கொரோனா காலத்து ‘ஒன்லைன்’ கல்வி: அரைவேக்காட்டுத்தனமா, அத்தியாவசியமா? (கட்டுரை)
கொரோனாவுடன் இலங்கை டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பின்னிப் பிணைந்து செம்புலப் பெய்நீரில் செம்மை கலந்ததுபோல இரண்டறக் கலந்துவிட்டதோ என ஒரு ஆறாத ஐயம் நமக்கு ஏற்படுகிறது. லொக்டவுன் சமயத்திலும் தற்போதும் கொழும்பில் மட்டுமன்றி வடக்கு கிழக்கிலிருந்தும் கூட பாடசாலைப் பாடங்கள் ஒன்லைனில் நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். நிறுவனங்களின் உத்தியோகபூர்வக் கூட்டங்கள் எல்லாம் கணிணி ஊடாக நிகழ்நிலையில் (virtual) நடக்கின்றன. கிடப்பில் கிடந்த லெப்டொப்கள் பீசீக்கள் (personal Computers) எல்லாம் ஸூம் ஸூம் (Zoom) என்று மீட்டிங் போடுகின்றன. பாடசாலை மாணவர்கள் இதில் எதைப் பார்த்தார்கள் என்றோ எதை விளங்கிக் கொண்டார்கள் என்றோ நமக்கு இதுவரை தெரியாது. பாடசாலைகள் ஆரம்பித்த பின்னரே அது ஓரளவுக்குத் தெரியவரும்.
மாணவன் ஒன்லைனுக்கு வந்ததால் அவன் பாடத்தைப் படித்தான் எனப் பொருள்கொள்வது சுத்த அபத்தமானது. அது ஒருபுறமிருக்க சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி மாதிரி எவனெவனெல்லாமோ ஸூமில் வெபினார் (Webinar என்பது seminaரை வெப்பில் நடத்துவதாம்) போட்டு அலப்பறை காட்டுகிறான். அரசியல்பற்றி வேண்டுமா, கொரோனாபற்றி வேண்டுமா, பொருளாதாரம்பற்றி வேண்டுமா, சுற்றாடல் பற்றி வேண்டுமா, எது வேண்டும்? அத்தனைக்கும் இணையம் முழுவதும் ஒரே வெபினார் மயம். ஓன்றுக்கும் வழியில்லாமல் உட்கார்ந்து துாங்கி வழிந்து கொண்டிருந்த அரைவேக்காடுகள் எல்லாம் சப்ஜெக்ட் எக்ஸ்பேர்ட்களாக (Subject experts) மாறி வெபினாரில் கருத்துச் சொல்கின்றன. ஏதோவொரு வழியில் நமது ஈமெயிலில் அந்த குப்பைகளை ரெஜிஸ்டர் (register) பண்ணிப் பார்க்கும்படி வேறு அறிவுறுத்தல் வருகிறது. தலைவிதியே என்று அவற்றை டிலீட் (delete) செய்வதிலேயே காலம் கழிகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டிலே வீணே காலம் கழிக்காமல் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒன்லைனில் ஆரம்பிக்குமாறு பீட அதிகாரிகளால் (faculty authorities) கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. மாணவர்களிடம் ஒன்லைனில் வரத் தேவையான உபகரணங்கள் இருக்குமா? டேட்டாவுக்கு எங்கே போவார்கள்? கிராமப்பகுதிகளிலே வாழ்க்கையைக் கொண்டுநடத்தவே வருமானமில்லாத பெற்றோரைக் கொண்ட மாணவர்களின் நிலை என்ன? என்பது பற்றி போதிய கரிசனை கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கும் மாணவன் ஒரு தடைவை ஒன்லைனுக்கு வந்தால் அவனுக்கு நிகழ்நிலையில் படிப்பதற்கான வசதி இருப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டது. மறுபுறம் விரிவுரையாளர்கள் எல்லோரும் ரெடிமேட் (readymade) ஆக தேவையான லெப்டொப் அல்லது பீசியையும் இன்டர் நெட் டேட்டா அக்ஸஸையும் (internet data access) வீட்டிலே வைத்துக் கொண்டு தமது கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள் என்ற நினைப்பிலேயே பீடங்களின் அதிகாரிகளால் ஒன்லைன் கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கூறப்பட்டது.
