சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் !! (கட்டுரை)
எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், ‘சமூக இடைவெளி’ என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது.
அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) ‘சமூக இடைவெளி’ ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், ‘சமூக இடைவெளி’ பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில், அண்மையில், யாழ்ப்பாணம் நோக்கி மினிபஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ”பொயின்ற் வருகுது, தயவு செய்து எல்லோரும் எடுத்துக் கொளுவுங்கோ” என, நடத்துநர் திடீரெனக் கூறினார். இதை அவர், வேகமாக இரண்டு, மூன்று தடவைகள் கூறினார்.
பயணிகள், தங்களின் காதுகளில் ஒழுங்காகக் கொழுவி, வாயையும் மூக்கையும் மறைக்காமல், நாடியில் தொங்கிக் கொண்டிருந்த முகக்கவசத்தை, உடனடியாகச் சீர் செய்தார்கள். ‘பொயின்ற்’ (பொலிஸ் காவலரண்) கழிந்ததும், முன்பு இருந்த நிலைக்குக் கணிசமானோரது முகக்கவசம், மீண்டும் வந்து சேர்ந்தது.
இது போலவே, வீதிப் போக்குவரத்துப் பொலிஸார், த(க)ண்டிப்பார்கள் என்பதற்காகவே எங்களில் பலர், தலைக்கவசம் அணிகின்றார்கள். தலைக்கவசம் அணியாது பயணித்தால், குறித்த நபரது உயிருக்கே பெரும்பாலும் ஆபத்து நேரிடலாம். ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், முகக்கவசம் அணியாது பயணித்தால், அருகில் உள்ளவரால் எமக்கோ, எம்மால் அருகில் உள்ளவருக்கோ கூட, உயிராபத்து வரலாம்; வரும்.
அடுத்தாக, ‘தயவு செய்து இங்கே குப்பை போடாதீர்கள்’ என எழுதப்பட்டிருக்கும். ஆனால், அந்த வாசகத்துக்குப் பக்கத்தில்தான் கடதாசி, கஞ்சல், பிளாஸ்டிக், உடைந்த கண்ணாடிகள், போத்தல்கள், உணவுமீதிகள் என அனைத்துக் குப்பைகளும் கொட்டிக் கிடக்கும்.
‘தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நாம்தான் கல்வியறிவில் உன்னத நிலையில் உள்ளோம்’ என, மார்தட்டிக் கொள்ளும் எங்களின் சமூகப் பொறுப்புணர்வு, எந்தளவு கீழ் மட்டத்தில் இருக்கின்றது என்பதை, மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் உணரமுடியும். இலவசக் கல்வி வழங்கப் பட்டமையாலேதான், இலங்கை முன்னிலை வகிக்கின்றது என, அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
ஆனால், எழுத்தறிவில் உயர்ந்த நாங்கள், பகுத்தறிவில் கீழ் இறங்கி விட்டோமா? கல்வியறிவு என்பது, பாடங்களை மனனமாக்கி, பரீட்சைகளில் சித்தி அடைதல் என்ற வெறும் சிறிய வட்டத்துக்குள் சென்று விட்டோமா என, எண்ணத் தோன்றுகின்றது.
அடுத்துடன், சாதாரண மக்களின் பொதுப் போக்குவரத்து வாகனமாகிய பஸ்களில், வழமையான காலங்களில் பயணிகளை ‘அடைவது’ போலவே, அதிக நெரிசலுடன் சேவை இடம்பெறுகின்றது. சில வழித்தடத்தில் இ.போ.ச சேவைகள் விதிவிலக்காக குறிக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்கின்றார்கள். ”ஏன் இப்படி அதிகப்படியாக பயணிகளை ஏற்றுகின்றீர்கள், கொரோனா அச்சம் கலைந்து விட்டதா” என நடத்துநரிடம் கேட்டபோது, ”எங்களுக்கு எரிபொருள் மானியங்களோ, வேறு நிவாரணங்களோ வழங்கப்படவில்லை. அரச பஸ்ஸில், குறிப்பிட்டளவு பயணிகளை ஏற்றினாலும், நட்டத்துக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்கும். நாங்கள் தனி நபர்கள் அல்லவா? வாகனம் கொள்வனவு செய்த கட்டுக்காசுக்கு உழைப்பதே சிரமமாக உள்ளது” எனப் பதிலளித்தார். அவரது பதிலிலும் நியாயம் காணப்பட்டது.
