வெற்றிலை ரசம் வைப்பது எப்படி?! (மருத்துவம்)
வெற்றிலை தாம்பூலத்துக்கு மட்டுமே பயன்படுவதல்ல. மருத்துவரீதியாகவும் அதன் பயன்களும், பலன்களும் ஏராளம். குறிப்பாக, வெற்றிலையை ரசமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் நம்மவர்களிடம் முன்பு இருந்திருக்கிறது. இப்போதும் சிலர் அந்த வழக்கத்தைப் பின்பற்றி வருவதை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். சித்த மருத்துவர் சத்யாவிடம் வெற்றிலையின் அருங்குணங்கள் பற்றியும், வெற்றிலை ரசம் வைக்கும் முறை பற்றியும் கேட்டோம்..
‘‘வாயில் உமிழ்நீரைச் சுரக்கச் செய்து, செரிமான நொதிகளைத் தூண்டி விரைவில் உணவினை செரிமானம் அடையச் செய்யும் திறன் கொண்டது வெற்றிலை. அதனால்தான் உணவு உண்டபின் வெற்றிலை போடும் பழக்கம் இருக்கிறது. மேலும், இரைப்பைப் புண்களை குணமாக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. வயிற்றில் வாயு சேர்தலையும் வயிற்றுப் பொருமலையும் போக்குகிறது.
வாய் துர்நாற்றத்துக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. முக்கியமாக, வெற்றிலை ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. தொண்டைக்கட்டு, குரல் கம்மல், வறட்டு இருமலைப் போக்குவதில் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. காம உணர்வைப் பெருக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. வாய் புற்றுநோயைத் தடுக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
இத்தனை மகத்துவம் கொண்ட வெற்றிலையை ரசம் வைத்துப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்?!
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 5, நெய் – 2 ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், பூண்டு – 5 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிது.
செய்முறை
காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தக்காளி, வெற்றிலை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை நீர்விட்டுக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு, கடுகு போட்டு தாளித்துக் கொண்டு புளி ரசத்தை விட்டு சிறிது கொதிக்கவிட வேண்டும். பின் அரைத்த வெற்றிலை விழுதைச் சேர்க்கவும். தேவையான உப்பும் சேர்க்கவும். நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சைப்பழச்சாறை விட்டால் சுவையான, ஆரோக்கியமான வெற்றிலை ரசம் தயார்.
வெற்றிலை ரசத்தின் நன்மைகள்
வெற்றிலை ரசத்தினை குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். வாரத்துக்கு மூன்று முறை சாப்பிடலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அல்சர் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னை கொண்ட வர்களுக்கு வெற்றிலை ரசம் பெரிதும் உதவி செய்யும். பார்வை பிரச்னையைப் போக்கும் திறன் கொண்டது. சாதத்தில் பிசைந்து சாப்பிட மட்டுமல்ல; சூப்புபோலவும் அருந்த ஏற்ற பானம் இது.
தொண்டை கட்டு, இருமல், போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பயனளிக்கும். நம் உடலில் உள்ள தோல் நோய்களுக்கு அடிப்படை காரணம் துவர்ப்பு சுவை குறைவதாகும் இந்த துவர்ப்பு சுவை நிறைந்த வெற்றிலையை நாம் எடுத்துக்கொள்ளும் போது பல்வேறு தோல்நோய்களும் குறைகிறது. வெற்றிலை ரசத்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் குரல் வளம் இனிமையானதாக மாறும். மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரமாக வெற்றிலை ரசம் இருக்கும்!’’.
Average Rating