைச்சர்களுள் கக்கனையும் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதைத்தவிர, முக்கியப் பொறுப்புகளான பொதுப்பணி, வேளாண்மை, உளவுத்துறை, சிறு பாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை, போன்ற உயர்ந்த பொறுப்புகள் கக்கனின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அளிக்கப்பட்டவை!

கடைசிவரை ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்து போன கக்கனுக்கு 6 குழந்தைகள். இதில் 5 ஆண்கள். ஒரு பெண் குழந்தை. 3-வதாக பிறந்த பெண் குழந்தைதான் கஸ்தூரி சிவசாமி. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இவருடைய கணவர் சிவசாமி ஓய்வு பெற்ற என்ஜினியர். இந்த தம்பதிக்குப் பிறந்த 3-வது குழந்தைதான் ராஜேஸ்வரி. ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, எஸ்.பி-யாக திருச்சி, புதுக்கோட்டையில் பணியாற்றியவர், சி.பி.சி.ஐ.டி யிலும் பல முக்கிய கேஸ்களை ஹேண்டில் செய்திருக்கிறார். இதற்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். ராஜேஸ்வரியின் சேவையைப் பாராட்டி தமிழக அரசு பல விருதுகளை வழங்கி அவரை கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில், குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.

காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரியும் ஒருவர் ஆவார். “அம்மாக்கு நான் யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வேலைக்கு போக வேண்டும் என்று ரொம்ப ஆசை. அவங்கதான் போட்டி தேர்வுக்கான அப்ளிகேஷன் எல்லாம் வாங்கி அதை அவங்களே நிரப்பி அனுப்புவாங்க. நான் இந்த துறைக்கு வருவேன் என்று என்னை விட ரொம்ப நம்பிக்கையா இருந்தவங்க அவங்கதான். மற்றவர்கள் மதிக்கிற மாதிரியும், எல்லோருக்கும் உதவி செய்ற மாதிரி யாராவது வீட்டில் ஒருத்தங்க, ஒரு போஸ்டில் இருக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க. நான் இந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பலரும் சொல்வாங்க. என்னுடைய வேலைக்கான விருதுகளும் வாங்கி இருக்கிறேன்.

ஏன் சமீபத்தில் வாங்கிய ஜனாதிபதி விருது… என எல்லா பேரும் அம்மாக்குதான் போய்ச் சேரும்” என்று கூறும் ராஜேஸ்வரி தன் வாழ்க்கை பயணத்தைப் பகிர்ந்தார். “மெடிக்கல் படிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அது கிடைக்காததால் கோவையில் வேளாண்மை துறையில் சேர்ந்தேன். M.Sc Agri. படிக்கும் போது போலீஸ் வேலைக்கான அழைப்பு வந்தது. அம்மா சொன்ன உடனே அதற்குத் தயாராக ஆரம்பிச்சேன். விடுதியில், ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு செய்தித் தாள் தான். அதனால் எல்லோரும் படித்து முடித்த பின் இரவில் எடுத்துப் போய் அதில் வரும் முக்கிய செய்திகளை எல்லாம் தனியாக எடுத்துக்குவேன். அதில் முழு கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். தேர்வுக்காக படித்து, தேர்வு பெற்று, போஸ்டிங்கிற்கும் வந்தேன்” என்றார்.

அதிக காலம் தனது பணியை இன்வஸ்டி கேஷனில் கழித்திருக்கும் ராஜேஸ்வரி, பல முக்கிய வழக்குகளைத் தனது தனித் திறனால் கையாண்டு அதை வெற்றிகரமாகவும் முடித்திருக்கிறார். மரியம் பிச்சி, சுப முத்துக்குமார், நிர்மலா தேவி போன்று எண்ணிலடங்கா உதாரணங்கள், ராஜேஸ்வரியின் இன்வஸ்டிகேஷன் திறனுக்கு. “சி.பி.சி.ஐ.டி-க்கு வரும் வழக்குகள் பழையதாக இருக்கும். அதை ரி கிரியேட் செய்து துப்பு துலக்குவது சவாலாக இருக்கும். அந்த வழக்கை விசாரிக்கும் காவலர்களுடன் இரவு, பகல் பாராமல் கூடவே இருப்பேன். ஒரு கேஸில் அப்படித்தான், நான்கு ஆண்டு கழித்துத்தான் துப்பு கிடைத்தது. கொலை நடந்த அருகில் குட்டை மாதிரி இருந்தது. அதிலிருந்த நீரையெல்லாம் வெளியேற்றிப் பார்த்த போது ஒரு செயின் கிடைத்தது. அதை வைத்துத் தேடியதில் குற்றவாளி சிக்கினான்.

கொலையான உடலை, எப்படியும் ஒன்று, இரண்டு மணி நேரம் அலசிவிடுவேன். காயங்கள் தவிர ஏதாவது துப்பு கிடைக்கும். பல வழக்குகள் சவாலானதாகவும், நீண்ட நாட்களாகவும் இருக்கும். ஆனால், எப்படியும் குற்றவாளியை, இது வரை நான் ஹேண்டில் செய்த எல்லா கேஸ்களிலும் கண்டுபிடித்திருக்கிறேன். துப்பு துலக்குவது ரொம்ப பிடிக்கும். ஒரு காவல் துறை அதிகாரி வேலை போகப் போகப் பிடிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் உடல் ரீதியாகக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. தற்போது யோசித்துப் பார்க்கும் போது, இது தவிர வேறு எந்த வேலையும் எனக்கு செட்டாகியிருக்காது” என்று கூறும் ராஜேஸ்வரி, இவ்வேலையில் உள்ள சவால்களைக் கூறினார்.

