பிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு!! (மகளிர் பக்கம்)
சின்னத்திரை நடிகர் டவுட் செந்தில்
‘‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்ன்னு சொல்வாங்க. அப் படித்தான் என்னைப் பொறுத்தவரை சாப்பாடு நமக்கு மிகவும் அவசியமானது. அது தான் நம்முடைய உயிரோட்டம். நமக்கு எனர்ஜி கொடுக்கக் கூடியது’’ என்று தன் உணவு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார் சின்னத்திரை காமெடி நடிகர் டவுட் செந்தில்.
‘‘என்னுடைய சொந்த ஊர் திருச்சி. அங்க எல்லாமே ஃப்ரெஷ்ஷா காய்கறி மற்றும் உணவு கிடைக்கும். பெரும்பாலும் வீட்டு சமையல் தான். அம்மாவின் கைப்பக்குவத்தில் சுவையான சாப்பாடு சாப்பிட்டு தான் நான் வளர்ந்தேன். நாம சாதாரணமா செய்யும் உணவு போல் சாதம் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், அப்பளம் இப்படித்தான் அம்மா தினமும் சமைப்பாங்க. அந்த உணவுக்கு ஈடு இணையே கிடையாது. வேற எங்க போனாலும், அந்த சாப்பாட்டுக்கு மாற்று கிடையாது. உணவே மருந்து என்பது போல், அந்த சாப்பாட்டில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அது எளிதில் ஜீரணமாகிவிடும். மதிய வேளையில் என் அம்மா மட்டும் இல்லை எல்லா அம்மாக்களும் சமைக்கும் சாப்பாடு தான் பெஸ்ட்ன்னு நான் சொல்வேன்.
அம்மா சைவம் மட்டும் இல்லை அசைவ உணவும் நல்லா சமைப்பாங்க.
அவங்க செய்யும் தக்காளி சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது என்னவோ அவங்க செய்தா ரொம்ப ருசியா இருக்கும். அம்மா என்பவர் எப்போதுமே தன் பசங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை பார்த்து அன்போடு செய்வது தானே வழக்கம். அந்த அன்பு அவங்க உணவில் தெரியும். அதே தக்காளி சாப்பாடு நாம வெளியே போய் சாப்பிட்டு இருப்போம். பார்க்க மஞ்சளா இருக்குமே தவிர அதில் எந்த ஒரு சுவையும் இருக்காது. இன்று வரை நான் அம்மாவின் அந்த தக்காளி சாப்பாட்டை வேற எங்கும் சாப்பிட்டது இல்லை. அம்மா மட்டன் குழம்பு ரொம்ப நல்லா செய்வாங்க. எனக்கு அதில் குழம்பு மாதிரி செய்தா பிடிக்காது. கொஞ்சம் திக்கா கிரேவி போல செய்வாங்க. அதை சாப்பாட்டில் பிசைந்து போட்டு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். அம்மா அந்த காலத்தை சேர்ந்தவங்க. எல்லாமே அம்மியில் அரைச்சு தான் செய்வாங்க. இப்பதான் நாம மிக்சியில அரைக்கிறோம்.
என்னதான் மிக்சியில் அரைச்சாலும், அம்மியில் அரைச்சு குழம்பு வைக்கும் போது அதன் சுவையே தனிதான். மழைக்காலம் வந்துட்டாலே அம்மா அதிரசம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு பெரிய பானையில் சுட்டு தனியா எடுத்து வச்சிடுவாங்க. செய்த உடனே தரமாட்டாங்க. இரண்டு மூன்று நாள் கழித்து தான் தருவாங்க. வெல்லம் நன்றாக ஊறி அதிரசம் சாப்பிடும் போது மிருதுவா சுவையா இருக்கும். அப்புறம் தக்காளி சாதத்துடன் முட்டை பொறியல் மாதிரி வெங்காயம் பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து செய்வாங்க. பார்க்கும் போது அது முட்டையை கொத்தியது போல் இருக்கும். தக்காளி சாதத்திற்கு அந்த முட்டை காம்பினேஷன் அடிச்சுக்க முடியாது. அம்மா செய்வது போல் என் மனைவியும் முட்டை செய்றாங்க. அவங்க செய்றதும் நல்லா தான் இருக்கு.
