அழகு செய்யும் கார்ப்பெட்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 40 Second

சாதாரணமாகவே மனிதர்களுக்கு தங்களை அலங்கரித்துக்கொள்வதில் விருப்பம் உண்டு. தன்னை அழகாக வெளிப்படுத்திக்கொள்ளவே ஒவ்வொருவரும் விரும்புவர். ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போவதென்றால் கூடுதலாக அழகூட்டிக்கொள்வது போல, வீட்டிற்கு அடிப்படையான அழகு என்பதையெல்லாம் தாண்டி ஆடம்பரமான ரிச் லுக் தருபவை கார்ப்பெட்டுகள். கார்ப்பெட்டுகள் அவசியமா? என்றால், தேவையில்லைதான். ஆனால், மேலும் வீட்டை அழகாக்கிக் காட்ட நினைத்தாலோ கார்ப்பெட் போடலாம். நல்ல மார்பிள் தரை அல்லது கிரானைட் தரை கொண்ட வீடுகளுக்கு பலர் கார்ப்பெட் போட விரும்புவதில்லை. மற்றொரு காரணம் கார்ப்பெட்டை பராமரிப்பது சிரமம். சிறு குழந்தைகள் இருந்தால் பால், காபி, ஜூஸ் போன்றவற்றை கொட்ட வாய்ப்புண்டு. சாப்பாட்டுப் பொருட்கள் சிதறவும் வாய்ப்புண்டு.

ஆகவே அதனை அழகாக பராமரிக்க வேண்டும். சில இடங்களில் கார்ப்பெட் மிதியடி போன்று பயன்படுத்தப்படுவது மிகவும் வேதனைக்குரியது. தரையில் கார்ப்பெட் போடாமல், சிறியதாக கண்ணாடி போட்டு சுவற்றில் அழகாக மாட்டி வைக்கலாம். தரையில் போடும் கார்ப்பெட்டில் தண்ணீர் பட்டால் உடன் வெயிலில் போட்டு எடுக்க வேண்டும். மேலை நாடுகளில் வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டிருப்பர். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கும், குளிருக்கும் நடப்பதற்கு மிகவும் சுகமாக இருக்கும். வரவேற்பறையின் பொருட்களை பேப்பரில் குறித்துக் கொண்டு, நடுவில் எத்தனை சதுர அடி இடம் கிடைக்கும் என பார்க்க வேண்டும். சோஃபா, நாற்காலிகள் இவை போக மீதமிருக்கும் இடத்தை கணக்கிட்டு அந்த அளவில் நடுப்பகுதியில் கார்ப்பெட் விரிக்கலாம். பொதுவாக கார்ப்பெட்டுகள் ப்ரவுன், சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களில் நிறைய கிடைக்கின்றன.

இவற்றில் நம் பர்னிச்சர்களின் நிறம், அறைச் சுவரின் நிறம், இதரப் பொருட்களின் நிறம் இவற்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் நல்ல நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம். மேலும் வடிவத்திலும் சதுரம், செவ்வகம், முட்டை வடிவம், வட்டம் என இடத்திற்கேற்றபடி வடிவத்தையும் தேர்ந்தெடுக்கலாம். முழுவதும் வுல் (wool) நெய்யப்பட்ட கார்ப்பெட்டுகள் மிகவும் தரமானவை; உறுதியானவை; அழகானவையும்கூட. வாழ்நாள் முதலீடு போல, ஒரு தடவை நல்லதாக தேர்ந்தெடுத்து, பராமரித்து வந்தால் நீண்ட காலம் பார்க்க நல்ல ரிச் லுக் தரும். கார்ப்பெட்டை மிஷினால் நெய்யப்பட்டவை, கையால் நெய்யப்பட்டவை எனவும் வகைப்படுத்தலாம். கையால் நெய்யப்பட்டவை மிகவும் உறுதியாக இருக்கும். ப்ரவுன் நிறத்தில் கிடைக்கும் வுல் கார்ப்பெட்டுகள் நம் பாரம்பரியத்தையும் காட்டுவன. இப்பொழுது நிறைய சின்தடிக் கார்ப்பெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எப்படியாவது கார்ப்பெட் போட்டு வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைத்தாலோ, அதில் மிகவும் ரசனையும் ஆர்வமும் இருந்தாலோ கண்டிப்பாக குறைந்த விலையில் கார்ப்பெட் போட்டுக் கொள்ளலாம். அவ்வப்பொழுது வேண்டு மானால் வேறு மாற்றிக் கொள்ளலாம். பழைய வீடாக இருந்து, டைல்ஸ் மாற்ற வேண்டிய சிரமம் இருப்பவர்கள், வேறு ஏதாவது கார்ப்பெட்டுகளை போட்டு பழைய தரையை மறைக்கலாம். இப்பொழுது பி.வி.சி முதல் லினோலியம் வரையிலான தரை விரிப்புகள் கிடைக்கின்றன. இவற்றை ஃப்ளோர் டு ஃப்ளோர் என்று சொல்லும்படி தரையோடு தரையாக ஒட்டி விடலாம். இதில் மற்றொரு வசதி என்னவென்றால், நமக்கு வேண்டிய டைல்ஸ் அமைப்பில் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு மார்பிள் தரை போன்று இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அதே போன்ற டிசைனை தேர்ந்தெடுக்கலாம். நிறைய கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் இத்தகைய டைல்ஸ் டிசைன் ஒட்டியிருப்பதை காண முடியும்.