“காவல் துறையைப் பொறுத்தவரை நேரம் தான் சவால். எந்த நேரமாக இருந்தாலும் தயாராக இருக்கணும். குடும்பத்தோடும், பசங்களோடும் நேரம் செலவழிக்காதது கொஞ்ச கஷ்டமாகத்தான் இருக்கு. இங்கு இதைத் தியாகம் செய்தாலும், ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் வாழ்வில் உதவியா இருக்கோம். காவல்துறை பற்றி வெளியில் பலவாறு பேசிப்பாங்க. பேசுவதற்கு முன் அவங்களுக்கு தெரியாது இதில், எவ்வளவு கஷ்டம் இருக்கு என்பது. இது காவல் துறை மட்டுமல்ல, மற்ற துறைகளுக்கும் பொருந்தும். பேசும் முன் யாரும் யோசிப்பதில்லை. சினிமாக்களில் விளையாட்டுக்கு ஏதாவது, சொல்லிட்டு போயிடறாங்க. நீங்க எதுவேண்டுமானாலும் சொல்லலாம், நாளை உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் தான் வந்து நிற்போம்” என்றார்.

தனது இத்தனை ஆண்டு கால அனுபவத்தில், “ஒரு குற்றவாளி உருவாவதற்கான காரணம் அவன் சூழலும், அவனைச் சுற்றியுள்ள வறுமையுமே” என்று கூறும் ராஜேஸ்வரி, “ஒருமுறை குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டால், அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது கடினம்” என்கிறார். “சிலர் தங்களது பப்ளிசிட்டிக்காகவும், த்ரிலுக்காகவும் குற்றம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு முயன்றாலும், உடனிருக்கும் குழுக்கள் விடுவதில்லை. சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தும் கூட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதெல்லாம் கிடையாது என்பதை, குற்றவாளியான பின் உணர்கிறார்கள். இவர்களை குடும்பத்தில் உள்ளோரும் புறக்கணிக்க ஆரம்பிக்கின்றனர்” என்று கூறும் ராஜேஸ்வரி, பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசினார்.

“தமிழக காவல் துறை, “காவலன் ஆப்” என்று அறிமுகப்படுத்தி இருக்காங்க. இது அவசியம் எல்லோருடைய மொபைலிலும் இருப்பது நல்லது. இன்றைய தலைமுறை பெண்கள், தங்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் வெளிப்படையாக சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்கிறார்கள். அம்மா வீட்டில் இல்லை, நான் இங்கதான் இருப்பேன், போவேன் என எல்லாமே சொல்லி விடுகிறார்கள். இதனோடு தங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் புகைப்படங்களாகவும் வெளியிடுகிறார்கள். இன்றைய அளவில் சைபர் குற்றங்கள்தான் அதிகமாகியுள்ளது. நிறையப் பேர் பிளாக் மெயிலில் சிக்கித் தவிக்கின்றனர். விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

வெளியில் செல்லும் போது தங்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறதென்றால், தங்களது வேலைக்கோ, கல்லூரிக்கோ போகும் போது தினம் தினம் வெவ்வேறு வடிவில் பயணிக்கலாம். இதையெல்லாம் தாண்டி, மாநகர் பேருந்துகள், மால்கள், மக்கள் கூடும் இடங்களில் மஃப்டியில் போலீஸ் வருகிறார்கள். இது தெரியாமல் சில்மிஷம் செய்பவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். பெண்களை கிண்டல் செய்பவர்களும், அவர்களுக்குத் தொந்தரவு செய்பவர்களும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தற்போது பல சட்டங்கள் பெண்கள் பாதுகாப்பிற்காகக் கொண்டு வந்துள்ளனர். அப்புறம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்” என்று கூறுபவர், தற்போது இயங்கி வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பற்றிக் கூறினார்.

“இன்றைய தலைமுறை நம் கலாச்சாரம், கலைகள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இடிந்த கோயில்களுக்கும் வரலாறு இருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்படும் சிலைகளுக்குத்தான் வெளி நாடுகளில் அவ்வளவு மவுசு. இங்கு ஏதோ ஒரு சிலை என்று கடந்து விடுகிறோம். அதன் மதிப்பு தெரிவதில்லை. ஆயிரம் காலம் பழமை வாய்ந்த சிலைகள் ஏராளம் நம் நாட்டில் இருக்கின்றன. சில இடைத் தரகர்கள் மூலம் இது நடக்கிறது. இது போன்று சிலை கடத்தும் போது, அதே மாதிரி பல போலி சிலைகள் உருவாக்கி, அதன் நடுவே வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இப்படி இருந்தும் பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன தற்போது இந்தியன் எம்பசியில் சொல்லி, வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட நம் சிலைகளை மீட்டுவர வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும். எந்த துறையாக இருந்தாலும் வேலைகளில் அழுத்தங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த வேலையில் நாம் எந்த அளவு உண்மையாக இருக்கிறோம் என்பது முக்கியம். அப்படியிருந்தாலே யாரும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள். அவர்களை அவர்களுக்கு ஏற்ற ஆட்களைத்தான் தேடிச் செல்வார்கள். உண்மையான ஆட்களும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாத்தா எனக்கு ரோல் மாடல். அவர் எவ்வாறு கடைசி வரை நேர்மையாக இருந்து இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறாரோ, அதேபோல் நானும் இருக்கணும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
Next post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)