தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 6 Second

சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல் பிரசார வேலைகளை முடுக்கி விட்டுள்ள இவ்வேளையில், கருணா விவகாரம் பெரும் தலையிடியாக ராஜபக்‌ஷக்களுக்கு மாறியுள்ளது.

ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, பொருள்களின் விலை அதிகரிப்பு, அமெரிக்க தூதரக அலுவலரின் கொரோன வைரஸ் விவகாரம், அமெரிக்க வியாபார ஒப்பந்தம், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, முஸ்லிம்கள் விவகாரம், இராணுவ மயமாக்கல், இந்திய-சீன உறவு, முஸ்லிம் நாடுகளுடனான உறவு எனப் பல்வேறு விவகாரங்களைக் கையாள வேண்டிய சூழ்நிலையில், பெருந் தேசியவாத உணர்வெழுச்சியை மூல உபாயமாகக் கொண்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன.

ராஜபக்‌ஷக்கள் ஆட்சி அமைக்க எத்தனிக்கும் விவகாரத்தில், முஸ்லிம் கட்சிகளைப் புறந்தள்ளி, தமிழர் தரப்புகளை வடக்கு, கிழக்கில் தனித்தனிக் கட்சிகளாகக் களமிறக்கி, தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதே கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக, சுயேட்சைக் குழுக்கள் பலவற்றையும் களமிறக்கியுள்ளதோடு, தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூலின் செயற்பாடுகள் குறித்தும் விமர்சனங்களைத் தெரிவித்தும் வருகின்றது.

இத்தகைய பின்புலத்தில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில், அகில இலங்கைத் தமிழர் மகா சபையில், அம்பாறை மாவட்டத் தலைமை வேட்பாளர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின், ஆனையிறவுத் தாக்குதல் தொடர்பான கருத்துகள், சும்மா கிடந்த வாய்க்கு, மெல்வதற்கு அவல் கிடைத்தது போல், தேர்தல் பிரசார வியூகத்தில் ராஜபக்‌ஷக்களைப் போட்டுத்தாக்கக் கிடைத்த துருப்புச் சீட்டாக மாறியுள்ளன.

ஏனெனில், சிங்களத் தேசியவாத உணர்ச்சியின் உச்சக்கட்டமாக விளங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் சிந்தனையில் பால், பெரும்பான்மை சமூகம் தனிச் சிங்கள அரசை நிறுவும் தேசியவாதப் போரை, சிறுபான்மை சமூகங்களைப் புறந்தள்ளி முன்னெடுத்துள்ள இந்த வேளையில், அச்சிந்தனையைத் தவிடுபொடியாக்கும் வியூகங்களைத் தடுக்கும் இனவாத துருப்புச் சீட்டாக, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகச் செயற்படும் அனைத்து கட்சிகளுக்கும் கருணாவின் ஆனையிறவு, அறந்தலாவ இராணுவ வீரர்கள், பௌத்த பிக்குகள் படுகொலை விவகாரம் ஆகியவை அமைந்துள்ளன.

இலங்கை, சுதந்திரத்துக்காகப் போராடிய போது, இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடிய சுதந்திர வீரர்களை, சிங்களப் பெருந்தேசிய வாதம், எவ்வாறு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதோ, அதேபோல் தான், காலத்துக்கு காலம் சிங்களப் பெருந்தேசியவாதத்துக்காக, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ, அவர்களைத் தங்கள் நாயகர்களாகவும் தியாகிகளாகவும் பார்த்தது. அந்தவகையில், சுதந்திரத்துக்குப் பின்னர், அல்பிரட் துரையப்பா, நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் எனப் பட்டியல் நீண்டது. இந்தவகையில், ரணில் – பிரபா ஒப்பந்தத்தின் பின்னர், வடக்கு, கிழக்கு புலிப் போராளிகள் மகிழ்ந்து போயினர். உண்மையில், 2002 இற்கு பின், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் கருணா பங்கேற்கவில்லை; அவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். வடக்கு, கிழக்கு எனப் புலிகளின் பிளவின் பின்னர், புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் தனது படை அணிகளைக் கலைத்துவிட்டு, அரசாங்கத்திடம் சரணடைந்தார். இந்தப் பிரிவு என்பது, சிங்கள தேசியவாத அரசுக்கு சாதகமாக அமைந்தது; விடுதலைப் புலிகளுக்குச் சாவு மணியாக அமைந்தது.

விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், சக இயக்கங்களைத் துரோகிகளாகப் பார்த்து, துரோக பட்டங்கள் கட்டி, சகோதரப் படுகொலைகள், ஆயிரக்கணக்கில் வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களில் நடந்துள்ளன; காட்டிக்கொடுப்புகளுக்கான மரணதண்டனைகள் நடந்துள்ளன. இராணுவத்துடன் போராடித் தியாக மரணங்கள் நடந்துள்ளன. யுத்தத்தில் சிக்குண்ட பொதுமக்களின் மரணங்கள் நடந்துள்ளன. பல அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இதில் பல்வேறு தரப்பினருக்கும் பங்குண்டு.

இவற்றின் பின்புலத்தில், அயலுறவுக் கொள்கைகள், மேலைத்தேயத்தின் காய்நகர்த்தல்கள், உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல் எனப் பல்வேறு விடயங்கள் மறைந்து, மௌனித்து போன யுத்தச் சேற்றுக்குள் புதையுண்டுள்ளன.

கருணா – பிரபா பிளவுக்கு என்ன காரணம் என்ற உண்மை கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் தான் 100 சதவீதம் தெரியும். மற்றவர்களோ, தற்போது உயிருடன் இருப்பவராகக் கருதப்படும் கருணா அம்மானோ, சொல்வதெல்லாம் உண்மை என்பது 100 சதவீதம் யாருக்குத் தெரியும்?

அதேபோல், கருணா பிரிந்து சென்று, சிங்களத் தலைவர்களுடன் இணைந்தபோது, என்ன சொன்னார் என்பதும் எதைச் செய்தார் என்பதும் ராஜபக்‌ஷகளுடன் என்ன ஒப்பந்தம் செய்தார் என்பதும் கருணாவுக்கும் ராஜபக்‌ஷகளுக்கும் தான் 100 சதவீதம் தெரியும்.

அந்த வகையில், எவரும் எதையும் பேசலாம்; விவாதிக்கலாம் . ஆனால், இன்றைய சூழலில் கருணா வாய் திறந்தால், பொதுஜன பெரமுனவின் கனவு சிதையலாம் என்ற உறுதியான நம்பிக்கையில் தான், “முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்“ எனக் கருணா சவால் விட்டுள்ளார். அரசியல்வாதிகளுக்கே இயல்பான சுகவீனம், அவரையும் இத்தேர்தல் காலத்தில் தொற்றிக்கொண்டது. கருணா, தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றால், விசாரணைக்கும் செல்ல வேண்டும். விசாரணைக்கு சென்றால் அரசு அவரைப் பாதுகாக்க வேண்டும்.

ஏனெனில், கருணா வாய் திறந்தால், புலிகளது கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள், கொலையைப் புலிகள் மீது சுமத்தி, அவர்கள் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள், பேரம் பேசியவர்கள், புலிகளது சொத்துகளின் விவரத்தையும் பெறுமதியையும் யுத்தம் முடிந்தவுடன் 11 வருடமாகியும் வெளிப்படுத்தாதவர்கள், காணாமல் போனோர் தொடர்பாக, புலிகளது தலைவர் முக்கிய தளபதிகள், வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் தொடர்பாகவும் இன்னும் வௌிப்படுத்தாத இரகசியங்கள், புலிகளுடன் நடந்த தேர்தல் கால பேரம் பேசல்கள், சர்வதேசத் தொடர்புகள், விடுதலைப் புலிகளின் தலைவரது மரணச் சான்றிதழ் வழங்கப்படாதற்கான காரணங்கள், இனப்பிரச்சினை இழுத்தடிப்பு செய்வதற்குப் பின்புலத்தில் உள்ள சக்திகள், விடுதலைப் புலிகளில் இருந்து தான் பிரிந்து செல்வதற்கும், தன்னை பாதுகாப்பதற்கும் தனக்குப் பொது மன்னிப்பு அளிப்பதற்கும் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கும் பிரதியமைச்சர் பதவி கொடுத்ததற்கான காரணங்கள், அதன் பின்புல சக்திகள் இவற்றைக் கருணா அம்மான், நீதி விசாரணை என்று வரும் போது, சாட்சியாகப் பகர்ந்தால், கருணா அம்மான் தன்னைப் பாதுகாக்க, இவற்றையெல்லாம் சர்வதேச வலைப்பின்னல் மூலம் இணைப்பு செய்து வைத்திருந்தால், இலங்கை அரசியல் நிலைவரம் தடம்புரண்டுடே ஆகும்.

