சமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 26 Second

இதுதான் என்றில்லாமல் எது நமக்கு விருப்பமோ அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பயம் இன்றி வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூரில் வசித்துவரும் திவ்யா. கடை அமைத்துதான் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலிருந்தே எந்த ஒரு தொழிலையும் செய்யலாம் என்பதற்கான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘திவ்யா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் என்ற சிறுதொழில் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்றால், நிறைய கிராஃப்ட் ஒர்க்ஸ் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலங்கள் மிக முக்கியமானது எனச் சொல்வேன். காரணம் அந்தக் காலங்களில்தான் நிறைய கற்றுக்கொள்ளமுடியும்.

இதுதான் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் நிறைய விஷயங்கள், அதாவது நியூரல் ஒர்க், பேப்ரிக் பெயின்டிங், ஃபேஷன் டிசைனிங், ஆரி ஒர்க், ஹேண்ட் எம்பிராய்டரி, புடவை எம்பிராய்டரி, வீட்டு உள்ளலங்காரம், குழந்தைகளுக்காகவே கிராஃப்ட் ஒர்க் என பல விஷயங்களை பயின்றேன். படிக்கும் காலத்தில் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கில்லை. என்னுடைய வீட்டை என் தேவைக்கு ஏற்ப கலை நுணுக்கங்களோடு அலங்காரம் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் என் மனதில் பதிந்திருந்தது.

அதாவது எனக்கு மட்டும் இல்லை என் அக்கா மற்றும் அம்மாவுக்கும் அவர்களின் வீட்டை நானே அலங்காரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்’’ என்றவர் முதலில் குழந்தைகளுக்கு இதனை சொல்லிக் கொடுத்துள்ளார்.

‘‘ஒரு பக்கம் நான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், அதை செயல்முறைப்படுத்தும் போது தான் அது முழுமையடையும். அந்த சமயம் தான் அம்மா ஒரு கடை திறந்திருந்தார்கள். அவர்களின் கடையில் நான் சின்ன சின்ன கலைப் பொருட்களை செய்து கொண்டு இருப்பேன்.

கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் இதைப் பார்த்து, தங்களின் குழந்தைக்கும் இதனை கற்றுக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. அவர்கள் கேட்கும் போது என்னால் மறுக்க முடியவில்லை. நமக்கு தெரிந்த விசயத்தை நாலுபேருக்கு சொல்லிக்கொடுக்கலாம் என்கிற மாதிரி குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இரண்டு குழந்தைகள் பிறகு நான்கானது அதன் பிறகு குழந்தைகள் மட்டும் இல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் கற்றுக் கொள்ள வரத்துவங்கினார்கள்.

நான் படிச்சது எல்லாமே பெண்கள் செய்யக்கூடிய கலை அம்சங்கள் தான். அதாவது சேலையில் பெயின்டிங் பண்ணுவது, ஆரி ஒர்க், ஹேண்ட் எம்பிராய்டரி, அவர்களுக்கான பிளவுஸை அவர்களே தைத்துக்கொள்வது இப்படி நிறைய விசயங்கள் என்னிடம் இருந்ததால் நிறைய பெண்கள் என்னிடம் கற்றுக்கொள்ள வர ஆரம்பிச்சாங்க’’ என்றவர் திருமணத்திற்கு பிறகு தான் தனக்கான ஒரு வேலையை தேர்வு செய்துள்ளார்.

‘‘இந்தக் காலக்கட்டத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. அவரின் வீடு சென்னை என்பதால், நான் சென்னையில் வந்து செட்டி
லாயிட்டேன். அந்த சமயத்தில் நமக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து நாம் ஏதாவது செய்ய வேண்டும், நேரத்தை வீணாகக் கழிக்கக்கூடாது என திட்டமிட்டேன். ஆனால் சென்னை எனக்கு புதுசு. பழக்கமில்லாத இடம். தனியாக வெளியே செல்வதும் கஷ்டமாக இருந்தது. அதனால் வீட்டில்
இருந்து கொண்டே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைச்சேன். அப்படித்தான் ஜுவல்லரி மேக்கிங், சில்க்திரட் ஜுவல்லரி, டெரகோட்டோ ஜுவல்லரி, இமிடேஷன் ஜுவல்லரி என செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய வேலைப்பாட்டினை முகநூலில் பதிவிட்டேன். அதைப் பார்த்து பலர் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. வெளியே அலைய வேண்டாம். நம்முடைய வேலை பிடிச்சிருந்தா, அவங்களே நம்மை தேடி வருவாங்க. சோஷியல் மீடியாவில் தொழில் செய்வதும் எனக்கு ஈஸியாக இருந்தது. ‘திவ்யா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ என முகநூல் பக்கத்தை துவங்கினேன். நான் செய்யும் கைவினைப்பொருட்கள் எல்லாவற்றையும் அதில் பதிவிடுவேன். அது தேவைப்படுபவர்கள் பார்த்து என்னிடம் விசாரிப்பார்கள். அதன் படி செய்து கொடுத்து வருகிறேன்.

ஒரு பக்கம் ஜுவல்லரி செய்து கொண்டு இருக்கும்போதே ஆரி ஒர்க்கையும் அறிமுகப்படுத்தினேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அதனையும் ஆர்டரின் பேரில் செய்து வருகிறேன். என்னுடைய வேலைப்பாட்டினை பார்த்து பலர் தங்களுக்கும் இதற்கான பயிற்சி அளிக்கும் படி கேட்டாங்க. தற்போது ஆரி ஒர்க்ஸ் பற்றி வகுப்பெடுத்து வருகிறேன்.