ஆனால் அம்மாவின் அந்த டேஸ்ட் வரல அவங்களுக்கு. என்னுடைய அக்காவும் நல்லா சமைப்பாங்க. அவங்க வைக்கிற நாட்டுக் கோழி குழம்பு மற்றும் மிளகு ரசத்திற்கு நான் அடிமை’’ என்றவர் நண்பர்களுடன் வெளியே சென்ற பிறகு தான் புது உணவுகளை சாப்பிட பழகியுள்ளார். ‘‘எனக்கு பீட்சா, பர்கர்ன்னா அவ்வளவு பிடிக்கும். அது என்னவோ அதன் மேல் ஒரு அடிக்ஷன் மாதிரி இருந்தேன். எங்க போனாலும் பீட்சா பர்கர் தான் சாப்பிடுவேன். இப்ப அதன் மேல் இருந்த மோகம் குறைஞ்சிடுச்சு. இப்ப ஷவர்மா சாப்பிட பழகிட்டேன். எங்க போனாலும் ஷவர்மா சாப்பிடாம வர்றதில்லை. எப்படியாவது ஒரு ஷவர்மா சாப்பிட்டு தான் வருவேன். சப்பாத்தியை சுட்டு அதற்குள் சிக்கன் துண்டுகள், காய்கறிகள் மற்றும் மேயனீஸ் சாஸ் எல்லாம் போட்டு தருவாங்க. ஒன்னு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். ஆனா என்னதான் இது போன்ற உணவுகளை வெளியே சாப்பிட்டாலும், என்னுடைய ஓட்டு எப்போதுமே வீட்டு சாப்பாட்டுக்கு தான்.
சின்ன வயசில் நான் பள்ளியில் படிக்கும் போது எங்க வீட்டு பக்கத்தில் ‘மதிவாணன் மெஸ்’ன்னு இருக்கும். அங்க போய் பரோட்டா விரும்பி சாப்பிடுவேன். பரோட்டாவை பிச்சு போட்டு அதில் சிக்கன் குழம்பை ஊற்றி ஊற வச்ச சாப்பிடும் போது அதன் சுவையே தனி தான். எனக்கு உடம்பு சரியில்லைனா அப்பா மருந்து வாங்கி தராரோ இல்லையோ, முதலில் பரோட்டா தான் வாங்கி தருவார். அது சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எனக்கு உடனே உடம்பு சரியாயிடும். அவ்வளவு பிடிக்கும் எனக்கு பரோட்டா. அது மட்டும் இல்லாமல் எப்ப வெளியே சாப்பிட்டாலும் பரோட்டா தான். அப்பெல்லாம் அது மைதான்னு தெரியாது. கிராமத்தில் எவ்வளவு சாப்பிட்டாலும், நாம் விளையாடற விளையாட்டில் எல்லாமே செரிச்சிடும். ஆனா இப்பதான் மைதா சாப்பிட்டா உடனே செரிக்காதுன்னு எல்லாம் சொல்றாங்க.
அப்ப நமக்கு இருந்த உடல் உழைப்பு இப்ப இல்லையே. வீட்டை விட்டு வெளியே வந்தா, பைக் அல்லது காரில் தான் பயணம் செய்கிறோம். அதனால் இப்ப நான் என்னுடைய உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றி இருக்கேன். இப்போது எல்லாம் வெளியே போனாலும் அல்லது ஓட்டலில் போய் சாப்பிட்டாலும் நான் விரும்பி சாப்பிடும் ஒரே சாப்பாடு இட்லி தான். தோசையும் சாப்பிடுவேன். அதிகமா விரும்பி சாப்பிடுறது இட்லி தான். ஆவியில் வேகவைத்து உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத உணவு இட்லி மட்டும் தான். வீட்டில் எல்லாரும் தோசை சாப்பிட்டாலும் நான் இட்லி தான் சாப்பிடுவேன்’’ என்றவர் சென்னையில் அவர் சாப்பிட்ட உணவுகள் பற்றி விவரித்தார்.
‘‘பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு நான் திருச்சியில் தான் கல்லூரி படிச்சேன். அதன் பிறகு எனக்கு கல்யாணமாயிடுச்சு. அதன் பிறகு என் மனைவியின் சாப்பாடு தான். இதற்கிடையில் கல்யாணம் ஆன சில நாட்களில் நான் சென்னைக்கு வேலைக் காரணமா வந்துட்டேன். ஒரு மாசம் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டேன். என்னவோ எனக்கு அது செட்டே ஆகல. அதனால ஒரே மாசத்தில என் மனைவியையும் இங்க அழைச்சிட்டு வந்துட்டேன். அம்மாவின் சாப்பாட்டுக்கு பிறகு இப்ப என் மனைவியின் சாப்பாடு தான். இவங்க பிரியாணி ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க செய்ற எல்லா வகையான பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி கூட ரொம்ப சுவையா இருக்கும். கல்யாணம் ஆன போது அவங்களுக்கு சமைக்க தெரியாது. அவங்க அம்மா அப்புறம் என்னுடைய அக்கா தான் என் மனைவிக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப அவங்களே புதுப்புது உணவினை பார்த்து பார்த்து செய்றாங்க.
