தேர்தல் மனோநிலை !! (கட்டுரை)

Read Time:19 Minute, 33 Second

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையும் சிக்கித் தவித்திருந்தாலும், தற்போது தன்னைக் கம்பீரம் மிக்க நாடாகக் காட்டிக்கொள்ள எத்தனிப்பதாகத் தோன்றுகின்றது.

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், இலங்கை ஜனநாயகப் போராட்டத்துக்குள் செல்ல முயற்சிக்கின்ற நிலையில், எப்போது தேர்தல் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்துள்ளது.

எனினும், இந்தத் தேர்தலை மக்கள் இயல்பான மனநிலையுடன் எதிர்கொள்வார்களா என்ற சந்தேகம் காணப்பட்டாலும் கூட, சுகாதார அமைச்சினது ஆலோசனையின் பிரகாரம், தேர்தல் ஆணையாளர் மிகவிரைவில் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இச்சூழலில், வேட்பாளர்களின் செயற்பாடுகளால், வாக்காளர்களின் மனோபாவம், ஆதரவுத்தளம் எந்தளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை, ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது.
வடபகுதி அரசியல் என்பது, மக்களின் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், அரசியல்வாதிகள் களம் காண வேண்டிய தளமாகவே காணப்படுகின்றது. அதற்குப் பல்வேறான காரணங்களைக் கூறிக்கொள்ள முடியும்.

முக்கியமாக, நீண்ட காலமாக யுத்த மனோநிலையில் இருந்த மக்களுக்கு, இதுவரையில் வாழ்வாதாரம், நிம்மதியான வாழ்க்கைக்கான தேவைகள், முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை.

நீண்ட காலக் கோரிக்கையாக இருந்துவரும், இனநெருக்கடிக்கான அரசியல் ரீதியான தீர்வு, இதுவரையும் காணப்படாமல், மாறிமாறி ஏமாற்றப்படும் மக்களின் மனங்கள், மீண்டும் ஒரு தேர்தலில் வேட்பாளர்களை எதிர்கொள்ளத் தாயாரற்ற நிலையிலேயே உள்ளன.

முன்னாள் போராளிகளின் வாழ்க்கை நிலையை மாற்றியமைக்க, ஏதுவான திட்டமிடலின்றிப் பொழுதைப்போக்கும் அரசியல் தலைமைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் ஆதரவான போக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இதுமட்டுமல்ல, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நியாயமான தீர்வு, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து, தினக்கூலியையே நம்பி வாழ்க்கை நடத்திய மக்களின் வாழ்வாதாரம் போன்றவை தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்ட மக்கள் மத்தியில், பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்துப் பாரிய எதிர்ப்பலைகளே உருவாக்கம் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழலில், ‘இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன’ என்ற மனோபாவத்துடனேயே, மக்கள் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
எதுஎவ்வாறு இருந்தபோதிலும், முக்கியமாக மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தமது ஜனநாயக உரிமையாகிய, தேர்தலின்போது வாக்களிப்பதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், மக்களுக்கு விரோதமானவர்களும் அதிகாரம் பெற்றுவிடுவார்கள் என்பதை மக்கள் உணரத்தலைப்பட வேண்டும்.

இவ்வாறான காலச்சூழலில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, வடபுலத்தில் பலமுனைப்போட்டி இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு காரணமாகவும் அதன் தலைமைகள் மீதான கோபத்தாலும், கூட்டமைப்பிலிருந்து பிளவுபட்ட கட்சிகளும் தனிநபர்களும் இன்று, தனித்துப் போட்டியிடும் நிலைக்குச் சென்றுள்ளனர்.

வடபுலத்தைப் பொறுத்தவரையில், இரண்டு தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகிய காணப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் வாக்குச் சிதறல்கள், வன்னித் தேர்தல் தொகுதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லனவாக உள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பாரிய முரண் நிலைக்குச் செல்லாத நிலையில், பெற்றுக்கொண்ட ஆசனங்கள் 16ஆக இருந்தன. ஆனால், தற்போதைய நிலைமையில் அதன் பிரதிநிதித்துவம் சரிவைக் காணும் என்ற தேர்தல் அலை பரவலாகவே காணப்படுகின்றது.