”கொரோனா வைரஸ் விடயத்தில், பொறுப்புடனும் பாதுகாப்புடனும் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என, அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனாலும், ஒட்டுமொத்தத்தில் தனிநபர்களாலும் சமூக இடைவெளியைப் பேண முடியாது உள்ளது. அரசாங்கத்தாலும் அதற்கு முழுமையான அனுசரணை வழங்க முடியாது உள்ளது.
இது போலவே, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும், போதைக்குப் பாதை காட்டும் மதுபானக் கடைகள் தொடக்கம், ஆன்மிகத்துக்குப் பாதை காட்டும், மத வழிபாட்டுத் தலங்கள் வரை, சமூக இடைவெளியைப் பேண முடியாது உள்ளது.
இவ்வாறான நிலைக்கு என்ன காரணம், மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள், பொறுப்பும் பொறுமையும் அற்றவர்களாக ஏன் இருக்கின்றார்கள்?
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ எனக் கூறுவார்கள். அதுபோல, இவ்வாறான சமூகப் பொறுப்புக்கள், முன்பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். எங்களது சிறுபராயத்துப் பழக்கங்களே, பின்நாள்களில் எமது வழக்கங்களாக அமைந்துவிடுகின்றன. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்கும்’ என்பது பொய்யாகிவிடுமா?
ஆகவே, எங்கள் நாட்டுக் கல்வியறிவு, எங்களது உளப்பாங்கில் மாற்றத்தைக் கொண்டு வரவில்லைப் போலும். இந்நிலையில், ஒருவரது உளப்பாங்கில் சிறப்பான மாற்றம் வந்தாலே, அவரது நடத்தையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவுகையைக் கண்டு அஞ்சிய நிலை மாறி, இன்று கொரோனா வைரஸுடன் வாழப்பழகுதல் என்ற நிலை, வந்து கொண்டிருக்கின்றது. அதற்காக, நோயோடு, ஆபத்தோடு வாழ்தல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ‘அவதானத்தோடு வாழ்தல்’ என்பதாகவே இதை விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். கடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவதானத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையே தேவைப்படுகின்றது. ஆகவே, இந்நேரத்தில் ஒரு சிலரது அவதானமற்றதும் அலட்சியமுமான போக்கு, அனைவரையும், வேரோடு ஆட்டம் காண வைத்து விடும்.
இவ்வாறாக, எமது சமூகத்தில் ‘சமூக இடைவெளி’ பேணப்படாது காணப்பட்டாலும், சமூகங்களுக்கு இடையிலான இடைவெளி, குறைவதாகவோ, அற்றுப்போவதாகவோ தென்படவில்லை. உண்மையில், சமூகங்களுக்கு இடையே, இடைவெளி காணப்படாது நெருக்கம் காணப்பட்டால் மாத்திரம், தனிநபர் தொடக்கம் ஒட்டுமொத்த தேசம் வரைக்கும், நன்மை விளையும்.
அன்று தொடக்கி வைக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பாரபட்சமான முறையில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகள், மொழிக் கொள்கைகள் எனப் பல காரணங்கள், சமூகங்களுக்கிடையே இடைவெளியை ஆழமாக ஏற்படுத்தி விட்டன.
அதேபோல, கிழக்கு மாகாணத்தில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி தொடர்பில், சிறுபான்மை மக்கள் உள்ளுர அச்ச நிலையில் உள்ளனர்.
