தர்பூசணி தரும் நன்மைகள்!! (மருத்துவம்)
கோடை துவங்கிவிட்டால், வியர்க்குரு, சருமப்பிரச்னை, வயிற்றுப்பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டுகின்றன. வழியெங்கும் தண்ணீர், நீர், மோர் பந்தல், இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டி கடைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் என திடீர் கடைகள் முளைக்கின்றன. இவற்றில் கோடைக்கு ஏற்றது எது? அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் சீசனில் எந்த உணவுகள் சிறந்தவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், உடல் உபாதைகளுக்கு தீர்வாகவும் இருப்பவை எது என்ற கேள்வி எழுகிறது. கோடை காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி. கொழுப்பு சத்தே இல்லாதது. வைட்டமின் ‘’ஏ’’ மற்றும் ‘’இ’’ நிறைந்த தர்பூசணியின் பலன்கள் ஏராளம்.
இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை இது தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. சிறுநீரக பிரச்னை அல்லது டையூரெட்டிக் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் சாப்பிட்டால், அந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
தர்பூசணியில் இருக்கும் லைகோபீன், சிட்ருல்லின் சத்துகள், மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாக செயல்படுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்த இவை உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தஅழுத்த பாதிப்புகளை குறைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் தசைபிடிப்பு பிரச்னையை தடுக்கிறது. லைகோபீன், புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
தர்பூசணியை சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும். வெயில் காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சரும பிரச்னை. தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள குளூட்டாதியோன் சரும பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும்.
தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி, அன்றாடம் நாம் உட்கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தில், 25 சதவீத சத்துகளை கொடுக்கிறது. இது, சருமத்தில் வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமலும் தடுக்கிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல், சருமம் கறுத்துப்போகுதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம், இந்த பிரச்னைகளை தீர்க்கும். சருமத்தின் பொலிவை தீர்மானிப்பது மெலனின். இது, தர்பூசணியின் குளூட்டாதியோன் ஆன்டிஆக்ஸிடன்ட், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, சருமத்துக்கு பொலிவை கொடுக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியை முடித்தவுடன் ஹைட்ரேஷனுக்காக எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக தர்பூசணி சாப்பிடலாம். பொதுவாக எந்த பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. காரணம், ஜூஸாக்கும்போது பழத்திலுள்ள நார்ச்சத்து குறைந்துவிடும்.
சர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், அது தவறு. GI எனப்படும் Glycemic index சத்து ஒவ்வொரு பழத்துக்கும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.
தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, டி., லைகோபீன், சிட்ருல்லின், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள லைக்கோபீன், பீட்டா கரோட்டின் சத்துகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்தே இல்லாத தர்பூசணியில், கலோரியும் மிக குறைவு. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இதில் 11 சதவீதம் வைட்டமின் ஏ, 13 சதவீதம் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சத்துகள் மாரடைப்பை தடுக்க உதவுகிறது.
Average Rating