தம் தலையில் தாமே மண்ணைப் போடும் வாக்காளர்கள் !! (கட்டுரை)
தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட, தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் மூண்டு, சில வருடங்களில் அதாவது, 1984 ஆம் ஆண்டு, கிழக்கில் கல்முனைக்குடியில் 35 தமிழ் இளைஞர்கள் உயிரோடு புதைக்கப்பட்டனர் என்று, அக்காலத்தில் கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவர் கூறியிருந்தார்.
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின், கலவானைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற சரத் முத்தெட்டுவேகம, அதேநாள்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போது, இதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
உடனே குறுக்கிட்ட, அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, ”அது உண்மைக்குப் புறம்பான செய்தி” எனக் கூறினார்.
”நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால், நான் மகிழ்ச்சியடைவேன். அச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். அச்செய்தி உண்மையாக இருந்தால், எனது இனத்தைச் சேர்ந்தவர்கள் இப்படியும் செய்கிறார்கள் என்று வெட்கப்படுவேன்” என, சரத் முத்தெட்டுவேகம கூறினார்.
இச்செய்தி பொய்யானதெனப் பின்னர் தெரிய வந்தது. அத்துலத்முதலி இதைக் குறிப்பிட்டதற்காக, முத்தெட்டுவேகமவைத் துரோகி என்றோ, தமிழர்களின் அடிவருடி என்றோ கூறவில்லை. முத்தெட்டுவேகமவும் தமது கருத்தில், பிடிவாதமாக இருக்கவில்லை. தாம் கூறியதை, எவ்வாறோ உறுதிப்படுத்த முயலவும் இல்லை. ஆனால், அது உண்மையாக இருந்தால், பெரும்பான்மை மக்கள் எவ்வாறு அதை அணுக வேண்டும் என்பதை, மிகச் சிறப்பாக உணர்த்தும் வகையில் உரையாற்றினார்.
மற்றொரு நாள், அரசமைப்புத்துறை முன்னாள் அமைச்சர் கே.என். சொக்சி, நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ”நான் சற்றுக் குறுக்கிடலாமா” எனக் கேட்டவராக எழுந்தார். சொக்சி, தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அஷ்ரப், சொக்சியின் உரையோடு சம்பந்தப்பட்ட சில விடயங்களைக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.
சொக்சி மீண்டும், தமது உரையைத் தொடர்ந்தார். சில நிமிடங்களில், அஷ்ரப் மீண்டும் அனுமதி கேட்டவாறு எழுந்தார். சொக்சி, மீண்டும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறு அஷ்ரப், பல முறை சொக்சியின் நேரத்தைப் பாவித்து, அவரது கருத்துகளை ஏற்றும் மறுத்தும் கருத்துத் தெரிவித்த போதிலும், சொக்சி அதற்கு இடம் கொடுத்தார். அதேவேளை, அஷ்ரபின் சில கருத்துகளை ஏற்றும் சிலவற்றை மறுத்தும், தமது உரையைத் தொடர்ந்தார். அங்கே, கூச்சல் இருக்கவில்லை; கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கவில்லை. இருவருக்கும் இடையில் திட்டுதல், மிரட்டுதல், பரிகசித்தல் என, எதுவும் காணக்கூடியதாக இருக்கவில்லை.
அவர்கள் ஒருவரை ஒருவர் மதித்தவாறே, இந்த உரையாடலில் ஈடுபட்டனர். சொக்சியின் உரை வளம் பெறும் வகையில், அஷ்ரப் கருத்துகளைத் தெரிவித்தார். சொக்சி, தமது உரை வளம் பெறுவதற்காக, அஷ்ரபின் கருத்துகளையும் பயன்படுத்தினார்.
அக்காலத்திலும் நாடாளுமன்றத்தில், கூச்சல் குழப்பங்கள் இடம்பெற்றன. ஆனால், அவற்றுக்கிடையே, இவ்வாறான கனவான் அரசியலையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும், கடந்த 20 ஆண்டுகளில், இது போன்ற கனவான் அரசியல் பண்புகள் வெளிப்படும் வகையிலான சம்பவங்கள், இடம்பெற்றதாக நினைவுக்கு வரவேயில்லை.
இப்போது, நாடாளுமன்றத்தில் ஒருவர் பேசும் போது, மற்றைய கட்சிக்காரர்களுக்கு அது பிடிக்காததாக இருந்தால், அங்கு கூச்சல்களைத் தான் கேட்க முடிகிறது. கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், படித்தவர்கள் என்று கூறப்படும் உறுப்பினர்களும் இன்று இல்லை.