ஆரம்ப காலங்களில், மிருகங்களை வேட்டையாடிய மனிதன், நாகரிகம் வளரவளர அதை நிறுத்திக் கொண்டான். ஆனால், நவீன நாகரிகத்தில் மனிதனை மனிதன் வேட்டையாடுகின்றான். அதற்கு ஊடகமாக, அரசியல் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கொழும்பில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அதிகாரக் குவிப்பு (ஒற்றையாட்சி), மீதியாகவுள்ள தங்களது வளங்களையும் வரலாறுகளையும் தவிடுபொடியாக்கி விடுமோ எனச் சிறுபான்மை மக்கள் அச்சமடைந்து இருக்கின்றார்கள்.
முன்னேற்றமடைந்ததும் வெற்றிகரமானதுமான மக்கள் கூட்டம், எப்போதும் தங்களது எதிர்காலத்தின் மீதே, அதீத கவனம் செலுத்துவார்கள். கடந்த காலத்தில், தாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று, முன்நோக்கிச் செல்வதற்கு முனைவார்கள்.
ஆகவே, பெரும்பான்மைச் சமூகம், ஏனைய சமூகங்களது உணர்வுகளையும் அபிலாசைகளையும், நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தமிழ் மக்களது இருக்கையில் அமர்ந்து, அவர்களது கோணத்திலிருந்து அவர்களது தேவைகளைப் பார்க்க வேண்டும்; அதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களது அகச்சூழலையும் புறச்சூழலையும் புரியவைக்க வேண்டும்.
பொதுவாக, எந்தவொரு கருத்தும் யோசனையும் முதலில் புறக்கணிக்கப்பட்டும் பின்னர் எள்ளிநகையாடப்பட்டும் அடுத்து கொடூரமாக எதிர்க்கப்பட்டும், நிறைவில்தான் உலகத்தால், சரியென ஏற்றுக் கொள்ளப்படும்.
இது போலவே, தமிழ் மக்களும், தங்களது நீண்ட கால நியாயமான கோரிக்கைகளும், மூன்றாவது கட்டமான கொடூரமாக எதிர்க்கப்படும் என்ற நிலையைக் கடந்து விட்டதாவே கருதுகின்றனர்.
இவ்விடத்தில், தமிழ் மக்களது கோரிக்கைகள், உலகத்தால் ஏற்கப்பட முன்னர், பெரும்பான்மையின சிங்கள சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதைத் தமிழ் மக்கள் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில், உலகம் தீர்வைத் தந்தாலும், தீர்த்து வைத்தாலும் உள்நாட்டில் ஒருமித்தே வாழ வேண்டும்.
மீண்டும் மீண்டும் நாம் செய்கின்ற தேவையற்ற விவாதங்கள், எங்கள் நேரத்தையும் ஆற்றலையும் எம்மிடமிருந்து உறிஞ்சி விடுகின்றன. ஆகவே, இனப்பிணக்கு எனும் நெருக்கடியை, நியாயம் எனும் அளவு கொண்டு கணிக்குமாறு, தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர்.
விலத்தி வைக்கப்பட வேண்டிய ‘சமூக இடைவெளி’ நெருக்கமாகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய சமூகங்களுக்கு இடையிலான இடைவெளி, விலத்தியும் வைக்கப்பட்டு உள்ளன.
‘இலங்கையர்’ ஆகிய நாங்கள், இன்னமும் சமூகங்களால் பாரிய இடைவெளிகளுடன் பயணிப்பது, முழுத் தேசத்துக்கும் ஒரு போதும் விடியலைத் தரமாட்டாது.
பெரும்பான்மை மக்கள் என்ற வகையில், பெரும் மனத்துடன் ஏனைய இனங்களைக் கூட்டிச் சென்றாலே, நாடு முன்னோக்கிப் பயணிக்கும். ஆகவே, மகத்தான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பல அழிவுகளைச் சந்தித்த தமிழினம், விடியல்களையும் சந்திப்போம் எனக் காத்து நிற்கின்றது; கரம் கொடுங்கள்.
Average Rating