கஞ்சா காவிகள் கொரோனா வைரஸ் காவுவார்களா? (கட்டுரை)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அலை, வடக்கிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதற்கு, முக்கிய காரணியாக இருப்பது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ‘தொப்புள் கொடி உறவு’தான். காலம் காலமாக, இந்தியாவுடன் ‘தொப்புள் கொடி உறவு’ உள்ளவர்களாகத் தமிழர்கள் பெருமையுடன் கூறிக் கொள்வதுண்டு.
பல சமயம் இந்த உறவு, பெருமையாகவும் பலமாகவும் கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது இந்த உறவே ஆபத்தானதாகவும் மாறிவிடக் கூடிய சூழலும் உள்ளது.
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணை வழியாக, குறுகிய நேரத்துக்குள் மேற்கொள்ளக் கூடிய பயணமே, தற்போதைய சூழ்நிலையில் ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது.
இலங்கை கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, முற்றாக விடுபடுகின்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர், கடற்படையினர் தவிர, சமூகத்துக்குள் தொற்று முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது, தற்போதைய தருணத்தில் முக்கியமானது.
சமூகத்தில் மீண்டும் தொற்று ஏற்படுமானால், பெரியளவில் அழிவுகளை ஏற்படுத்தக் கூடும். அவ்வாறான நிலைக்கு அனுமதிக்காத வகையில், தற்காத்துக் கொள்வதே முக்கியம்.
ஆனாலும், அதற்குச் சவாலாக இருப்பது, இந்தத் தொப்புள் கொடி உறவு தான்.
இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் படகுகளில் ஏறி, இலங்கைக்குப் பிழைக்க வந்தார்கள். அதுபோல, இலங்கையில் போர் அச்சம் சூழ்ந்த போது, பாக்கு நீரிணையைக் கடந்து, அகதிகளாகத் தமிழர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தார்கள்.
இப்போது, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்ற சூழலிலும், அவ்வாறானதொரு குடிப்பெயர்ச்சி நிகழக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அண்மையில், தமிழகத்தில் தங்கியிருந்த இரண்டு அகதிகள், கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில், படகு மூலம் மன்னாருக்கு வருகை தந்திருந்தார்கள். இவர்களின் வருகையே, மற்றொரு குடிப்பெயர்ச்சிக்கான அறிகுறியாகத் தென்படுகிறது.
இந்தியாவில், ஒரு இலட்சம் வரையான இலங்கை அகதிகள், தங்கி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், முகாம்களில் தங்கி இருக்கிறார்கள்.
உயிருக்குப் பயந்து, இந்தியாவுக்கு ஓடிச் சென்ற அவர்கள், இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தால், அங்கிருந்து திரும்பி ஓடி வந்து விடுவார்கள். அவ்வாறான ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தால், அது ஆபத்தானது.
முறையான பரிசோதனைகளின்றி, இலங்கைக்குத் திரும்பக் கூடிய அகதிகளால், இங்கு நோய்த் தொற்று ஏற்படக் கூடும். ஏனென்றால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அங்கு தொற்று, கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. சமூகத் தொற்றாக மாறக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், ஆபத்து குறைவானதாக இருந்தாலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களின் நிலைமை படுமோசமாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் அகதிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுறுத்தலுக்குரிய பகுதிகளில் கணிசமான மக்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், ‘இனி ஊர் திரும்பி விடுவோம்’ என்று, சட்டவிரோதமாகப் படகுகளில் பயணம் செய்ய முனைந்தால், அது ஆபத்தானதாக மாறி விடும்.
அதுபோலவே, இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் தொற்று ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, இன்னொரு தொடர்பும் உள்ளது. அது, கஞ்கா கடத்தல்காரர்களால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட, கஞ்சா கடத்தல்காரர்கள் அடங்கியிருக்கவில்லை. முடக்க நிலையிலும், ஆங்காங்கே கஞ்சா பொதிகளின் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டன. முறியடிக்கப்படாமல், கொண்டு வந்து சேர்க்கப்பட்ட கஞ்சா பொதிகள் எவ்வளவு என்ற கணக்கு, யாருக்கும் தெரியாது.
போருக்குப் பின்னர், இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் கஞ்சா பொதிகள், மிகப்பெரிய பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ச் சமூகத்தை, மிகமோசமான நிலைக்குத் தள்ளுவதில், கஞ்சா மிகமுக்கிய பங்கு வகித்து வருகிறது.
