இராணுவ ஆட்சிக்கு எதிரான குரல்கள் !! (கட்டுரை)
முன்னொரு போதும் இல்லாதளவுக்கு, இலங்கையில் இராணுவ ஆட்சி பற்றிய கதைகள், இப்போது அதிகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
முப்பதாண்டுப் போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பிந்திய ஆறு ஆண்டுகளிலும் சரி, இல்லாதளவுக்கு இராணுவ ஆட்சி பற்றி இப்போது பேசப்படுகிறது.
முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அரச நிர்வாகக் கட்டமைப்புகளில் இராணுவப் பின்புலம் கொண்டவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளதே, இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று கொண்டிருப்பதான விமர்சனங்கள் அதிகளவில் வெளியாகி வருவதற்குக் காரணம் ஆகும்.
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்ட போதே, அவர் வெற்றி பெற்றால், நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவார் என்று, அப்போது ஆளும்கட்சியாக இருந்த இப்போதைய எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
அப்போது, அந்த எச்சரிக்கைகளைத் தற்போதைய ஆளும்கட்சி முற்றாகவே மறுத்திருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ, ஜனநாயக ரீதியாகவே செயற்படுவார் என்று உறுதியும் அளித்திருந்தது.
ஆனால், ஆரம்பத்தில் சற்று ஜனநாயகவாதியாகக் காண்பித்துக் கொண்டாலும், இப்போது, தன்னை ஓர் இராணுவ ஆட்சியாளரைப் போல காட்டிக் கொள்வதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்புகிறார்.
முக்கிய நிகழ்வுகளில் அவர், சிவில் உடையில் இராணுவ விருதுகளை அணிந்து கொண்டு, தனக்குள் இருக்கும் ‘இராணுவ மிடுக்கை’ அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
முன்னர் அவர் மீது, ஒரு ஜனநாயகவாதி என்ற போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அது, அவர் தனக்குத் தானே போர்த்திக் கொண்டதா அல்லது, அவரது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால், போர்த்தப்பட்டதா என்ற வினாக்கள் உள்ளன.
அந்த ஜனநாயகப் போர்வைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நீண்டகாலத்துக்கு ஒளித்திருக்க முடியவில்லை. அதனால் தான் அவர், அந்தப் போர்வைக்குள் இருந்து கணிசமாக இப்போது வெளிவந்து விட்டார்.
அவர், இப்போது தனக்கு விசுவாசமான சிவில் அதிகாரிகளைத் தேடுவதை விட, இராணுவ அதிகாரிகளைத் தன்னருகில் வைத்திருப்பதைத் தான் அதிகம் விரும்புகிறார்.
இராணுவ அதிகாரிகளைக் கொண்டே, தான் நினைத்தவற்றைச் சாதிக்கலாம், தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார். அதற்காக அவர், எங்கெல்லாம் தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும்; தான் நினைத்தவாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ, அங்கெல்லாம், சீருடை அதிகாரிகளை நிறுத்தத் தொடங்கி விட்டார். இதன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி வருகிறார்.
அவர், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரோ, அந்தக் கட்சியின் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய தலைவரோ அல்ல. அவ்வாறான ஒருவர், அரசியலில் நிலைபெறுவது கடினம்.
உறவுரீதியாக அதிகாரம் செலுத்தும் நிலை இருந்தாலும், அரசியலில் எதிரிகளும் நண்பர்களும் எப்போது உருவாகுவார்கள் என்பதை, யாராலும் கணிக்க முடியாது.
எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னைச் சுற்றி ஒரு சீருடைக் கூட்டத்தை வைத்திருப்பதன் மூலம், பாதுகாப்பான நிலையில் இருக்க முடியும் என்று நம்புவதில் ஆச்சரியமில்லை.
அரசியல்வாதிகளை விட, அதிகாரிகள் தான் முக்கியமானவர்கள். அதிகாரிகளின் கைகளில் உள்ள அதிகாரமும் அதைப் பயன்படுத்துவதற்கேற்ற தருணத்தை, அவர்களே சரியாகத் தெரிந்தவர்களாக இருப்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குச் சாதகமானது அல்ல. அதனால் தான், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகள் மத்தியில், அதிகளவில் சீருடைத் தரப்பினரை உட்புகுத்திக் கொண்டு வருகிறார்.
இது, இரண்டு விதமான தரப்புகளுக்கு, எரிச்சலைக் கொடுக்கக் கூடியது. முதலாவது, கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவியில் அமர்த்துவதற்குக் காரணமான அரசியல் சக்திகள். இரண்டாவது, அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் சிவில் அதிகாரிகள்.
ஆட்சியைப் பிடிக்கின்ற எல்லாக் கட்சிகளுமே, அரச நிர்வாகத் துறைகளில் தமது ஆதரவாளர்கள், தமக்கு நெருக்கமானவர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறான பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அரசியல் கட்சிகளுடன் ஒட்டிக் கொள்பவர்கள் அதிகம். அதிகாரத்தைப் பிடித்தால், குறிப்பிட்ட பதவிக்குப் பேரம் பேசப்படுவதும் உண்டு.
அதை நம்பி, தேர்தலில் ஆதரவு அளிப்பது, வாக்குகளைப் பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்வது, பிரச்சாரச் செலவுகளைச் செய்வது என்று, பல்வேறு வகைகளில் உதவுவோர் இருப்பார்கள்.