லினோலியம் போன்றவை மொத்த கட்டுகளாக (ரோல்) இருக்கும். நாம் வேண்டிய அளவில் சதுரஅடி கணக்கில் வெட்டி வாங்கிக் கொள்ளலாம். வேண்டாத பொழுது அப்படியே சுருட்டி மடித்து வைத்து விடலாம். நான்-ஓவன்-கார்ப்பெட்டுகளும் இது போல்தான். இவை பிளைன் நிறங்களில் கிடைக்கின்றன. அறையின் அளவை கணக்கெடுத்து, போட வேண்டிய இடத்தின் அளவிற்கு சதுர அடி கணக்கில் வாங்கிப் போட்டு அலங்கரிக்கலாம். பொதுவாக நான்-ஓவன் கார்ப்பெட்டுகளில் சிவப்பு நிறம் அனைத்திற்கும் ஒத்துப் போகும். இவற்றை மாடிப் படிகளுக்குக் கூட போடலாம். ரெட் கார்ப்பெட் வரவேற்பு என்பார்களே, அது போல் சிவப்பில் போட்டு அசத்தலாம். அவ்வப்பொழுது வெயிலில் போட்டு தட்டினால், தூசிகள் பறந்து விடும் அல்லது வாக்யூம் கிளீனரால் தூசியை அகற்றலாம். வுல் கார்ப்பெட் ஓரங்களில் குஞ்சங்கள் நீட்டிக் கொண்டிருக்கும். அவற்றை சரியாக அட்ஜெஸ்ட் செய்தால்தான் பார்க்க அழகாயிருக்கும்.

