காணிப் பிரச்சினையிலும் தொல்பொருள் பாதுகாப்பிலும் பாகுபாடற்ற அணுகுமுறை தேவை !! (கட்டுரை)
முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில்,இலங்கையில் பரவலாகவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாகவும், நீண்டகாலமாகத் தீர்த்து வைக்கப்படாமல் இருக்கின்ற ஒரு முக்கிய பிரச்சினையாக காணிப் பற்றாக்குறையையும் பிணக்குகளையும் குறிப்பிடலாம்.
காணிப் பிரச்சினைகளுக்கும் தொல்பொருள், வனவளத்தைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கும் இடையில்,சிக்கலான தொடர்புகள் இருக்கின்றன.
இலங்கையின் வரலாற்றை, மேலோட்டமாகப் பார்க்கின்ற ஒரு கூட்டம், சிறுபான்மையினரை ‘வந்தேறு குடிகள்’ என்று அழைக்கவே பிரியப்படுகின்றது. ஆனால், தொல்லியல், தொன்மை அடிப்படையில் சரித்திரத்தின் மூலவேர்களைத் தேடிப் போனால், இப்போது இந்த நாட்டில் வசிக்கின்ற பிரதான இனக் குழுமங்கள் யாருமே, உரிமை கொண்டாட முடியாத நிலை வந்தாலும் வரும் என்று, விடயமறிந்தோர் ஹாஸ்யமாகக் கூறுவதுண்டு. உண்மைதான்! இயக்கர், நாகர்கள், வேடுவர் அல்லது, வேறு யாரும் குழுவினரோதான், இதன் ஆதிக்குடிகளாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமாகும்.
உண்மையில், இந்த மண்ணுக்கு அடியில் புதையுண்டு கிடக்கின்ற தொல்பொருள்கள்,நமது முன்னோரின் வரலாற்றைப் பறைசாற்றுகின்றனவாகும். அவர்கள், எந்த மதம் சார்ந்தவர்கள் என்பது, இங்கு இரண்டாம் பட்சமானது.
நமக்கு முன்னே, இந்த மண்ணில் வாழ்ந்தவர்களின் நாகரிகங்கள்,நடத்தைக் கோலங்கள்,வாழ்வியல் முறைமைகள்,அடையாளங்களை,அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்ற பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில்,அவற்றைப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இலங்கையர் எல்லோருக்கும் இருக்கின்றது.
நாட்டில் வாழும், சாதாரண மக்களின் இன்றைய தேவை, இந்த மண்ணின் மேற்பரப்பில் வாழ்கின்ற பல்வேறு இன, மத, கலாசாரங்களைக் கொண்ட மக்கள், நிம்மதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டும் என்பதே தவிர,மேற்சொன்னது உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும், தற்போது இருக்கின்ற ஒற்றுமை குலைந்து போவதைச் சாதாரண மக்கள் ஒருக்காலும் விரும்பவேயில்லை.
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இலங்கை என்ற வகையில், பௌத்த இதிகாசங்களுக்கும் தொல்பொருள்களுக்கும் சற்று அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுவது யதார்த்தமானதே.
ஆனால்,சமகாலத்தில் தமிழர்கள், முஸ்லிம்களின் தொல்பொருள்களையும் பாதுகாப்பதற்கு, அரசாங்கம்; நடவடிக்கை எடுக்க வேண்டும். அநேகமான அரசாங்கங்கள், இதுவிடயத்தில் சிறுபான்மைச் சமூகங்களை மகிழ்ச்சிப்படுத்தத் தவறிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, முழு மூச்சாகச் செயற்பட்டு வரும் அரசாங்கம், அதற்குச் சமாந்திரமாகச் சில மூலோபாய நகர்வுகளையும் செய்து வருகின்றது என்பது, நடப்பு நிலைவரங்களை உற்றுநோக்குவோருக்குத் தெரியும். அந்த வரிசையில், கிழக்கில் உள்ள தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்கான செயலணி ஒன்றை, ஜனாதிபதி அண்மையில் நியமித்திருக்கின்றார்.
