அழகான கூடு!! (மகளிர் பக்கம்)
சைலன்ட் ரூம் உலகத்தின் எந்த மூலைக்கு நாம் போனாலும் கடைசியில் நாம், ‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடம் நமது வீடுதான். அது போல் பகலெல்லாம் ஓய்வின்றி உழைத்த பிறகு சிறிது தலை சாய்க்க நாம் தேடும் இடம் நம் வீட்டுப் படுக்கையறைதான். நம் மனமும் உடலும் அமைதி கொள்ளும் அறை என்பதாலோ என்னவோ இதனை ஆங்கிலத்தில் ‘சைலன்ட் ரூம்’ என்கிறார்கள். இங்குதான் நம் அந்தரங்கங்கள் பகிரப்
படுகின்றன. நம் கனவுக் கோட்டைகள் கட்டப் படுகின்றன. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உறக்கத்தில் செலவிடுவதன் மூலம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு அங்குதான் செலவிடுகிறோம். வீட்டின் மற்ற அறைகளில் தொடர்ச்சியாக இவ்வளவு நேரம் செலவிட மாட்டோம். அதனால் படுக்கை அறையின் அழகும் சுத்தமும் ரொம்ப முக்கியம்.
படுக்கை அறையை பொறுத்தவரை தூசி இல்லாமல் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நெடுநேரம் நாம் அங்கிருப்பதால் தூசி நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். நல்ல உறக்கம் வரவேண்டுமானால், படுக்கை வசதி நன்றாக இதமாக இருக்க வேண்டும். படுக்கைக்கு தேவையான மெத்தை சுகமான உணர்வைத் தர வேண்டும். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும், கட்டிலில்தான் பெரும்பாலானோர் படுக்க விரும்புவர். எனவே கட்டிலுக்கு நாம் முதலிடம் தரலாம். சில சமயம் வயதானவர்கள் உயரமான கட்டிலில் ஏறிப் படுக்கவும், இறங்கவும் சிரமப்படுவார்கள். அதையும் கருத்தில் கொண்டு கட்டில் அமைப்பைத் தரலாம். அதற்கு இப்பொழுதெல்லாம் நிறைய உயரத்தை ஏற்றவும் இறக்கவும் முடிகிற வசதியுள்ள படுக்கை அமைப்புகள் கூட உள்ளன. அனைத்து ‘ஸ்டோரேஜ்’ வசதியும் கொண்ட கட்டில்களும் இப்போது கிடைக்கின்றன. அதனுள் படுக்கை சம்பந்தப்பட்ட தலையணை உறை, போர்வைகள், குஷன்கள் ஆகிய அனைத்தையும் அடக்கி விடலாம். இரவு விளக்குகள் பொருத்தப்பட்ட கட்டில்களும் உள்ளன.
குறைந்த இடத்தில் அதிகப்படியான வசதிகள் நமக்குக் கிடைக்கும். நிறைய ‘டிராயர்’கள் இருப்பதால் மருந்து-மாத்திரைகள், இரவில் பத்திரமாக வைக்க வேண்டிய பொருட்கள் ஆகிய அனைத்தையும் அதில் வைத்து விடலாம். இத்தகைய கட்டில் போடும் பொழுது ‘சைடு டேபிள்’ அவசியமில்லை. நம் இடவசதியை பொறுத்து தேவையை பொறுத்து சைடு டேபிள் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்.கட்டில் போடும் பொழுது, கதவை ஒட்டிப் போடாமல், ஓரளவு நான்கு புறமும் கொஞ்சமாவது இடைவெளி விட்டு போடலாம். அப்பொழுதுதான் தினமும் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள முடியும். சில பேர் துணி மூட்டைகள், தேவைப்படாத பொருட்கள், பேக்குகள், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் கட்டிலுக்கு அடியில் போட்டு வைப்பார்கள். ஆனால் கட்டில் அடியில் அதிகப்படியான பொருட்கள் சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கட்டிலின் அடிபாகம் முழுவதையும் ‘ஸ்டோரேஜ்’ தட்டுகள் அமைத்து பயன்படுத்தலாம். ஜன்னல் அருகில் கட்டில் போட வேண்டாம். இதன் மூலம் செல்போன் போன்ற பொருட்கள் திருடுப் போவதை தடுக்க முடியும்.
