அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ !! (கட்டுரை)
எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது.
உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன.
இக்கணத்திலும், அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல், மௌனியாகவே ஏராளமான மனித மனங்கள் இருக்கின்றன.
அடக்குமுறையையும் அநியாயத்தையும் ஆதரிக்கும் குரல்கள் இப்போது, அமெரிக்காவில் நடப்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்;கும் நகைச்சுவையும் இங்கு நடந்தேறுகிறது. மறவாதீர்! ஓர் அநியாயத்தை ஆதரிக்கும் சொற்கள், எல்லா அநியாயங்களையும் ஆதரிக்கின்றன.
கடந்தவாரம், அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில், 46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவரைக் கைது செய்த போது, ஒரு பொலிஸ்காரர், அவரது தொண்டையில் முழங்காலை வைத்து, ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால், அவர் இறந்துபோனார்.
பொலிஸின் கோரப்பிடியில் இருந்தபோது, ஃபுளோய்ட் “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று கெஞ்சினார். ஆனால், அவை செவிடன் காதில் விழுந்த சொற்களாகின. இன்று அவை, அமெரிக்காவை வழிநடத்தும் போராட்டத்தின் குறியீடுகளாகியுள்ளன.
அவரைப் படுகொலை செய்ததற்கு எதிராக, கடந்த சில நாள்களாக அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவைத் தாண்டிப் பல நாடுகளுக்கும் பரவியுள்ளன.
ஆனால், ஆர்ப்பாட்டக்கார்களை வன்முறை கொண்டு அடக்க முயல்கிறது அமெரிக்கா. இது, இன்றைய பிரதான பேசுபொருளாகி உள்ளது.
இனவாதமும் நிறவெறியும் இன்று, உலகெங்கும் புதிய வடிவில் மீள்தகவமைப்புக்கு உள்ளாகி உள்ளன. தேசியவாதத்தின் எழுச்சியும் அதிவலதின் செல்வாக்கும், பாசிசம் மெதுமெதுவாக நிறுவன மயப்படுத்தப்படுதலும் எம் கண்முன்னே அரங்கேறுகிறது.
மேற்குலகில், முன்னெப்போதையைக் காட்டிலும் அதிவலதுசாரிகளே, ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். மக்களே, அவர்களை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்கிறார்கள்.
விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தேசிய இனங்கள் கவனங்குவிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை, இவ்வாரக் கட்டுரை பேச முயல்கிறது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகஒழுங்கில், தேசியவாதத்தின் மீள்எழுச்சி எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, கடந்தவாரப் பத்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இன்று அது நிகழ்ந்துள்ளதுளூ அமெரிக்கா இன்று பற்றி எரிகிறது.
இனவாதமும் நிறவெறியும்: நீண்ட முடிவுறாத வரலாறு
எங்கே, அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இதுவே, மனிதகுலத்தின் வரலாறு கூறும் செய்தி.
மனித இனத்தின் மீட்சி, மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும் அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்புக்குள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன், தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான்.
இன்று, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், தன்னளவில் எவ்வளவு இனவாதியாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்திப்பதில்லை. ஏனெனில், இனவுணர்வு பற்றிப் பேசுவதற்கு, யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை; சிலசமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே, இனவுணர்வு இருந்துள்ளது.
மனிதர்கள் மத்தியில், இனவுணர்வுகள் மற்றவர்களுக்கு ஆபத்தாக அமையாத வரையில் சிக்கலில்லை. ஆனால், தன் இனத்தின் நலன்கள், மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும், தன் இனத்தின் இயல்புகளை இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும், இனவுணர்வு இனவாதமாகிறது.
இது, மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, பண்பாட்டு, நடைமுறை வேறுபாடுகளை, ஏற்றதாழ்வுகளாக வேறுபடுத்தல், பிரச்சினைகளை இனரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, இனவாதம் தன்னை வேறுவேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. காலப்போக்கில இனவாதம் இனவெறியாகிறது.
