தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ !! (கட்டுரை)
இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட!
கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, ‘எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்’ என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தித்துத் தீர்மானித்த வேட்பாளனுக்குப் புள்ளடி இடுகின்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், ‘எனக்கு இந்த மக்கள் எதற்காக வாக்களித்தார்கள், நான் ஆற்ற வேண்டிய கருமங்கள் எவை, இந்த மக்களின் வாழ்க்கையை எவ்வாறு முன்னேற்றுவது, என்று சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெகுசிலரே. இவ்வாறு சிந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு, என்ன வகையான கைங்கரியங்களை மேற்கொள்ளலாம், யாருடன் கூட்டுவைக்கலாம், யாரைச் செல்வாக்கிழக்கச் செய்யலாம் போன்ற கீழ்த்தரமான அரசியலுக்கு இடமிருக்காது. அத்துடன், சரியாகச் செயற்பட்டிருந்த அரசியல்வாதிக்குப் போட்டியாக, போட்டி அரசியல்வாதியோ, மாற்று அணியோ உள்நுழைவதற்கு இடைவெளி அங்கு இருக்கப்போவதில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், அரசியல் தோல்விகள், நீதியற்ற நடவடிக்கைகள், சமூக நெருக்கடிகள்-விரிசல்கள் ஆகியவற்றால் அவர்களின் செல்வாக்கு இறங்கு முகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வடக்கு-கிழக்கு முழுவதும் ஏமாற்றத்தின் அடிப்படையிலும் விரக்தியின் விளிம்பிலும் நின்று வெளிப்பட்ட விமர்சனங்கள் பலவற்றைக் கூட்டமைப்பினர் சந்தித்திருந்தார்கள். இவர்கள் எந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி, ஒவ்வொரு தமிழ் மகனிடமும் இருந்தது.
ஆனால், இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மிக முக்கியமான துரும்புச் சீட்டைக் களத்தில் இறக்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்காகப் பங்களிப்புச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.
“தமிழினத்தின் பாதுகாப்பு கவசமாக, விடுதலைப் புலிப் போராளிகள் அன்று இருந்தனர். அதேபோல், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஆதரவு, எமக்கு மேலும் பலமாக இருக்கும்” என்று, இந்த ஒருங்கிணைவு குறித்து இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான காய்களை நகர்த்தி, பொருத்தமான தெரிவுகளை மேற்கொள்ளும் பட்சத்தில், கூட்டமைப்பு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்குள் இருந்து சில நன்மைகளுடன் வெளிவரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கடந்த காலங்களிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கூட்டமைப்பு இத்தகைய சந்தர்ப்பவாதங்கள் நிறைந்த தந்திரோபாய அரசியலையே செய்துவந்திருந்தது. அதனால்த்தான், மாற்று அணி ஒன்றுக்கான இடைவெளி, தோன்ற ஆரம்பித்தது.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் என். வித்தியாதரனின் ஏற்பாட்டில், வவுனியாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இதன்போது, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் முன்னாள் போராளிகளிகளின் நிலைமைகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் புலிகள் கொண்டிருந்த பார்வையை முன்னிறுத்தி, அவற்றை ஜனநாயக வழியில் முன்னெடுப்பதற்காகவும் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் முகமாகவும், அதனுடன் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து, அதைத் தமது கோரிக்கையாக முன்வைத்திருந்தது. அதன்போது, கூட்டமைப்பின் தரப்பில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் அரசியல் சூழலில், முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு, நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்று ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னர், வெறுத்து ஒதுக்கியவர்கள் இப்போது, சேர்ந்து பயணிப்பதற்கு இணங்கியதற்கு காரணங்கள் பல உண்டு. முக்கியமாக, கூட்டமைப்பைப் பொறுத்த மட்டில் அது, எப்பாடுபட்டாவது தனது வெற்றி வாய்ப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஆனால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவது தவறு என்று யாரும் கூறிவிட முடியாது, அது நன்மையானதுதான். ஆனால், தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சீ.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்காமல், கறுப்புப் புள்ளிகள் படிந்துவிட்ட, கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்தமை ஏன் என்ற வினா முனைப்புப் பெற்றுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி, இதற்கான விளக்கத்தை அளிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தார். “2001ஆம் ஆண்டில் இலங்கையுடனான ஓர் இராணுவச் சமநிலையை விடுதலைப் புலிகள் அடைந்திருந்தனர். அந்தநேரத்தில் தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளுடன்தான் இருக்கிறார்கள் என்ற அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. 2009ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி வரையில், ‘புலிகளின் குரல்’ சேவை நடைபெற்றது. இதன்போது, எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கச் சொல்லியோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து, பங்காளிக் கட்சிகள் வெளியேற வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகளின் தலைமை கோரவில்லை. போராளிகளின் சரணடைவு என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் போராளிகள் அதன் தலைமைகளாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், சரணடைவு இடம்பெற்றது. நீண்டகால நோக்கில், இந்த விடயங்கள், தேசியத்தலைமையால் திட்டமிட்டு நகர்த்தப்பட்டவை ஆகும்.”
ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் குறிப்பாக, தமிழரசுக் கட்சியுடன் எழுத்தில் இல்லாமல், வார்த்தையளவில் சில முடிவுகளை எட்டி இருக்கிறது. குறிப்பாக, இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடுவதில்லை என்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அதிகளவான போராளிகள், கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் தீர்மானித்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் கூட்டமைப்பு எத்தகைய தவறுகளை விட்டிருந்தாலும், தற்போதைய காலத்தில், ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் பலம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கை வரலாற்றில், என்றும் இல்லாதவகையில் மூர்க்கத்துடன் சிங்களப் பௌத்த பேரினவாத பூதங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் திக்குத் திக்காகப் பிரிந்து நின்றால், அந்தப் பூதங்களை எதிர்கொள்ள முடியாது. எனவே, கூட்டமைப்புடன் ஜனநாயகப் போராளிகள் கட்சி இணைந்திருப்பது, காலத்தின் மிகக் கட்டாய தேவையாகும்.
தமிழர்களின் ஒற்றுமை, அரசியற் பலம் என்பதற்கு அப்பால், முன்னாள் போராளிகள், அரசியல், வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். போர் நிறைவுக்கு வந்து 10 வருடங்களைக் கடந்து விட்டபோதும், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை, இவர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கணக்கிலெடுக்கப்படாத மாவீரர் குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளாக வாழ்வோர் போன்றவர்களின் நலன், அவர்களின் பிள்ளைகளின் கல்வி என்பவற்றைக் கவனிக்கும் வகையிலான விசேட திட்டங்கள் எதுவும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. அவர்களின் வாழ்க்கை சகதிக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளது.
இந்த முன்னாள் போராளிகள், அரசியல் சக்தி ஒன்றுடன் இணைந்து, அரசியல் அதிகாரத்துடன் செயற்படுவதற்கான களத்தையும் பெறுவார்களாயின், நிச்சயம் துன்பப்படுபவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். ஏனெனில், இந்தப் போராளிகள் கொள்கைவாதிகளாக, இலட்சியவாதிகளாக, ஒரு தலைமைத்துவத்தின் கீழ் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்து, பழக்கப்படுத்தப்பட்டவர்களாவர்.
அமைப்பு ஒன்று தவறான பாதையில் பயணிக்கின்றது என்பதற்காக, அதிலிருந்து பிரிந்து செல்வது, ஆக்கபூர்வமான விளைவுகளைத் தராது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களால், இதுவரையில் ஆக்கபூர்வமான காரியங்கள் என்ன நடைபெற்றிருக்கின்றது?
உள்ளுக்குள் இருந்து சீர்செய்வதற்கு முயற்சித்திருந்தால், இன்றைய வேண்டாத பிரிவினைகள், பிளவுகள் நிகழ்ந்திருக்காது. கடந்தவை கடந்தவைதான். தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சி, கூட்டமைப்புடன் கைகோர்த்து இருப்பது, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அரசியல் செல்நெறியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நம்பலாம்.
Average Rating