படுக்கையறை என்று பார்த்தால் அடுத்து முக்கியமானது ‘வார்ட்ரோப்கள்’தான். சுவர் முழுவதும் மரத்தினால் ஆன பீரோ போன்ற அமைப்புகளைத்தான் பொதுவாக பலர் விரும்புவர். ஒரு பக்கம் முழுவதும்
சுவரின் மேலிருந்து கீழ் வரை வார்ட்ரோப் அமைக்கலாம். மேல் பாகம் முழுவதும் முக்கியப் பொருட்களை வைத்து செய்யலாம். பீரோ சைஸில் அமைப்பதை ‘பீரோ’ போன்று பயன்படுத்தலாம். சிலவற்றை தனித்தனி அறைகள் போன்று அமைப்பதால், வேண்டிய ஒரு பாகத்தை மட்டும் திறந்து மூட வசதியாக வைக்கலாம். ஒரு பக்கம் முழுவதும் அதுவே ஒரு அலங்காரமாக அமைந்து விடும். எப்போதுமே நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் எந்த அமைப்பும் இருக்க வேண்டும். அதே சமயம் அது அறையின் அழகையும் கெடுக்காதவாறு இருத்தல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அதுவே அந்த அறையின் உள் அலங்காரமாக அமைய வேண்டும். இது வீட்டு அலங்கார அமைப்பின் முக்கிய நுணுக்கங்களில் ஒன்று.
டிரஸ்ஸிங் டேபிளை சுவர் அலமாரிக்கு நடுவில் அமைத்துக் கொள்ளலாம். கீழே அறைகள் அமைத்து அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். அடுக்கு மாடிக் கட்டடங்களில் கூட கட்டுமான நிறுவனங்கள் வார்ட்ரோப்க்கான இடம் தந்துதான் அமைக்கிறார்கள். எப்படிப்பட்ட சிறிய அறையாக இருந்தாலும் ‘வார்ட் ரோப்’ மற்றும் ‘லாஃப்ட்’ அவசியம். அப்பொழுதுதான் குடும்ப உறுப்பினர்களின் ஆடைகள், அணிகலன்கள் பத்திரமாக வைத்துப் பராமரிக்க முடியும். அலமாரி அளவைப் பொறுத்து, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொருவருக்கும் உள் அறைகள் ஒதுக்கிக் கொண்டு, ஆடைகளை அடுக்கி வைக்கலாம். சில சமயங்களில் ஒரேயொரு படுக்கை அறை இருப்பவர்கள், பிள்ளைகளுக்கும் அதில் இடம் ஒதுக்கித் தர வேண்டி இருக்கும். அது கொஞ்சம் சிரமம்தான். அதற்கேற்றபடி வசதிகள் செய்து கொள்ள வேண்டும். இரண்டு படுக்கையறைகள் இருந்தால் பிள்ளைகளுக்குத் தனியாக வசதி செய்து தரலாம். இல்லாவிடில் இருக்கும் அறையில் ஒரு பகுதியை படிக்க, விளையாட, கம்ப்யூட்டர் வைக்க என அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும். ஒரே அறையாக பெரிய அறையாக இருப்பின் ஒரு ஓரத்தில் படிக்க மேசை நாற்காலி போடலாம். அல்லது நீள மேசை அமைத்து ஒரு பக்கம் கணினியை வைக்கலாம்.
சிறிய இடங்களுக்கு மேசையுடன் ஒட்டிப் போடும் நாற்காலி போடலாம். அதாவது பெரிய சுழலும் நாற்காலிக்கு பதிலாக கைப்பிடியில்லாத சிறிய நாற்காலி போட்டுக் கொள்ளலாம். இது இடத்தை
மிச்சப்படுத்த மட்டும்தான். வசதி என்று பார்த்தால் நல்ல குஷன் அமைப்பு கொண்ட சுழலும் நாற்காலிகள் கணினி அருகே அமர்ந்து வேலை செய்ய வசதியாகயிருக்கும். மேலும் இடம் இருந்தால், ஒரு ரெக்ளைனர் கூட போட்டு வைக்கலாம். அசதியாக இருக்கும் சமயங்களில் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாகயிருக்கும். மேலும் அதில் சுலபமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளதால் கால்களை நீட்டி, தலையை சாய்த்துப் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க முடியும். குறிப்பாக, கொஞ்சம் வயதானவர்கள் இருந்தால் ரெக்ளைனர் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈஸி சேர் போன்றதொரு ஆடம்பர சுகம் தருவது ரெக்ளைனர். இதை பகலில் சோஃபா நாற்காலி போன்றும் பயன்படுத்தலாம். இடத்தை மிச்சப்படுத்த சோஃபா கம்ஃபோர்ட் போன்றும் அமைத்துக் கொள்ளலாம்.