நிறைய சணல் கார்ப்பெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. வட்ட வடிவிலும் கிடைக்கின்றன. டைனிங் டேபிள் அடியில், வராண்டா, பால்கனி போன்ற இடங்களில் போடலாம். எளிதாக எடுத்து வெளியில் அல்லது வெயிலில் போட்டு தட்டி வைக்க முடியும். அடுத்து நாம் பார்க்கப் போவது லான் கார்ப்பெட். இதை தோட்டம், பால்கனி, வராண்டா, சிட் அவுட் போன்ற இடங்களில் போடலாம். இப்பொழுது இருக்கும் தண்ணீர் கஷ்டத்தில் நாம் எங்கே புல்வெளி வளர்ப்பது? தோட்டம் எங்கே போடுவது? இந்தப் பிரச்சனைக்கான வரப்பிரசாதம் தான் லான் கார்ப்பெட். நிறையப் பேர் அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிக்கிறார்கள். தோட்டம் வைக்க வேண்டும். லான் போட வேண்டும் என்றெல்லாம் சிலருக்கு வாழ்நாள் கனவு இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் இது போன்ற லான் கார்ப்பெட் போட்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வீட்டிற்குள் வராண்டா இருந்தாலோ, அறையை ஒட்டி பால்கனி அல்லது சிட் அவுட் போன்ற இடம் இருந்தால்கூட போதும். எந்த இடத்திற்குப் போட நினைக்கிறோமோ அந்த இடத்தை அளவெடுத்துக் கொண்டு, சரியான சைஸில் போட முடியும். சுமார் மூன்று-மூன்றரை அடி அகலம் இருக்கும். நீளம் நமக்கு வேண்டிய அளவில் வெட்டி வாங்கிக் கொள்ளலாம். பச்சைப் பசேலென்று பார்க்க நிஜ புல்வெளி போன்றே காணப்படும். நிறைய கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் கூட இது போன்ற லான் கார்ப்பெட்டுகளை இப்பொழுது பார்க்க முடிகிறது. வெறும் கார்ப்பெட் மட்டும் போட்டு விடாமல், ஓரங்களில் அழகாக பெயின்ட் செய்யப்பட்ட தொட்டிகள் வைக்கலாம். டெரகோட்டா தொட்டிகள் வைக்கலாம். சிவப்பு பெயின்ட் செய்த தொட்டிகளுக்கும், பச்சை லான் கார்ப்பெட்டிற்கும் காம்பினேஷன் அழகாகவும் ரொம்ப ரிச்சாகவும் இருக்கும்.

ஆனால், நாம் கடந்து செல்லும் வழியாகயிருந்தால் உடையாத பொருட்களை வைத்தல் வேண்டும். லான் கார்ப்பெட்டை வைத்து பலவித கோணங்களில் அலங்கரிக்கலாம். மொட்டை மாடியாக இருந்தால், கண்டிப்பாக ஓரங்களில் செடிகள் வைத்து நடுவில் லான் கார்ப்பெட் விரிக்கலாம் அல்லது ஒரு மூலையை ஒதுக்கிக் கொண்டு லான் கார்ப்பெட் போட்டு, அதன் நடுவில் குழந்தைகள் விளையாடும்படி அமைப்புகள் தரலாம். நடுவில் ஒரு செயற்கை நீரருவி ஏற்பாடு செய்து வைக்கலாம். ஓரங்களில் பொம்மைகள் நிற்க வைக்கலாம். விசேஷ நாட்களில் நம் கற்பனை சக்திக்கு ஏற்றவாறு அலங்கரித்து சீரியல் செட் போடலாம். சாப்பாடு வரவழைத்து குடும்பத்துடன் கொண்டாடலாம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற விழாக்களில் வீட்டில் கலக்கலான கார்ப்பெட்டுகளை விரித்து அலங்கரிக்கலாம்.

தனி வீடாகயிருந்தால் வாசல் கேட் முதல் உள் நுழைவாயில் வரை விரித்து ஒரு பசுமைக் காட்சி தரலாம். இயற்கைச் செடிகளுடன் சேர்த்துப் பார்க்கும் பொழுது, உண்மையிலே நம்மை வியக்க வைப்பவை லான் கார்ப்பெட்டுகள். வேண்டாதபொழுது தட்டி, மடித்து சுருட்டி வைத்து விடலாம். வேறு எங்கும் பயன்படுத்த முடியவில்லை என்று நினைத்தால், ஒரு லான் கார்ப்பெட் வாங்கி பரணில் வைத்துக் கொள்ளுங்கள். விசேஷ தினங்களில் விரித்துப் போட்டு, புல் தரை போன்ற அமைப்பைத் தரலாம். பார்க் போன்று அங்கங்கே யானை, குதிரைகள், பொம்மைகள் நிற்க வைக்கலாம். அதன் மேலேயே மலை போன்ற அமைப்பு செய்து அசத்தலாம். ஒரு துளி மண் கூட பயன்படுத்தாமல் அழகான இயற்கையைக் காட்ட லாம். ஆக பெரிய பெரிய பணக்காரர்கள் என்றில்லை எல்லோருமே லான் போட்டு நம் வீட்டை அழகாக்கி காட்டலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனவெறுப்பு ஊடகங்கள்: நல்லிணக்கத்தின் பெரும் சாபக்கேடு !! (கட்டுரை)
Next post கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு அருகே அமர்ந்த நிலையில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!! (வீடியோ)