ஒரு சமுதாயம், முன்னேறிய ‘நாகரிகமான’ சமுதாயம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனிய ஆரிய இனவெறி, ஜார் மன்னனின் ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம், பின்தங்கிய சமுதாயங்களுக்கு உரியவையல்ல.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும், மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.
அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் அயராத போராட்டம், வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில், நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களில் தொடங்கி, பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து, இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி, சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது.
‘எனக்கொரு கனவுண்டு’ என்ற புகழ்பெற்ற பேச்சை, மார்ட்டின் லூதர் கிங் பேசி 57 வருடங்களின் பின்னரும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறி, மோசமான முறையில் அரங்கேறுகிறது.
அமெரிக்காவில் கறுப்பின மக்களினதும் ‘ஹிஸ்பானிக்’ (ஸ்பானிய மொழிபேசும் இலத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரதும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
மேற்கொள்ளப்பட்ட சிறிய சீர்திருத்தங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரத் தவறியுள்ளன. இந்த அனுபங்கள், இலங்கைத் தமிழர்களுக்குச் சில செய்திகளைச் சொல்கின்றன. இதை, மூன்று அடிப்படைகளில் நோக்கவியலும்.
1. தேசியப் பிரச்சினையை, தேசியவாதக் கண்ணோட்டத்தில் நோக்குவோரைத் தவிர்க்க இயலாது, பிற தேசிய இனங்களது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை மட்டுமன்றி, தமது தேசிய இனத்தின் ஜனநாயக, அடிப்படை உரிமைகளையும் மீறும் நிலைப்பாடுகளை அவர்கள் எடுத்துள்ளனர். ஒடுக்கும் தேசிய இனத்துக்கு மட்டுமன்றி, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் இது பொருந்தும். சமத்துவக் கொள்கைகளை மறுத்து, இன ஆதிக்க நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் தேசியவாதப் போக்கு, தேசியவாதத்தின் அடியாழத்தில் உள்ள அதன் முதலாளி அதிகார நிலைப்பாட்டிலிருந்து வருகிறது.
2. சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வெறுமனே பிரிந்துசெல்லும் உரிமையென மிகையாக எளிமைப்படுத்தி, அவ் அடிப்படையில், பிரிவினையின் விரிவான தாற்பரியங்களை மறந்து, பிரிந்துசெல்லும் உரிமையை வலியுறுத்தும் ஆபத்தான போக்கு குறுந் தேசியவாதிகளிடம் உள்ளது.
மறுபுறம், அதேயளவு ஆபத்தாக, எந்தச் சிறுபான்மைத் தேசத்தினதும் தேசிய இனத்தினதும் சுயநிர்ணய உரிமையை மட்டுமன்றி, எவ்வித அதிகாரப் பரவலாக்கத்தையும் மறுக்கும் போக்குப் பேரினவாதிகளிடையே உள்ளது. எவ்வகையான அதிகாரப் பரவலாக்கமோ சுயாட்சியோ, பிரிவினையை நோக்கிய ஒரு நகர்வே என, அவர்கள் பொய்யாக விவாதிக்கின்றனர். பிரிவினை, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தும் என்ற பேரில், சிறுபான்மைத் தேசங்களதும் தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜனநாயகவாதிகள் சிலரும் உள்ளனர்.
3. இலங்கையில் தமிழர், எதியோப்பியாவில் எரித்திரியர் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பிய தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. பொஸ்னியர், கொஸோவர் விடயங்களைப் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பினோர், ஏகாதிபத்தியத்துக்கு அடிமையான சந்தர்ப்பங்களும் உள்ளன. அவர்கள், புதிதாக ஏகாதிபத்தியத்துக்கு அடிமையானதன் மூலம், முன்னாள் ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து பெற்ற விடுதலை பொருளற்றதாயிற்று.
‘கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை’: சில கேள்விகள்
இன்று உலகெங்கும், ‘கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை’ (Black Lives Matter) என்ற சுலோகம், மீண்டும் முக்கிய போராட்டக் குறியீடாகவுள்ளது. 2013ஆம் ஆண்டு தோற்றம் பெற்று, ஓர் இயக்கமாக மாறியுள்ள இந்தப் போராட்டம், இப்போது கறுப்பர்களுக்கு அதிகாரத்தில் பங்கு, அதிகமான கறுப்பின அரசியல்வாதிகளை உருவாக்குதல் என்ற திசையில் இயங்குகிறது.
