சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா? (மருத்துவம்)
ஒரு கவளம் சோறு… ஒரு மடக்கு தண்ணீர்… ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் இருந்தால்தான் உணவே உள்ளே இறங்கும் பலருக்கும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது போன்ற பெரியவர்களின் எச்சரிக்கைகள் எந்த அளவு சரியானவை? விவரிக்கிறார் குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோதிபாசு!
‘‘பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. தண்ணீர் அத்தியாவசியம்
என்பதால், அது பற்றி பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர், உண்பதற்கு முன்பு தண்ணீர் அருந்தும்போது குடல் விரிவடையும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேவைக்கு அதிகமாக சாப்பிடுவார்கள் என்று கூறுகின்றனர். மாறாக, சிலர் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர். சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம். சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.
எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டே தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படி செய்வதால் புரையேறும். சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்,சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்த அல்லது மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம்.திரவம் என்ற அடிப்படையில், தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.
60 முதல் 70 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் வெளிவிடும்
மூச்சுக் காற்று மூலமாக அரை லிட்டர் அளவு நீர் வெளியேறும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், வியர்வை ஏராளமாக வெளியேறும் உடல்வாகு கொண்டவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது.
இதயம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர் அறிவுறுத்திய அளவுக்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவர் கூறும் அளவையே தவறாமல் பின்பற்ற வேண்டும். இவர்கள் தாகம், நாவறட்சி, சாப்பிட்ட பின் அதிக அளவு நீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவற்றை காரணம் கூறி, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’
Average Rating