இதற்கும் அப்பால், வன்னித் தேர்தல் தொகுதியில், கடந்த முறை இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்ற நிலையில், இம்முறை அதில் ஒன்றை, சிங்களப் பிரதிநிதித்துவம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம், சிங்கள மக்கள் மத்தியில் வீரியம் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சிங்கள மக்கள் தமக்கான பிரதிநிதித்துவத்தை, வன்னித் தேர்தல் தொகுதியில் பெற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது சுமார் 18 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தாம், ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, முனைப்புக் காட்டி நிற்கின்றனர்.

இந்தப் பிரதிநிதித்துவமானது பொதுஜன பெரமுனவினூடாகப் பெறவேண்டும் என்ற சிந்தனை, ஆளும் கட்சியிடம் காணப்படும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கும் சிங்கள வேட்பாளர்களுக்குமான போட்டி, பொதுஜன பெரமுனவுக்குள் ஆரம்பித்துள்ளது.

இதேபோன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள், நபர்கள் இணைந்து உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஓராசனத்துக்கான போட்டி, வன்னித் தேர்தல் களத்தில் இருக்கின்றது.

இதற்கும் அப்பால், மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிந்து, பல கட்சிகள் தமக்கான சந்தர்ப்பமாகக் கருதி, தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர். இதன் பிரகாரம், கொழும்பில் அரசியல் செய்துவந்த பிரபா கணேசன் போன்றவர்கள், வன்னி அரசியல் களத்தில் தற்போது காணப்படுகின்றனர்.

இந்திய வம்சாவழித் தமிழர்களை இலக்காகக் கொண்டு, தமது பிரசன்னத்தை ஏற்படுத்திய பிரபா கணேசன் போன்றவர்களும் வரதராஜப் பெருமாள் தலைமையில் போட்டியிடுகின்ற சிறிடெலோ கட்சியினரும் தமக்கான பிரதிநிதித்துவம் கிடைத்து விடும் என்ற, மாய கோட்டைக்குள் தேர்தலை எதிர்கொள்வதானது, தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்குமே தவிர வேறெதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அப்பால் வன்னியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ள நிலையில், இதுவரை செயற்படுத்தப்படாது காணப்பட்ட பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறிவருகின்றது.
எது எவ்வாறாயினும், அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள், எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டில் இருந்தார்களோ, அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பேரிடர் தாக்கத்தால், தேர்தலை எதிர்கொள்ளும் மனோ நிலையில் மக்கள் இல்லாமையும் இந்நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில், மிகவும் முக்கியமான தேர்தலாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தல், தென்னிலங்கையில் பாரிய முரண்பாடான நிலையிலேயே நடந்தேறும் என்பது மறுப்பதற்கில்லை.

ஏனெனில், இம்முறை தேர்தல் பிரசார செயற்பாடுகள், சுகாதார விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெற வேண்டிய நிலையில், பிரசார கூட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக முறைப்பாடுகளைப் பதிய வாய்ப்புள்ளது.

இதற்கும் அப்பால், ஐக்கிய தேசிய கட்சியானது இரண்டாகிப் போயுள்ள நிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடான நிலைமைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கப்போகும் கட்சியானது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, முகம்கொடுக்கும் வல்லமையுடன் காணப்பட வேண்டும் என்பதே உண்மை.

ஆகவே, தென்னிலங்கை அரசியல், குழப்பகரமானதாக இருக்கும் நிலையில், தமிழர் தரப்பு அரசியல், எவ்வாறான சூழலுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளப்போகின்றது என்ற கேள்வி உள்ளது.

ஏனெனில், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களாக, மேற்சொன்ன வாழ்வாதாரம், அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான ஆக்கபூர்வமான தீர்வு போன்றவற்றுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை, தமிழ் மக்களால்த் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

எனவே, தொடர்ச்சியாக எதிர்ப்பரசியலையும் எதையும் அரசாங்கத்திடம் இருந்து பெறமாட்டோம் என்ற விறுமாப்புடன் இருப்பதானதும், இந்தப் கோரிக்கைகளை நிறைவேற்ற வழிசமைக்குமா என்பது ஆராயப்பட வேண்டும்.