அதைவிட, அரசியல்வாதிகளின் உறவினர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் பல்வேறு செல்வாக்கான பதவிகளைக் குறிவைத்துச் செயற்படுவார்கள்.
அரச திணைக்களங்கள், அதிகார சபைகள், நிறுவனங்களின் தலைவர் பதவிகள், பணிப்பாளர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளைப் பிடிப்பது தான், இவர்களின் இலக்காக இருக்கும்.
அதைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளில், அவர்கள் எதிர்பார்ப்பதை அடைந்து விட முடியும்.
தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதற்காகப் பாடுபட்ட பலரும், அவ்வாறான இலக்குடன் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், அவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள், திருப்தியைக் கொடுத்திருக்காது.
முக்கியமான துறைகளில், அவர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளையும் சேவையில் உள்ள படை அதிகாரிகளையும் நியமித்து வருவதால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.
நாடு இராணுவ ஆட்சி சூழலுக்குள் செல்வது பற்றி, அவர்களைப் பொறுத்தவரையில் கவலைக்குரிய விடயம் அல்ல. ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள், இந்த இராணுவ மயமாக்கலால் பாதிக்கப்படுகிறது. அது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
அதுபோலவே, ஒரு நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில், அரசியல்வாதிகளை விட, சிவில் அதிகாரிகளுக்குத் தான் பங்கு அதிகம். அவர்கள் தான், திட்டமிடல்களைச் செய்வது தொடக்கம், நடைமுறைப்படுத்துவது வரைக்கும் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடியவர்கள்.
கடும் போட்டிகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டு, போராடிப் போராடி மேல்நிலைக்கு வரும் நிர்வாக சேவை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகள், எப்போதும் அவர்களுக்கு ஓர் இலக்காகவே இருந்து வரும்.
அவர்களின் கல்வி, அனுபவம், முதிர்ச்சி ஆகியவற்றுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளாகவே, அவர்கள் அவற்றைக் கருதுகிறார்கள். அதற்கான தகுதியும் திறமையும் தமக்கு இருக்கிறது என்று, உறுதியாக நம்புகிறார்கள்.
அவ்வாறானவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின், குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கைள் திருப்தியைக் தராது.
ஏனென்றால், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளை, இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தட்டிப் பறித்துக் கொண்டு போகிறார்கள். இந்த நிலை நீடித்தால், ஒட்டுமொத்தச் சிவில் நிர்வாகப் பதவிகளும் சீருடை அதிகாரிகளால் நிரப்பப்பட்டு விடும். அவர்களுக்குக் கீழ், தாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டிய நிலை வந்து விடும் என்பது, சிவில் அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த இரண்டு தரப்புகளையும் பகைத்துக் கொண்டு தான், அரசாங்கம் சிவில் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறது.
இந்தநிலையில் தான், இராணுவ ஆட்சிக்குள் நாட்டைக் கொண்டு செல்கிறார் கோட்டா என்ற குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
உண்மையில், நாட்டின் பிற பகுதிகளை, வடக்கில் தான் கூடுதல் இராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றும் கூட.
போர்க்காலத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த பின்னரும், கடுமையான இராணுவ ஆட்சிக்குள் இருந்து வந்தது வடக்குத் தான்.
2015இற்குப் பின்னர், கொஞ்சம் தளர்வுகள் இருந்தாலும், மீண்டும் அந்தப் பழைய சூழலுக்குள், நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. அதற்குக் கொரோனா வைரஸும் கைகொடுத்திருக்கிறது.
இப்போது, வடக்கில் இராணுவ ஆட்சி பற்றிப் பெரிதாக யாரும் குரல் எழுப்புவதில்லை. அவ்வாறு குரல் எழுப்புகின்றவர்களையும் தேர்தலுக்காகக் கொக்கரிக்கிறார்கள் என்று கருதுகின்ற சூழலும் இருக்கிறது.
ஆனால், தெற்கில் தான் இப்போது இராணுவ ஆட்சி பற்றி, அதற்கு எதிராக அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; குரல் எழுப்புகிறார்கள்.
இராணுவத்தில் பெரும்பான்மையாகச் சிங்களவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையின மக்களைப் பெரும்பாலும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் கூட, இராணுவ ஆட்சியை எதிர்க்கின்றன.
அங்கு இராணுவ ஆட்சி பற்றிக் கூறப்படும் எச்சரிக்கைகளை, வெறும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டாகப் பலரும் பார்க்கின்ற நிலை உள்ளது. அதில், நியாயம் இருந்தாலும் உண்மையான இராணுவ சூழலுக்குள் நாடு தள்ளப்பட்டு வருகிறது என்ற உண்மையை, யாரும் மறுக்க முடியாது.
இந்த இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, இப்போது தெற்கில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகள், சிங்களப் பேரினவாத வாக்காளர்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப்படப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் போது, அதற்குச் சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடை, தேர்தலில் வெளிப்படும்.
அது, தற்போதைய அரசாங்கத்துக்கு சாதகமானதாக இருந்தால், இராணுவ ஆட்சிக்கு சிங்கள மக்கள் பச்சைக் கொடி காண்பித்து விட்டனர் என்று அர்த்தப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
Average Rating