சென்னை மட்டும் இல்லாமல் ஹைதராபாத், ஒடிஷா போன்ற மாநிலங்களில் மட்டும் இல்லாமல் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், லங்கா என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரையில் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்து வருகின்றனர். என்னுடைய நோக்கமே வீட்டிலிருக்கும் எல்லா பெண்களும் அவர்களுடைய வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு, அவர்களுக்கான ஒரு வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதுதான்’’ என்றவர் வெளியே செல்ல முடியாத பெண்களுக்காகவே ஆன்லைன் பயிற்சியினை துவங்கிஉள்ளார்.

‘‘பெண்கள் குடும்பத்தலைவியாக இருக்கலாம் அல்லது வேலைக்கு செல்பவர்களாக இருக்கலாம். குழந்தைகள், வேலை இரண்டையும் பார்த்துக் கொண்டு அவர்களால் பயிற்சியும் எடுக்க நேரமிருக்காது. கற்றுக் கொள்ள செல்ல வேண்டிய இடமும் தூரமாக இருக்கும். ஆனால் ஆர்வம் மட்டும் அதிகமாக இருக்கும். அவர்களுக்காகவே தான் ஆன்லைன் வகுப்பை தொடங்கினேன். ஆன்லைன் வகுப்பில் ஆரி ஒர்க் என்பது மட்டுமல்லாமல், ஜுவல்லரி மேக்கிங், ஃபேஷன் டிசைனிங், பேப்ரிக் பெயின்டிங், சாரீஸில் ஒர்க் என அனைத்தும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். அவர்களே ஒரு தொழிலைத் தொடங்கும் அளவுக்கு பயிற்சி வழங்கி வருகிறேன்.

என்னதான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் அதை வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்ல தெரிந்து இருக்கணும். என்னிடம் பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை இது தான். அதாவது நாம் ஒரு பொருளை வெளியே வாங்கும் போது, அது தரமானதாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம், அதே தரத்துடன் தான் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் எல்லாரும் கவனமாக இருப்பது அவசியம். நம்முடைய பொருள் நேர்த்தியாக இருந்தால் தான், எந்த இடத்தில் தொழில் தொடங்கினாலும் வெற்றிபெற முடியும்’’ என்றவர் பெண்கள் அவர்களுக்குள் இருக்கும் திறமையை கண்டிப்பாக வெளியே கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

‘‘எல்லாரும் திறமைசாலிகள் தான். நம்மிடம் ஏதேனும் ஒரு திறமை ஒளிந்து இருக்கும். சிலர் அழகாக கோலம் போடுவாங்க. ருசியாச் சமைப்பாங்க, வீட்டை அழகாக அலங்காரம் செய்வாங்க. பெண்களில் 99% பேர் எந்த வேலைக் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக செய்வாங்க. அதை செய்ய சின்ன உந்துதல் தான் வேண்டும். அதாவது, நீ நன்றாக சமைக்கிறாய், வீட்டை உன்னைப் போல் அழகாக அலங்காரம் செய்ய முடியாது… இது போன்ற வார்த்தைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தும் போது, இன்னும் அதிக உத்வேகத்தோடு, ஈடுபாட்டோடு, வேலையைச் செய்வாங்க. அதை மனதில் வைத்துதான் நான் ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்துள்ளேன்.

அதில் பதிவிடும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துவதுதான் என் வேலையே. அவர்கள் சிறு தவறு செய்தாலும், மனம் நோகாதவாறு புரியவைப்பேன். நான் பெருமையாக நினைக்கக்கூடிய விஷயம், நான் சொல்லிக் கொடுத்த கலையால் இன்று பலரை தொழில்முனைவோரா உருவாக்கி இருக்கிறேன் என்பதுதான். சிறிய அளவில் தொழில் செய்தால் கூட மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை எளிதாக வருமானம் ஈட்டலாம். கலைகள் பல இருக்கின்றன. எவ்வளவு முடியுமோ அத்தனை கைத்தொழில்களையும் கற்றுக்கொள்ளுங்கள். நல்லதொரு ஆர்வமிக்க தேடலுள்ளவர்களாய் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போக முடியும்’’ என்றவர் சமூகவலைத்தளங்களில் தனக்கான ஒரு இடத்தை பதிவு
செய்துள்ளார்.

‘‘முகநூலில் மட்டும் இல்லாமல், ‘திவ்யா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்ஸ்’ என்ற பெயரில் யுடியூப் சேனலும் துவங்கி இருக்கேன். இது உலகளாவிய மீடியா. எல்லோரும் அதைக் கவனிக்கிறார்கள். அதில், என்னை மட்டுமே நான்கு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்த வேலையை மட்டும்தான் பதிவிட வேண்டும் என்றில்லாமல் எல்லா கைத்தொழில்களையும் அதில் பதிவிட்டு வருகிறேன். அதைப் பார்ப்பவர்கள் அதன் மூலம் கற்றுக் கொண்டு ஒரு தொழிலை துவங்கலாம். இன்றைய உலகத்தில் திறமை இருக்கும் இடத்தை தேடி எந்த மூலையில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். திறமையை வெளிக்கொண்டுவர வழிவகைகளும் நிறைய இருக்கின்றன’’ என்றார் திவ்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் !! (மருத்துவம்)
Next post பணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்!! (வீடியோ)