உணவை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்துக்கும் தனிச்சிறப்பு இருக்கும். திருச்சியின் வட்டார உணவு சிக்கன் நூடுல்ஸ், பிரைட் ரைஸ், பானி பூரி, மசாலா பூரின்னு மாறிடுச்சு. காரணம் எப்போதும் வீட்டில் அதே தோசை இட்லி சப்பாத்தி தான் சாப்பிடுறோம். அதனால கொஞ்சம் மாறுபட்டு சாப்பிடணும்ன்னு இந்த உணவுக்கு மாறிட்டாங்க. நிகழ்ச்சிக்காக நான் வெளியே போகும் போது, ஓட்டலில் காலை உணவு காம்பிளிமென்டா கொடுப்பாங்க. அங்க தென்னிந்திய மற்றும் வட இந்திய என பல வகை உணவுகள் இருக்கும். ஆனால் நான் அங்கும் விரும்பி சாப்பிடுவது இட்லி தான். அதன் பிறகு ஊருக்குள் போகும் போது, அங்கு திருவிழா அல்லது கல்யாணம் காதுகுத்துன்னா கெடா வெட்டி சமைப்பது தான் வழக்கம். அது ஒரு தனி சுவையா இருக்கும். இவை எல்லாம் தவிர நான் வெளியே ஓட்டலில் சைவ உணவுன்னா என்னுடைய சாய்ஸ் சங்கீதா மற்றும் சரவணபவன் தான்.
சங்கீதாவில் பூரி கிழங்கு நல்லா இருக்கும். ரொம்ப மிருதுவா இருக்கும். அதே போல் அங்கே கிச்சடியும் ரொம்ப நல்லா இருக்கும். குழைவாகவும் இல்லாமல், உதிரி உதிரியாவும் இல்லாமல் இருக்கும். சரவணபவன் இட்லி எனக்கு ரொம்ப பிடிக்கும். இதெல்லாம் சாப்பிட்டு ஒரு பில்டர் காபி குடிச்சா… அவ்வளவு தான் ஒரு திருப்தி ஏற்படும். அதுக்கு ஈடு இணையே கிடையாது. நண்பர்களுடன் குடும்பத்துடன் வேற ஓட்டலுக்கு போனாலும் என்னுடைய ஆல் டைம் ஃபேவரெட் இந்த இரண்டு உணவகம் தான். அசைவ உணவு பொறுத்தவரை ஸ்டார் பிரியாணியின், பிரியாணி ரொம்ப பிடிக்கும். வாரத்தில் நாலு தடவையாவது அங்க போய் சாப்பிடுவேன். அது தவிர சென்னைக்கு வெளியே சாப்பிடணும்ன்னா திண்டுக்கல் வேணு பிரியாணியில் சாப்பிட பிடிக்கும். மதுரைக்கு போகும் போது திண்டுக்கல் வழியா போய், அங்கு பிரியாணி சாப்பிட்டு தான் போவேன்.
என்னுடைய ஃபிரண்ட் திண்டுக்கல் சரவணன் (டாடி) தான் எனக்கு இந்த பிரியாணிய அறிமுகம் செய்தார். அங்க எப்ப போனாலும் பிரியாணி சூடா கிடைக்கும். அதே போல் நாம சாப்பிட சாப்பிட வச்சிட்டே இருப்பாங்க. நாம எவ்வளவு சாப்பிட்டோம்ன்னு நமக்கே தெரியாது. வயிறு நிரைஞ்சிடும். அதே சமயம் வயித்துக்கும் ஏந்த கெடுதலும் செய்யாது. நம்ம வீட்டில் சாப்பிடற உணர்வு போல இருக்கும். எனக்கு தென்னிந்திய உணவு தவிர வேற எந்த உணவும் பிடிக்காது. சிலர் சைனீஸ் உணவு விரும்பி சாப்பிடுவாங்க. நானும் சாப்பிட்டு இருக்கேன். ஆனால் விரும்பி சாப்பிட்டது இல்லை’’ என்றவர் தன் வெளிநாட்டு உணவு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
‘‘நான் எந்த வெளிநாடுக்கு சென்றாலும் அங்கு நம்ம ஊர் சாப்பாடு இருக்கான்னு தான் பார்ப்பேன். மலேசியாவிற்கு நிகழ்ச்சிக்காக போன போது, அங்கு கூட நம்முடைய அரிசி சாப்பாடு தான் வேணும்ன்னு கேட்டேன். அங்க கிடைக்கும். ஆனால் ரொம்ப வறண்டு போய் இருக்கும். அங்க நூடுல்ஸ் தான் அதிகம் கிடைக்கும். நூடுல்ஸ் எனக்கு பிடிக்காது. குறிப்பா அங்குள்ள நூடுல்ஸ். அதனால அங்க இருந்த ஏழு நாளும் மூணு வேளையும் சாண்ட்விச் தான் சாப்பிட்டேன். மலேசியாவில் கோலாலம்பூரில் நம்ம இந்திய சாப்பாடு கிடைக்கும். அதை தாண்டி கொஞ்சம் உள்ளே போயிட்டா அவங்க பாரம்பரிய உணவான நூடுல்ஸ், சூப் மற்றும் சைனீஸ் உணவுகள் தான் அதிகம் இருக்கும். சூப்புக்குள்ள நூடுல்ஸ் போட்டு கொடுப்பாங்க. அது ஒரு மாதிரி கொழகொழன்னு இருக்கும். நம்ம மேகி நூடுல்ஸ் போலக் கூட இருக்காது.