பல்வேறு சர்ச்சைகள், முரண்பட்ட வரலாற்றுத் தகவல்கள், காணி அபகரிக்கப்படுவதான குற்றச்சாட்டுக்களோடு சம்பந்தப்பட்ட, பொத்துவில் முகுது மஹா விகாரை, அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டு இனவாதிகளால் வழக்குத் தொடுக்கப்பட்டதால் யாருக்கும் கொடுக்கப்படாமல் கிடக்கின்ற சவூதி அரேபியாவின் 500 வீடுகள், கடந்த இரு வருடங்களுக்கு முன்னர், சலசலப்பை ஏற்படுத்திய மாணிக்கமடு புத்தர் சிலை மலையடிவாரம், புகழ்பெற்ற தீகவாபி விகாரை உள்ளிட்ட இடங்களுக்கு, உயர்மட்டக் குழுவொன்று விஜயம் செய்த சில தினங்களிலேயே, இந்தச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
புராதன, தொல்பொருள் மய்யங்களைப் பாதுகாப்பது தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பௌத்த ஆலோசனைப் பேரவையின் சந்திப்பை, உடனடிக் காரணமாகக் கொண்டே, இந்தச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
தொல்பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும்,அண்மைய போக்குகள் குறித்துச் சிறுபான்மை மக்கள், கரிசனை கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது. ஒரு சில அமைப்புகளும் ஓரிரண்டு அரசியல்வாதிகளும் கவலை வெளியிடுவதையும் காண முடிகின்றது. இன, மத பாகுபாடற்ற ஆளுகை, அணுகுமுறையையே இந்தக் கரிசனைகள் வேண்டி நிற்பதாகச் சொல்ல முடியும்.
கிழக்கில் உள்ள தொல்பொருள் மய்யங்களைப் பாதுகாப்பதற்காகவே, இந்தச் செயலணி நிறுவப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் வெளிப்படையான அர்த்தம் இன, மத பேதங்களுக்கு அப்பால், அனைவருக்கும் உரித்தான தொன்மையை வெளிப்படுத்தும் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஓர் ஏற்பாடாகும்.
இருப்பினும், கடந்த கால அனுபவங்களினூடு நோக்குகின்ற போது,முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில், பௌத்த தொல்பொருள்களைப் பாதுகாப்பதை மய்யமாக வைத்தே, இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகத்தை, முஸ்லி;ம் சிவில் சமூகத்துக்கு ஏற்படுத்தி இருக்கின்றது எனலாம்.
இதுபற்றி, முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கருத்துத் தெரிவித்துள்ளார். “தொல்பொருளியல் மய்யங்களைப் பாதுகாத்தல் என்ற விடயம், அனைத்துச் சமுதாயங்களுடனும் தொடர்புபட்ட வரலாறு, கலாசாரம்,மதம் போன்றவற்றின் முக்கியத்துவங்களை மதிக்கும் விதத்தில், கையாளப்பட வேண்டும். சர்ச்சைகளையும் சங்கடங்களையும் கொண்ட அமைவிடங்கள் பற்றி ஆராயும் குழுவில்,சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவமும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை, காணி விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்ற ‘காணி மீட்புக்கான மக்கள் கூட்டணி’ என்ற அமைப்பு,பொத்துவில் கடல் விகாரை, அம்பாறை மாவட்டக் காணிப் பிரச்சினைகளின் வரலாற்றுப் பின்புலங்களைத் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை, இதன்பின்னார் வெளியிட்டுள்ளது. காணிகள் கையகப்படுத்தப்படும் முறை தொடர்பாகத் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள இவ்வமைப்பு, பொத்துவில் முகுது மஹாவிகாரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள இடத்தின் எல்லை பிரிப்புத் தொடர்பில் வெளிப்படைத்தன்மையோ, பொதுத் தொடர்பாடலோ இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
தன்னிச்சையான இக்காணிக் கையகப்படுத்தல்கள், நீண்டு நிலைத்து வாழ்ந்த சமுதாயங்களின் இருப்புகள், சொத்துகள் பறிக்கப்படுவதற்குக் காரணமாகி உள்ளது. அத்துடன்,சிறுபான்மையினரின் இனத்துவவிகிதாசாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி,காணிப் பிணக்குகளையும் உருவாக்கிவிடும் என, ‘காணி மீட்புக்கான மக்கள் கூட்டணி’ சுட்டிக் காட்டியுள்ளது.
