விதவிதமாய் ஹோம்மேட் சாக்லெட்… மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
பெரிய அளவில் முதலீடு தேவைப்படாத, அதேநேரத்தில் மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, நிரந்தர வருமானத்தை தரக்கூடிய தொழில்தான் ஹோம்மேட் சாக்லெட் தயாரிப்பு தொழில். சிறியவர் முதல் பெரியவர் வரை சாக்லெட்டை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள்.
அதனால் எந்த சீசனிலும் லாபகரமான தொழில் என்பதால், பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். இனிப்போடு மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் இத்தொழிலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சைதாப்பேட்டையில் ராயல் டிரீம் சாக்லெட்ஸ் (Royal Dream Chocolates) என்ற பெயரில் நிர்வகித்து வரும் ரஞ்சனி நம்மிடம் பகிர்ந்து கொண்டவற்றைப் பார்ப்போம்…
‘‘வீட்டில் சாக்லெட் தயாரிப்பு தொழில் செய்வது என்பதற்கு பெரிய அளவிலான முதலீடு தேவையில்லை. நமது வீட்டு சமையலறை போதுமானது. இந்த சாக்லெட் தயாரிப்பைப் பொறுத்தவரை தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம், சாக்லெட் கலவை செய்ய ஒரு பாத்திரம் மற்றும் சாக்லெட் வடிவமைப்புக்கான மோல்டுகள், பேக்கிங் பேப்பர் அவ்வளவு தான்.
சாக்லெட் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால், டார்க் சாக்லெட் பார், மில்க் சாக்லெட் பார், வைட் சாக்லெட் பார், முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் மற்றும் ட்ரை ஃப்ரூட், ஹாசில் நட் என நம் விருப்பத்திற்கு தேவையான பொருட்கள். இவையெல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயிலும், அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயிலும் வாங்கிக்கொள்ளலாம்’’ என்றவர் இத்தொழிலுக்கு வந்தது பற்றி பேசினார்.‘‘குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான இனிப்பு வகையை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறியதாக வீட்டில் சாக்லெட் தயாரிக்க ஆரம்பித்தேன்.
ஏனெனில், வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லெட்டில் எந்தவித ரசாயன கலவைகளும் சேர்க்கப்படுவதில்லை. அதனால், இந்த சாக்லெட்டுகளை மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். முதலில் சாக்லெட் செய்து எங்கள் வீட்டில் உபயோகப்படுத்துவது மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் என தெரிந்தவர்களுக்குக் கொடுத்தோம். அவர்கள் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு நன்றாகயிருக்கிறதே என தங்களுக்கு செய்துகொடுக்கும்படி கேட்டனர். அப்போது தான் இதையே ஏன் ஒரு தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது.
பொதுவாக சாக்லெட் மோல்டுகள் என்றால் கடையில் ஒரு குறிப்பிட்ட சில வடிவங்கள்தான் கிடைக்கும். எனக்கு அதே போல் செய்ய விருப்பமில்லை. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைச்சேன். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், நாம் தனிப்பட்டு இருந்தால் தான் தொழிலைச் சிறப்பாக செய்ய முடியும்என நினைத்து சாக்லெட் வடிவமைப்பு பயிற்சி பெற்றேன். திருமணம், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்களுக்கு கொடுக்கப்படும் பூங்கொத்தில் சாக்லெட்டுகளை இணைத்தும், பூங்கொத்து போல் வடிவமைத்தும் கொடுக்க ஆரம்பித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பூங்கொத்து சாக்லெட்களோடு நின்றுவிடாமல், இன்னும் வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்தபோது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விழாக்களுக்கும் அது சம்பந்தப்பட்ட வடிவங்களில் சாக்லெட் தயாரித்தால் நன்றாகயிருக்குமே எனத் தோன்றியது. அதன்படி புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, காதலர் தினம் என அந்தந்த நாட்களின் சிறப்புகளுக்கு ஏற்ற வடிவங்களில் சாக்லெட் தயாரித்து கொடுத்து வருகிறேன். தீபாவளி என்றால் என்னென்ன வடிவங்களிலெல்லாம் பட்டாசு இருக்குமோ அதே வடிவங்களில் சாக்லெட் இருக்கும். காதலர் தினம் என்றால் ரோஜாவும், இதயமும் வடிவம் பெறும். பொங்கல் என்றால் பானை, கரும்பு இப்படி எண்ணற்ற வடிவங்களில் விதவிதமாக வடிவமைக்கிறோம்’’ என்றவர் வாடிக்கையாளர்கள் எப்படி வருகிறார்கள் என்பது குறித்து பேசினார்.