சிங்கப்பூர் போன போது, அங்கேயும் சைனீஸ் உணவு தான் அதிகமா இருந்தது. அங்க கே.எப்.சி சிக்கன் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். இப்ப நாம போனா, அங்க இருக்கும் தமிழர்கள் மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திடுவாங்க. அவங்க சாதம், குழம்பு, கூட்டுன்னு நம்ம பாரம்பரிய உணவை தான் சமைப்பாங்க. அதே போல் குவைத் போன போது, அங்கு சப்பாத்தியை அடுப்பில் சுட்டு அதற்கு லெட்யூஸ் அல்லது புதினா மாதிரி ஏதோ இலை தழை தான் சேர்த்து சாப்பிடுறாங்க. உப்பு, காரம் எதுவுமே இருக்காது. சப்புன்னு இருக்கும். நான் ஒன்னு சாப்பிட்டு அதன் பிறகு அங்கு கடல் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு சமாளித்தேன்’’ என்றவர் நம் தமிழ்நாட்டிலும் ஒரு வலம் வந்துள்ளார்.
‘‘நான் தமிழ்நாடு முழுக்க எல்லா ஏரியாவும் போயிருக்கேன். காரைக்குடியில் பல வெரைட்டி உணவு சமைப்பாங்க. அங்கு பிரியாணி எல்லாம் ஃபேமஸ் கிடையாது. ஆனா மதிய உணவில் அவ்வளவு வகை இருக்கும். பொரியல் ஆறு ஏழு இருக்கும். சாம்பார், வத்தக்குழம்பு, பருப்பு பொடி, கூட்டுன்னு இது எல்லாம் சாதத்தில் சேர்த்து சாப்பிடணும். அதுவே வயிறு நிரம்பிடும். அதன் பிறகு ரசம், தயிர் கடைசியில் ஏதாவது ஒரு இனிப்பு இருக்கும். இனிப்பு இல்லாமல் உணவு அங்கு கிடையாது. மதுரை பன் பரோட்டா நாட்டுக் கோழி சால்னா ரொம்ப நல்லா இருக்கும். அப்புறம் ஜிகிர்தண்டா, ரோஸ்மில்க் என்னுடைய ஃபேவரெட். கல்லக்குறிச்சி போகிற வழியில் ‘மைதிலி’ன்னு ஒரு கடை. அங்கு பரோட்டா அதற்கு சிக்கன் அல்லது மட்டன் குழம்பு ரொம்ப ஃபேமஸ். பரோட்டா ரொம்ப மிருதுவா இருக்கும். திண்டிவனத்தை தாண்டி போகும் போது அங்கு ‘சாஸ்’ன்னு ஒரு உணவகம் இருக்கு.
அங்கு எல்லா உணவும் நல்லா இருக்கும். ஆனால் அவங்க ஸ்பெஷல் திராட்சை பழரசம். விழுப்புரத்தை தாண்டி திருச்சியில் ‘பனானா லீஃப்’ மற்றும் ‘குறிஞ்சி’ உணவகத்தில் சாப்பாடு நல்லா இருக்கும். மதுரையில் ‘முருகன் ஓட்டல்’ன்னு இருக்கு. அங்கு பரோட்டா கறிக்குழம்பு ரொம்ப நல்லா இருக்கும். ஈரோட்டில் ‘செல்வா மெஸ்’ காரசாரமான சிக்கன் குழம்பு பரோட்டா ரொம்ப நல்லா இருக்கும். திருப்பூர் மற்றும் கோவை வழியா போனா அங்கு ‘கவுரி சங்கர்’ சைவ உணவகத்தில் சாப்பாடு ஃபுல் மீல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். உடுமலைப்பேட்டையிலும் இந்த உணவகம் இருக்கு. அங்கேயும் சாப்பிட்டு இருக்கேன். நான் நிறைய சாப்பிட மாட்டேன். கொஞ்சமா சாப்பிட்டாலும் சுவையா இருக்கணும்ன்னு பார்ப்பேன். மேலும் என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட்ன்னு பார்த்தா பிரியாணி தான்’’ என்றார் செந்தில்.
Average Rating