மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…!! (மருத்துவம்)
‘‘பார்ப்பதற்கு சின்னஞ்சிறிய இலைகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கும் வெந்தயக்கீரை, மிகப்பெரிய மருத்துவப் பலன்களை தன்னகத்தே கொண்டது. நோய் தீர்க்கும் மூலிகையாகவும், உணவாகவும், மசாலா மற்றும் பாரம்பரிய மருந்துப் பொருட்களில் சேர்க்கப்படுவதாகவும் சர்வதேச அளவில் வெந்தயக் கீரை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது’’ என்கிறார் உணவியல் நிபுணரான சிவப்ரியா மாணிக்கவேல்.
‘‘தாவரவியல் வல்லுநர்களால் மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வெந்தயக்கீரை நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் விளைவுகள் கொண்டுள்ளதாக ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
வெந்தயக் கீரைகள் இளம்பச்சை நிற இலைகள் மற்றும் சிறிய வெள்ளைப்பூக்கள் கொண்ட ஒரு வருடாந்திர மூலிகைச்செடி ஆகும். இது பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். உலர்ந்த வெந்தய இலைகள், பல வட இந்திய உணவுகளில் ஒரு சுவைமிக்க பொருளாக
பயன்படுத்தப்படுகிறது.
தையாமின்கள், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ, பி6, கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள், செம்பு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பல தாதுப்பொருட்கள் நிறைந்த களஞ்சியமாக வெந்தயக்கீரை இருக்கிறது.
வெந்தயக்கீரையில் உள்ள பல்வேறு பைட்டோநியூட்ரியன்டுகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஸ்டீராய்டுகள், அல்கலாய்டுகள், சபோனின், பாலிபினால்கள், ஃப்ளேவனாய்டுகள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் வெந்தயக் கீரையில் அதிகளவில் உள்ளன.
எண்ணற்ற மருத்துவ ஆராய்ச்சிகள், வெந்தயக்கீரையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளன.
ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கவும் வெந்தயக் கீரை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது.
இன்னும் சில பயன்கள்…
* கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், பதின்ம வயது பெண்களுக்கும் ரத்தநாளங்களுக்கான ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்தசோகை வரும் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது.
* புதிய வெந்தய இலைகளை நசுக்கி, சாறு எடுத்து, இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் ஹார்மோன் அளவை சீர்செய்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
* வெந்தய இலைகள் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். வெந்தயக்கீரையை உட்கொள்ளும்போது நம்முடைய உடலின் நார்ச்சத்து தேவைகளை நிறைவு செய்கிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஓர் அரிய மருந்தாகும். குடல் இயக்கத்தை சரி செய்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது.
* மிக அதிகளவில் புரதமும் நிக்கோடினிக் அமிலமும் வெந்தயக்கீரையில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும் கூந்தலை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றுகின்றன.
வெந்தயக் கீரையைப் பயன்படுத்தும் முறை
பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், அதன் கசப்பு சுவை காரணமாக வெந்தயக்கீரையை சாப்பிட பலர் விரும்புவதில்லை. அதனால் சூப்பாகவோ, பருப்பு கூட்டாகவோ, மென்மையான மேத்தி பராத்தாவாகவோ இதனை வாரம் இரண்டு முறையாவது அவசியம் உண்ண வேண்டும். வெந்தயக்கீரை லேசான கசப்பு சுவை உடையதாக இருந்தாலும், சிறிது வறுத்தால் கசப்புச்சுவையை இழந்துவிடும்.
வெந்தயக்கீரையை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிதானதாகும். வீட்டில் இருக்கும் ஒரு கைப்பிடி வெந்தய விதையை எடுத்து, சட்டியில் பரவலாகத் தூவி, தினமும் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றினால், ஒரே வாரத்தில் நீங்கள் சமைக்க ஃப்ரெஷ்ஷான இளவெந்தயக்கீரை தயார்.
Average Rating