சில பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு லப்டொப் வசதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் பலருக்கு அவ்வசதிகள் இல்லை என்பதே கசப்பான உண்மை. இவ்வாறு வழங்கப்பட்ட சில உபகரணங்களும் தரமற்றவையாக இருந்தமையாலும் வழங்கப்பட்டு ஆறேழு வருடங்கள் பழமையானவை என்பதாலும் உடைந்துபோய் கிடக்கின்றன. பெரும்பாலும் அவற்றை வைத்துக்கொண்டு ஒன்லைன் இல்லை ஓப் லைனிலும் வேலைசெய்வதும் முடியாத காரியம். சிலர் தமது சொந்தப் பணத்தில் புதியவற்றை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். பலர் பல்கலைக்கழகங்களில் உள்ள கணிணிகளையே விரிவுரைத் தயார்படுத்தல் மற்றும் உத்தியோகபூர்வத் அலுவல்களுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு மாதக்கணக்கில் பல்கலைக்கழகங்கள் மூடப்படுமென்று யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் தேவைப்படும் உபகரணங்களைக் கொள்வனவு செய்ய பலரால் முடிந்திருக்கும். கொரோனாவால் திடீரென பல்கலைக்கழகங்களை மூடிவிட்டு ஒன்லைனில் செயற்படச் சொன்னால் அது எப்படி சாத்தியமாகும்? வெளியிலே போகமுடியாத ஒரு சூழ்நிலையில், கையில் பணமிருந்தாலும் போய்த் தேவையான உபகரணங்களை வாங்கவோ இண்டர்நெட் ரவுட்டர்களை பெறவோ முடியாத ஒரு இக்கட்டான நிலையில் ஒன்லைனில் செயற்படச் சொல்வது தரையில் படுத்து நீச்சலடிக்கச் சொல்வதற்குச் சமம்.
இதை வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்பதால் பலர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பவர் பொயின்ட் நோட்ஸ்களை (power point) தயார் செய்து எல் எம் எஸ் LMS – Learning Management Syatem) இல் பதிவேற்றினார்கள். உடனே அதிகாரிகள் அது சரிவராது பவர்பொயின்டில் வொயிஸ் ரெக்கோர்டிங் (voice recording) இருப்பது கட்டாயம் என்றார்கள். ஸூம் வேண்டும் ஸூம் வேண்டும் என்று மந்திரித்தவர்களில் சிலர் அதிர்ஷ்டவசமாக ஏற்கெனவே தேவையான கணிணி உபரணங்களையும் டேட்டா அக்ஸஸையும் கொண்டிருந்ததால் இன்னும் சிலர் கெத்தாக ஸூமில் விரிவுரை செய்து டிஜிட்டலுக்கு மாறிவிட்டோம் என்று மாணவர்களையும் மற்றவர்களையும் அசத்தினார்கள். ஆரம்பத்தில் மாணவருக்கு கற்கக்கூடிய ஓடியோவுடன் கூடிய கற்றல் வடிவங்களை எல்.எம்.எஸ்ஸில் பதிவேற்றினால் போதும் என்றே கூறப்பட்டது.
நாங்கள் ஒன்லைனுக்கு மாறிவிட்டோம் என்று கெத்துகாட்டி மேலதிகாரிகளிடம் ‘குட்போய்’ என்று பேர் வாங்கவே சில பீடங்களின் அதிகாரிகள் ஒன்லைன் ஒன்லைன் என்று உருகினார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் மாணவருக்கு கற்பிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பலர் தங்கள் சொந்தப் பணத்தில் டேட்டாவையும் முடிந்தவரையில் மேலதிகமாகப் பெற்று விரிவுரைகளையும் பல்வேறு வடிவங்களில் பதிவுகளையும் பதிவேற்றம் செய்தனர். இன்னும் சிலருக்கு எதுவுமே செய்துகொள்ள முடியாத சூழ்நிலையும் இருந்தது. நிகழ்நிலை ஒன்லைன் விரிவுரைகளை செய்வது பலருக்கு மேலே சொன்ன காரணங்களால் முடியாதிருந்தது. ஆனால் இப்போது ஒன்லைனில் செய்த விரிவுரைகளின் கால அட்டவணையைத் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
கற்றல் கற்பித்தலை ஒன்லைனுக்கு மாற்றுவது என்பது மிகமுக்கியமான ஒரு கொள்கைத் தீர்மானமாகும். அதன் நன்மை தீமைகள் பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்து தீர்மானமெடுத்து பல்கலைக் கழகங்களிலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உபகரணங்களை வழங்கி கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் நடைமுறைப் பயிற்சியையும் வழங்கிய பின்னரே அதுவும் ஒரு பரீட்சார்த்த காலகட்டத்தையும் உள்ளடக்கியதாகவே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைவிடுத்து அரை வேக்காடாக முற்றிலும் ஒரு சுகாதார நெருக்கடியின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றை ஒரு புதிய நடைமுறையாக மாற்ற முயற்சிப்பது வண்டியை குதிரைக்கு முன்னால் பூட்டுவதற்குச் சமனாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சில வளர்முக நாடுகளிலும் ஒன்லைன் விரிவுரைகளும் கற்பித்தல்களும் பல வருடகாலமாக நடைமுறையில் உள்ளன. அங்கெல்லாம் மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமுகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை. மாணவர் வரவு பதியும் நடைமுறையுமில்லை. அதேபோல் விரிவுரையாளரும் பல்கலைக்கழகத்திற்கு வந்துதான் விரிவுரையை செய்ய வேண்டியதுமில்லை. வீட்டில் இருந்தே நடத்தலாம். அப்படியான ஓரு முறை அபத்தமானது என்றே கொள்ளவேண்டும. ஏனெனில் மாணவரும் விரிவுரையாளரும் விரிவுரை மண்டபத்தில் சந்தித்துப்பேசி கலந்துரையாடி விவாதித்து சண்டை பிடித்து சமாதானம் செய்து தொடர்பாடுவதே மிகச்சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடாக அமைய முடியும். ஒரு இயந்திரத்தின் முன்னால் உட்கார்ந்தோ அல்லது நின்றோ அதைப்பார்த்துக் கற்பிப்பது ஒரு நல்ல கற்பித்தல் முறைமை அல்ல. உணர்வுள்ள எந்த விரிவுயௌளனும் அதை விரும்பமாட்டான். அது உடல் உளக் களைப்பை வரவழைக்கும் இயந்திரத்தனமான ஒரு செயற்பாடாகவே அமையும். மரபுரீதியான பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கம் இயந்திர மனிதர்களை உருவாக்குவதன்று. சமூகப் பிரக்ஞையுள்ள உயர்சிந்தனை கொண்ட பயன்மிகு பிரஜைகளை உருவாக்குவதாகும். அதற்கு நேரடியான சமூக ஊடாட்டமும் பங்குபற்றலும் மிகவும் அவசியமாகும். ஒன்லைன் கற்பித்தலில் அதற்கு வாய்ப்பேயில்லை.