‘‘நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தாலும், பொதுவெளியில் நம்மை அறிமுகப்படுத்தினால்தானே இன்னும் ஆர்டர்கள் நிறைய வரும் என்பதால், ஃபேஸ்புக்கில் சாக்லெட் குறிப்புகளும், வடிவங்களும் பதிவிட ஆரம்பித்தோம். அதன் மூலம் ஆர்டர்கள் வரத் தொடங்கியதும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவிட தொடங்கினோம்.
இன்றைக்கு ஆன்லைன் ஆர்டர்களே அதிகம் வருகின்றன. இவை தவிர ஆர்டர் கேட்கும் கம்பெனிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் சாக்லெட் கொடுத்து வருகிறோம். நானும் எனது மகள் நிவேதாவும் இந்தத் தொழிலை வீட்டிலிருந்தபடியே செய்வதால் செலவுகள் போக மாதத்திற்கு இருபதாயிரத்தை ஒரு நிரந்தர வருமானமாக பெற முடிகிறது. எனது மகள் நிவேதா அவள் படிக்கும் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் பஜார் நிகழ்ச்சியில் ஸ்டால் அமைப்பது வழக்கம்.
அதில் அவளுக்கு சிறந்த தொழில்முனைவோருக்கான விருது கிடைத்தது. மேலும் சீசனுக்கு ஏற்ப விற்பனை மாறுபடும் என்பதால், அதற்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். இந்த சாக்லெட் தயாரிப்பு தொழிலில் எனது கணவர் கணேஷ்குமாரும், தம்பி மனோஜும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்’’ என்றவர், சாக்ெலட் தயாரிப்பு குறித்து விளக்கினார்.
‘‘சாக்ெலட் தயாரிப்பு பொறுத்தவரை தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். டார்க் சாக்லெட் பார், பிரவுன் சாக்லெட் பார் இரண்டையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும். ட்ரை ஃப்ரூட்ஸும் நறுக்கவும். அல்லது நம்ம விருப்பத்திற்கு ஏற்ப என்ன வேண்டுமென்றாலும் சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அந்தப் பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்ெலட் பீஸ்களைக் கொட்டவும்.
கேஸ் ஸ்டவ்வின் தீயை ஒரே சூட்டில் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் சூடானது மேலிருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும். கீழ் வைக்கும் பாத்திரத்தைவிட, மேல் வைக்கும் பாத்திரம் பெரிதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்ெலட் உருக ஈசியாக இருக்கும். சாக்ெலட் கலவையைக் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
இல்லையென்றால் கெட்டியாக வாய்ப்புள்ளது. கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் குறைந்தால் ஊற்ற வேண்டும். சாக்ெலட் உருகி தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் எந்த வடிவத்தில் செய்யப்போகிறோமோ அந்த மோல்டில் உள்ள ட்ரே எடுத்து அதனுள் ஊற்றவேண்டும். ட்ரேயில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்ப வேண்டும்.
அதன்மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் போடவும். பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்ெலட் கலவையை ஊற்ற வேண்டும். இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் எடுத்தால் சுவையான ஹோம்மேட் சாக்லெட் தயார்.
தயாரித்த சாக்லெட்டுகளை எடுத்து சரிகை பேப்பரில் பேக்கிங் செய்து விற்பனைக்கு கொடுத்துவிடலாம். இதே சாக்ெலட் தயாரிப்பை பெரிய அளவில் செய்ய நினைத்தால் அதற்கான கருவிகள், இட வசதி, வேலை ஆட்கள் எல்லாம் கொண்டு தயார் செய்யலாம்.
பெரிய அளவில் சாக்ெலட் தயாரிப்பில் இறங்க பெரிய முதலீடு தேவைப்படும். அது அவரவர் தகுதியைப் பொறுத்தது. எந்த ஒரு பொருளையும் சந்தைப்படுத்தும் யுக்தியைத் தெரிந்துகொண்டால் தொழிலை சிறப்பாகச் செய்யலாம்.
இந்தத் தொழிலுக்கு அநேக இடங்களில் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. அதனால், நேரடி அனுபவ பயிற்சி பெற்ற பிறகு,இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்’’ என்றார் ரஞ்சனி கணேஷ்குமார்.
Average Rating