சுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் !! (கட்டுரை)

Read Time:15 Minute, 6 Second

…அனந்தியைக் கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பால்), ஏன் சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை…” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நோக்கி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “…அனந்தியை நீக்கியது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் விடயமும் அந்தக் கட்சி சார்ந்தது. வேணுமென்றால், தேர்தலில் அவரை மக்கள் தோற்கடிக்கலாம்…” என்றொரு பதிலை வழங்கினார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு எம்.ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வியொன்று சர்ச்சையானது.

அந்தச் செவ்வியில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதிராக, சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார் என்பதுதான், சர்ச்சைக்கான காரணம் ஆகியது. ஊடகமொன்று, சுமந்திரனின் செவ்வியை ‘வெட்டி ஒட்டி’ ஒளிபரப்பியதை நம்பி, செவ்வியின் முழு வடிவத்தையும் காணாது, சுமந்திரனின் கட்சிக்காரர்களே அவசரப்பட்டு அறிக்கைகளை விட்டு, விடயத்தைப் பெரிதாக்கினர். எதிர்க்கட்சிகளால் மாத்திரமல்ல, சொந்தக் கட்சிக்காரர்களாலும் வேண்டாத ஒருவராக சுமந்திரன் காட்டப்பட்டார்.

ஆனால், குறித்த செவ்வியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நீண்ட அறிக்கையொன்றின் மூலம் முடிவுரை எழுதியிருந்தார். சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் இருந்தார். எனினும், தமிழ்த் தேசிய சூழல், சுமந்திரனை நோக்கி மய்யப்படுவதற்கு, குறித்த செவ்வி தோற்றுவித்த சர்ச்சைகள் பிரதானமானவை.

தமிழ்த் தேசிய அரங்கு பருமட்டாக, ‘சுமந்திரன் எதிர் சொந்தக் கட்சி வேட்பாளர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்று நிலைபெற்று இருக்கின்றது. தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியிலுள்ள அங்கஜன் அணியும் ஈ.பி.டி.பியும் கூட, சுமந்திரனுக்கு எதிராகவே பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கின்றன. “சுமந்திரனைக் கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை” என்கிற, சித்தார்த்தனை நோக்கிய மக்களின் கேள்வியும் அதன் ஒரு கட்டம்தான்.

குறித்த, சிங்களச் செவ்வியை வைத்துக் கொண்டு, சுமந்திரனை வீழ்த்திவிடலாம் என்றும் தாங்கள் வென்றுவிடலாம் என்றும் நினைத்தவர்களில், கூட்டமைப்பின் வேட்பாளர்களே அதிகம் இருந்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு, இன்றைக்கு வினையாக மாறி நிற்கின்றது. அது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் ஒரே இடத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கவும் வைத்திருக்கின்றது.

தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும், கூட்டமைப்பின் வேட்பாளர்களை நோக்கி, சுமந்திரனின் செவ்வி குறித்தே அதிகம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுவரை, நூ‌ற்றுக்கும் அதிகமான மக்கள் சந்திப்புகளை நடத்திவிட்ட சுமந்திரன், ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்தது 15 நிமிடங்கள், சர்ச்சைக்குரிய செவ்வியில் தான் கூறிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கிறார். கிட்டத்தட்ட வாய்ப்பாடுகளை ஒப்புவிக்கும் மாணவன் போல, ஒவ்வொரு கூட்டத்திலும் வார்த்தைகள் மாறாது, சர்ச்சை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

வடமராட்சியில் சில வாரங்களுக்கு முன்னர், இடம்பெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும், அந்தச் சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுமந்திரன் பதில் சொன்னார். அப்போது, மாவை சேனாதிராஜா, ஈ. சரவணபவன், இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் மேடையில் இருந்தார்கள். அவர்கள், செவ்விச் சர்ச்சை தொடர்பில், சுமந்திரனுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியவர்கள். அப்போதும், “செவ்வியை முழுமையாகப் பார்த்து விளங்கிக் கொள்ள முடியாதவர்களே, எனக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார்கள்” எனச் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

கூட்டமைப்புக்குள், குறிப்பாக, யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் எழுந்திருக்கின்ற விருப்பு வாக்குப் போட்டி, அரசியல் அறத்துக்கு அப்பாலான நடவடிக்கைகளை எந்தவித தயவுதாட்சண்யங்களும் இன்றிச் செய்ய வைக்கின்றது. இந்தப் போட்டிக்குள், வெளிநாட்டு, உள்நாட்டு சதிகாரர்களும் உள்நுழைந்து, தங்களது திட்டங்களை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அரச முகவர்களும் ஊடக மாபியாக்களும் களத்தில் இறங்கி நின்று வேலை பார்க்கின்றன.

தென் இலங்கை அரசியலில் முகவர்களும் ஊடக மாபியாக்களும் கடந்த சில தசாப்த காலம் தொட்டே, ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்குள்ளும் முக்கியஸ்தர்கள் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில், அவர்கள் எந்த ஊடக முதலாளியின் தெரிவு, முகவரின் தெரிவு என்பது வெளிப்படையானது.

ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும் அவரைத் தம்முடைய ஆளாக வைத்திருப்பதற்கும் தென் இலங்கை ஊடகங்களால் தாக்கம் செலுத்த முடிகின்றது. அவ்வாறான நிலையொன்றைத் தமிழ்த் தேசிய சூழலில் பேணுவதற்கும் சில ஊடகங்கள் முயல்கின்றன. இதற்கான விதைகளைப் போட்டமைக்கான பொறுப்பை இரா.சம்பந்தனும் மாவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலையில் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக, யாழ்ப்பாணத்தை மய்யமாகக் கொண்டியங்கும் ஊடகமொன்றின் உதவியை அவர்கள் நாடினார்கள். அதனால், அந்த ஊடகத்தின் முதலாளியை வேட்பாளராகவும் ஆக்க வேண்டி வந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் அவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஆனால், அந்த ஊடக முதலாளி, உண்மையில் கட்சிக்கான ஆதரவுத் தளத்தைத் தன்னுடைய ஊடகத்தைக் கொண்டு வளர்த்திருக்கின்றாரா என்கிற கேள்வி முக்கியமானது? ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரத்தை, அண்மைய நாள்களில் அந்த ஊடகமே அதிகளவில் மேற்கொண்டு இருக்கின்றது.

இன்னொரு பக்கம், தென் இலங்கை ஊடக மாபியாக்களைப் பார்த்துவிட்டு, தமிழ்த் தேசிய சூழலில் தாமும் அப்படியோர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, புலம்பெயர் தேசத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகமொன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அது, இணைய ஊடகங்களை வைத்துக் கொண்டு, தாயகத்திலுள்ள அரசியலைத் தம்மால் தீர்மானித்துவிட முடியும் என்றும் நம்புகின்றது. அதற்காக, ஒரு நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி, இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஊடகங்களின் உள்நுழைவுதான், இம்முறை தமிழ்த் தேசிய தேர்தல் பரப்பை, சுமந்திரனை நோக்கி மய்யப்படுத்தி இருக்கின்றது.

இந்தப் பொதுத் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கிற ஒற்றை நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள். அதன்மூலம், வீழ்த்திவிட முடியாத ராஜபக்‌ஷ சாம்ராச்சியத்தை மீண்டும் கட்டியெழுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அப்படியான சூழ்நிலையைத் தென் இலங்கை எதிர்கொள்கின்றதோ இல்லையோ, வடக்கு, கிழக்கு மக்கள் நிச்சயமாக எதிர்கொண்டாக வேண்டும். ஏனெனில், படைத்தரப்பின் தலையீடுகள் தொடங்கி, பௌத்த, சிங்கள தேசியவாதம் என்கிற நிலைப்பாடுகள் வரை, நிறுவனமயப்பட்ட சிந்தனையைத் தமிழ்த் தேசத்தில் முன்னெடுக்கும் முனைப்பை, கடந்த காலத்தைக் காட்டிலும் அதிக வேகத்தோடு ராஜபக்‌ஷக்கள் ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

அப்படியான நிலையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக்‌ஷக்கள் பெறும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளையும் பௌத்த, சிங்கள நிறுவன நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து அழித்துவிடுவார்கள்.

ஒரு காலத்தில், தன்னைத் தாராளவாதியாக முன்னிறுத்திக் கொண்டிருந்த மிலிந்த மொரகொட, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாகத் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாது ஆக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கின்றார். வழக்கமாக பௌத்த, சிங்கள கடும் தேசியவாதிகளே இவ்வாறான நிலைப்பாட்டை முன்வைப்பார்கள். ஆனால், இம்முறை தாராளவாதிகளாக நின்றவர்களே, அந்த நிலைப்பாட்டோடு வருகிறார்கள்.

அப்படியான சூழலில், அதற்குப் பின்னாலுள்ள திட்டங்களைப் புரிந்து கொண்டு, எதிர்கொள்ளும் திறனை, தமிழ் அரசியல் பரப்பு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, தென் இலங்கை எவ்வாறான திட்டங்களோடு இந்தத் தேர்தலை அணுகிக் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ளாமல், சுமந்திரன் என்கிற ஒருவரைச் சுற்றித் தேர்தல் களத்தை வடிவமைத்து, காவிக் கொண்டிருப்பதென்பது உண்மையிலேயே ஆரோக்கியமானது அல்ல. ஒரு செவ்விச் சர்ச்சையை, பொதுத் தேர்தல் களமொன்று பிரதானமாக்கி விட்டிருக்கின்றது என்பது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாததொன்று. அது, சுமந்திரனுக்கு எதிரான நல்லாட்சிக் கால கேள்விகளை இல்லாமலாக்கி விட்டிருக்கின்றது.

அதுவே, அவருக்குத் தேர்தல் வெற்றியை இலகுவாக்கும் கட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில், சிங்களச் செவ்விச் சர்ச்சைக்குப் பதிலளிக்க ஆரம்பித்ததுமே, அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை இலகுவாக வெட்டி வீழ்த்திவிடுகிறார்; மக்களை நம்ப வைத்துவிடுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகால கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு அதிகம் பொறுப்புக்கூற வேண்டிய சுமந்திரனை, ஒரு செவ்விச் சர்ச்சைக்குள் சுருக்கி, அவருக்கான ஆதரவுத் தளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? விருப்பு வாக்குச் சண்டைகள், தமிழ் மக்களின் அரசியலைச் சூனிய வெளிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. அவ்வளவுதான்.. அதற்கு மேல் என்ன சொல்ல?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India!! (வீடியோ)
Next post இந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி? (வீடியோ)