அத்துடன், இராணுவமயமாக்கப்பட்ட தலையீடு என்பது, அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற ஒன்றாகவும் பக்கச்சார்புமிக்க ஒன்றாகவுமே நோக்கப்படுகின்றது. இது, இப்பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும், நீண்டகாலமாகக் கிடைக்காதிருக்கும் தீர்வை அடைவதிலுள்ள சவால்களை அதிகரிக்கவே செய்யும் என, அந்த அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையின் ஆழ அகலங்கள் பற்றி, இப்பக்கத்தில் வெளியான பத்திகளில் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். சுருக்கமாகக் கூறினால்,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தின் அரைவாசி அளவுக்குக் கூட, காணிகள் இல்லை. கணிப்பீடு ஒன்றின்படி,எதிர்காலத்தில் பெரும்பான்மையாகும் சாத்தியத்தைக் கொண்டுள்ள கிழக்கின் முஸ்லிம் குடிமக்கள் வாழ்வதற்குப் போதுமான நிலங்கள் பகிரப்படவில்லை.
அதேபோன்று, கிழக்கில் பல்லாயிரக்கணக்கான காணிப் பிரச்சினைகளும் காணி முரண்பாடுகளும் காணப்படுகின்றன. படை முகாம்களுக்காக,தொல்பொருள்களின் பெயரால், வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அத்துடன், இன்னுமொரு தனிநபருடன் தொடர்புபட்ட எல்லைப் பிரச்சினைகளைக் கொண்ட பிணக்குகளும் ஆண்டாண்டு காலமாகக் கிடப்பில் கிடக்கின்றன.
கிழக்குக்குச் சரிசமமாக, வட மாகாணத்திலும் முஸ்லிம்களுக்குக் குறைந்தது ஒரு இலட்சம் ஏக்கர் காணிகள் பற்றிய பிரச்சினைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிப் பேசப்படுவது கூட இல்லை. அதேவேளை, தென்னிலங்கையிலும் மலையகத்திலும் காணிப் பற்றாக்குறையை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றமையும் இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.
காணிப் பிரச்சினையே, முஸ்லிம்களின் நீண்டகால இருப்புத் தொடர்பில் காணப்படுகின்ற தலையாய பிரச்சினையாகும். ஆனால், பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுபற்றிப் பேசுவதோ, இதற்காகக் குரல்கொடுப்பதோ கிடையாது. சிலருக்கு, இதுவெல்லாம் ஒரு பிரச்சினையாகத் தெரிவது கூட இல்லை. அவர்களிடம் அதுபற்றிய ஆவணங்களும் கைவசம் இல்லை. ‘வாயால் வடை சுடுகின்ற வேலையை’ மட்டுமே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, பொறுப்புள்ள அரசாங்கம், இது விடயத்தில் இன, மத, அரசியல்சார் பாகுபாடு காட்டாமல், நியாயத் தீர்ப்பு போன்ற நடைமுறையொன்றைக் கையாள வேண்டுமென முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்றது.
முஸ்லிம்கள்,கடந்த காலங்களில் ராஜபக்ச அரசாங்கத்தைக் குறைந்தது பத்து வருடங்கள் ஆதரித்தனர். பிரதான முஸ்லிம் கட்சிகளின் வியூகங்கள், கடந்த தேர்தல்களில் அவ்வாதரவை இன்றைய ஆளும் கட்சிக்கு வழங்க முடியாமல் போனதென்னவோ உண்மையே. ஆயினும்,இந்த முறையும் குறிப்பிட்டளவான முஸ்லிம்கள், பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான வாக்குகள், ஆளும் கட்சியை நோக்கி நகரும் விதமான மாற்றங்களும் நிகழலாம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்.