கடந்த வாரம், ‘கோப்’ எனப்படும் அரச நிறுவனங்களுக்கான குழுவின் முன்னாள் தவிசாளரும் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டி.யூ குணசேகர, கடந்த நாடாளுமன்றத்தைப் பற்றித் தெரிவித்த கருத்து, மிக முக்கியமானதாகும். ”நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு விடயங்களில் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்” என அவர் கூறினார். சட்டம் இயற்றல், கொள்கை வகுத்தல், நிதி மேற்பார்வை, மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தல் என்பவையே, அவர் குறிப்பிட்ட நான்கு பொறுப்புகளுமாகும்.
கடந்த நாடாளுமன்றத்தில், இந்தப் பொறுப்புகளை விளங்கிக்கொண்ட ஒரு சிலரே இருந்ததாகவும் சிலர், தாம் தெரிவு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினராக ஓய்வு பெறும் வரை, நாடாளுமன்றத்தில் ஒரு முறையாவது உரையாற்றாதவர்களும் இருந்தனர் என்றும், அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு, ஊமையாக இருந்தவர்களில் சிலர், தமது மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றும் டி.யூ குணசேகர தெரிவித்தார். அதாவது, அந்த உறுப்பினரின் மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள், அவரைத் தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மக்கள் ஒப்படைத்த பொறுப்பை, அவர் நிறைவேற்றவில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பொறுப்புகளில் ஒன்றையேனும் அவர் நிறைவேற்றவில்லை.
கடந்த நாடாளுமன்றத்தைப் பற்றி, டி.யூ குணசேகர கருத்துத் தெரிவிப்பதற்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி சொய்சா, இது போன்ற சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவித்த அவர், ” நாடாளுமன்றத்தில், 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலாவது சித்தி அடையாதவர்கள்” எனக் கூறினார்.
‘வெரிட்டெ ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து வெளியிடும் manthri.lk என்றதோர் இணையத்தளம் இருக்கிறது. அந்த இணையத்தளத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டம், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் படி, ‘கடந்த நாடாளுமன்றத்தில், 225 உறுப்பினர்களில் 102 பேர், குடும்ப உறவின் அடிப்படை காரணமாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதாவது, அவர்கள் முன்னைய உறுப்பினர்களின் உறவினர்கள் என்பதே, வாக்காளர்கள் அவர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதான காரணமாகும். இந்த 102 பேரில், 80 பேர் அரசியல்வாதிகளால் ‘மோசமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள்’ ஆவார்கள்’ எனவும், அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது.
டி.யூ குணசேகரவும் பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி சொய்சாவும் manthri.lk இணையத்தளமும், கடந்த நாடாளுமன்றத்தைப் பற்றி இவ்வாறு கூறியதன் அர்த்தம், அதற்கு முன்னைய நாடாளுமன்றங்களின் தரம் அதை விட உயர்ந்தது என்பதல்ல. அவற்றின் நிலையும், இதற்குச் சமமாகும். ஆயினும், 2000 ஆவது ஆண்டு வரை தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில், அதற்குப் பின்னரான நாடாளுமன்றங்களில் இருந்ததை விட, புத்திஜீவிகளும் பண்பானவர்களும் கூடுதலாக இருந்தனர்.
ஜனநாயக மரபின்படி, படித்தவர்கள் மட்டும்தான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் எனக் கூற முடியாது. ஆனால், ஏட்டுச் சான்றிதழ்களைப் பெறாவிட்டாலும், தொழிற்சங்க நடவடிக்கைகள் போன்ற சமூக நடவடிக்கைகள் மூலம், தமது திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். மக்கள் அவர்களைத் தெரிவு செய்திருந்தார்கள். உதாரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த எம்.எஸ் செல்லச்சாமி அவ்வாறானவர்தான்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா, ஜே.ஆர் ஜெயவர்தன, டி.பி ஜாயா, பீட்டர் கெனமன், எஸ். நடேசன், அ. அமிர்தலிங்கம், ஜி.ஜி பொன்னம்பலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம், சரத் முத்தெட்டுவேகம, லலித் அத்துலத்முதலி, எம்.எச்.எம் அஷ்ரப், பேர்னாட் சொய்சா, டொக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க போன்றவர்களின் ஆழுமைச்செறிவு மிக்க உரைகளைக் கேட்கும் பாக்கியத்தைத் தற்போதைய இளம் தலைமுறையினர் பெறவில்லை. இவர்களது அனைத்துக் கொள்கைகளையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இவர்களது முதிர்ச்சியையும் அரசியல் நாகரிகத்தையும்; எவராலும் மறுக்க முடியாது.
