பாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி!! (மகளிர் பக்கம்)
இன்றைய தலைமுறை பெண்களுக்குப் பல வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி. வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்குச் செல்வதாக இருந்தாலும், ஷாப்பிங் போக கிளம்பினாலும், எள்ளளவும் உடல் நோகாமல் பயணிக்க வேண்டும் என்று தான் இளம்பெண்கள் நினைக்கிறார்கள். பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டும் என்றாலும், டூ வீலரிலோ, காரிலோ செல் வதையே வாடிக்கையாக கொண்டுள்ள மகளிருக்கு இடையே, இரண்டு
குழந்தைகளுக்குத் தாயான பின்னரும் சிலம்பத்தில் வீராங்கனை, பயிற்சியாளர், நடுவர் எனச் சப்தமில்லாமல் தடம் பதித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. வயது அடிப்படை காரணமாக, மாநிலப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது என்று ஆதங்கப் படும் இவர், பண்டைய கலையான சிலம்பத் துடனான தனது
பயணத்தை விவரிக்கிறார்.
‘‘நாகர்கோவிலை அடுத்து மார்த்தாண்டம் தான் என்னுடைய சொந்த ஊர். தாத்தா ராகவன், பெரியப்பா செல்லசாமி என எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சிலம்பம் சுற்றுவார்கள். எங்களுக்குச் சொந்தமான நெற்களத்தில் இவர்கள் அனைவரும் விடியற்காலையில் பயிற்சி செய்வது வழக்கம். நான் களத்துமேட்டில்
உட்கார்ந்தவாறு, அவர்கள் சிலம்பம் சுற்றுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். அதனால், சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
வந்தது. ஆனால், மார்த்தாண்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திருமணமாகி, 1997-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஆவடியில், கணவர் மாணிக்கத்துடன் வாழ்க்கையில் இரண்டாம் அத்தியாயமான இல்லற வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனாலும், எனக்குள் சிலம்பக் கலையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் நீறுபூத்த நெருப்புபோல், மனதில் அழியாமல் இருந்தது.
ஆனால், இது தொடர்பாக, யாரைப் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை. வீட்டிலும் அநாவசியமாக வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இதற்கிடையே,யோகேஷ்வர், கெளதம் என இரண்டு மகன்களுக்கு சிசேரியன் மூலம் தாயாகி விட்டேன். இந்த நிலையிலும், சிலம்பம் மீதான ஆர்வம் குறையவில்லை. பாரம்பரிய கலையான சிலம்பத்தைக் கற்க நமக்குத்தான் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நம்முடைய மகன்களாவது இதைக் கற்றுக்கொள்ளட்டும் என்ற ஆசையில், ஆவடியில் சிலம்பம் எங்கே சொல்லித் தருகிறார்கள்? என விசாரிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் வீட்டுக்குப் பக்கத்திலேயே, சிலம்பம் கற்றுத் தரப்படுவதை அறிந்தேன்’’ என்றவர் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார்.
‘‘சுருள்வாள், ஒற்றைக் கொம்பு, இரட்டைக்கொம்பு, வாள் கேடயம், வேல் கம்பு மற்றும் தீச்சிலம்பம் ஆகியவற்றைச் சிலம்ப மாஸ்டர் நடராஜனிடம் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர், பயிற்சியாளராக உருவெடுத்தேன். ஏறக்குறைய பத்து வருடங்களுக்கும் மேலாக, முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு இலவசமாக சிலம்பக்கலையில் பயிற்சி அளித்து வருகின்றேன். தற்போது, என்னிடம் 200 சிறுவர், சிறுமியர், 30 ஆண்கள், திருமணமான பத்து பெண்கள் ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில், சிலர் குழந்தைகளைப் பெற்ற பின்னர் பயிற்சி பெற்று, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளனர்.
நான் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளில்தான் பங்கேற்று உள்ளேன். ஆர்வம், தகுதி இருந்தும், வயது அடிப்படையில், என்னால், மாநிலப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. ஏனென்றால், அப்போது, 25 வயது வரைதான் மாநிலப் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. தற்போது, முப்பது வயது வரை பங்கேற்கலாம். அந்த ஏக்கம் இன்னும் எனக்குள் ஆறாத வடுவாக உள்ளது. தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில நடுவராக நான்கு வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு தேசிய போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவதற்கான அங்கீகாரம்
கிடைத்தது. இது மட்டுமில்லாமல், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில உதவி செயலாளராகவும் உள்ளேன். இக்கழகத்தில் பொறுப்பு வகிக்கும் ஒரே பெண் நான் என்பது குறிப்பிடத்தக்கது.
பழமை வாய்ந்த தற்காப்பு கலையில் இந்த அளவிற்கு நான் சாதித்து வருவதற்குப் பின்னால், என குடும்பத்தார் ஒத்துழைப்பும் உள்ளது. போட்டி தொடர்பாக, எங்கு வெளியே சென்றாலும், கணவர் துணைக்கு வருவார். அதைப் போன்று, எம்.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தலைவர், முரளி கிருஷ்ணன், செயலாளர்(தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம்) போன்ற நிர்வாகிகளும் என்னை ஊக்கப்படுத்தி, ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். இளைய தலைமுறை பெண்களுக்குச் சிலம்பம் போன்ற
பழமையான கலைகளில் ஆர்வம் இல்லாத காரணத்தால் அவற்றின் பயன்கள் தெரிவது இல்லை. தற்போது, நிலைமை சற்று மாறி, பெண்களின் கவனம் இக்கலைகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்து உள்ளது. சிலம்பம் போன்ற உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால், மன அழுத்தம் சரியாகும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் முதலானவை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சிலம்பக் கலையில் தொடர்ந்து, பத்து வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றேன். மாவட்டப் போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றது, நடுவராகப் பணியாற்றி வருவது என, மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில், சராசரி பெண்களைப்போல், வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்த நான் இக்கலை மூலமாக, வெளியுலகத்திற்கு தெரிய வந்ததும், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் உதவி செயலாளர் என்ற அடையாள அட்டை வாங்கியதும் மறக்க முடியாத அனுபவம். இந்த தற்காப்பு கலை மூலமாக, என்னைப் போன்ற நிறைய பெண்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ‘தமிழ் சிலம்பாலயம்’ என்ற பெயரில் ஒரு பள்ளி தொடங்க வேண்டும், இதுதான் என்னுடைய லட்சியம்’’ என்றார் தமிழ்ச்செல்வி.
Average Rating