அந்த வகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின்; காணிப் பிரச்சினைகளில் ஒன்று இரண்டைத்தானும், கட்டம் கட்டமாகத்தீர்த்துவைக்க, நேரடியாக அரசாங்கம் முன்வர வேண்டும். இன விகிதாசாரப்படி காணிகளைப் பங்கிடுவது, உடனடியாகச் சாத்தியப்படாவிட்டாலும், குறைந்தபட்சம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடங்களில் காணப்படும் நிலப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அரச காணிகளை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
காணிப் பிரச்சினைகள்,முரண்பாடுகள் என்று வரும்போது, தொல்பொருள்,வனவளம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், தேவைக்கு அதிகமாகக் காணப்படுகின்ற பரப்பையாவது விடுவிக்க ஆவன செய்வதன் மூலம், நல்லதொரு சமிக்ஞையை வெளிப்படுத்தலாம். படை முகாம் அமைத்தலும் வனவளத்தைப் பாதுகாத்தலும் இன்றியமையாததே. ஆயினும், அது நில கையகப்படுத்தலுக்கான ஒரு முன்-உபாயம் என, முன்வைக்கப்படும் விமர்சனங்களை,அரசாங்கம் பொய்ப்பிக்க வேண்டியுள்ளது.
புராதன சின்னங்களும் ஏனைய தொல்பொருள் மய்யங்களும் பாதுகாக்கப்படுவது கட்டாயமானது. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், கிழக்கிலோ நாட்டின் எப்பாகத்திலோ காணப்படுகின்ற அனைத்து இன, மத, கலாசார குழுமங்களையும் சேர்ந்த மக்களின் தொல்பொருள் அடையாளங்கள், பாதுகாக்கப்பட வேண்டும்.
பௌத்த மத புராதன சின்னங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எந்த முஸ்லிமோ, தமிழனோ தவறு எனச் சொன்னதில்லை. ஆனால்,தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச பொறிமுறைகள்,ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது போன்ற ஓர் எண்ணம், சிறுபான்மை மக்களிடையே ஏற்படும் விதத்தில், கடந்த காலங்களில் செயற்பட்டிருக்கின்றன என்பதை மறைக்கவும் முடியாது.
எனவே, இதை மாற்றியமைக்கும் விதத்தில், கிழக்கிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் உள்ள பௌத்த தொல்பொருள் மய்யங்களுடன் சேர்த்து, இஸ்லாமியர், இந்துக்கள், கத்தோலிக்கர் போன்ற ஏனைய மக்களின் தொல்பொருள்களும், பாகுபடற்ற தன்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தாலே, இன்னுமோர் இனக் குழுமத்தின் தொல்பொருள்கள் குறித்த மதிப்பார்ந்த சிந்தனையையும் கட்டியெழுப்ப முடியும்.
இலங்கை, இனத்துவ முரண்பாட்டால் மிக நீண்டதொரு கசப்பான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றது. இனச் சமநிலையற்ற,ஓரவஞ்சனையான அரசியல் தீர்மானங்கள், குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுத் தருமே தவிர, நிலையானதொரு தீர்வைத் தரப் போவதில்லை என்பதையே, இனப்பிரச்சினையும் ஆயுத மோதலும் நமக்கு உணர்த்தியது.
அதாவது, 30 வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் யுத்தம் நடத்தியும் முடிந்த பிறகு, மீண்டும் இனச் சமத்துவம், இன ஐக்கியம், இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்தியே தீரவேண்டிய ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளமை கண்கூடு.
எனவே, முரண்பாடுகளைக் களைவதற்கு முற்படுகின்ற ஆட்சியாளர்கள், இனங்களுக்கு இடையில் பாகுபாடான அணுகுமுறைகளைக் கையாள்வதன் மூலம், இன்னும் முரண்பாடுகளைச் சிக்கலாக்கும் உபாயங்களுக்குப் பின்னால் போகாமல் தவிர்த்துக் கொள்வதே நல்லது.
Average Rating