அந்த தைரியமே, கருணாவைச் சவால்விடத் தூண்டியது. ஆயினும், சிங்கள தேசியவாதத்தின் உணர்வு எழுச்சியும் எதிர்க்கட்சி வியூகங்களும் பௌத்த பிக்குகளும் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் நாடியும் பாதுகாப்பு படையிடம் முறையிட்டும் சிங்கள மக்களிடையே கொந்தளிப்பு நிலை ஏற்படுத்தி உள்ளார்கள். ராஜபக்‌ஷவை பொறுத்தவரையில், தங்கள் தேர்தல் வியூகங்கள் சின்னாபின்னப்படாமல் இரட்டை அரசியல் நடத்துவதே ஆகும்.

ஆயினும், விடயம் தம் கை மீறிப் போகும், தம் அதிகாரத்தை நிலைநிறுத்த அவர்கள் நியாயங்களுக்கு அப்பால் தம்மைப் பாதுகாக்கவே முனைவார்கள். எனவே கருணா விவகாரம், ராஜபக்‌ஷகளுக்கு எல்லா பக்கங்களிலும் இருந்து ஒரு தலையிடியாக மாறியுள்ள சூழலில், கருணா அம்மான் காரைதீவு வேட்பாளர் கதைக்குக் கதைசொல்லி, மூக்கு அறுபட்ட கதையாய் போய்விட்டது.

இதனால் சிங்களத் தேசியவாத சிந்தனையின் எழுச்சியில், சிங்கள மக்களின் தியாகியாகப் பார்க்கப்பட்ட கருணா, துரோகியாகப் பார்க்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் கருணாவை விசாரிக்கவும் சிறையில் அடைக்கவும் தண்டனை வழங்கவும் துணிந்துள்ளார்கள். இப்போது கருணா குற்றவாளி என சிறை சென்றால், சிறையில் விசாரணையின்றி இருபவர்கள் சற்றவாளிகள் ஆகலாம்.

சிலவேளை விடுதலையும் பெறலாம். கருணா போர்க்குற்றவாளி என்றால் இந்தப் போருக்கு காரணமான இன்னொரு தரப்பான சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சர்வதேசம் மூலம் போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்களும் கருணாவை போல் தண்டனைக்கு முகம் கொடுப்பார்களா? கருணாவின் விதைத்த விதை கருணாவை நோக்கி நகர்கிறது. தன் வினை தன்னைச் சுடும்; நுணலும் தன் வாயால் கெடும்.கருணா தன்கையால் தனக்கே மண்ணள்ளி போட்டாரா?

சிங்களப் பெருந்தேசிய வாதம், ஓநாய் போன்றது. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும். ஏனெனில், தன் பசி போக்க ஆடு அருகே வராதா என்றே ஏங்கும். கருணாவுக்கும் அதுதான் நிலை. ஆனால், இதையும் கருணா முறியடிப்பாரா அல்லது அவரது அரசியல் அத்தியாயம் இத்தோடு முற்றுப்பெறுமா? இது ராஜபக்‌ஷக்களுக்கும் கருணாவுக்கும் தான் வெளிச்சம், பாவம், பொது ஜனங்கள். நடப்பதைப் பார்த்துவிட்டு வாய்மூடி மௌனித்துப் பத்தோடு பதினொன்றாக நிற்கும். ஏனெனில் தர்மம் அதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலம் தரும் பனங்கற்கண்டு!! (மருத்துவம்)
Next post பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)