மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா? (மகளிர் பக்கம்)
மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ. 100 முதல் அதிகமாக கேரளாவில் ரூ. 10000 வரை ஃபைன் என எங்கும் கொரோனா தொற்று மாஸ்க் எதிரொலிகள். ஒரு பக்கம் மாஸ்க் தேவையா என விவாதங்களும் சென்று கொண்டிருக்கிறது. சரி மாஸ்க் அவசியமா? அவசியம் எனில் எவ்விதமான மாஸ்க் அணியலாம், எத்தனை வகைகளில் மாஸ்க்குகள் உள்ளன, என்ன பயன்கள் என சொல்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பொது மருத்துவ துறையின் உதவி பேராசிரியரான டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி. ‘‘பொதுவாகவே கொரோனா மட்டுமல்ல, எந்தவித தொற்றுக்கும் முதல் கவசம், முகக் கவசம்தான். காற்று மாசு, கிருமி தொற்று, எல்லாவற்றிற்கும் வழி மூக்கு, வாய் மட்டுமே, இதற்கு ஒரு சின்ன தடைதான் மாஸ்க்குகள். எனினும் 100% மாஸ்க்குகளைக் கொண்டு நாம் கொரோனா வராமல் தடுக்கலாமா? என்று கேட்டால் அதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை. ஆனால் போதுமான அளவிற்கு சமூகப் பரவலைத் தடுக்கலாம். இதனால்தான் மாஸ்க் அவ்வளவு முக்கியம் என அரசாங்கம் முதல் மருத்துவத்துறை வரை கட்டாயப்படுத்துகிறோம் என்னும் டாக்டர் சாய் லட்சுமிகாந்த் மாஸ்க் வகைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள்
குறித்தும் விளக்குகிறார்.
சர்ஜிக்கல் மாஸ்க்:
3 பிளே மாஸ்க். அதாவது மூன்று லேயர் மாஸ்க். உங்களுக்கு தொற்று இருந்து இருமலோ, தும்மலோ இருப்பின் இந்த மாஸ்க் நிச்சயம் அணிய வேண்டும். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு தொற்று பரவுவதைத் தடுக்கலாம். சர்ஜிக்கல் மாஸ்க்கை சோதனை செய்து அதன் தரத்தை பார்க்க முடியும். அதாவது இந்த மாஸ்கை அணிந்து மெழுகுவர்த்தி அல்லது தீப்பெட்டிக் குச்சியைக் கொளுத்தி ஊதினால் அதில் அசைவோ, நெருப்பு அணைவதோ இல்லாமல் இருப்பின் அது தரமான மாஸ்க். இது தொற்று இல்லாத மக்களுக்கு அவசியம் இல்லை. மேலும் இந்த மாஸ்க்குகளை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பதால் பொதுவான தொற்று இல்லாத மக்கள் இதனை பயன்படுத்த வேண்டியதில்லை. அதே போல் இரண்டு அல்லது மூன்று மாஸ்க்குகள் சேர்த்து பயன்படுத்த வேண்டிய அவசியமுமில்லை.
துணி மாஸ்க்குகள்:
எல்லா மக்களும் தாராளமாக பயன்படுத்தலாம். பொதுவான மக்களால் யூஸ்&த்ரோ மாஸ்க்குகள் அல்லது மெடிக்கல் மாஸ்க்குகளை தொடர்ந்து வாங்க முடியாது, அதிலும் இந்த அவசர காலத்தில் கிடைக்கவும் கிடைக்காது எனில் ஒரே வழி துணியாலான ரியூஸபிள் மாஸ்க்குகள்தான். அதே போல் இது கொரோனாவுக்கே மருந்தாக மாறி உங்களைக் காப்பாற்றும் என்றெல்லாம் கிடையாது. குறைந்தபட்சம் காற்றில் தும்மிய, இருமிய துகள்கள் பரவி இருக்கலாம், அந்த வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சின்ன கருவியாக இந்த மாஸ்க் செயல்படும். குறிப்பா நமக்கு எந்த தொற்று அறிகுறியும் இல்லாத பட்சத்தில் தொற்றின் விகிதத்தை துணி மாஸ்க்குகள் மூலம் குறைக்கலாம்.
N95 சுவாசக் கருவி:
இண்டெஸ்ட்ரியல் மாஸ்க், 0.3 டயாமீட்டர் அளவுள்ள துகள்கள் வரை இந்த மாஸ்க் வடிகட்டக்கூடிய பில்டர்களைக் கொண்டிருக்கும். கொரோனா வைரஸ் 1.2 டயாமீட்டர் முதல் 0.5 டயாமீட்டர் வரையிலும் இருப்பதால் இந்த மாஸ்க் ஓரளவுக்கு தொற்றுகளை கட்டுப்படுத்தும். ஆனால் இதன் தேவை மருத்துவ பணியாளர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்குமே அதிகம் தேவை. அவர்கள்தான் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்போர் என்பதால் இதன் தேவை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையில்தான் மிகவும் அவசியம். மேலும் இந்த மாஸ்க்கை முடிந்தவரை இறுக்கமாக மூக்கு, வாய்ப் பகுதியை கவர் செய்தால் மட்டுமே ஓரளவு பலன் கிடைக்கும். இதிலேயும் ஒரு பிரச்னை உண்டு, இந்த மாஸ்க் இண்டெஸ்ட்ரியல் மாஸ்க் என்பதால் பெரும்பாலும் ஆண்கள் தான் பயன்படுத்துவார்கள்.அதன் அமைப்பும் ஆண்கள் முகத்துக்கு ஏற்ப இருக்கும்.
பெண்கள் பலருடைய முகத்தோற்றத்துக்கு இது பொருந்துவதில்லை. மேலும் இதனை துவைத்தோ, நனைத்தோ பயன்படுத்த முடியாது, வேண்டுமானால் சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம், அதுவும் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. சூரிய ஒளி துளைகளை நீர்த்துப் போகச் செய்யும் வாய்ப்பும் இருப்பதால், ஒருமுறை பயன்பாடுதான் அறிவுறுத்தப்படும். பொதுவாகவே நம் கைகளை மூக்கு, வாய் என அவ்வப்போது தொடுவதை இந்த மாஸ்க்குகள் கட்டுப்படுத்தும் என்பதாலும், சமூகப் பரவலின் விகிதத்தைக் குறைக்கும் என்பதாலும் மாஸ்க் மிகவும் அவசியம். போலவே குழந்தைகளுக்கும் அவர்களுக்கான அளவில் துணி மாஸ்குகள் மிகவும் அவசியம். மாஸ்க் சிறிதேனும் முகத்தைக் கவர் செய்து இறுக்கமாகப் பிடித்திருக்க வேண்டும், கழண்டு விழும்படி ஒப்புக்காக அணியக் கூடாது’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி.
Average Rating