இளைஞர்களை கஞ்சாவுக்கு அடிமையானவர்களாக்கி, அந்த வருமானத்தில் செல்வம் கொழிக்கும் ஒரு வக்கிர சமூகமும் தமிழர்கள் மத்தியில் தோன்றி விட்டது.
கஞ்சா நுகர்வோர், கடத்தல் பேர்வழிகள் ஆகிய இரண்டு தரப்புகளுக்கு இடையில், மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்.
கஞ்சாவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதோ, கஞ்சா கடத்தல்காரர்களை அந்த தொழிலில் இருந்து மீட்பதோ இலகுவானதல்ல. இந்த இருதரப்பினரதும் பாவங்களுக்கும், அப்பாவி மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவது, தடுக்கப்பட வேண்டியது முக்கியம்.
அண்மையில், இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 104 கிலோ கஞ்சா பொதிகளுடன், இரண்டு பேர் மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்டனர். கஞ்சாவால் ஏற்படக் கூடிய பாதிப்பை விட, அங்கிருந்து கடத்தி வரக்கூடிய கொரோனாவால் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
கடத்தல்காரர்கள், இந்தியாவுடன் கொண்டுள்ள இரகசிய உறவுகளால், இலங்கைக்குக் கொரோனா வைரஸ் கடத்தப்படும் ஆபத்து இருப்பதை மறுப்பதற்கிலலை.
அதனால் தான், கொரோனா வைரஸ் பரவலின் அடுத்த அலை, வடக்கில் இருந்து வீசக்கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான ஓர் அலை ஏற்பட்டால், அது வடக்கில் இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, கொரோனா வைரஸின் பாதிப்புகளை அடுத்து, வடக்கின் மூலை முடுக்கெல்லாம் இராணுவ மயப்படுத்தப்பட்டு இருக்கிறது. போர்க் காலத்தை நினைவுபடுத்தும் வகையில், வீதித்தடைகள் முளைத்திருக்கின்றன. சோதனைச் சாவடிகள், ரோந்துக் காவல் நடவடிக்கைகளும் தீவிரமடைந்து இருக்கின்றன. உறங்கிக் கொண்டிருந்த பிசாசை, வெளியே கொண்டு வந்து விட்ட கதையாக, இந்தக் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அமைந்துவிட்டது.
வடக்கில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் குறைவாகவே இருந்தாலும், அதைப் பயன்படுத்திக் கொண்டு, தெற்கை விட மோசமான அளவுக்கு இராணுவ மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான ஒரு பாடத்துக்கு மத்தியில், மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் அலை, வடக்கில் இருந்து பரவினால் அது எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை செய்வதே கடினமானதாக உள்ளது.
வடக்குக்கு கடல் வழியாகவே, கஞ்சாப் பொதிகள் கடத்தப்படுகின்றன. கடற்படையினரும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது பலம் முழுவதையும் பயன்படுத்திக் கொண்டால், இலகுவாகவே இந்தக் கடத்தல்களை முறியடித்து விட முடியும்.
ஆனால், அதனை இதுவரையில் அரச படைகள் ஏன் செய்யவில்லை என்ற நியாயமான கேள்வி, தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அதனால் தான், கஞ்சா கடத்தல்களுக்கு அரச படைகள் உடந்தையாக இருக்கின்றன என்ற, பரவலான குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில், வடக்கிலிருந்து இரண்டாவது கொரோனா வைரஸ் அலை வீசத் தொடங்கினால், அது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
இத்தகைய கடத்தல்களைத் தடுப்பதற்குக் கடற்றொழிலாளர்கள், கூடுதலான ஒத்துழைப்பை வழங்க முடியும்.
அவர்கள், இத்தகைய செயல்களைத் தடுப்பதற்குத் தவறினால், ஒரு கட்டத்தில் போர்க்காலத்தில் மீன்பிடித் தடை விதிக்கப்பட்டது போன்ற நிலையைக் கூட எதிர்கொள்ளக் கூடும்.
போர்க்காலத்தில் வீதிகளில் இராணுவம் எப்படி நின்றதோ, அதுபோலத் தான் இப்போதும் நிற்கிறது. அவ்வாறான ஒரு நிலை, கடலிலும் வந்து விடாது என்றில்லை.
கஞ்சா காவிகள், கொரோனா வைரஸ் காவிகளாக மாறுவது, பேராபத்தாக அமையும். அது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் பேரழிவுக்குள் தள்ளி விடும்.
Average Rating