அடிபாகம் மடித்து அட்ஜெஸ்ட் செய்து விட்டால் இருக்கையாக பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் நம் இடத்திற்கேற்றபடி, நம் கையிருப்பைப் பொறுத்து வாங்கிக் கொள்ளும்படியான நிறைய பொருட்கள் வந்து விட்டன. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது அனைவருக்குமே தெரிகிறது. இதெல்லாம் காலத்தின் கட்டாயமாகி விட்டது.இன்று பல வீடுகளில் ஏ.சி. வசதி இருக்கிறது. ஏ.சி. அறையாக இருந்தால், நல்ல கனமான திரைச்சீலைகள்
சுவரின் நிறக்கலவையிலேயே அழுத்தமான நிறங்களில் போடலாம். நிறைய சுருக்கங்களுடன் திரைச்சீலைகளை தொங்கவிட்டால் மிக அழகாக இருக்கும். சுவரின் நிறக்கலவையில் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’ கூட போடலாம். நல்ல பட்டை பட்டையாக ரிப்பன்கள் போன்று காணப்படும் ஜன்னல் அலங்காரம் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’. நிறைய அலுவலகங்கள், வீடுகளின் வரவேற்பறைகள் போன்ற இடங்களில் இத்தகைய ஜன்னல் அலங்காரத்தை பார்க்க முடியும். மேலும் இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. சுவர் ஜன்னலுடன் ஒட்டி காணப்படும். நல்ல ரிச் லுக் தரும். மேல்மாடி அடுக்கு வீடாகயிருந்தால், சூடு அல்லது உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த ‘ஃபால்ஸ் சீலிங் போடலாம். ஃபால்ஸ் சீலிங் என்பது வசதிக்காக மட்டுமல்ல, அழகுக்காகவும்தான். பொதுவாக ஃபால்ஸ் சீலிங் போட்ட அறைகளை பார்த்தாலே ரொம்ப அழகாகத் தெரியும். இவற்றிலும் வெறும் வெள்ளை மட்டுமல்லாது பல டிசைன்களிலும் இப்போது ஃபால்ஸ் சீலீங் கிடைக்கின்றன. இதுவும் சதுர அடிக் கணக்கில் அளவிடப்பட்டு அதற்கேற்ற விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.ஃபால்ஸ் சீலிங்’ இடையிடையே விளக்குகள் பொருத்தி அறையை மேலும் அழகாக்கலாம்.
ஸ்பாட் லைட் போன்று அதன் இடையிடையே போடலாம். ஃபால்ஸ் சீலிங் போடப்பட்ட அறைகள் பார்க்க பெரிதாகவும் காட்சி அளிக்கும். நான் முன்பு சொன்னது போல் பி.வி.சி.யில் கூட ஃபால்ஸ் சீலிங் செய்கிறார்கள். முன்பெல்லாம் அதிகமாக தெர்மகோல் தாள் போட்டார்கள். காலத்திற்கேற்றபடி அழகழகான பி.வி.சி. ஃபால்ஸ் சீலிங் போடப்படுகின்றன. லாஃப்ட் மற்றும் அலமாரிகள் முழுவதும் கூட சேர்த்து அமைக்கலாம். மேட்சிங் ஆக அறை முழுவதையுமே கூட நம் கையிருப்புக்குள்ளேயே கொண்டு வரலாம்.அதே மாதிரி பிளஷ் கதவுகள் கூட பி.வி.சி.யில் உள்ளன. படுக்கையை ஒட்டிய சுவரில் அருவி போன்ற படங்கள் ஒட்டலாம். எங்கெல்லாம் பசுமையை புகுத்த முடியுமோ அங்கெல்லாம் பசுமையை காட்டலாம். ஆனால் கட்டாயம் படுக்கையறையில் இருக்கும் செடிகளை இரவில் அப்புறப்படுத்துவது நல்லது. அவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு இரவில் நமக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம்.அறையையொட்டி பெரிய பால்கனியோ, வராண்டாவோ இருந்தால் ஒற்றை ஊஞ்சல் போடலாம். மூங்கில் மரத்தால் ஆன ஊஞ்சல்கள் பல சாலையோரக் கடைகளில்கூட கிடைக்கின்றன.
ஒரு பக்கம் மேசை போல் சுவருடன் நீளமாக டைல்ஸ் போட்டு வைத்தால் இஸ்திரி செய்ய பயன்படுத்தலாம். இஸ்திரி டேபிள் கூட போட்டு வைக்கலாம். வேண்டியபொழுது பயன்படுத்திவிட்டு பின் மடித்து வைத்துக் கொள்ளலாம். செடிகள் வைக்க விரும்பினால், அழகிய பெயின்ட் செய்யப்பட்ட வண்ணமயமான தொட்டிச் செடிகளை வைக்கலாம். இயந்திரமயமான இந்த உலகில் இருக்குமிடத்தை ரசனையாக அமைக்கப் பாருங்கள். மனதினை இன்பமாக வைத்திருக்க இது ஒரு வழி என்று போகப் போகப் புரியும்.(அலங்கரிப்போம்!)எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்
Average Rating