இன்னொரு தளத்தில், இது அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. ஆனால், இவை அமெரிக்க-ஆபிரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தக்கவைக்கவும் போதுமானவையல்ல.
இன்று, அமெரிக்க அரசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை, நடத்துவதிலும் மேற்பார்வை செய்வதிலும் கறுப்பின அமெரிக்கர்களும் பங்காற்றுகிறார்கள். கறுப்பினப் பொலிஸார், கறுப்பின மேயர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை அதிக வலுவுடன் எதிர்த்துப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக, கறுப்பினத்தவரான பராக் ஓபாமா எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார். ஆனால், அவரது காலத்திலும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறை, மோசமான முறையில் அரங்கேறியது. எனவே, பதவிகளைப் பெறுவது வெறுமனே உரிமைகளைப் பெறுவதற்கான வழியாகாது.
இன்று அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. வேலையிழப்புகள், பொருளாதார அசமத்துவம், நீதியின்மை, உரிமை மறுப்பு, சமூகநல வெட்டுகள், கொவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி எனப் பல விடயங்களின் ஒத்துமொத்த வெளிப்பாடே, இந்தப் போராட்டங்கள் எனலாம்.
இவை, அரசுக்கும் ஆளும் அதிகார அடுக்குகளுக்கும் எதிரான வலுவான எதிர்வினை ஆகும். இதைக் ‘கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை இயக்கம்’ புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போதைய எதிர்வினைகளை வெறுமனே கறுப்பு எதிர் வெள்ளை என்று அடையாளப்படுத்தல் மிகப்பாரிய தவறு. இது உண்மையில், உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான போராட்டம்; உரிமைகளுக்கான போராட்டம்.
எனவே, குறுகிய நோக்கிலிருந்து இந்தப் போராட்டம் விடுபட்டு, பரந்துபட்ட உழைக்கும் மக்களின்; விடுதலைக்கானதாக விரிவடைய வேண்டும்.
அமெரிக்காவில் பற்றிய தீ, இன்று உலகின் பல நாடுகளுக்குப் பல்வேறு வடிவங்களில் பரவுகிறது. ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, கனடா, இஸ்ரேல், பலஸ்தீனம், டென்மார்க், அவுஸ்திரேலியா என, எல்லா நாடுகளிலும் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை, தீவிரவலது சக்திகளையும் அடக்குமுறைகளையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளையும் சேர்த்தே எதிர்த்தன.
இந்தப் போராட்டத்துக்கான எதிர்வினைகள் (குறிப்பாக இலங்கையர்கள்/ஈழத்தமிழர்கள்) மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கின்றன:
1. இனவாதத்தை வெளிப்படையாகவே பேசுவோர், கறுப்பின அமெரிக்கர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
2. புலம்பெயர்ந்து அகதி அஸ்தஸ்துக் கோரி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றோர், அந்நாட்டுக்கு அகதிகள் வருவதை எதிர்க்கிறார்கள். போராட்டக்காரர்கள் நாட்டின் எதிரிகள் என்கிறார்கள்.
3. ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் இன்னொரு சமூகம் ஒடுக்கப்படும் போது, ஒடுக்குமுறையாளனுக்கு ஆதரவு நல்குகிறார்கள்.
இந்தப் போராட்டம், ஈழத்தமிழர்கள் விடயங்களை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக ஒரு சமூகம் விளங்கிக் கொள்ளாதவரை, விடுதலை சாத்தியமல்ல. அமெரிக்கக் கறுப்பின மக்களது உரிமையை மறுக்கும் அமெரிக்காவின் தயவில், ஈழத்தமிழர் விடுதலையை நாடிச் சொல்வோர், எவ்வளவு பெரிய அயோக்கியர்கள்.
Average Rating