ப்ப்ப்ளம்ஸ்…!! (மருத்துவம்)
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் உணவுகளில் பழங்களுக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்பட பலவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை பழங்கள். அந்த வகையில் சுவைமிக்க ப்ளம்ஸ் பழத்தின் சீசன் இப்போது களைகட்டியுள்ளது. இதன் தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்…
* தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் ப்ளம்ஸை அதிகம் விளைவிக்கும் நாடாக சீனா முதலிடம் பெறுகிறது. அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம்.
* மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் ப்ளம்ஸில் மொத்தம் 2000 வகைகள் இருக்கின்றன.
* USDA national nutrient database ஆய்வின்படி அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது ப்ளம்ஸ். வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K ஆகிய சத்துகளும் வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி6 மற்றும் வைட்டமின் E சத்துகளும் நிறைந்துள்ளது.
* x 2 ஆயிரம் வகைகளைக் கொண்டதாக இருந்தாலும் European -Asian, Japanese, Damson என்று மூன்று வகைகளில் பொதுவாகப் பிரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
* ப்ளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்றும் Journal of obesity & therapeutics மருத்துவ இதழ் 2017-ம் ஆண்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.
* வைட்டமின் சி சத்து செறிந்த பழம் இது. எனவே, ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பதைப் போலவே அழகைப் பராமரிக்க உதவும் சரும நல மருத்துவராகவும் ப்ளம்ஸ் செயல்படுகிறது. குறிப்பாக சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், கருப்பாக ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்ன திட்டுக்களையும் சரி செய்கிறது. இதனாலேயே பல்வேறு சரும நலத் தயாரிப்புகளில் ப்ளம்ஸ் பழத்தின் எஸன்சை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
* மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக ப்ளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும். இதை பல ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.
* நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் வேலையை ப்ளம்ஸில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.
* ப்ளம்ஸ் பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்(Oxalate) சிறுநீரக் கோளாறு உடையவர்களுக்கும், பித்தப்பையில் பிரச்னை கொண்டவர்களுக்கும் அவர்களுடைய நோய்க்குறியை தீவிரமாக்கும். அதேபோல் சிலருக்கு அலர்ஜியையும் ப்ளம்ஸ் உண்டாக்கும். எனவே, இவர்கள் ப்ளம்ஸைத் தவிர்ப்பது நல்லது.
* நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்னை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு ப்ளம்ஸ் பிரச்னைகள் தீர்க்கும் அருமருந்து.
* வைட்டமின்கள் நிறைந்த பழம் என்பதைப் போலவே பொட்டாசியம், ஃப்ளூரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாமிரச்சத்துகள் கொண்டதாகவும்
விளங்குகிறது.
* உடலில் காயங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு, விரைவில் ஆற்றும் மருந்தாக ப்ளம்ஸில் உள்ள மருத்துவ குணம் அமைகிறது என்று Journals of medicial food என்ற அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
* இரும்புச்சத்து நிறைந்திருப்பதும், சீரான ரத்த ஓட்டமும் கூந்தல் வளர்ச்சிக்கான அடிப்படை மருத்துவக் காரணிகள். எனவே, ப்ளம்ஸ் கூந்தல் பிரச்னைகளை நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.
* ப்ளம்ஸ் எடுத்துக்கொள்பவர்களுக்கு முக்கியமாக இதில் உள்ள மினரல் சத்துகள் அதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த அணுக்களுக்கு துணையாக இருப்பதுடன் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணியையும் இப்பழம் செய்கிறது.
* ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் இருப்பதால் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் பழம் இது. கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் ப்ளம்ஸ் உதவுகிறது.
* எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது இங்கிலாந்தின் University of liverpool’s institiute of psychology.
* ‘புதிய வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள ப்ளம்ஸ் சாப்பிடுங்கள்’ என்கிறது
ஜப்பானின் Chubu university. குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸைத் தடுக்கும் வல்லமை இப்பழத்துக்கு அதிகமாம்.
* சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும் நண்பன் ப்ளம்ஸ். இதில் போதுமான இரும்புச்சத்து இருப்பதால் ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் உணவில் இருக்கும் இரும்புச்சத்துக்களைக் கிரகிக்கும் திறனையும் உடலுக்கு வழங்குகிறது.
* பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகள் எலும்புகளின் நலனுக்கு ப்ளம்ஸ் சிறந்த உணவு என்று உறுதி செய்திருக்கின்றன. ப்ளம்ஸில் இருக்கும் Boron என்ற வேதிப்பொருள் எலும்பின் அடர்த்தியைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஃப்ளேவனாய்டுகள் மற்றும் ஃபினோலிக் காம்பவுண்டுகள்(phenolic compounds) எலும்புகள் சேதமடைவதிலிருந்தும் தடுக்கிறது.
எல்லா வகையிலும் இப்படி நற்குணங்கள் படைத்த ப்ளம்ஸை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ எடுத்துக்கொள்ளுங்கள்!
Average Rating