மத்தியில் அமையப்போகும் அரசிடமிருந்தே தமிழர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையுள்ள போது, அதை ஒதுக்கி வைத்து விட்டு, வடக்கு, கிழக்கில் மாத்திரம் தனித்து அரசியலைச் செய்து காட்டிவிட முடியாது என்பது, பலரது கருத்தாக இருக்கிறது.இந்நிலையில், இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகப்போகும் தமிழ்ப்; பிரதிநிதிகள், இவ்வாறான நிலைமைகளைப் புரிந்து செயற்படக் கூடியவர்களாக இருப்பார்களா என்பதை, மக்களே எடைபோட வேண்டும்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த சில மாதங்களிலேயே, மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்படுகின்றது. இதன் ஒரு சமிக்ஞையாகவே, ‘மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமாயின், மார்கழி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்’ என்ற கருத்தை, மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

ஆக, 2020ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டாக இருக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, கடன் சுமைக்குள் தள்ளப்பட்டு வரும் காலச்சூழலில், தனிநபர் வருமான வீழ்ச்சியும் அதிகரிப்பதை, இலங்கையால் தவிர்த்துவிட முடியாது.

இதன் தாக்கத்தை, அரசியல்வாதிகளிலேயே மக்கள் காட்டுவார்கள். எனவே, மக்கள், தாம் தெரிவு செய்யும் தமது பிரதிநிதிகள், இலங்கையின் அரசியல் ஓட்டத்துக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கும் ஏற்றாற்போல், நகரக்கூடிய செயற்றிறனும் ஆளுமையும் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதே உண்மை.

இந்த ஆளுமை, யாரிடம் உள்ளது என்பதை இனம் காணுவதே, தற்போதைய தேவையாகத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனாலும், அதற்கான மனோநிலை மக்களிடம் உள்ளதா என்பதே அதைவிட மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஆகவே, எதிர்வரும் தேர்தலில், அரசியல்வாதிகள், தேர்தல் மீதான வெறுப்புகள் என்ற மனோநிலையில் இருந்து தமிழ் மக்கள் வெளியில் வரவேண்டும். அவர்கள் உணர்வு ரீதியாக அரசியலைச் சிந்திக்காது சிந்தனா ரீதியில் சிந்தித்துத் தமக்கான, சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குத் திடசங்கற்பம் பூணவேண்டும். அதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது.

ஏனெனில், மத்தியில் ஆட்சி அமைக்கப்போகும் ஆட்சியாளர்களுடன் தேவைகளைப் பெற்றும் தீர்வுகளைப் பெற்றும் தமிழர்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் தலைமைகளே, எதிர்வரும் காலத்தின்; தேவை என்பதை, அனைவரும் உணரத் தலைப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது.

“மத்தியில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை”

-வடமாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்

வடமாகாணத்தில் என்டைய காலப் பகுதியில், மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்று, வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் இரண்டு நிலையங்களும் முல்லைத்தீவில் இரண்டு நிலையங்களும் அமைத்துள்ளோம். அவை மாத்திரமின்றி, பல அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறிக்கொள்ளலாம்.

பல வைத்தியசாலைகள், நகரில் இருந்து பல மைல் தூரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாரிய பட்டியலைப் போடலாம். எனவே, மக்கள் தமக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, நீண்ட காலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தக்கூடியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு, நான் செய்திருக்கின்றேன். இவ்வாறு செய்தபின்னரும் மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் நான் சந்தோசமாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன்.

இதற்குமப்பால், மாகாண சபையில் எனக்குக் கிடைத்த பணத்தைத் திருப்பி அனுப்பாமல், முழுமையாகச் செலவுசெய்திருந்தேன். நாம், ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில், மாத்திரம் செய்பவர்கள் அல்ல. மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் பல வேலைத் திட்டங்களைப் பூர்த்தி செய்திருக்கின்றேன்.

மாகாணசபை ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னரும் கூட, வவுனியா மாவட்டத்துக்கு ஏறத்தாழ 300 மில்லியன் ரூபாய் பணத்தை மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளேன். எட்டுக் குளங்கள் திருத்துவதற்கான நிதியை எடுத்து, குறித்த திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன். இவை, அமைச்சர்களைச் சந்தித்து, கொண்டு வந்த நிதி. அதேபோல், சுகாதாரத் திணைக்களத்துக்கு 2019ஆம் ஆண்டு, 120 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

ஆகவே, மத்தியில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை. எமது மக்களுக்குச் சரியானதை ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து பெற்று வரவேண்டும். அதற்கான தகுதி இருக்க வேண்டும். நல்ல திட்டங்களையும் திட்ட முன் மொழிவுகளையும் வழங்கி, மத்தியில் இருந்து நிதியை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகக் கொண்டு வர முற்பட வேண்டும்.அவர்களையே மக்கள் தெரிவு செய்யவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே ஒரு நிமிடம்… !! (அவ்வப்போது கிளாமர்)
Next post குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! (மருத்துவம்)