ஒன்லைனில் கற்பித்தல் செயற்பாடுகள் எல்லாம் நடந்தால் லொக் டவுன் (lock down) காலத்தில் இருந்ததுபோல மாணவர் வீடுகளில் இருந்தே கற்கலாம். அல்லது ஏதாவது தொழில் செய்துகொண்டே கற்கலாம். பொருளாதாரரீதியில் இது சிக்கனத்தன்மையை ஏற்படுத்தலாம். பெரிய நிலப்பரப்பில் பல்கலைக் கழகங்களை அமைக்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரேயொரு கட்டடம் போதும். விரிவுரை மண்டபங்கள் தேவையில்லை. மாணவர் தங்குமிட வசதிகளை எற்படுத்த அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவுசெய்யத் தேவையில்லை. சேர் ஐவர் ஜெனிங்ஸ் கொழும்பில் இருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தை கோடிக்கணக்கில் செலவழித்து முற்றிலும் ரம்மியமான பேராதனை கிராமத்தில் அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி ஒரு வாழ்விடப் பல்கலைக்கழகமாக மாற்றியதே பல்கலைக்கழகம் என்பது ஒரு பாடசாலையோ அல்லது தொழினுட்பக் கல்லூரியோ இல்லை, அதைவிட முற்றிலும் வேறுபட்ட வாழ்விடமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டதனாலாகும். மாணவர் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனாலாகும். பல்கலை என்பது வெறும் ஒன்லைன் பாடமன்று. அது ஒரு வாழ்க்கைமுறை. இப் பயிற்சி கணிணியூடாக வந்துவிடாது. பேராதனையில் பயின்றவர்களுக்கு அது நன்கு பரிச்சயமானது. பேராதனையில் பயின்று கொழும்பில் தொழில்புரிய வந்தபோது ஆரம்பத்தில் கொழும்பப் பல்கலைக்கழகம் ஒரு அலுவலகத் தொகுதியாகவே தோன்றியது. பல்கலைக்கழகமாகத் தோன்றவில்லை. அதன் நடைமுறைக் கலாசாரத்தை ஜீரணிப்பது ஆரம்பத்தில் மிகவும் கடினமான இருந்தது. பின்னர் அதுவே பழகிப்போனது வேறுகதை.
பல்கலைக் கழகத்தில் நேரடியாக வந்து கற்கமுடியாத நிலையில் உள்ளோர்க்கு தொலைவழிக் கல்வி வழங்கும் நடைமுறை ஒரு கலப்புப் கற்றல் (blended learning) நடைமுறையாகும். அது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதுவும் முறையான தயார்படுத்தல்களுடனேயே மேற்கொள்ளப்படுகிறது. மரபுரீதியான பல்கலைக்கழக கல்விமுறையில் நவீன தொழினுட்பங்களை அறிமுகப்படுத்துவது இற்றைப்படுத்தப்பட்ட அறிவும் திறனும் கொண்ட அறிவுச் சமூகத்தை உருவாக்க உதவும் என்பதில் எந்தமாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் அவற்றின் ஆழ அகலங்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போதிய கலந்துரையாடல்களோ தயார்படுத்தல்களோ இல்லாமல் அவசர அவசரமாக அவற்றை நடைமுறைப்படுத்த முயல்வது அரைவேக்காடான சிந்தனையின் வெளிப்பாடாகும். காணமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேற்குலகில் பிரசித்திபெற்ற எல்லாவற்றையும் அவசரமாக இறக்குமதி செய்ய முற்படுவது, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல.
கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்
Average Rating