சுருங்கும் ஜனநாயக இடைவெளி !! (கட்டுரை)
கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் அவதானிப்பைப் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கிறது. இலங்கை, மெதுமெதுவாகத் தனது ஜனநாயக இடைவெளியை இழந்து வருகிறது. இப்போதைய கொவிட் 19 பெருந்தொற்று, அதற்கு வாய்ப்பாகியுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் அச்சத்தை விதைக்கின்றன. மறுபுறம், இலங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
அண்மைய நிகழ்வுகள் சில, முக்கியமான செய்திகளை எமக்குச் சொல்கின்றன. அவற்றில் பிரதானமானது, இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதாகும். குறிப்பாக, தமிழர்கள் சுருங்குகின்ற ஜனநாயக இடைவெளியை எதிர்த்துப் போராடுவது எப்படி, எமக்கான ஜனநாயக இடைவெளிகளைத் தக்கவைப்பது எப்படி? போன்ற கேள்விகள் பிரதானமானவை.
பேரினவாதம் இப்போது சிங்கள மக்களின் அரசியலில், குறிப்பாகப் படித்த நடுத்தர வர்க்கத்தினரில் கணிசமானோரிடையே, ஆழ வேரூன்றியுள்ளது. சாதாரண சிங்கள மக்கள் ‘தமிழ்ப் பயங்கரவாதத்திடமிருந்து தேசத்தைக் காத்த தலைவர்’ என்ற மயக்கத்தினின்று மீண்டபோதும், அவர்கள் இன்னமும், காரணத்துடன் சிலவும் காரணமின்றிச் சிலவு மாக, அச்சங்களுடன் உள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுத் தளம், அந்த அச்சமே. சிங்களப் பேரினவாதத்தை அஞ்சியே முற்கூறிய நடத்தைகள் அமைந்தன எனலாம்.
சிங்கள மக்களின் நியாயமற்ற அச்சங்களைப் போக்கும் அக்கறை, தமிழ்த் தலைவர்களுக்கு வேண்டும். ஆனால் அது, என்றும் இருந்ததில்லை. இதுவரை, தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய சிங்களத் தலைவர்களைத் தமிழ் மக்கள் நெருங்காதவாறு, எல்லாச் சிங்களவர்களையும் எதிரிகளாக நோக்கும் மனநிலையைத் தமிழரிடையே ஊக்குவித்தனர். ஏனெனில், தேசியப் பிரச்சினையின் தொடர்ச்சி, தேர்தல் அரசியலுக்குப் பயனுள்ளது. ஆயினும், குறிப்பாகத் தமிழ் மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு உகந்த சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் இரகசிய உறவுகளை அவர்கள் என்றும் பேணிவந்துள்ளனர்.
சிங்கள மக்களின் நியாயமான அச்சங்கள், போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் இனக் குரோதப் பயங்கரவாதத்தையும் பின்னர் தமிழ்த் தலைமைகள் எடுத்ததற்கெல்லாம் இந்திய, அமெரிக்க, ஐ.நா., சர்வதேசக் குறுக்கீடுகளை, அவை அசாத்தியமானவையாயினும் விடாது வேண்டுவதையும் பற்றியன. 1987இல், இந்திய இராணுவக் குறுக்கீட்டால் அதிக நட்டப்பட்டோர் தமிழராயினும், ஓர் அந்நியப் படை நாட்டில் கால்பதித்த நினைவு, பெரும்பாலான சிங்களவர்களை வாட்டுகிறது. இவ்வாறான நியாயமான அச்சங்களைப் போக்குதற்குப் பதிலாக, வளர்க்கும் விதமாகவே தமிழ்த் தலைமைகள் நடந்துள்ளன.
‘சிங்களவரை நம்ப இயலாது’ என்ற எண்ணத்துடன் தொடங்கின், தமிழ் மக்களுக்குள்ள தெரிவு, ஒன்றில் தாமே போராடி உரிமைகளை வெல்வது அல்லது அந்நிய நாடெதையும் நம்புவது. இந்தப் போக்கிற்காக, 2009இல் தமிழ் மக்கள் கொடுத்த விலை பெரிது. மேற்குலகு ராஜபக்ஷ ஆட்சியை மிரட்டப் பாவித்த ‘சர்வதேச விசாரணை’ என்ற ஆயுதத்தால் இனிப் பயனில்லை என்பது, இப்போதாவது எமக்கு விளங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இப்போது தேர்தலின் பெயரால் திருவிழாக்களும் நாடகங்களும் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன. தேர்தல்கள், அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரா என்பது வரலாறு கூறும் பாடம். இலங்கையில் நமது அனுபவம் அதை உறுதிப்படுத்துகிறது. ஆயினும், நமக்குள் இருக்கும் ஒரு சூதாடி மனநிலை, தேர்தல்களை நம்பத் தூண்டுகிறது. மீண்டும் மீண்டும் தோற்ற ஒரு சூதாடியைப் போல, நாம் அற்ப வெற்றிகளில் மயங்கி, புத்தியான புதுவழி தேடாமல், தொடர்ந்தும் தேர்தல் அரசியல் சூதாடுகிறோம்.
அடுத்த தேர்தலின் பின் அமைவது எந்த ஆட்சியானாலும், அதில் பேரினவாதிகளின் கை ஓங்கியிருக்கும் என்பது உறுதி. எனவே, தமிழரும் முஸ்லிம்களும், மலையகத் தமிழரும், புதிய அரசியல் பாதையொன்றைப் பற்றி இப்போதே சிந்திப்பது தகும். இன்றைய காலகட்டத்தில், முற்போக்கு ஜனநாயகச் சக்திகளின் கூட்டிணைவான போராட்டமே, எமது ஜனநாயக இடைவெளியைக் காக்க அவசியமானதும் அவசரமானதுமாகும்.
Average Rating