இன்றும் நாடாளுமன்றத்துக்குப் படித்தவர்கள், பண்பானவர்கள் தெரிவு செய்யப்படாமல் இல்லை. ஆனால், இப்போது தெரிவு செய்யப்படுவோர், ஏனோ அந்த ஜாம்பவான்களைப் போலில்லை. இதற்குப் பொதுமக்களே, பொறுப்பை ஏற்க வேண்டும்.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களாக எவரை நியமித்தாலும், மக்கள் பொறுப்போடு செயற்படுவோரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால், மக்கள் தமது பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
‘ஹெஜிங்’ மோசடி, விமானக் கொள்வனவு மோசடி, ‘கிரீக்’ பிணைமுறி மோசடி எனப் பல்லாயிரம் கோடி ரூபாய், மக்களின் பணத்தை மோசடி செய்ததாக மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குற்றஞ்சாட்டப்பட்ட போது, அவரது கட்சியை ஆதரிக்கும் மக்கள், அவற்றால் தாம் எவ்வாறு பாதிக்கப்படப் போகிறோம் என்பதைச் சிந்திக்காமல், அவற்றைப் பொய்க் குற்றச்சாட்டுகளாக நிராகரிக்கும் வழிகளையே தேடினர்.
அதேபோல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது, பல விடயங்கள் அம்பலமாகியும் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள், அதனால் தாம் பங்களிப்புச் செய்யும் ஊழியர் சேமலாப நிதியம் பாதிக்கப்படுமா என்பதையாவது சிந்திக்காமல், அந்த ஊழலை மூடி மறைக்க முயன்றனர்.
‘கடந்த கால நடத்தை, நன்னடத்தை, சட்டத்தை மதித்தல், நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்படாமை, சமூகத்துக்குச் சேவை செய்வதில் செய்யும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், வேட்பாளர்களை நியமிக்க வேண்டும்’ என்று, தேர்தல் ஆணைக்குழு, தமது நடத்தைக் கோவை மூலம், அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், கட்சிகள் அந்த நடத்தைக் கோவையைப் புறக்கணித்தே, வேட்பாளர்களை நியமித்துள்ளன. வாக்காளர்களும், கடந்த காலத்தை மறந்தே வாக்களிக்கப் போகிறார்கள்.
manthri.lk இணையத்தளத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அக்கட்சியைச் சேர்ந்த பிமல் ரத்னாயக்க, டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரே, கடந்த நாடாளுமன்றத்தின் எம். பிக்களின் தர வரிசையில், முதல் மூன்று இடத்தைப் பெற்றிருக்கின்றனர். அக்கட்சியைச் சேர்ந்த விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி, நிஹால் கலப்பத்தி ஆகியோரும் அந்தத் தர வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள். ஆனால், மக்கள் அக்கட்சிக்கு வாக்களிப்பதில்லை.
கடந்த நாடாளுமன்றத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், தற்போதைய நிலையில், அவர்களில் ஒருவரேனும் இம்முறை தேர்தலில் தெரிவாவார்களா என்பது சந்தேகமே. அவ்வாறு, தெரிவாகாவிட்டால், அது நாட்டுக்கே இழப்பாகும் ஏனெனில், அக்கட்சியினர் நாட்டை ஆட்சி செய்யாவிட்டாலும், ஊழல்களை அம்பலப்படுத்துவதில் முன்னணியில் இருந்தனர். அச்சமின்றிச் சிறந்ததொரு நெருக்குதல் வழங்கும் குழுவாக (Pressure group) கடமையாற்றினர்.
அனேகமாக, தேர்தல் ஆணைக்குழுவின் நடத்தைக் கோவையில் கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்கு மாறாகவே, மக்களின் தெரிவு அமைகிறது. கம்பஹா மாவட்ட மக்கள், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மேர்வின் சில்வாவுக்கு 150,000 வாக்குகளை அளித்து, அவரைத் தெரிவு செய்தனர். அதே தேர்தலின் போது, அம்மாவட்ட ஐ.தே.க வேட்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு அளித்ததை விட, இளம் நடிகையான ‘பபா’ என்றழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலிக்குக் கூடுதல் வாக்குகளை அளித்தனர்.
அந்தத் தேர்தலில், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரரான சனத் ஜயசூரிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றார். நிச்சமாக அவர், அம் மாவட்டத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதியல்ல.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த பிரேமலால் ஜயசேகர, சிறையிலிருந்தவாறே வேட்பு மனுத் தாக்கல் செய்து, அக் கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.
மலேசியத் தூதுவராக இருந்த ரோஸி சேனாநாயக்க தோல்வியடைந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில், அதே கட்சியில் போட்டியிட்ட புதிய வேட்பாளர் ஹிருனிக்கா பிரேமசந்திர வெற்றி பெற்றார்.
இது தான், மக்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இலட்சணம். கட்சிகளைத் தெரிவு செய்யும் போதும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போதும், தாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது; படித்தவர்களுக்கும் தெரியாது; படிக்காதவர்களுக்கும் தெரியாது. ஊடகங்களே, அவர்களை இந்த நிலைக்கு வழிநடத்துகின்றன.
ஊடகங்களும் பெரும்பாலான ஊடகவியலாளர்களும் அரசியல் மயமாகி உள்ளனர். எனவே, தமது வாக்கு, தமது தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதை, மக்கள் ஒருபோதும் உணர மாட்டார்கள் போலும்!
Average Rating